ஜி.எஸ்.டி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு ஓராண்டாகிறது

09 June30 GSTஇன்று சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு ஓராண்டாகிறது. நீண்ட நாட்களாக பேசப்பட்ட இந்த ஜி.எஸ்.டி முறை 2017 ஜூலை 1-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அமலுக்கு வந்தது. ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், தொடக்கத்தில் ஜி.எஸ்.டியில் சேர்க்கப்பட்டிருந்த பொருட்களுக்கு இப்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த வரி விகிதமாக இருந்த சில பொருட்களுக்கு இப்போது வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டியில் 5 கட்ட வரி விதிப்பு விகதங்கள் உள்ளன. 0%, 5%, 12%, 18%, 28% பெட்ரோல், டீசல், மது சார்ந்த பொருட்கள் இன்னும் ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வரப்படவில்லை. இனி வரும் காலங்களில் ஜி.எஸ்.டியால் மக்கள் பயன் பெறுவர் என்கின்றனர் வல்லுனர்கள்.

மறைமுக வரி வருவாயை நெறிமுறைப்படுத்துவதில் தொடங்கி, தொழில் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதை கட்டுப்படுத்த ஆணையம் அமைக்கப்பட்டது வரை இந்த ஓராண்டில் பல முன்னேற்றங்கள் ஜி.எஸ்.டியில் நடந்துள்ளது. ஓரே குடையின் கீழ் அனைத்து மறைமுக வரிகளையும் கொண்டு வர வேண்டும் என்ற ஜி.எஸ்.டியின் முக்கிய நோக்கம் நிறைவேறி வருகிறது.

“ஜி.எஸ்.டி கொண்டு வரப்பட்டதால், அனைத்து நிறுவனங்களும், வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இரட்டை வரி விதிப்பு முறைக்கும் முடிவு கட்டியுள்ளது” என்கிறார்ர் டிரான்ஸ்கான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆதித்யா கெடியா.

“ஜி.எஸ்.டியின் கீழ் இந்தியா முழுவதும் ஒரே வரி விகிதம் வசூலிக்கப்படுவதால், பொருட்களின் விலை சீராக இருக்கிறது. தொழில் போட்டியையும் இது அதிகரித்துள்ளது. இது மக்களுக்கு பயன் தரும் விஷயம்” என்கிறார் கெய்த்தான் நிறுவனத்தின் நிறுவனர்.

ஜி.எஸ்.டியால் கிடைக்கும் விலைக் குறைப்பை, மக்களுக்கு கொடுக்காமல், பொருட்களின் விலையில் அதிக லாபம் ஈட்டுவதை கட்டுப்படுத்தவும், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டியின் சிறப்பம்சமான உள்ளீட்டு வரி வருவாய் மூலம் நிறுவனங்களுக்கு கிடைக்கும் பலன்கள், அவர்களின் தயாரிப்புகளின் விலையில் பிரதபலிக்க வேண்டும். அதை கண்காணிக்கவும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கான வரி விதிப்பு ஜி.எஸ்.டி மூலம் குறைந்துள்ளதை அடுத்து, வீடுகளுக்கான விலை சந்தையில் குறைந்திருக்கிறது. எனவே குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

சிறு நிறுவனங்களின் வரி செலுத்தும் முறை ஒன்றாக குறைக்கப்பட்டதால், நேரம் மற்றும் செலவு மிச்சமாகியுள்ளது.

ஜி.எஸ்.டியில் பதிவு செய்து கொள்வது ஆன்லைன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது. உள்ளீட்டு வரி வருவாய் மூலம், வியாபாரிகளுக்கு லாப அளவு அதிகரித்துள்ளது. உள்ளீட்டு வரி வருவாய் நடைமுறை உள்ளதால், மொத்த லாபத்துக்கான வரி செலுத்தும் அளவு கணிசமாக குறையும்.

சர்வதேச நிதி மையம், இந்திய அரசு ஜி.எஸ்.டி நடைமுறையை இன்னும் எளிமையாக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஜி.எஸ்.டியில் இருந்து சிறப்பான பயன்களைப் பெற இன்னும் சில காலங்கள் தேவைப்படலாம்.