Home ஆன்மிகம் ஆலயங்கள் பழனி தஞ்சாவூர் ஸ்ரீரங்கம் திருச்சி கும்பகோணம் உள்ளிட்ட கோயில்களில் தரிசனம்! பக்தர்கள் நெகிழ்ச்சி!

பழனி தஞ்சாவூர் ஸ்ரீரங்கம் திருச்சி கும்பகோணம் உள்ளிட்ட கோயில்களில் தரிசனம்! பக்தர்கள் நெகிழ்ச்சி!

kumabhakonam

கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பழனி மலையில் 5 மாதங்களுக்கு பிறகு அரோகரா முழக்கம் எதிரொலித்தது.

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நூற்றாண்டுகள் பழமையான ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவின் கடைசி நாள் சிறப்பு பூஜையை தரிசிக்க அதிகாலை முதலே திரளான பக்தர்கள் குவிந்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சாமி தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் அனைவரும் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து ஒருவர் பின் ஒருவராக சாமி தரிசனம் செய்தனர்

திருச்சியில் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற பூலோக வைகுண்டம் என் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சாமி கோவில்,மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவில் அகியவை இன்று திறக்கப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை மற்றும் இன்று திறக்கப்பட்ட கோவில்களில் பக்தர்கள் உரிய வழி காட்டுதல் படிய
அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சுமார் 150 நாட்களுக்கு பின்பு கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் காலை முதலே உற்சாகத்துடன் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இதேபோல திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்கள். இஸ்லாமிய வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டது. இதில் மதம் சார்ந்த மக்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் உற்சாகமாக ஈடுபட்டனர்.

பழனி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் துவங்கியது. அரோகரா அரோகரா என்ற சரணகோஷம் முழங்க பக்தி பரவசத்தோடு பக்தர்கள் கண்ணீர் மல்க முருகனை தரிசித்து வருகின்றனர். பழனி மலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிவாரத்தில் டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்கள் அனைவரும் மலைக்கோவிலுக்கு சென்று 1 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து வெளியே வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரோப்கார் மற்றும் மின் இழுவை ரயில்களில் அனுமதிக்கப்படுவது இல்லை‌. படிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு முன்னதாக பாதவிநாயகர் கோவில் அருகே கிருமிநாசினி கொடுத்து முகக்கவசம் அணிந்த பக்தர்களை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

தனி மனித இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரோகரா, அரோகரா என்று சரணகோஷம் முழங்க கண்ணீர் மல்க முருகனை வழிபட்டனர்.

தஞ்சை பெரிய கோவிலில் காலை 6 மணி அளவில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு வருபவர்களில் பெயர், வயது மற்றும் ஊர் போன்றவற்றை பதிவு செய்து பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 5 மாதம் கழித்து பக்தர்கள் பெருவுடையாரை தரிசனம் செய்து வணங்கிச் செல்கின்றனர்.

கும்பகோணத்தை சுற்றி அமைந்துள்ள முக்கிய திருக்கோயில்கள் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சாமிமலை திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், திருநாறையூர் உள்ள மங்கல சனீஸ்வர பகவான் ஆலயமான ராமநாதசுவாமி திருக்கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம், திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயில், கடன் நிவர்த்தி ஸ்தலம் என போற்றப்படுகிற சாரபரமேஸ்வரர் திருக்கோவில் உட்பட பல்வேறு ஆலயங்களில் கோ பூஜை செய்விக்கப்பட்டு நடைகள் திறக்கப்பட்டன பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version