Home சற்றுமுன் ‘திரையில் தோன்றுவதன் மூலமே பிரபலமடைந்த’ நடிகர்கள் காலையிலேயே வாக்குப் பதிவு!

‘திரையில் தோன்றுவதன் மூலமே பிரபலமடைந்த’ நடிகர்கள் காலையிலேயே வாக்குப் பதிவு!

தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் சட்டசபைத் தேர்தலுக்ககான வாக்குப் பதிவு விறு,விறுப்பாக நடைபெற்றது. அரசியல் கட்சியினர், திரையில் தோன்றுவதன் மூலம் மட்டுமே பிரபலம் அடைந்த சினிமா நடிகர்கள் நடிகைகள் உள்ளிட்டோர் காலையிலேயே ‘அரசியல்’ அடையாளங்களுடன் வாக்குப் பதிவு செய்தனர்.

சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்கினை பதிவு செய்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஆழ்வார்பேட்டையில் தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது மகள்கள் அக்சரா, சுருதி ஆகியோரும் வாக்கு அளித்தனர்.

நடிகர் அஜித் அவரது மனைவி ஷாலினியுடன் வந்து ஓட்டுப் பதிவு செய்தார். அவர் தனது முகத்தில் அணிந்திருந்த முகக் கவசத்தில் கருப்பு மற்றும் சிவப்பு வண்ணத்தில் பட்டி அணிந்து இருந்தது சமூகத் தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அஜித் ரசிகர்கள் பெரும் அளவில் கூடி தொந்தரவு செய்த போது, அஜித் அவர்களை அதட்டி அங்கிருந்து அப்புறப் படுத்தும்படி செய்தார்.

நடிகர் விஜய், தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வை சுட்டிக் காட்டும் வகையில் வழக்கமாக தனது வாக்குச் சாவடிக்கு வருவது போல் காரில் வராமல், வாக்களிக்க சைக்கிளில் வந்தார். தனது வீட்டில் இருந்து வாக்களிக்க விஜய் சைக்கிளில் கிளம்பிய போதே, அவருடைய ரசிகர்கள் ஆரவாரம் செய்து உடன் கிளம்பினர்.

வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்த போது, சுற்றிலும், அவரது ரசிகர்கள் கூடி வந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவினால் போலீஸார் தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்தனர்.

தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி வரை சைக்கிளில் வந்த விஜய், வாக்களித்துவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது உடன் வேறு வண்டிகளில் பின் தொடர்ந்த விஜய் முன் முண்டியடித்து செல்ஃபி எடுத்து ஆங்காங்கே சிலர் கீழே விழுந்தனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை வெளிப்படுத்தவே அரசியல் கருத்தைத் தெரிவிக்கும் வகையில் கருப்பு சிவப்பு வண்ண சைக்கிளில் விஜய் வாக்களிக்க வந்தார் என்று கூறப்பட்டதை விஜயின் பிஓ மறுத்து ஓர் அறிக்கை விட்டார். அதில், வாக்குச் சாவடிக்கு காரில் செல்ல வழி இல்லை என்பதால் சைக்கிளில் வந்ததாகக் குறிப்பிட்டு, இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்று கூறியிருந்தார்.

நடிகர்கள் சூர்யா, அவரது சகோதரர் கார்த்தி இணைந்து வந்து தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.

மந்தைவெளி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பா.ஜ., வேட்பாளர் நடிகை குஷ்பு வாக்களித்தார்..

சென்னை ஆலம்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.

பெசன்ட் நகரில் வீட்டில் இருந்து ஓட்டுச்சாவடி வரை நடந்து வந்த நடிகர் விக்ரம் தனது ஓட்டை பதிவு செய்தார். முன்னதாக, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, அது சரி செய்யப்படும் வரை காத்திருந்த அவர், ஓட்டு போட்டார். அரை கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து வாக்கு செலுத்தினார் நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் வாக்களிக்க வந்த போது, திடீரென வாக்கு இயந்திரம் பழுதானதால், அரை மணி நேரம் காத்திருந்து வாக்களித்தார். வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட பெசண்ட் நகரிலுள்ள வாக்குச்சாவடிக்கு தனது வீட்டில் இருந்து நடந்தே வந்த நடிகர் விக்ரமை, காவல்துறையினர் உள்ளே அழைத்துச் சென்றனர். இருப்பினும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால், அவர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அரைமணி நேரத்திற்கு பிறகு வாக்கு பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டு, நடிகர் விக்ரம் வாக்களித்துவிட்டு வீட்டுக்கு காரில் புறப்பட்டார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்து வாக்கு செலுத்தினார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட தியாகராயர் நகர் இந்தி பிரச்சார சபாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ஜீவா தனது வாக்கினை பதிவு செய்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகர் சத்யராஜ், தனது மகன் சிபிராஜுடன் வந்து வாக்கு செலுத்தினார். இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகன் நடிகர் சிபிராஜ் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.

நடிகர் பிரபு, மனைவி மற்றும் மகன் விக்ரம் பிரபுவுடன் வந்து வாக்கு செலுத்தினார். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் பிரபு வாக்கு செலுத்தினார்.

நகைச்சுவை நடிகர் வையாபுரி மதுரவாயல் தொகுதியில் வாக்களித்தார். மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கம் வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நகைச்சுவை நடிகர் வையாபுரி வாக்களித்தார்

நடிகை நமீதா ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு செலுத்தினார். நடிகை நமீதா தனது கணவருடன் ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட வள்ளுவர் கோட்டம் அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.

திரைப்பட நடிகர் விவேக், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் வாக்குச் செலுத்தினார். சாலிகிராமத்திலுள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் விவேக் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இயக்குநர் பாரதிராஜா தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் பாரதிராஜா ஓட்டுப் போட்டார்.

நகைச்சுவை நடிகர் செந்தில், சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வாக்களித்தார். சாலிகிராமம் பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று நடிகர் செந்தில் வாக்களித்தார்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோட்டக்காரத் தெரு பி.எஸ்.ஐ. தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னை தியாகராய நகர் தொகுதியில் வாக்கு செலுத்தினார். வெங்கட் நாராயணா சாலையிலுள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாக்களித்தார்.

சென்னை விருகம்பாக்கம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும், பாடலாசிரியருமான சினேகன், சாலிகிராமத்தில் தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார் மீதோ இருக்கும் வெறுப்பில் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் லேக் எரியா பள்ளியில் நடிகர் ஆனந்த்ராஜ் வாக்களித்தார்.

சென்னை தியாகராய நகர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கோடம்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடிகர் விஜய் சேதுபதி வாக்களித்தார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட டி.டி.கே. சாலையிலுள்ள புனித பிரான்ஸிஸ் சேவியர் நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகை த்ரிஷா வாக்களித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version