- Ads -
Home கட்டுரைகள் அதிமுக., இரு அணிகள் இணைப்பு: நடக்குமா? நடக்காதா?

அதிமுக., இரு அணிகள் இணைப்பு: நடக்குமா? நடக்காதா?

AIADMK

தமிழகத்தை வாட்டும் தலையாய பிரச்னைகள் மக்களின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்க, அவற்றினூடே முக்கியமான பிரச்னையாக ஊடகங்களில் விவாதிக்கப்படுவது, பிரிவு கண்ட அதிமுக.,வின் இரு அணிகளும் இணையுமா இணையாதா என்பதுதான்!

அதிமுக., அணிகள் இரண்டும் இணைந்தால் அல்லது இணையாமல் போனால், பொதுமக்களுக்கு அப்படி என்ன பாதிப்பு? அல்லது என்ன நன்மை? அல்லது அரசியல் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும்தான் என்ன நன்மை அல்லது தீமை? அவர்களின் போக்கு என்னதான் உணர்த்துகிறது? இந்தக் கேள்வி அனைவர் மனத்திலும் இல்லாமல் இல்லை!

அதிமுக., சிதறுண்டு போக என்ன காரணம்? சிதறியவை மீண்டும் சேருமா? எனில் தலைமை யார்?

அதிமுக.,வுக்கு மட்டுமல்ல, எந்த ஒரு நிறுவனம் ஆனாலும், அமைப்பு ஆனாலும் சரி… தலைமை சரியாக இருந்தால் அமைப்பும் வலுவாக இருக்கும்! ஜெயலலிதா, தான் ஏதோ நிரந்தரமாக இந்த உலகத்தில் இருப்பது போன்ற பிரமையில் ஆழ்ந்திருந்தார் அல்லது, தானே தலைமை, தனக்குப் பின் எவருமில்லை என்ற மமதை போதையில் இருந்தார் என்பதுதான் தெரிந்ததுதான்! தனிநபர் சுயநலத்தில் கோலோச்சும் கட்சி, அமைப்பு, நிறுவனங்கள் எல்லாம் என்ன ஆகப் போகின்றன என்பதை அதிமுக.,வின் இன்றைய நிலை உணர்த்தும். இதற்கு வேறு கட்சிகளோ,வெளி நபர்களோ காரணம் இல்லை! முழுக்க முழுக்க ஜெயலலிதாவே காரணம்!

தான் இருக்கும் போதே, சரியான நபரை அடையாளம் கண்டு, அடுத்த தலைமை இவராகத்தான் இருப்பார் என்று தொண்டர்களுக்கு அடையாளம் காட்டவில்லை! ஒரு கும்பலால் தான் வளைக்கப்பட்டு ஜீவனற்றுக் கிடந்த பரிதாப நிலையில், நிச்சயம் ஜெயலலிதா அதை உணர்ந்திருப்பார். ஆனால், அப்போது காலம் கடந்து விட்டிருந்தது. ஓபிஎஸ்.,போன்ற நபர்களை அவர் தனக்குப் பதிலாக சற்று காலத்துக்கு பொறுப்பில் அமர்த்தினாரே தவிர, அவரை அடுத்த தலைமை என்று தொண்டர்களிடம் முன்னிறுத்தவில்லை! அப்படியான எந்தச் செய்தியையும் தொண்டர்களுக்கோ, மக்களுக்கோ தெரிவிக்கவில்லை!

அடுத்த முதல்வர் யார் என்று கருணாநிதியிடம் சென்ற பேரவைத் தேர்தலின் போது கேட்ட செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பதில், “எனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால், அதன் பிறகே ஸ்டாலின் வர முடியும்” என்பதுதான்! தான் உயிருடன் இருக்கும் போது, ஸ்டாலினுக்கான போட்டியை சமாளிக்கும் திறன் தனக்கு இப்போது இல்லை என்பதை பளிச்செனச் சொல்லி விட்டார். ஸ்டாலின் என்ற மகனுக்கான பாதையை எளிதாக்கத்தான், வைகோவை., போ வெனத் தள்ளி விட்டார். இன்னொரு மகனுக்கு பட்டா போட்டது போல் தென் தமிழகத்தின் பக்கம் ஒதுக்கி விட்டார். ஆனாலும், போட்டிகளின் தன்மையை அறிந்தவர் ஆதலால், அந்தப் பொறுப்பை தான் ஏற்காமல், அதை ஸ்டாலின் வசமே ஒப்படைத்துவிட்டார்.

தலைமை ஒருவரை மட்டுமே நம்பும் நிறுவனம், நாளை அப்படியே சிதறுண்டு போகும் என்பதை அதிமுக., எனும் கட்சி அமைப்பு உணர்த்திக் கொண்டிருக்கிறது. இவர்கள் சேருவார்களா என்றால், நிச்சயமாக மாட்டார்கள்! பொது செயல் திட்டம் வைத்துக் கொண்டு கட்சிகள் இணையும் கூட்டணி போல் அமையலாமே தவிர, ஒற்றைப் பெயரில் இணைக்கும் வலிமை இப்போதைக்கு அதிமுக.,,வில் எவருக்கும் இல்லை என்றே தெரிகிறது! இந்த முடிவுக்கு தமிழக மக்கள் வருவதற்குக் காரணம், அதிமுக., அணிகள் இணைப்பு என்ற பேச்சு எழும்போதெல்லாம், இந்த இரு அணிகளில் உள்ளவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை வைத்துப் புரிந்து கொள்ளலாம். இதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனிப்பட்ட செயல்திட்டம் என்ன, அவர்கள் உள்ளூர என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் அறியலாம்.

தினகரன் அணிக்கு, எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்ஸுடன் சேர்ந்துவிடக்கூடாது என்ற பயம் இருக்கிறது. இரு அணிகளும் இணைவது போல் இணைந்து, ஒட்டு மொத்த அதிமுகவும் தன் ஆதிக்கத்தில் வந்துவிட வேண்டும் என்பதே தினகரன் அல்லது சசிகலா தரப்பு நோக்கம்.

எடப்பாடி அணிக்கோ, ஓபிஎஸ் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறோம் என்ற நாடகத்தை நீட்டித்து நடத்திக் கொண்டு, அவர்கள் தினகரன் பக்கம் ஒதுங்கி விடாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம்! சசிகலா குடும்ப ஆதிக்கம் இல்லாத கட்சி இணைப்பு ஓபிஎஸ் தரப்பு ஒப்புக் கொள்ளாமல் இழுத்தடிக்கிறார்கள் என்ற பூச்சாண்டியைக் காட்டி இந்தப் பேச்சு வார்த்தையை இழுத்துக் கொண்டே செல்வது!

ஓபிஎஸ் தரப்போ, மறைமுகமாக எடப்பாடி அணியில் சசிகலா குடும்பம் ஆதிக்கம் என்ற பேச்சை மையப் படுத்தி, இணைப்புக்கு வழி தராமல் இழுத்துக் கொண்டே செல்வது. மேலும், கட்சியும் ஆட்சியும் தம்மிடம் வந்துவிடும் என்ற கணக்கில் உழல்வது, அதற்கான காரணம், தொண்டர்கள் தம் பக்கம் இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி, இரட்டை இலைச் சின்னம் தமக்குக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை அது நாள் வரை விதைத்துக் கொண்டிருப்பது!

இந்த அணிகளுக்கு இடையில் இன்னும் இரண்டு தரப்பு, இவர்களின் பாதையை எடைபோட்டுக் காத்திருக்கிறது. அதில் ஒன்று பாஜக., இரு தரப்பும் இணைந்தால், மத்திய அமைச்சரவையில் இடம் எனும் லாலிபாப் மிட்டாய் ஆசையைத் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பது. அல்லது, கட்சியில் பிளவு கண்டால் ஒரு தரப்பை தம் கட்சிக்குள் கரைய வைத்து விடுவது என்ற செயல்திட்டம்!

அடுத்த வெளித் தரப்பான திமுக.,வோ இலவு காத்த கிள்ளையைப் போல், தாமாக இந்த ஆட்சி கவிழ்ந்து தமக்கு வாய்ப்பு வராதா என்று காத்துக் கொண்டிருப்பது. அதற்காக, அணிகள் மேலும் சிதறுண்டு போவதை ஆசையுடன் நோக்குவதும், அதற்கான பின்னியக்கமாக, திரைத்துறை பிரபலங்களை இயக்கிக் கொண்டிருப்பது. கமல்ஹாசனுக்கும் ரஜினிக்கும் ஆதரவுப் போர்வையில் இயங்குவதும் தூண்டி விடுவதும், அதிமுக.,வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வைப்பதுதானே தவிர, ஆட்சிக்கோ, ஊழலுக்கோ எதிரான நிலைப்பாட்டுக்கு அல்ல என்பது ஊரறிந்த உண்மை!

இத்தகைய எண்ணத்துக்கு மக்கள் வருவதற்கு இந்த இரு அணியினரும் என்ன சொல்லி வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் தெரியும்!

ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்பி., செய்தியாளர்களிடம் பேசியபோதும், தனது முகநூல் பதிவிலும் இதனைத் தெரிவித்துள்ளார். “கடந்த சில நாட்களாக இணைப்பு பற்றி வதந்திகள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. நான் இதில் மிகத் தெளிவாக உள்ளேன். அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் சேர வரும் அனைவரையும் வரவேற்கிறேன். சேருவது வேறு. இணைப்பு வேறு. இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. மற்றொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும். எடப்பாடி தலைமையிலான அரசு ஒரு ஊழல் அரசு. அது அம்மா அவர்கள் உருவாக்கிய அரசு அல்ல. எனவே எடப்பாடி தலைமையிலான ஊழல் அரசுக்கு துணை போவது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. அம்மாவின் ஆன்மாவாக விளங்கும் அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் அம்மாவின் நல்லாட்சி அமைப்பதே நமது லட்சியம்” என்கிறார் மைத்ரேயன். எனவே, இணைப்பு என்பதை ஓபிஎஸ் தரப்பு விரும்பவில்லை என்பது தெளிவு!

மைத்ரேயனின் இந்தக் கருத்தை ஆதரித்துப் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “மைத்ரேயன் தெரிவித்தது தமிழக மக்களின் கருத்துதான்; ஊழல் அரசுக்குத் துணை போவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி” என்று கூறியுள்ளார்.

ஓபிஎஸ்., மற்றும் மைத்ரேயனின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்காமல் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “நடப்பது ஊழல் அரசு என்ற மைத்ரேயன் எம்.பி.யின் கருத்துக்கு, பதில் கூற விரும்பவில்லை” என ஒதுங்கிக் கொண்டு, இன்னும் இணைப்பு விவகாரத்தில் தம் தரப்பு ஈடுபட்டுள்ளதுதான் அதற்குக் காரணம் என்று சொல்லாமல் சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

ஓபிஎஸ்., தரப்பு குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், தினகரன் ஆதரவு பேச்சாளர் நாஞ்சில் சம்பத், “கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு பன்னீர்செல்வம் கல் எறியக் கூடாது” என்று சொல்லி, ஓபிஎஸ்ஸையும் ஊழல் தரப்பு என்று முத்திரை குத்திவிட்டார்.

அதனை உறுதிப் படுத்தும் வகையில், அமைச்சர் சிவி சண்முகம், “ஊழல் பற்றிப் பேச பன்னீர்செல்வத்திற்கு தகுதி இல்லை. அவர் வகித்த துறையிலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகம் உள்ளது. தமிழ்நாட்டுக்கு சேகர் ரெட்டியை அறிமுகப்படுத்தியது யார்? அதற்கு அவரே பதில் சொல்லட்டும்” என்று கூறினார்.

ஓபிஎஸ்.,ஸின் ஊழல் குறித்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் ஓ.எஸ் மணியன், “ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?” என மைத்ரேயன் எம்.பி.,க்கு சவால் விடுத்துள்ளார். அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அமைச்சர் மணிகண்டன், “பன்னீர்செல்வம் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதனிடையே, கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக எங்களிடம் தான் உள்ளது” எனக் கூறியுள்ளார். “தினகரன் வந்த பின்னால் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து எங்களது கருத்துக்களை தெரிவிப்போம். தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூவத்தூர் விடுதியில் வருமானவரித் துறை ஆய்வு நடத்தியிருக்க வேண்டும் என்பது எங்களது கருத்து” என்று கூறியுள்ளார்.

இருப்பினும், தினகரன் தரப்புதான் ஊழல் தரப்பு என்பதை நிறுவ, தாங்கள் அணி மாறுவதற்காக ரூ.5 கோடி தருவதாக எடப்பாடி மற்றும் டிடிவி அணியினர் பேரம் பேசுவதாக ஓ. பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., சண்முகநாதன் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

இதனிடையே, ஆக.5ம் தேதி அதிமுக., தலைமை அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளை சந்தித்துப் பேசுவேன் என்று கூறிய தினகரன் பேச்சை இரு தரப்புமே ரசிக்கவில்லை. குறிப்பாக, எடப்பாடி தரப்பு, இதனைத் தவிர்க்க மும்முரமாக இறங்கியுள்ள வேளையில், ஆக.4 இன்று தனது செயல்திட்டத்தை அறிவிப்பதாக தினகரன் கூறியுள்ளார். இரு தரப்பும் இணைய வேண்டும் என்று தினகரன் ஏன் 60 நாட்கள் கெடு கொடுத்து, தீவிர கட்சிப் பணியில் இருந்து விலகியிருந்தார் என்றால், அதற்கான அவரது பேராசை நிறைவேறிவிடக் கூடாது என்பதிலேயே இரு தரப்பும் கவனமாக இருந்துவிட்டனர்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழக அரசு ஊழல் அரசு என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது. அதிமுக.,வின் இரு அணிகளின் இணைப்பு தொடர்பாக அமைச்சர்கள்தான் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதிகாரபூர்வமாக அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை. அவர்களாகவே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அணிகள் இணைப்பு தொடர்பாக எங்களின் நிலைப்பாட்டை ஏற்கனவே கூறி விட்டோம்” என்று, இணைப்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பவர்களை மேடைக்கு வெளியே வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்..

இத்தகைய சூழலில், அதிமுக., அணிகள் இணைப்பு என்பது சாத்தியமற்ற ஒன்றுதான் என்றே நினைக்கத் தோன்றுகிறது!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version