Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 27)

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 27)

விளக்கம்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியம்

பாடல் 35 – விருத்தம்

வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணி மலரே;
ஆழ்க வுள்ளஞ் சலனமிலா தகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க; துயர்கள் தொலைந்திடுக; தொலையா இன்பம் விளைந்திடுக
வீழ்க கலியின் வலியெல்லாம் கிருதயுகந்தான் மேவுகவே.

பொருள் – புதுவை மணக்குளத்து வள்ளலாகிய விநாயகனின் திருப்பாதங்களை அணி செய்கின்ற மலர்கள், வாழ்க. எந்தவித சலனமும் இல்லாத பரவெளியில் நிலவும் அன்பில் ஆழ்க. துன்பங்கள் எல்லாம் தொலைந்திடுக. என்றும் நீங்காத இன்பம் விளைந்திடுக. கலியுகத்தில் ஏற்படும் துன்பத்தின் வலியெல்லாம் வீழக். கிருத யுகந்தான் மீண்டும் தோன்றட்டும். இதற்கு விநாயகனே நீ அருள் புரிவாயாக.

பாடல் ‘வாழ்க’ எனத் தொடங்கி, ‘மேவுகவே’ என முடிகிறது.

யுகங்களைப் பற்றி அனுமன் மகாபாரதம், வனபருவத்தில், தீர்த்தயாத்திரை பருவத்தில் பீமனிடம் கூறுகிறார். அதனைப் படிக்கும்போது பாரதியார் ஏன் கிருத யுகம் மீண்டும் வரவேண்டும் என்று கூறுகிறார் எனப் புரியும்.

பீமசேனன், பாசத்துடனும், இதய மகிழ்ச்சியுடனும், தனது அண்ணா வானரத் தலைவன் ஹனுமானை வணங்கி, மென்மையான வார்த்தைகளில், “என்னைவிடப் பேறு பெற்றவர்கள் யாரும் இல்லை; நான் எனது அண்ணனைக் கண்டுவிட்டேன். இது எனக்குக் கிடைத்த பெரும் பேறு. நான் உம்மைப் பார்த்ததில் திருப்தி அடைந்தேன். நீர் எனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என இப்போது விரும்புகிறேன். ஓ வீரரே, சுறாக்கள் மற்றும் முதலைகளின் வசிப்பிடமான கடலை தாண்டிய நேரத்தில், நீர் அடைந்த ஒப்பற்ற வடிவத்தைக் காண விரும்புகிறேன். அப்படிச் செய்தால் நான் திருப்தி கொள்வேன். உமது வார்த்தைகளையும் நம்புவேன்” என்றான்.

இதனைக் கேட்ட அந்தப் பெரும் வானரம் {ஹனுமான்} சற்றே சிரித்து, “அந்த வடிவத்தை நீயோ, வேறு எவரோ காண இயலாது. அந்த யுகத்தில் இருந்த நிலைகள் வேறு. அந்த நிலை இப்போது இல்லை. கிருத யுகத்தில், பொருட்களின் நிலை ஒரு விதமாக இருந்தது. திரேதா யுகத்தில் மற்றொரு விதமாக இருந்தது. துவாபர யுகத்தில் இன்னும் வேறு ஒரு நிலை இருக்கிறது. இந்த யுகத்தில் அழிவு நடைபெறுகிறது; என்னிடம் இப்போது அந்த வடிவம் இல்லை. நிலம், நதிகள், செடிகள், பாறைகள், சித்தர்கள், தேவர்கள், தெய்வீக முனிவர்கள் வேறு வேறு யுகங்களில் பொருட்களின் நிலைகளுக்கு இணங்கியும் காலத்திற்கு இணங்கியுமே இருக்கின்றனர். ஆகையால், ஓ! குருகுலத்தைத் தழைக்க வைப்பவனே, எனது முந்தைய வடிவத்தைக் காண விரும்பாதே. யுகத்துடன் இணக்கமாகவே நான் இருக்கிறேன். நிச்சயமாக, காலம் தவிர்க்க முடியாதது. எனவே காலத்திற்கு தகுந்தவாறு வாழவேண்டும்” என்றான் {ஹனுமான்}.

பீமசேனன் {ஹனுமானிடம்}, “யுகங்களின் கால அளவையும், ஒவ்வொரு யுகத்தின் வகைமுறைகள், சடங்குகள், அறம், இன்பம் மற்றும் பொருள், செயல்கள், சக்தி, வாழ்வு {பிறப்பு}, மரணம் {இறப்பு} ஆகியவற்றை எனக்குச் சொல்லும்” என்று கேட்டான்.

அதற்கு ஹனுமான், “ஓ குழந்தாய் {பீமா}, ஒரே நித்திய தர்மம் மட்டுமே நடைமுறையில் இருந்த யுகம் கிருதம் என்று அழைக்கப்படுகிறது. யுகங்களில் சிறந்த அந்த யுகத்தில் அனைவரும் தர்மத்தில் சரியாக இருந்தனர். ஆகையால் அப்போது எந்தத் தர்மச் செயல்களுக்கும் தேவை ஏற்படவில்லை. பிறகு அறத்திற்கு எந்தச் சீரழிவும் ஏற்படவில்லை; மக்களும் குறையவில்லை {இறப்பில்லை}. இதன் காரணமாகவே அந்த யுகம் கிருதம் {சரியானது} என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த யுகம் குறைவை அடைந்தது. ஓ! குழந்தாய் {பீமா}, கிருத யுகத்தில், தேவர்களோ, பேய்களோ {அசுரர்களோ}, கந்தர்வர்களோ, யக்ஷர்களோ, ராட்சசர்களோ, நாகர்களோ கிடையாது. அப்போது வாங்குவதும் விற்பதும் இல்லாதிருந்தது. சாம, ரிக், யஜுர் என எதுவும் இல்லை. உடல் உழைப்பு எதுவும் அப்போது இல்லை. வாழ்க்கையின் தேவைகள் அனைத்தும் நினைத்த மாத்திரத்தில் கிடைத்தன. உலகைத் துறப்பதே ஒரே தகுதியாக இருந்தது. அந்த யுகத்தில் நோயோ, புலன்களின் சிதைவோ இல்லை. கோபம், பெருமை {கர்வம்}, பாசாங்குத்தனம், குழப்பம், விருப்பமின்மை, தந்திரம், பயம், துன்பம், பொறாமை, பேராசை ஆகியன அப்போது இல்லை. இதன் காரணமாகவே, யோகிகளின் தலைமைப் புகலிடமான, பரப்பிரம்மனை அனைவரும் அடைந்தனர். வெண்நிறம் அணிந்த நாராயணனே உயிரினங்களின் ஆன்மாவாக இருந்தான்.

தொடர்ந்து அனுமன் பீமனிடம் கூறியது என்ன? நாளை காணலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version