Home உலகம் நியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,!

நியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,!

gaurav-sharma-newzealand
gaurav sharma newzealand

நியூசிலாந்தில் எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில், அந்நாட்டின் எம்.பி.,யாக தேர்வாகியுள்ள இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் கௌரவ் சர்மா சம்ஸ்கிருதத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

நியூசிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிட்ட டாக்டர் கௌரவ் சர்மா அந்நாட்டின் மேற்கு ஹாமில்டன் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.,யானார். இதை அடுத்து புதன் கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் எம்.பி., டாக்டர் கௌரவ் சர்மா சமஸ்கிருத மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அவரது பதவிப் பிரமாணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நியூசிலாந்துக்கான இந்திய தூதர் முக்தேஷ் பர்தேசி, அவர் முதலில் நியூசிலாந்தின் மிகப் பழைமையான மொழியான மாவோரியிலும் பின்னர் இந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

33 வயது நிரம்பிய கௌரவ் சர்மா நாவ்டானில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது பேஸ்புக் பதிவில், ‛நான் சமஸ்கிருதத்தை ஆரம்பம் மற்றும் இடைநிலை பள்ளிப் பருவத்திலிருந்து கற்று வருகிறேன். சமஸ்கிருதம் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதிலிருந்து தான் எல்லா இந்திய மொழிகளும் தோன்றின’ என்று பதிவிட்டிருந்தார்.

அவர் ஏன் ஹிந்தியில் அல்லது பஞ்சாபியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை என்று சிலர் அவருக்கு கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த கௌரவ் சர்மா, நான் ஒரே நேரத்தில் எல்லோரையும் சந்தோஷப் படுத்த முடியாது. எனவே தான், பாரதத்தின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் ஏற்று இந்தியர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்தியுள்ளேன் என்று குறிப்பிட்டார்.

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோற்ற டாக்டர் கௌரவ் சர்மா, இப்போது வென்றிருக்கிறார். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், நியூசிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், இந்தியாவில் பிறந்து, சிங்கப்பூரில் பள்ளிக் கல்வி கற்று, பின்னர் நியூஸிலாந்துக்கு குடி பெயர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version