- Ads -
Home கட்டுரைகள் அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டம் ஒரு திராவிட மாயை – 1

அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டம் ஒரு திராவிட மாயை – 1

கடந்த 2006-2011 ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழக அரசு “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்கிற அவசரச்சட்டம் ( சட்டம்16 / 2006 – ஆளுனர் ஒப்புதல் தேதி 29.08.2006)  கொண்டுவந்தது. தமிழ் வளர்ச்சி-பண்பாடு-அறநிலையத்துறையால் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆணை பிறப்பித்த கையோடு கோவில்களில் பூஜை செய்வதற்கான பயிற்சியை அனைத்து ஜாதியினருக்கும் வழங்கவும் இந்து அறநிலையத்துறை மூலம் ஏற்பாடு செய்தது (அரசாணை 118 / 23.05.2006). வைணவ முறைப்படி அர்ச்சகர் ஆவதற்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும், சைவ முறைப்படி அர்ச்சகர் ஆவதற்கு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோவில் மற்றும் பழனி தண்டாயுதஸ்வாமி கோவிலிலும் ஓராண்டு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. ஆகம சாஸ்திரங்களில் பயிற்சி பெற்றவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. பயிற்சி பெற விருப்பம் தெரிவித்த மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இருக்க இடம், உணவு வசதிகளுடன் மாதம் ரூ.500 உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இந்த ஓராண்டு பயிற்சியை மொத்தம் 207 மாணவர்கள் பெற்றனர். 
 
சட்டம் இயற்றப்பட்டவுடனேயே, இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு [Writ Petition (Civil) No: 354 of 2006] தொடர்ந்தது. தென்னிந்திய பர்பாலன சபையும், மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் சிவாச்சாரியார்களும் தங்களை இவ்வழக்கில் அரசுக்கு எதிராக இணைத்துக்கொண்டனர். 2006 இல் தொடங்கிய இவ்வழக்கு விசாரணை 2015ம் வருடம் மே மாதம் முடிவடைந்தது. அப்போது தீர்ப்பை ஒத்திவைத்த  நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா ஆகியோர் டிசம்பர் 16ம் தேதி பின்வருமாறு தீர்ப்பளித்தனர்.
 
   
All Caste Archagas 1
 
 
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
  
தேவைப்படும் தகுதிகளை கொண்ட, பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற, இந்து சமுதாயத்தில் பிறந்த எந்த ஒரு நபரும் அர்ச்சகராக கோவில்களில் பணி புரியலாம் என்று தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏறுக்கொள்ளத்தக்கது. அதே சமயம், கோவில்கள் கட்டப்படுவதற்கும், தெய்வத் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கும், பல்வேறு தெய்வங்களுக்குப் பலதரப்பட்ட பூஜைகள் செய்வதற்கும் ஆகமங்கள் முறையான விதிகளை வரையறுத்துள்ளன. அதோடு மட்டுமல்லாமல், யார் யார் அந்தப் பூஜைகளை செய்ய வேண்டும் என்பதையும், ஆகமங்கள் தெளிவுபடுத்துகின்றன. சில ஆகமங்கள், குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே, பூஜைகளை செய்ய வேண்டும் என, வலியுறுத்துகின்றன. 
 
 அரசியல் அமைப்புச் சட்டத்தின், 25, 26வது க்ஷரத்துக்கள், மத நம்பிக்கை மற்றும் மதச் சடங்குகளை கடைபிடிப்பதற்கான சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதி செய்கின்றன. மேலும், 16 வது க்ஷரத்தின் 5 வது பிரிவு, ஒரு மத நிலையத்தில் ஏற்கனவே உள்ள மத விஷயமான அல்லது மதப்பிரிவின் வழிபாடு தொடர்பான அலுவல்கள் பதவிகள், குறிப்பிட்ட மதத்தினர்தாம் இருக்கவேண்டும் என்பதோ, அல்லது, குறிப்பிட்ட தனிப்பிரிவினர்தாம் இருக்க வேண்டும் என்பதோ, அரசின் கீழ் உள்ள வேலைவாய்ப்புகளில் பாகுபாடு இன்மை என்கிற கோட்பாட்டின் கீழ் வராது என்று சொல்கிறது. அதாவது ஆகம விதிகளின்படி வழிபாடுகள் நடக்கும் இடங்களில், அந்த ஆகமங்களில் சொன்னபடி, அர்ச்சகர்களை நியமிக்கும் உரிமையை உறுதிப்படுத்துகின்றது. இது, அரசியல் சாஸனத்தின் 14வது க்ஷரத்தை மீறுவதாகவும் ஆகாது. 
 
  
 
 
பொது சட்டம் – ஒழுங்கு, பொது ஒழுக்கம், சுகாதாரம் ஆகியவற்றை பாதிக்காத வரை, மதச் சடங்குகள், அவற்றைக் கடைப்பிடிக்கும் குழுக்களின் உரிமைகள், தனி நபர்களின் மத உரிமைகள் ஆகியவற்றை அனுபவித்துக் கொள்ள, அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. அவற்றைப், பாதுகாக்கவும் செய்கிறது. இந்த அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட ஆகமம் மற்றும் ஆகம விதிகள், அரசியல் சட்டத்திற்கு விரோதமானதல்ல என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. இதன் அடிப்படையிலும், சேஷம்மாள் வழக்கில், சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாஸன அமர்வு அளித்த தீர்ப்பின்படியும், தமிழக கோவில்களில், ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் அடையாளம் காணப்பட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தின் உரிமைக்கட்டளைகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டு நியமிக்கப்பட வேண்டும். அர்ச்சகர் நியமனத்தில் பிரச்சனைகள் ஏற்படும்போது, ஒவ்வொரு தனிப்பட்ட கோவிலும் நீதிமன்றத்தை அணுகி தீர்வுகள் பெறவேண்டும்.  
  
மேற்கண்டவாறு தீர்ப்பளித்து அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  
 
 
உச்ச நீதிமன்றம் கருத்தில்கொண்ட அரசியல் சாஸன க்ஷரத்துக்கள்
 
மேற்கண்ட தீர்ப்பை முடிவு செய்யும் விதமாகவும், வாத பிரதிவாதங்களை அலசிப்பார்க்கவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் சாஸனத்தின் சில முக்கியமான க்ஷரத்துக்களைக் கருத்தில் கொண்டு வழக்கை நடத்தினர்.    
  
அரசியல் அமைப்புச் சட்டம் – க்ஷரத்து 13:
  
அரசியல் சாஸனத்திற்கு முன்பும், பின்பும் இருக்கின்ற அனைத்துச் சட்டங்களும், அவை அரசியல் சாஸனம் தன்னுடைய 3வது பிரிவில் உறுதி செய்யும் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருப்பின், அவை செல்லுபடியாகாது. இந்த க்ஷரத்தின் மூன்றாவது [13(3)] பிரிவு, அனைத்து விதிகள், விதிமுறைகள், அறிவிப்புகள், மரபுகள், மரபின்படியான பழக்க வழக்கங்கள் (all Rules, Regulations, Notification, custom and usage) ஆகியவற்றை சட்டம் என்கிற ஒரே குழுவிற்குள் கொண்டுவந்து அதற்கு இணையான சக்தியையும் அளிக்கின்றது. 
 
அரசியல் அமைப்புச் சட்டம் – க்ஷரத்து 25:
 
அனைத்து மக்களுக்கும் தங்களுடைய மதக் கோட்பாடுகளை, பொது சட்டம்-ஒழுங்கு, பொது ஒழுக்கம், சுகாதாரம் ஆகியவை பாதிக்கப்ப்டாத வகையில் மேற்கொள்வதற்கும், பின்பற்றுவதற்கும், விருத்தி செய்வதற்கும் உரிமையும் மதச் சுதந்திரமும் உண்டு என்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25வது க்ஷரத்து கூறுகிறது..  மதநடைமுறைகளுடன் தொடர்புடைய எந்த பொருளாதார, நிதி, அரசியல் அல்லது மதச்சார்பற்ற நடவடிக்கைகளை நிலுவையில் இருக்கின்ற சட்டங்கள் மூலமோ அல்லது புதிய சட்டங்கள் மூலமோ ஒழுங்கு படுத்துவதையும் இந்த க்ஷரத்து அனுமதிக்கிறது. சமூக நலன் மற்றும் சமூக சீர்திருத்தத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகுப்பினருக்கும் பிரிவினருக்கும் பொதுவாக இந்து மத (சீக்கிய, பௌத்த, ஜைன மதத்தினர் உட்பட) நிறுவனங்களைத் திறந்து விடுதலையும் இந்த க்ஷரத்து உறுதி செய்கிறது. 
 
 
அரசியல் அமைப்புச் சட்டம் – க்ஷரத்து 26: 
  
 
 
பொது சட்டம்-ஒழுங்கு, பொது ஒழுக்கம், சுகாதாரம் ஆகியவை பாதிக்கப்ப்டாத வகையில், மதம் மற்றும் அறம் சார்ந்த செயல்பாடுகளுக்கு நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதற்கும், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நிர்வாகம் செய்வதற்கும், அசையும், அசையா சொத்துக்களை வாங்குவதற்கும், சொந்தம் கொண்டாடுவதற்கும், அவ்வாறு வாங்கப்பட்ட சொத்துக்களை சட்டப்படி நிர்வகிப்பதற்கும் ஒவ்வொரு மதக்குழுவுக்கும் (Religious denomination)  உரிமையும் மதச்சுதந்திரமும் உண்டு என்பதை இந்த க்ஷரத்து உறுதி செய்கிறது. 
 
அரசியல் அமைப்புச் சட்டம் – க்ஷரத்து 14:
 
சட்டத்தின் முன் அனைவரும் சமம். மத, ஜாதி, இன, பாலின, பிறப்பிட பாகுபாடுகள் இன்றி சட்டத்தின் முன் அனைவரும் சரிசமமாகக் கருதப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
 
அரசியல் அமைப்புச் சட்டம் – க்ஷரத்து 17:
 
தீண்டாமை ஒழிப்பு. தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது. அதைக் கடைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தீண்டாமையின் விளைவாக வரும் இயலாமையை நடைமுறைப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
 
அரசியல் அமைப்புச் சட்டம் – க்ஷரத்து 16(5): 
 
ஒரு மத நிலையத்தில் ஏற்கனவே உள்ள மத விஷயமான அல்லது மதப்பிரிவின் வழிபாடு தொடர்பான அலுவல்கள் பதவிகள், குறிப்பிட்ட மதத்தினர்தாம் இருக்கவேண்டும் என்பதோ, அல்லது, குறிப்பிட்ட தனிப்பிரிவினர்தாம் இருக்க வேண்டும் என்பதோ, அரசின் கீழ் உள்ள வேலைவாய்ப்புகளில் பாகுபாடு இன்மை என்கிற கோட்பாட்டின் கீழ் வராது
 
  
மேற்கண்ட ஐந்து க்ஷரத்துக்களையும் ஆலோசித்துப் பார்க்கும்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நமக்குப் புரியும். 
 
முந்தைய வழக்குகள்
 
மேற்கண்ட க்ஷரத்துக்களைக் கருத்தில் கொண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இவ்வழக்கிற்குத் தொடர்புள்ள முந்தைய வழக்குகளின் தீர்ப்புகளையும் அலசி ஆராய்ந்து உள்ளனர். அந்தத் தீர்ப்புகளை நாமும் சற்று ஆராய்ந்து நோக்குவோம். 
 
சேஷம்மாள் வழக்கு: 
 
1970ம்  வருடம் அப்போதைய திமுக அரசு, கோவில்களில் நடைமுறையில் இருந்த பரம்பரை அர்ச்சகர் உரிமையை ரத்து செய்யும் சட்டத் திருத்தம் (இந்து அறநிலையத்துறை சட்டத் திருத்த மசோதா 1970) கொண்டு வந்தது. இந்தத் திருத்தம் 1971ம் வருடம் ஜனவரி 8ம் தேதி முதல் அமுலுக்கு வந்தது. 
 
இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாஸன அமர்வு (Constitutional Bench) தீவிரமாக விசாரித்தது. 
 
 
  
தமிழக அரசின் சட்டத் திருத்தத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாஸன அமர்வு, அர்ச்சகராக யாரை எப்படி நியமனம் செய்வது என்கிற மற்றொரு கேள்வியையும் கருத்தில் கொண்டு வழக்கை நடத்தியது. கோவில் கட்டப்படுவது முதல் விக்ரகங்கள் பிரதிஷ்டை, பூஜைகள், வழிபாட்டு முறைகள் வரை அனைத்தையும் வரையறை செய்யும் ஆகம சாஸ்திரங்கள் சொல்லிய படிதான் அர்ச்சகர்களையும் நியமனம் செய்ய வேண்டுமா என்கிற கேள்வியையும் கருத்தில் கொண்டு வழக்கை நடத்தியது. இறுதியில், தமிழக அரசின் சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொண்டு பரம்பரை அர்ச்சக உரிமையை ரத்து செய்தும், ஆகம விதிகளின் படியான குறிப்பிட்ட மதக்குழுக்களின் உரிமையை உறுதி செய்தும் உச்ச நீதிமன்ற அரசியல் சாஸன அமர்வு தீர்ப்பளித்தது. 
 
 
அதாவது, ஆகம விதிகளின்படி சைவத்தலங்களிலும், வைணவத்தலங்களிலும் பரம்பரையாக அர்ச்சகர் பணியில் இருந்து வரும் சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் ஆகியோரது உரிமையைப் பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல், அர்ச்சகர்கள் நியமனம் ஆகம விதிகளின்படியே நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. பல நூறாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் பாரம்பரியத்தை மாற்ற முனைவது, குறிப்பிட்ட மதக்குழுவின் மதச் சுதந்திரத்திலும் உரிமையிலும் தலையிடுவதாகும் என்பதோடு மட்டுமல்லாமல் அரசியல் சாஸன க்ஷரத்துக்களை (25, 26) மீறுவதாகும் என்றும் தீர்ப்பளித்தது. 
 
மேற்கண்ட தீர்ப்பை தற்போதைய வழக்கில் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், “ஆகம விதிகள் மத நம்பிக்கையின்பாற்பட்டவை. ஆகவே, அர்ச்சகர் நியமனம் ஆகம விதிகளின் படிதான் நடக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தது.  
 
கோபால மூப்பனாரும் மற்றவரும் / எதிராக / சுப்ரமணிய ஐயரும் மற்றவரும் 
 
“கோவில் அர்ச்சகர்கள் ஆகம விதிகளின் படி சிறப்பு தீக்ஷை பெற்றவர்கள் ஆதலால் அவர்கள் கர்ப்பக்கிரகத்தின் உள்ளே சென்று கடவுள் மூர்த்தங்களைத் தொட்டுப் பூஜை செய்யும் தகுதியும் உரிமையும் பெற்றவர்கள் ஆவர். அவ்வாறு ஆகம விதிகளின் படி சிறப்பு தீக்ஷை பெறாதவர்கள், அவர்கள் பிராம்மணர்களே ஆயினும், அவர்கள் தொடும்போது அந்தக் கடவுள் மூர்த்தங்கள் மாசுபட்டு அசுத்தமாக ஆகிவிடுகிறன. ஆகவே ஆகம விதிகளின் படி சிறப்பு தீக்ஷை பெற்றவர்களே கர்ப்பகிருகத்தினுள் செல்ல உரிமை பெற்றவர்கள்” என்று மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.  
 
மேற்கண்ட தீர்ப்பை தற்போதைய வழக்கில் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், “ஆகம விதிகள் குறிப்பிட்ட மதக்குழுவினருக்கு மட்டும் கர்ப்பக்கிரகத்தின் உள்ளே சென்று பூஜை செய்யும் உரிமை அளிக்கும்போது, மற்றவர்களை ஜாதி மற்றும் வகுப்பு அடிப்படையில் தடை செய்யவில்லை. ஆகவே ஆகம விதிகளின் படி அர்ச்சகரை நியமிப்பது தீண்டாமையை அனுசரிப்பதாக ஆகாது” என்று தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ளது. 
 
 
ஷிரூர் மடம் வழக்கு
 
1954-ல் ஷிரூர் மடம் சம்பந்தப்பட்ட வழக்கில் (Commissioner, HR & CE Madras Vs. Sri Lakshimindra Thirtha Swamiar of Shri Shirur Mutt – SPA 1954) உச்ச நீதிமன்றம், “அரசியல் சாஸனத்தின் 26வது க்ஷரத்தின்படி கோவில் அல்லது மடத்தின் வழிபாட்டு முறைகளையும் மற்ற சம்பிரதாயங்களையும் தீர்மானிக்கும் முழு உரிமை சம்பந்தப்பட்ட மத உட்பிரிவினருக்கு (Religious Denomination) மட்டும்தான் உண்டு. அதில் தலையிட வெளியில் உள்ள அதிகார மையங்களுக்கு உரிமை இல்லை. அம்மையங்களின் அதிகார எல்லைக்குள் அம்மடமோ, கோவிலோ வராது” என்று தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. 
 
மேற்கண்ட தீர்ப்பை தற்போதைய வழகில் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், “சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் ஆகியோர் மத உட்பிரிவினர் என்கிற தகுதி உடையவர்கள். மேலும் அவர்களுடைய பணி இறை வழிபாட்டில் இன்றியமையாத நடைமுறைகளாகும். ஆகவே, அவர்களுடைய நியமனத்திலோ, அல்லது அவர்களின் வழிபாட்டு முறைகளிலோ குறுக்கிடும் உரிமை அரசுக்குக் கிடையாது” என்று தீர்ப்பளித்துள்ளது.  
 
 
 
 
 
ஸ்ரீ வேங்கடரமண தேவரு-மைசூர் மாகாணம் வழக்கு
  
1958-ல் உச்ச நீதிமன்றம் முல்கிபேட்டா ஸ்ரீ வேங்கடரமண தேவரு தேவஸ்தானத்துக்கும் மைசூர் மாகாணத்துக்கும் இடையேயான வழக்கில் (‘Mr.Venkataramana Devaru Vs. State of Mysore’ (AIR 1958 SC 255 – SC reporter 1958 p.  895), “முல்கிபேட்டையில் இருக்கும் ஸ்ரீ வெங்கட ரமணர் கோவில், அதைக் கட்டிய கௌர சரஸ்வதி பிராம்மணர்களுக்குச் சொந்தமானது என்றாலும், அக்கோவிலில் நுழைய அனைத்துச் சமுதாய மக்களுக்கும் உரிமை உள்ளது. அனைத்துச் சமுதாயத்தினரும் கோவிலுக்குள் நுழையலாம் என்பது சமூக நலன் மற்றும் சமூக சீர்திருத்தத்திற்கு உகந்ததாகும். கௌர சரஸ்வதி் பிராம்மணர்களுக்கு என்று ஒரு தனியான சாஸ்திரக் குறிப்புகள் எந்த ஹிந்துமத நூலிலும் இல்லை. ஆகவே அவர்கள் சிதம்பரம் தீக்ஷிதர்கள் போன்ற ஒரு மதக்குழு இல்லை. மேலும் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலில் நுழைந்து வழிபடலாம் என்பது சமூக சீர்திருத்தமாக இருப்பதால் அதைத் தடை செய்ய முடியாது. ஆகம விதிகளின் படியான மரபு சார்ந்த பழக்க வழக்கங்களை இன்றியமையாத மத நடைமுறைகள் என்று கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட ஒரு ஜாதியினர் தவிர மற்றவர் கோவிலில் நுழையக்கூடாது என்பதை இன்றியமையாத மத நடைமுறையாகக் கருத முடியாது” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
  மேற்கண்ட தீர்ப்பை தற்போதைய வழக்கில் சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்றம், “தமிழக அரசின் அரசாணையைப் பொறுத்தவரை, பிறப்பு அடிப்படையிலன்றி தகுதியும் பயிற்சியும் உடைய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சமூக சீர்திருத்தம் என்று இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இத்தகைய சமூக சீர்திருத்த நடவடிக்கையை அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. மேலும் இதை அரசியல் அமைப்புச் சட்டத்தின் எந்த க்ஷரத்தும் தடை செய்ய முடியாது. அதே சமயத்தில், ஆகம விதிகளின் படி கட்டப்பட்ட கோவில்களில், ஆகம விதிகள் சொல்லியபடிதான் அர்ச்சகர்களும் நியமிக்கப்பட வேண்டும். அந்தச் செயலானது வழிபாட்டில் இன்றியமையாத நடைமுறையாகும். அதை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26வது க்ஷரத்துக்கள் உறுதி செய்கின்றன” என்று தன்னுடைய தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளது.    
  
என்.ஆதித்யன் – திருவிதாங்கூர் தேவஸ்தானம்
  
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட கோவிலில் நம்பூதரி அல்லாத ஆனால் தகுதி வாய்ந்த ஒரு பிராம்மணரை அர்ச்சகராக திருவிதாங்கூர் தேவஸ்தானம் நியமித்தது. அதை எதிர்த்து ஆதித்யன் என்பவர், “பல ஆண்டுகளாக இக்கோவிலில் நம்பூதரி பிராம்மண்ர்களே அர்ச்சகர்களாக இருக்கின்றனர். நம்பூதரி அல்லாத பிராம்மணர்களை அர்ச்சகராக நியமிப்பது அந்தப் பாரம்பரியத்தையும் நடைமுறையையும் மீறுவதாகும். அது அரசியல் சாஸன க்ஷரத்துக்கள் 25 மற்றும் 26 ஐ மீறுவதாகும்” என்று வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், “ஜாதி அடிப்படையில் கோரப்படும் உரிமைகளுக்கு அரசியல் சாஸனத்தின் 25 மற்றும் 26வது க்ஷரத்துக்கள் அனுமதியோ பாதுகாப்போ தரமாட்டா. அரசியல் அமைப்புச் சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னால் அப்படியான ஒரு பாரம்பரியம் இருந்தாலும், அரசியல் அமைப்புச் சட்டம் வந்த பிறகு அதற்குத்தான் முக்கியத்துவம் உண்டே தவிர, அதற்கு முன்பு இருக்கின்ற பாரம்பரியத்திற்கு அல்ல. மேலும் அப்படியான ஒரு பாரம்பரியத்தை அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரித்திருந்தால் தான் அதற்கு அனுமதியும் பாதுகாப்பும் கிடைக்கும்” என்று தீர்ப்பளித்து, நம்பூதரி அல்லாத பிராம்மணரின் நியமனத்தை அங்கீகரித்து ஆதித்யன் மனுவை தள்ளுபடி செய்தது.
 
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் குறிப்பிட்ட கோவிலானது ஆகம விதிகளின் படி கட்டப்பட்ட கோவில் அல்ல. ஆகவே அங்கே பணிபுரிய ஆகம விதிகளின் படி அர்ச்சகர்களை நியமனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆதலால், நம்பூதரி அல்லாத பிராம்மணரின் நியமனத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 
  
மேற்கண்ட தீர்ப்பை தற்போதைய வழக்கு விசாரணையில் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், “இதையும் சேஷம்மாள் வழக்கு தீர்ப்பையும் சேர்த்து நோக்கும்போது இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. இரண்டுமே ஆகமங்களின் முக்கியத்துவத்தையும், அதற்கான அரசியல் சாஸனத்தின் அனுமதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன” என்று தீர்ப்பளித்துள்ளது.
 
 source: www.vsrc.in
 
(தொடரும்)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version