Home இந்தியா ரங்கநாத ராமச்சந்திர ராவுக்கு மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய அகடமி விருது!

ரங்கநாத ராமச்சந்திர ராவுக்கு மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய அகடமி விருது!

Screenshot 2021 09 19 06 04 26 012 com.android.chrome

ரங்கநாத ராமச்சந்திர ராவுக்கு மொழிபெயர்ப்புக்கான மத்திய சாஹித்திய அகடமிவிருது – ராஜி ரகுநாதன்

ஆந்திர பிரதேஷ் கர்னூல் மாவட்டம் ஆதோனி நகரை சேர்ந்த பிரபல மொழிபெயர்ப்பு எழுத்தாளர் ரங்கநாத ராமச்சந்திர ராவு  மத்திய சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ராமச்சந்திர ராவின் தெலுங்கு மொழிபெயர்ப்பு ‘ஓம்நமோ’ நூலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்த நாவலை கன்னடத்தில் சாந்திநாத தேசாய் எழுதியுள்ளார். கதாசிரியராகவும் மொழிபெயர்ப்பு எழுத்தாளராகவும் இலக்கிய உலகில் ராமச்சந்திர ராவுக்கு சிறப்பான இடம் உள்ளது.

ராமச்சந்திர ராவின் முன்னோர்கள் மைசூர் அருகில் உள்ள சாமராஜ நகரைச் சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் குடும்பம் கர்னூல் வந்து அங்கு நிலைபெற்றது.  பெற்றோரிடமிருந்து கன்னட மொழியும் கர்நூலில் பிறந்து வளர்ந்ததால் தெலுங்கு மொழியும் அவருக்கு இயல்பாகவே வந்தன. கன்னடத்திலிருந்து மிகச் சிறந்த இலக்கியங்களை தெலுங்கு வாசகர்களுக்கு அளிப்பதற்கு  மொழிபெயர்ப்பு பணியை   தேர்ந்தெடுத்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒரு விதத்தில் தன் மொழிபெயர்ப்பால் தெலுங்கு கன்னட இலக்கியத் துறையில் அவர் ஒரு பாலம் போல் செயல்படுகிறார் என்றே கூற வேண்டும்.

சுமார் 350க்கும் மேற்பட்ட கதைகளை இராமச்சந்திர ராவு  தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் மொழி பெயர்த்துள்ளார். இதில் 200 க்கும் மேலாக கன்னட மொழிக் கதைகள் உள்ளன. மீதியுள்ளவற்றுள் ஹிந்தி, ஆங்கில கதைகள் உள்ளன. கன்னடத்திலிருந்து சாகித்திய அகடமிக்காக தெலுங்கில்  மொழி பெயர்த்த கதைகளில் கல் கரையும் நேரம், திருகுபாட்டு, ஓம் நமோ, பூரண சந்திர தேஜஸ்வி ஜீவிதமும் இலக்கியமும், அந்தப்புரம், அவதேஸ்வரி, பிரசித்தமான  சமகால கன்னட கதைகள்,  கருப்பு வெள்ளை சில நிறங்கள், ஊமையின்  கவலை, என் அம்மா என்றால் எனக்கு பிரியம் போன்ற கதைகள் உள்ளன.

நல்லாசிரியர் விருது பெற்றதோடு கூட பல இலக்கிய பரிசுகளும் பெற்றுள்ள திரு ராமச்சந்திர ராவு, “என்னுடைய இந்த சிறப்புக்கு என் ஆசிரியர்களே காரணம் என்று கூறுகிறார்.

2020 ஆம் ஆண்டிற்கான விருதுக்கு 24 மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களை மத்திய சாகித்திய அகாடமி சனிக்கிழமை அறிவித்தது. அகாடமி சேர்மன் டாக்டர் சந்திரசேகர் கம்பர் தலைமையில் அகாடமி செயலக மண்டலி சனிக்கிழமை கூடி இந்த விருதுக்கான தேர்ந்தெடுப்புகளுக்கு  ஒப்புதல் அளித்தது. ஒவ்வொரு மொழியிலும் மூன்று  அங்கத்தினர்களோடு கூடிய தேர்வுக் கமிட்டி இந்த அவார்டுகளை பரிந்துரை செய்தது. 2014 இலிருந்து 2018 வரை பிரசுரமான நூல்களை தேர்வுக்கு  பரிந்துரைத்தார்கள்.

இந்த அவார்டில் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் ஒரு செப்பு பத்திரமும் இருக்கும்.  இந்த அவார்டுக்கான தேர்வில் தெலுங்கு மொழியிலிருந்து ஜூரி அங்கத்தினர்களாக ப்ரொபசர் ஜிஎஸ் மோகன், டாக்டர் பாப்பினேனி சிவசங்கர், டாக்டர் அம்மங்கி வேணுகோபால் உள்ளார்கள்.

திருமதி அன்னபூர்ணா,  ரகுநாதராவு தம்பதிகளுக்கு ராமச்சந்திர ராவு

1953 ஏப்ரல் 28 இல் ஆதோனியில் பிறந்தார். பிஎஸ்ஸி, எம்ஏ ஆங்கிலம், பிஈடி பட்டங்கள் பெற்றுள்ளார்.  ஆதோனி நேரு மெமோரியல் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து 2011இல் பதவி ஓய்வு பெற்றார். தற்போது ஹைதராபாத்தில் வசிக்கிறார். 

ரங்கநாத ராமச்சந்திர ராவ் சிறுவர்களுக்காக பல கதைகளை எழுதியுள்ளார். சில புத்தகங்களாக வெளிவந்துள்ளன. உயர்ந்த தியாகம் கதைத் தொகுப்பு, எத்துக்கு பை எத்து, சுசித்ரா, ஸ்ரீராகவேந்திர சுவாமி சரித்திரம் கவர்னர் பில்லி (பல்வேறு  நாடுகளைச் சேர்ந்த நாட்டுப்புறக்கதைகள் தொகுதி),  அற்புத மந்திரம்,  வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும் போன்ற நூல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி பிடிவாத மனைவி, சிந்துபாத்தின் சாகச யாத்திரை, கலிவர் சாகஸ யாத்திரை, அலிபாபா நாற்பது திருடர்கள், அலாவுதீன் அற்புத விளக்கு, ஸ்ரீமதி விஜயலட்சுமி பண்டிட் போன்ற நூல்களை குழந்தைகளுக்காக எழுதி வெளியிட்டார்.   

ரங்கநாத ராமசந்திர ராவு பல்வேறு புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். சூரியநேத்ரா, ஸ்வப்னமித்ரா, ரங்கநாத், மனஸ்வினி, நிகமா, ஸ்வரூபாதேவி போன்ற புனைபெயர்களில் முன்னூறுக்கு மேலாக பல இலக்கிய படைப்புகள், 250 க்கு மேலாக மொழிபெயர்ப்பு கதைகள், 140 க்கு மேலாக சிறுவர் கதைகள், எழுபதுக்கு மேலாக சொந்தமாக கதைகள் எழுதியுள்ளார். 

ராமச்சந்திர ராவு மொழிபெயர்த்த சிக்னல் என்ற சிறுகதைத் தொகுதியிதில் பூமிக்கு மேல் இருக்கும் மனிதர்கள் குணத்திலும் சிந்தனையிலும்  ஒன்றுபோலவே இருக்கிறார்கள் என்று விவரித்துள்ளார். உலகத்தில் உள்ள அனைத்து நல்ல குணங்கள் கருணை அன்பு போன்றவையும் கெட்ட குணங்களான தீமை வஞ்சனை போன்றவையும் சிறிதும் மாற்றமில்லாமல் அனைவரிலும்  ஒன்று போலவே இருக்கிறது என்று மிக அழகாக விவரித்துள்ளார்.

மத்திய சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ராமச்சந்திர ராவ் பேசுகையில், “இந்த விருதுக்கு 

தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவை அனைத்திற்கும் எனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களே காரணம். அனந்த கமலநாத் பங்கஜ் என்ற ஹிந்தி ஆசிரியர் என்னை மொழிபெயர்ப் பாளராக  செதுக்கினார். ஆங்கில ஆசிரியர் வட்ளமூடி சந்திரமௌலி இலக்கியம் மற்றும் கதைகளின் மேல் எனக்கு ஆர்வம் ஏற்படுத்தினார். ஆறாவது வகுப்பிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்து வந்ததால் இத்தகைய இலக்கிய ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஆதோனி லைப்ரரி கூட என் உயர்வுக்கு மிகவும் உதவியாக இருந்தது.  எத்தனைதான் தொழில்நுட்ப உயர்வு இருந்தாலும் புத்தகத்தை எடுத்து படிப்பதால் கிடைக்கும் அறிவு அபாரம்.  ஆசிரியர்களும் பெற்றோரும் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே புத்தகம் படிப்பதை பழக்கமாக செய்ய வேண்டும்” என்று கூறுகிறார் இந்த விருதாளர்.

மத்திய சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் ரங்கநாத ராமச்சந்திர ராவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து ஜெகன் சனிக்கிழமையன்று ட்வீட் செய்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version