Home சினிமா சினி நியூஸ் திரௌபதி – DRAUPATHI – தைரியம் …

திரௌபதி – DRAUPATHI – தைரியம் …

 

மாஸ் ஹீரோ / இயக்குனர் இல்லாத படங்களுக்கு ஓப்பனிங் கிடைப்பது மிக கடினம் . படம் நன்றாக இருந்து பார்த்தே ஆக  வேண்டுமென்கிற ஆர்வம் ரசிகர்களுக்கு எழுந்தாலொழிய பணம் பார்ப்பது கஷ்டம் . ஆனால் இயக்குனர் மோகன்.ஜி எடுத்துக்கொண்டகதைக்களம் , அதை ப்ரமோட் செய்த விதம் இரண்டுமே இந்த சின்ன பட்ஜெட் படத்துக்கு பெரிய வரவேற்பையும் , எதிர்பார்ப்பையும்  கொடுத்திருக்கிறது . அதை திரௌபதி  நிறைவேற்றினாளா?
பார்க்கலாம் …

மனைவியையும், மச்சினிச்சியையும் ஆணவக்கொலை செய்து விட்டு சிறையில் இருந்து பெயிலில் வரும் ருத்ர பிரபாகரன் ( ரிஷி ரிச்சர்ட்) தன்  நண்பனின் உதவியோடு சிலரை போட்டுத்தள்ளுகிறார் . எதற்கு அப்படி செய்கிறார் , அவர் தான் மனைவி திரௌபதி ( ஷீலா ) யை  கொலை செய்தாரா போன்ற கேள்விகளுக்கு விசுவலாக இல்லாமல் நாடகத்தனமாக விடை சொல்கிறாள் திரௌபதி …

காதல் வைரஸ் வந்து பல வருடங்கள் கடந்தும் ரிச்சர்ட் நடிப்பில் பெரிதாக தேறவில்லை . கருணாஸ் தவிர புதுமுகங்களாக இருக்கும் படத்தில் இவருக்கு நல்ல ஸ்கோப் ஆனால் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை .
சில சீன்களை தவிர பெரும்பாலும் இவர் நடிப்பு  ஃப்ளாட்டாகவே  இருப்பது மைனஸ் . திரௌபதியாக வரும் ஷீலா உண்மையிலேயே படத்துக்கு பெரிய ப்ளஸ் . பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவனுக்கு அவர் கொடுக்கும் தண்டனை அசாத்தியம் . படத்தின் குறிப்பிடத்தக்க சீன்களில் இதுவும் ஒன்று .
கருணாஸ் போலித் திருமணங்கள் பற்றி கோர்ட்டில் பேசி கவனிக்க வைக்கிறார் . ஜாக்காக வருபவரும் , தன் மகளுக்கு நடந்ததை கோர்ட்டில் விவரிப்பவரும் நல்ல தேர்வு …


அந்தஸ்து , பணம் உள்ளவர்களின் வீட்டு பெண்களை நாடக காதல் மூலம் வசப்படுத்தி பணம் பறிக்கும் கும்பலை பற்றிய கதைக்கருவில் எல்லோரையும் அட போட வைத்திருக்கிறார் இயக்குனர் . ஆனால் அதை விட  பத்திர அலுவலகத்தில் நடக்கும் போலித் திருமணங்களிலேயே அதிக கவனம் செலுத்தியது சறுக்கல் . படம் லோ பட்ஜெட் தான் அதுக்காக நடிப்பதற்கு ஆட்களே கிடைக்கவில்லையா ? எல்லோரும் சொல்லித்தந்தது போலவே பேசி போரடிக்கிறார்கள் …

ஆரம்ப கட்ட சீன்கள் படத்தின் மேல் ஆர்வத்தை கொடுப்பதென்னமோ உண்மை . அப்படியிப்படி இடைவேளை வரை தொய்வில்லாமல் போகும் படம் அதன் பின் தடுமாறுகிறது . திரௌபதி உயிரோடிருக்கும் போது அவரை கொலை செய்த குற்றத்திற்கு ரிச்சர்ட் கைதாவது , இரண்டு கொலை செய்தவருக்கு ஆறே மாதத்தில் பெயில்  கொடுப்பது , என்னதான்  காசு வாங்கிக்கொண்டு போலி பத்திரம் தயார் செய்தாலும் விழுப்புரத்தில் இருக்கும் பெண்ணிற்கு சென்னையில் இருந்து திருமண சான்றிதழ் இரண்டே மணி நேரத்தில் தயாரிப்பது , எம்ஜிஆர் கால பாணியில் ஹீரோ தொப்பியை போட்டதும் வில்லன் அடையாளம் தெரியாமல் முழிப்பது இவையெல்லாம் லாஜிக்கை சமாதிக்குள் தள்ளுகின்றன …

நாடக காதலை பற்றி எடுப்பதாக  சொல்லிக்கொண்டு படத்தையே நாடகத்தனமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் . பொதுவாக படத்தின் ஹைலைட் சீன்களை ட்ரைலராக வைத்திருப்பார்கள் ஆனால் இதில் படம் மொத்தத்துக்கும் நல்ல சீன்கள் அது மட்டும் தானென்பது துரதிருஷ்டம் .
இப்படி மேக்கிங்கில் நிறைய குறைகள் இருந்தாலும் நாணயத்துக்கு இரு பக்கம் இருப்பது போல பெண்ணை பெற்றவர்களை  வில்லன்களாக காட்டும் சினிமாவில்  காதலை வைத்து பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் கும்பலின் மறுபக்கத்தை துகிலுரித்த திரௌபதியின் தையிரியத்தை நிச்சயம் பாராட்டலாம் …

ரேட்டிங்க்     : 2.25 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 39

  • அனந்து (http://pesalamblogalam.blogspot.com/)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version