Home அடடே... அப்படியா? MSP இதில் இருக்கு… எதிர் காலத்திலும் இருக்கும்: விவசாய மசோதாவை விளக்கிய பிரதமர்!

MSP இதில் இருக்கு… எதிர் காலத்திலும் இருக்கும்: விவசாய மசோதாவை விளக்கிய பிரதமர்!

modi-in-rajyasabha
modi in rajyasabha

நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோடி நீண்ட உரையாற்றினார். விவசாய மசோதா குறித்தும், விவசாயிகள் எனும் பெயரில் நடைபெறும் போராட்டம் குறித்தும் தன் கருத்துகளை முன்வைத்தார்.

அப்போது பேசிய அவர், விவசாயிகள் எம்.எஸ்.பி குறித்து பேசுகிறார். அதிகபட்ச விற்பனை விலை என்பது குறித்து பலரும் பேசுகிறார்கள். விவசாய மசோதாவில் இது குறிப்பிடப் பட்டிருக்கிறது. எதிர்காலத்திலும் இது இருக்கும் என்று பேசினார்.

அவர் பேசியவை…

சாதனை விளைச்சலைத் தாண்டி, நம்முடைய விவசாயத் துறையிலே பிரச்சனைகள் இருக்கின்றன.  யாராலாவது இல்லை என்று அடித்துச் சொல்ல முடியுமா?  ஆனால் பிரச்சனைகளுக்கான தீர்வை நாமனைவரும் இணைந்து தான் எடுக்க வேண்டும்.  நான் உறுதியாக நம்புகிறேன், இனி காலம் அதிகம் நமக்காக காத்திருக்காது. 

நம்முடைய ராம்கோபால் அவர்கள், மிக அருமையான விஷயத்தை சொன்னார்.  அதாவது கொரோனா ஊரடங்கின் போதும் கூட, நம்முடைய விவசாயிகள் விளைச்சலில் சாதனை படைத்திருக்கிறார்கள் என்றார்.  அரசாங்கமும் கூட,  விதைகள் உரம் என அனைத்தையும் கொரோனா காலத்திலும் கூட, கொண்டு சேர்ப்பதில் எந்த முயல்வையும் விட்டு வைக்கவில்லை கஷ்டமேற்பட விடவில்லை. 

இதன் முழுமையான பலனாகவே, தேசத்தின் சாதனை படைத்திருக்கும் அமோக விளைச்சல்.  விளைச்சலின் சாதனைக் கொள்முதலும், இந்தக் கொரோனா காலத்தில் தான் நடந்திருக்கிறது.  நாமும் புதியபுதிய உத்திகளைக் கையாண்டு, முன்னேறிச் செல்ல வேண்டும்

நான் முன்பே கூறியபடி, நம்மிடத்திலே நிறையவே சட்டங்கள் இருக்கின்றன.  ஒவ்வொரு சட்டத்திலும் இரண்டாண்டுகள் ஐந்தாண்டுகள் சில சமயம் 2-3 மாதங்கள் கழிந்த பிறகு, சீர்திருத்தங்களை செய்து தானே வருகிறோம்!  நாம் என்னவோ, மாறாத நிலையில் வாழ்க்கை நடத்துபவர்கள் இல்லையே!! 

நல்ல ஆலோசனைகள் கிடைக்கும் போது நல்ல சீர்திருத்தங்களும் செய்யப்படுகின்றன.  அரசுகள் நல்ல ஆலோசனைகளை எங்கள் அரசு மட்டுமல்ல அனைத்து அரசுகளும், நல்ல ஆலோசனைகளை ஏற்பது தானே நமது ஜனநாயகப் பாரம்பரியம்!!  அந்த வகையிலே, நல்லபடியாகச் செய்ய, நல்ல ஆலோசனைகளோடு, நல்ல சீர்திருத்தங்களுக்கான தயாரிப்புகளோடு கூட, நாமனைவரும் முன்னேறிச் செல்ல வேண்டும். 

நான் உங்களனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.  வாருங்கள், நாம் தேசத்தை…. முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவும், விவசாயத்துறையின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், போராட்டக்காரர்களுக்குப் புரிய வைத்து, நாம் தேசத்தை முன்னெடுத்துச் சென்றாக வேண்டும். 

இப்படியும் கூட, ஒருவேளை, இன்றோ நாளையோ, யார் ஆட்சியாளர்களோ, யாராவது இந்தப் பணியைச் செய்தே ஆக வேண்டும்.  இன்று நான் இதைச் செய்திருக்கிறேன், வசவுகளை என் கணக்கிலே சேர்த்து விடுங்கள்.  ஆனால் இந்த நல்லதைச் செய்ய இணையுங்கள். 

தவறுகள் என் கணக்கில்.  நன்மை நடந்தால் உங்கள் கணக்கில் வாருங்கள் இணைந்து பயணிப்போம்.  மேலும் தொடர்ந்து எங்கள் விவசாயத் துறை அமைச்சரும், தொடர்ந்து, விவசாயிகளோடு பேசி வருகிறோம். தொடர்ந்து சந்திப்புகள் நடந்து வருகின்றன.  மேலும் இதுவரை, எந்த ஒரு அழுத்தமும் ஏற்படவில்லை.  பரஸ்பரம் கருத்துக்களைப் புரிந்து கொள்ள புரிய வைக்க, முயற்சிகள் நடந்து வருகின்றன.

நாங்கள் தொடர்ந்து, போராட்டத்தோடு தொடர்புடையவர்களிடம் வேண்டிக் கொள்கிறோம், அதாவது போராட்டத்தில் ஈடுபடுவது உங்கள் உரிமை.  ஆனால் அந்த இடத்திலே,  மூத்தவர்கள் அமர்ந்திருப்பது சரியில்லை அவர்களைக் கொண்டு செல்லுங்கள்.  நீங்களும் போராட்டத்தைக் கைவிடுங்கள் முன்னேற பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் வழிகள் திறந்திருக்கின்றன. 

இவற்றையெல்லாம் கூறியிருக்கிறோம் இன்றும் இந்த அவை வாயிலாகவும் கோரிக்கை வைக்கிறேன்.  மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, உறுதியாக ஒன்றைச் சொல்ல முடியும்.  நம்முடைய விவசாயத்தை மேம்படுத்த, இதுவே சரியான சமயம், இந்தத் தருணத்தை நாம் கைநழுவிப் போக விடக்கூடாது.  நாம் முன்னேறிச் செல்ல வேண்டும், தேசத்தைப் பின்னோக்கிச் செல்ல விடக்கூடாது. 

ஆளும் தரப்பாகட்டும் எதிர்த்தரப்பாகட்டும், போராட்டம் செய்யும் நண்பர்களாகட்டும், இந்தச் சீர்திருத்தங்களுக்கு, நாம் வாய்ப்பளிக்க வேண்டும்.  ஒருமுறை பரிசோதித்துப் பார்க்க வேண்டும், இந்த மாற்றத்தால் ஆதாயம் கிடைக்கிறதா இல்லையா என்று.  குறையேதும் இருந்தால், அதை நாம் சீர் செய்வோம்.  எங்காவது ஓட்டைகள் இருந்தால், அவற்றை நாம் அடைத்து விடுவோம்.

ஏதோ அனைத்து வழிகளும், மூடப்பட்டு விட்டன என்பது இல்லை.  ஆகையால் தான் நான் கூறுகிறேன், நான் நம்பிக்கை அளிக்கிறேன், சந்தைகள் அதிக, நவீனமயமாக்கப்பட வேண்டும்.  அதிக போட்டித்தன்மை உடையனவாக இருக்கும்.  இதற்காக இந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கி இருக்கிறோம். 

இது மட்டுமல்ல, MSP இருக்கும், MSP இருந்தது, மேலும் MSP தொடரும்.  இந்த அவையின் புனிதத்தன்மையை நாம் புரிந்து கொள்வோம்.  80 கோடிக்கும் மேற்பட்ட எந்த மக்களுக்கு நாம், மலிவு விலை ரேஷன் பொருட்கள் அளிக்கிறோமோ, அதுவும் தொடர்ந்து அளிக்கப்படும்.  ஆகையால் தயவு செய்து, ஒரு பிரமையை ஏற்படுத்தும் காரியத்தில் நாம் ஈடுபட வேண்டாம். 

ஏனென்றால் தேசம் நமக்கெல்லாம்….. ஒரு சிறப்பான பொறுப்பை அளித்திருக்கிறது.  விவசாயிகளின் வருவாயைப் பெருக்க மற்ற வழிகள், இவற்றின் மீதும்…. நாம் கவனம் செலுத்துவது அவசியம். 

ஜனத்தொகை பெருகுகிறது, குடும்பத்தில் உறுப்பினர்கள் பெருகுகிறார்கள் நிலத்தின் அளவு குறைந்து கொண்டே வருகிறது.  இப்படிப்பட்ட நிலையில், நாம், ஏதாவது ஒரு தீர்வை கண்டாக வேண்டும், இதனால் விவசாயம் மீதான சுமை குறைய வேண்டும். 

மேலும் நமது விவசாயிகளின் குடும்பத்தாரும், தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ள நாம் மேலும் சந்தர்ப் பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.  இவர்களுடைய கஷ்டங்களைத் தொலைக்க, நாம் பணியாற்ற வேண்டும்.

  • தமிழாக்கம் : ராமஸ்வாமி சுதர்ஸன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version