- Ads -

    நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும்! : கருணாநிதி உறுதி !

    karunanidhi சென்னை: நீதி என்றும் வெல்லும், நிச்சயமாக வெல்லும் என்ற தலைப்பிட்டு இன்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட கடித அறிக்கையில்…. ஜெயலலிதாவின் 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணை, 5-1-2015 அன்று தொடங்கி, கர்நாடகா உயர் நீதி மன்றத்தில் மின்னல் வேகத்தில் வழக்கறிஞர்களின் வாதங்கள் முற்றுப் பெற்று நேற்றையதினம் நீதிபதி அவர்கள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்ப தாகத் தெரிவித்திருக்கிறார். இந்த நேரத்தில் , இதுவரை விசாரணை நடைபெற்ற 38 நாட்களில், நீதிபதி குமாரசாமி அவர்கள் அவ்வப்போது குறுக்கிட்டு தெரிவித்த கருத்துகளை, தீர்ப்புக்கு முன்பு அனைவர்க்கும் நினைவூட்டவே இந்தக் கடிதம்! 16-2-2015 அன்று ஜெயலலிதா வழக்கறிஞர், பி. குமார்: “இது அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டுள்ள பொய் வழக்கு” நீதிபதி சி.ஆர். குமாரசாமி அவர்கள்: “இது பொய் வழக்கு, பொய் வழக்கு என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறீர்கள். ஆனால், குற்றவாளிகள் மீது கூறியுள்ள புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் முழுமையாகக் காட்டாமல், வாய் வழியாக பொய் வழக்கு என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அரசுத் தரப்பில் 259 சாட்சிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். புகார் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் 2 ஆயிரத்து 341 ஆவணங் கள் தாக்கல் செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகள் தரப்பில் 99 சாட்சிகளும் 385 ஆவணங்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளீர்கள். அதிலும் அரசுத் தரப்புக் குற்றத்தை முறியடிப்பதற்கான ஆதாரங்கள் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை” ஜெ. வழக்கறிஞர் குமார்: ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது, ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கினார் நீதிபதி குமாரசாமி அவர்கள்: “முதல்வர் பதவியில் இருப்பவர் ரூ. 1 சம்பளம் வாங்கினாலும், பொது ஊழியராகத்தான் கருதப்படுவார். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனும் போது, ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு 66 கோடி ரூபாய் வருமானம் உள்ளதை லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இல்லை என்பதற்கு உங்கள் தரப்பில் எந்த ஆதாரமும் கொடுக்கவில்லையே” என்று நீதிபதி சொல்லியிருக்கிறார். சுதாகரன் திருமணச் செலவு பற்றிய விவாதம் நடைபெற்ற போது, இத்தனை கோடி ரூபாய் செலவு செய்து இவ்வளவு பிரமாண்டமாக திருமணம் செய்ய சுதாகரன் என்ன அ.தி.மு.க. தொண்டரா? அல்லது ஜெயலலிதாவின் மகனா? –

    • நீதிபதி குமாரசாமி அவர்கள்: குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி அவர்கள்: “இத்தனை கோடி ரூபாய் செலவு செய்து இவ்வளவு பிரமாண்டமாக திருமணம் செய்ய சுதாகரன் என்ன அ.தி.மு.க. தொண்டரா? அல்லது ஜெயலலிதாவின் மகனா? இதுவரை 28 நாட்கள் வாதம் செய்துள்ளீர்கள். தனி நீதிமன்ற நீதிபதி தவறாகத் தீர்ப்பு வழங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள். அவர் வழங்கியுள்ள தீர்ப்பில் என்ன குறை என்பதை 20 நாளில் உங்களால் உறுதி செய்ய முடியவில்லை. இப்படி இருந்தால் நான் மட்டும் என்ன செய்ய முடியும்? தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நானும் உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலைதான் தற்போது நிலவுகிறது.

    சுதாகரன், இளவரசி சார்பாக முன்னாள் நீதியரசர், சுதந்திரம் வாதத்தைத் தொடங்கும்போது, நீதிபதி குமாரசாமி :- இந்த வழக்கில் முக்கியமானது 120 பி – கூட்டுச் சதி, 109 குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல். ஜெயலலிதா அரசு பதவியில் இருந்த போது சம்பாதித்த பணத்தை வைத்து, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோ ருடன் கூட்டுச் சதி செய்து சொத்துகள் வாங்கியதாகவும், ஜெயலலிதா குற்றங்கள் செய்ய சசிகலா, சுதாகரன், இளவரசி உடந்தையாக இருந்ததாகவும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை பதிவு செய்திருக்கிறது. இதைப்பற்றி சரியாக யாரும் வாதிடவில்லை. நீங்கள் 120பி, 109 பற்றி வாதிடுங்கள். சுதந்திரம் :- ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) இ-யில் 120 பி, 109 வராது. ஏ.1 ஜெயலலிதா கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் தமிழக ஊழல் தடுப்பு போலீசாரால் நிரூபிக்கப்படவில்லை. நீதிபதி :- ஜெயலலிதாவை ஏன் காப்பாற்ற நினைக் கிறீர்கள்? உங்கள் தரப்பு குற்றச்சாட்டுகளை மட்டும் வாதிடுங்கள். ஏ.1 (ஜெயலலிதா) வுக்காக வாதிட்ட வரும், ஏ.2 (சசிகலா)வுக்காக வாதிட்டவரும் சாட்சியங்களின் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி வாதிடவில்லை. நீங்களாவது குற்றப் பின்னணி கொண்டவர்கள் கூட்டுச் சதி, குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது இல்லை என சாட்சிகளின் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி வாதிட வேண்டும். மணி சங்கர் (சசிகலாவின் வழக்கறிஞர்) :- ஜெயலலிதா குற்றம் செய்ய உடந்தையாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இருந்தனர் என எந்த ஓர் அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி :- கூட்டுச் சதியில் ஈடுபடாதவர்களை எப்படி தனி நீதிமன்றம் தண்டித்து இருக்கும்? தமிழக ஊழல் தடுப்புப் போலீசார் ஆதாரங்கள் இல்லாமல் வழக்கை பதிவு செய்யத்தான் முடியுமா? இல்லை, இந்த வழக்கை 18 ஆண்டுகள் நடத்தி இருக்கத்தான் முடியுமா? இல்லை, இதையெல்லாம் ஆராயாமல் தனி நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி யிருக்கத்தான் முடியுமா? தேவை இல்லாததைப் பேசி நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குவதை விட, தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தவறுகள் இருந்தால் அவற்றை உங்கள் தரப்பு ஆதாரங்களோடு நிரூபியுங்கள். இதுவரை 65க்கும் மேற்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி தேவையில்லாமல் வாதிட்டுக் கொண்டிருக் கிறீர்கள். இதுவரை 20 சதவிகிதம் கூட ஆதாரங் களோடு வாதிடவில்லை. சுதந்திரம் :- பவானி சிங் எங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளைக் கூறி வாதிடட்டும், அதற்குப் பதில் சொல்கிறோம். நீதிபதி :- இதுபோன்ற கிரிமினல் வழக்குகளை எதன் அடிப்படையில் வாதிட வேண்டும் என்பது தெரியுமா? ஜெயலலிதாவைப் பற்றியே கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மனுதாரரைப் பற்றிக் கவலைப்படுங்கள். அவர்களுடைய குற்றச்சாட்டுகளைப் பற்றி வாதிடுங்கள். வாதத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு அமையும். வழக்கறிஞர் குமார் :- ஜெயலலிதா செலவுப்பட்டியலில் இருந்து சுதாகரன் திருமணச் செலவு 6.45 கோடி ரூபாயை நீக்க வேண்டும். நீதிபதி :- உங்கள் தரப்பு வாதங்களை இப்படி வாய்மொழியாகவே பேசி வருகிறீர்கள். கட்டட மராமத்துப் பணிக்காக நீங்கள் செய்த செலவுக்கான ஆதாரங்கள் என்ன? அதற்கான சாட்சியங்கள் என்ன என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த சாட்சியங்களோடும் ஆதாரங்களோடும் 82 – 92 சதவிகிதம் நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் இதுவரை சாட்சிய ஆதாரங்களை காட்டவும் இல்லை. 30 – 35 சதவிகிதம் வரைதான் வாதிட்டிருக்கிறீர்கள். குமார் :- 35 மார்க் எடுத்தாலே பாஸ்தான். நீதிபதி :-பள்ளிக்கூடத்தில் 35 மார்க் எடுத்தால் பாஸாக இருக்கலாம். ஆனால் நீதி மன்றத்தில் எதிர் தரப்பை விட அதிக மார்க் வாங்கினால்தான் பாஸ் பண்ண முடியும். அப்படிப் பார்த்தால் உங்களை விட அவர்கள் 65 மார்க் அதிகமாக வாங்கியிருக்கிறார்கள். அதனால் அவர்கள்தான் பாஸ். ரூபாய் 66 கோடி வருமானத்திற்கு சொத்துள்ளது என்பதை இல்லை என்று மறுக்கும் வகையில் ஆதாரமில்லையே? ஒன்று, வாதத்திற்குத் தேவையான ஆதாரம் கொடுங்கள். இல்லையெனில் நானே ஒரு ஆடிட்டரை நியமனம் செய்து கொண்டு கணக்குகளை சரிபார்க்கிறேன். அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதமும் அவசியமில்லை. நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்பு வழங்கி விடுகிறேன். இது தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று நீதிபதி குமாரசாமி கூறியிருக்கிறார். இவ்வாறு தனது கடித அறிக்கையில் நினைவூட்டலாகக் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

    NO COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Exit mobile version