Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் விநாயகர் நான்மணிமாலை – விளக்கம் (பகுதி 4)

விநாயகர் நான்மணிமாலை – விளக்கம் (பகுதி 4)

manakkula_vinayakar_and_bharathi-2
manakkula vinayakar and bharathi 2

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

பாரதியார் எழுதியுள்ள விநாயகர் நான்மணி மாலையின் அடுத்த பாடல் ஓர் அகவற்பாடலாகும். இப்பாடல் ‘கற்பக’ எனத் தொடங்கி ‘உணர்வீர்’ என்று முடிகிறது.

4. அகவல்

கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்பபுக் கிறையவன் பண்ணவர் நாயகன் 5

இந்திர குரு என திதயத் தொளிர்வான்
சந்திரமவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பல வாம்; கூறக் கேளீர்;
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்; 10

அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெல்லாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்;
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்ச மென்றெண்ணித் துயரிலா திங்கு 15

நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்றோங்கலாம்;
அச்சம் தீரும்; அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி யோங்கும்;
அமரத் தன்மையு மெய்தவும்
இங்கு நாம் பெறலாம்; இஃதுணர் வீரே. 20

பொருள் – கேட்பவற்றை எல்லாம் தருகின்ற கற்பகமரம் போன்ற விநாயகக் கடவுளே உம்மை வணங்குகிறேன். இறைநிலை அடைந்த மௌன ஞானத் தேவன் நீ. யானை முகமுடைய உன் மலரடி வாழி. வேதத்தினையே (ஆரணம் – வேதம்) முகமாக உடையவனே, படைப்பபுக் கிறையவனே, துறவிகளும் தொழும் நாயகனே (பண்ணவர் – துறவியர்), இந்திரனின் குரு என என் இதயத்திலே ஒளிர்கின்றவனே!

 சந்திரனை முடியில் அணிந்திருக்கும் சிவனின் மைந்தனான கணபதியின் திருவடியை நம் இதயத்தில் வைத்துப் பணிவோம். அவ்வாறு செய்தால் நன்மைகள் பல உண்டாகும். சொல்கிறேன் வாருங்கள்.

இறைவனை உணரும் உட்செவி திறக்கும்; அவனைக் காணும் அகக்கண் ஒளி பெறும். குண்டலினி சக்தியாகிய அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்; திசைகள் அனைத்தையும் வென்று வெற்றிக்கொடி நாட்டலாம். ஒலியைக் கேட்காமலேயே ஒலியை உணரலாம். நஞ்சு, நோய், கௌம் பகை அனைத்தையும் துச்சமென எண்ணி வாழலாம். அஞ்சத் தேவையில்லை.

பயம் தீரும்; நன்மை ஏற்படும்; கல்வி வளரும்; இறைவனை அடைய வேள்விகள் செய்யும் காலம் வரும்; தெய்வத்தன்மை அடையவும் செய்யலாம்; இதனை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். எனவே தாமரை மலரின் மீது அமர்ந்திருக்கும் விநாயகரை வணங்குவோம்.

(தொடரும்)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version