Home அடடே... அப்படியா? பணியிட மாற்றத்தால் பழிவாங்கிய ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அலுவலகம் முற்றுகை!

பணியிட மாற்றத்தால் பழிவாங்கிய ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அலுவலகம் முற்றுகை!

தனக்கு பணியிட மாற்றம் அளிக்கப் பட்டதற்கு காரணம் இவர்கள் தான் என்று நினைத்துக் கொண்ட ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், உள்நோக்கத்துடன் அவர்களுக்கெல்லாம் ஒரு நோட்டீஸை அனுப்பினார். இதை அடுத்து, பக்தர்கள் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்ரீரங்கம் கோயில்  மகா சம்ப்ரோக்ஷண காலத்துக்கு முன்பிருந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையராக பணியில் உள்ள ஜெயராமன். கோயிலின் பழமையை மீண்டும் கொண்டு வருவதாக கூறி கோயிலினுள் சுவர்களை இடித்து ஓவியங்களை எடுத்து போட்டோ பிரேம்களை அகற்றி பக்தர்கள் பலரின் விமர்சனங்களுக்கு ஆளானவர் இவர்

 தொடர்ந்து கோயில் உற்சவங்கள் நடைமுறைகள் உள்ளிட்டவற்றுக்கு இடையூறாக, பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் சமய வழி நம்பிக்கைகளுக்கு மாறான நடவடிக்கைகளை இவர் எடுத்தார் என்று கோயிலினுள் காலம்காலமாக கோயில் வழிபாட்டு நடைமுறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளோர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், அவற்றை நிர்வாக சீர்திருத்தம் என்று குறிப்பிட்டு வந்தார் இணை ஆணையர் ஜெயராமன். 

அண்மைக் காலமாக இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பக்தர்களாலும் ஆலய வழிபடுவோர் சங்கங்களாலும் கூறப்பட்டன. இதையடுத்து இவர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு பல்வேறு கோரிக்கைகள் புகார்கள் அனுப்பப்பட்டன 

குறிப்பாக கோயில் தலத்தார், தீர்த்தக்காரர்கள் ஆகியோர் ஆலயத்தில் பூஜை நடைமுறைகள் பாரம்பரியப்படி நடைபெறாமல் சீர் கெட்டு விட்டதாக குற்றம் சுமத்தி அது குறித்து அறநிலையத்துறை மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர் 

காண்க… வீடியோ:

இதனிடையே கடந்த மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கப்பட்ட நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் இதுகுறித்த அறநிலையத்துறையின் அறிவிப்பாணை வெளியானது 

ஆனால் தனது பணியிட மாற்றத்துக்கு காரணம் கோயில் ஸ்தலங்கள் என்று கருதி அதிகாரி என்ற நிலையில் உள்நோக்கத்துடன் பழிவாங்கல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் ஜெயராமன் என்று குற்றம்சாட்டுகின்றனர் பக்தர்கள். அதற்கு உதாரணமாக  ஸ்ரீரங்கம் வைணவ மதகுருமார்களுக்கு (ஸ்தலத்தார், தீர்த்தகாரர்கள்) அவர்களது வீடுகளை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பினார் இணை ஆணையர் ஜெயராமன். இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோயிலை சார்ந்த பெரிய நம்பிகள் திருமாளிகை பெரியவருக்கு கோயில் இணை ஆணையர் ஜெயராமன் அனுப்பிய நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வைரலானது. இது இந்துமத ஆன்மீக நம்பிக்கை கொண்ட பலருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது. காரணம் ஸ்ரீரங்கத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே வழிவழியாக கைங்கர்யங்களை மேற்கொண்டு வந்தவர்கள் கோயில் தலத்தார்கள், குறிப்பாக பெரிய நம்பிகள் திருமாளிகையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப் படுவதுண்டு. ஸ்ரீரங்கம் கோயில் சீர்த்திருத்தங்கள் மேற்கொண்டு, முறைப் படுத்திய மகான் ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து இங்கே இருந்து வரும் பரம்பரையைச் சேர்ந்தவர்கள், தாங்கள் இருக்கும் வீடுகளுக்கு பட்டா, உரிமைகள் ஆவணங்களை வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற சட்ட விழிப்புணர்வை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் ஏற்படுத்தியிருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

ஏற்கனவே அரசின் அறநிலையத்துறை, ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும், ஹிந்து ஆலயங்கள் பக்தர்கள் குழுவினரால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வரும் இந்து இயக்கங்களுக்கு இது, பெரும் அதிர்ச்சியை அளித்தது 

இதையடுத்து இன்று ஸ்ரீரங்கம் கோயில்  இணை ஆணையர் அலுவலகத்தை பக்தர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இது குறித்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறிய போது…

ஸ்ரீரங்கம் கோவிலில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பெரிய நம்பி குடும்பத்தினர்… இவர்கள் வைணவ ஆச்சாரியன் ராமானுஜர் அவர்களை காஞ்சீபுரத்தில் இருந்து அழைத்து வந்து ஸ்ரீரங்கம் கோவில் பணிகள் செய்ய வைத்தவர் ..

இந்த வீட்டிற்குதான் ராமனுஜர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அழைத்து வரப்பட்டு இருக்க வேண்டும் என்று சொல்லப் படுகின்றது… இதுதான் உலகிலேயே ஒரே குடும்பம் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக வசித்து வரும் வீடு இது என்று நாங்கள் விவரம் அறிந்த நாட்களில் இருந்து கேள்விப் படுகிறோம்.

இந்த வீடு சித்திரை தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்க்கு அருகில் உள்ளது.. நேற்று ஸ்ரீரங்கம் கோவில் அதிகாரி ஒரு ஆணை போட்டு,இந்த வீடு கோவிலுக்கு சொந்தம் என்றும், திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இந்த மனை கட்டப்பட்டுள்ளது எனவே காலி பண்ணுங்க என்றும் சொல்லி ஓலை அனுப்பி உள்ளார்..

அதாவது, ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த கல்மண்டபம் வீடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாம்.. (985–1014) ராமானுஜர் வாழ்ந்த காலத்தில் இந்த பகுதியை ஆண்ட மன்னன் அவனே .. கிட்டத் தட்ட அறுபத்தைந்து ஆண்டுகள் மட்டுமே அறநிலையத்துறை தமிழகத்தில் .. ஆனால் அதையும் கடந்து பல ஆண்டுகளாக பெரிய நம்பி ஸ்வாமிகள் வழி வந்தவர்கள் வசித்து வந்துள்ள இந்த வீட்டிற்கு பட்டயங்கள் கல்வெட்டு ஆதாரங்கள் என பலவும் உள்ளது..

இதை எதையும் கவனத்தில் கொள்ளாமல் காலி பண்ணி தாங்க என ஓலை அனுப்புவது முறையல்ல. இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இப்போது தீடீர் என ஆக்கிரமிப்பு என நோட்டீஸ் தருவது எதற்க்காக.? பெரிய நம்பிகள் சுவாமிகள் உட்பட ஆச்சார்ய புருஷர்கள் இணைந்து ஶ்ரீரங்கம் வந்த முதல்வர் எடப்பாடியிடம் ஶ்ரீரங்கம் கோவில் பற்றி மனு தந்ததன் அடிப்படையில் இந்த மிரட்டல் நோட்டீஸ் அவர்களுக்கு தரப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது..

இந்த நோட்டீசை கோவில் அதிகாரி ஜெயராமன் திரும்ப பெற வேண்டும்.. பெரிய நம்பி சுவாமிகள் உட்பட ஆச்சார்ய புருஷர்கள் வாழ்ந்த இல்லத்தை காப்போம்… என்று கூறினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version