Home அடடே... அப்படியா? மராட்டிய மண்ணில் மகாலட்சுமி பூஜை!

மராட்டிய மண்ணில் மகாலட்சுமி பூஜை!

mahalakshmi-pooja-maratta2-1
mahalakshmi pooja maratta2 1

மஹாலட்சுமி பூஜை
கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்

மஹாராஷ்டிர மாநிலத்தில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் கணபதி உத்ஸவத்தின் இடையில் மூன்று நாட்கள் மஹாலட்சுமி பூஜை செய்கின்றனர்.

பாத்ரபத மாதத்தின் சப்தமி திதி அன்று மஹாலட்சுமி பூஜை ஆரம்பமானது. புதன்கிழமை இன்று இரண்டாவது நாள். ஜேஷ்ட லட்சுமி மற்றும் கனிஷ்ட லட்சுமியுடன் அவர்களின் குழந்தைகளையும் சேர்த்து இந்த நாளில் வணங்குகின்றனர்.

mahalakshmi pooja maratta 1

மராட்டிய மாநிலத்தின் விதர்பா பகுதியில் இந்த பூஜையைப் பற்றிய பலவிதமான கதைகள் கூறப்படுகின்றன.

வர்தாவில் உள்ள மைதிலி மாரோட்கர் மஹாலட்சுமி பூஜையைப் பற்றி கூறும்போது… ஜேஷ்ட லட்சுமியும், கனிஷ்ட லட்சுமியும் தங்கள் தாய்வீட்டிற்கு வருவதாக ஐதீகம்.

இரு சகோதரிகளில் ஒருவர் பணக்காரராகவும், ஒருவர் ஏழையாகவும் இருந்தாலும் தாய் வீட்டில் ஒரே மாதிரியாகவே மதிக்கப்படும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுவதாக சிலர் கூறுகிறார்கள்.

மஹாலட்சுமி பூஜை மிகுந்த சிரத்தையுடனும், அனுஷ்டானத்துடனும் கொண்டாடப்படுகிறது. நின்ற வாக்கில் இரு லட்சுமிகளும், ‘ முகுட்’ என்று கூறப்படும் முகம் வைத்து, பலவித அலங்காரங்கள் செய்யப்பட்டு காட்சி அளிக்கின்றனர்.

அனார்சா (தமிழகத்தில் நாம் செய்யும் அதிரசம் போன்ற பண்டம்), முள்ளுத் தேங்குழல், சோமாசி, லட்டு முதலியவற்றை செய்து காய் வடிக்க பயன்படுத்தும் சல்லடையில் கோத்து… லட்சுமிகளின் மேலே தொங்கவிடுவர். அதனை “ஃபுளோரா” என்கின்றனர்.

தானியங்கள், வளையல்கள், புடவைகள் என லட்சுமி தேவிகளுக்கு படைப்பதை ‘ ஓட்டி’ நிரப்புதல் என்கின்றனர்.

இரண்டாம் நாளான அஷ்டமியில் 16 வகை காய்கறிகளுடன், விருந்து படைத்து, லட்சுமிகளுக்கு ஆரத்தி எடுத்து பூஜை செய்வர். அன்று ‘அம்பில்’ என்னும் சோளத்தினால் தயாரிக்கப்படும் பண்டம் பிரசாதமாக வழங்கப்படும். ஏழ்மை நிலையில் உள்ளோரும் ‘அம்பில்’ பிரசாதமாக செய்து படைத்தாலும் லட்சுமி தேவதைகள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது நம்பிக்கை.

mahalakshmi pooja maratti 1

முன் காலத்தில் எல்லாம், மஹாலட்சுமி பூஜை மிகவும் பக்தி பாவத்துடன் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விழாவாக இருந்தது. காலப்போக்கில், அக்கம் பக்கத்து வீட்டாரின் பங்கேற்பையும் ஏற்றுக் கொள்வதாய் அமைந்துள்ளது.

மூன்றாம் நாளும் ஆரத்தி எடுத்து, சுமங்கலிக்கு மஞ்சள் குங்குமம் அளித்து மகிழ்வர். காலம் காலமாக வரும் குடும்பங்களில் அனைத்து சாதியினரும் மஹாலட்சுமி பூஜையினை கொண்டாடுகின்றனர்.

” எங்கள் வீட்டில் நாங்கள் உபயோகப்படுத்தும் ‘முகுட்”, 191 வருட பாரம்பரியமானது,” என்றார் மைதிலி மாரோட்கர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர பதினாறு தீபங்களுடன் இரண்டாம் நாள் ஆரத்தியில் ஈடுபடும் போது இல்லத்தில் பக்தி பரவசம் தழைத்தோடும்.

mahalakshmi pooja 1 1

ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்தம் மூதாதையர் பின்பற்றிய வழிமுறையை இன்றும் கடைப் பிடிக்கின்றனர். இளம் வயதினரும் ஆர்வமுடன் மஹாலட்சுமி பூஜையில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறுகிறார்.

இறை நம்பிக்கையும், கலாசாரமுமே நம் நாட்டின் மூலாதாரம் என்பதற்கு மராட்டியத்தின் இந்த மஹாலட்சுமி பூஜையும் ஓர் எடுத்துக்காட்டு.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version