Home கட்டுரைகள் மகாகவியைப் போல் குறுகிய வாழ்க்கை! நிறைந்த புகழ்… அமரர் தேவன்!

மகாகவியைப் போல் குறுகிய வாழ்க்கை! நிறைந்த புகழ்… அமரர் தேவன்!

thuppariyum sambu1
thuppariyum sambu1

நகைச்சுவை எழுத்தாளர் தேவன் பிறந்த தினம்
– செப்டம்பர் 8, 1913 –

~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

நீங்கள் துப்பறியும் சாம்பு படித்திருக்கிறீர்களா? குழந்தைப் பருவத்தில் துப்பறியும் சாம்பு படிக்காதவர்கள் உண்டா?

ஹாலிவுட்டில் நகைச்சுவைக் கதாபாத்திரம் என்றால், நமக்கு உடனே ‘சார்லி சாப்ளின்’தான் நினைவுக்கு வருவார். அதே மாதிரி, தமிழில் ‘நகைச்சுவை’ என்றதுமே சட்டென்று நம் நினைவுக்கு வரும் கதாபாத்திரம் ‘துப்பறியும் சாம்பு’.

தமிழர் நெஞ்சங்களில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்திருக்கும் இந்தச் சிரஞ்சீவிக் கதாபாத்திரத்தை உருவாக்கிய பிரம்மா, ‘தேவன்’ என்கிற மகாதேவன். அந்த துப்பறியும் சாம்பு எழுதியவர் தேவன் அல்லது ஆர். மகாதேவன் ( செப்டம்பர் 8 , 1913 – மே 5 , 1957 ) என்ற பிரபல எழுத்தாளர்.

பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும். தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் (மத்யார்ஜுனம் என அறியப் படுகிறது) செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

மகாதேவன், பள்ளியில் சாரணர் படையில் சேர்ந்திருந்ததால், சாரணப்படைத் தலைவராக இருந்த கோபாலசாமி ஐயங்கார், மாணவர்களுக்கு நிறைய சிறுகதைகளைச் சொல்லி, மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். இவர் மூலம் கதை கட்டுவதில் மகாதேவனுக்கு ஆர்வமும் சுவையும் தோன்றியது.

thuppariyum sambu

கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். சிறிது காலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபின் தனது 21ஆவது வயதில் ஆனந்த விகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார்.

23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார்.துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு; இது சின்னத் திரையில் தொடராக வந்திருக்கிறது.

கோமதியின் காதலன் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய நாவல்கள், மேடை நாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப்பட்டன.

மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் சின்னத்திரையிலும் வழங்கப் பட்டன. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய மிக விரிவான புதினம் ஜஸ்டிஸ் ஜகந்நாதன். இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

50 களில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டபோது எழுதிய ஐந்து நாடுகளில் அறுபது நாள் புத்தகமாக வெளியாகியுள்ளது. தேவன் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்.

துப்பறியும் சாம்பு உட்பட தேவன் எழுதிய அத்தனைக் கதைகளிலும் கட்டுரைகளிலும் நகைச்சுவை தெறிக்கும். ‘ராஜத்தின் மனோரதம்’ ‘மல்லாரி ராவ் கதைகள்’ போன்ற நகைச்சுவைக் கதைகளையும், ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ போன்ற அற்புதமான குடும்ப நாவல்களையும் இவர் எழுதியுள்ளார். பொதுவாகவே, துயரமான, துக்கமான நிகழ்வுகளையும் மெல்லிய நகைச்சுவையோடு வாசகர்களுக்குப் படைப்பது தேவனின் பாணி. ‘ஸ்ரீமான் சுதர்சனம்’ நாவல் ஓர் உதாரணம்.

எழுத்தில் பல உத்திகளைப் புகுத்தியவர் தேவன். தொடர்கதை அத்தியாயங்கள் விகடனில் ஏழெட்டுப் பக்கங்கள் வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நறுக்கென்று ஒரே பக்கத்தில் ‘மாலதி’ எனும் சஸ்பென்ஸ் தொடர்கதையை எழுதினார் தேவன். தேவன், எழுத்துலகில் மட்டும் ஜாம்பவான் அல்ல; பத்திரிகை நிர்வாகம், எழுத்தாளர் சங்கத் தலைவர், பயணக் கட்டுரையாளர், நாடக வசனகர்த்தா எனப் பல முகங்கள் கொண்டவர்.

தமிழ் எழுத்துலகத்துக்குப் பெரிய பங்களிப்பைச் செய்து, பெருமை சேர்த்தவர். தேவன் எழுதிய இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றிய கட்டுரைகள் அனைவரும் படிக்க வேண்டியவை. தமிழில் பயண இலக்கியம் பற்றி ஆய்வு செய்ய நினைக்கும் எம்.ஏ அல்லது எம்.பில் மானவர்கள் தேவனின் பயண நூலை ஆய்வு செய்யலாம்.

1930களிலேயே இலங்கைக்குப் பயணம் செய்து, அங்குள்ள தமிழர்களின் நிலை பற்றியெல்லாம் நேரடியாகக் கண்டு, அங்குள்ள தமிழ்ச் சங்கங்களைப் பார்வையிட்டு, தமிழறிஞர்களைப் பார்த்துப் பேசி, தமிழர்களின் நிலையை உலகுக்கு வெட்டவெளிச்சமாக்கியவர் தேவன்.

devan

ஆனந்த விகடனில் தேவனின் முக்கியப் பங்களிப்பு ‘தென்னாட்டுக் கோவில்கள் பற்றி அவர் எழுதியதுதான். தென்னாட்டுச் செல்வங்கள்’ என்ற பெயரில் இதனை அவர் எழுதினார் என்பது பலருக்குத் தெரியாது. 1948ஆம் ஆண்டில், விகடனில் முழு நேர ஓவியராகப் பணிபுரிந்து வந்த சீனிவாசன் என்னும் ‘சில்பி’யைக் கொண்டு தமிழகத்தில் உள்ள கோயில்களையும் தெய்வத் திருவுருவங்களையும் அப்படியே சித்திரமாக வரையச் செய்து, வெளியிட்டார்.

தஞ்சை, தாராசுரம், திரிபுவனம், ஸ்ரீரங்கம், பேரூர் என ஏறத்தாழ, தமிழ்நாட்டில் சிற்ப எழில் கொஞ்சும் எல்லாக் கோயில்களையுமே ‘தென்னாட்டுச் செல்வங்’களில் காணலாம். ஓவியர் சில்பியின் திறமை பெரிதும் பேசப்பட்டது. 1957 மே 5-ம் தேதி, தமது 44-வது வயதில் தேவன் மறைந்தார்.

மகாகவி பாரதி போல குறைந்த வயதே வாழ்ந்தாலும், தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கொடையாகப் பல பங்களிப்புகளைச் செய்துவிட்டு அமரத்துவம் பெற்றவர் அவர்.’தேவன் வரலாறு’ என்னும் தலைப்பில், தேவனின் படைப்புகளையும் அவரது அருங்குணங்களையும் வெளிக்காட்டும் விதத்தில் எழுத்தாளர் சாருகேசி ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் எழுதியிருக்கிறார்.

நகைச்சுவை எழுத்தாளர் தேவன் பிறந்த தினம் இன்று.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version