Home கட்டுரைகள் சாந்தா என்னும் ஆலவிருட்சம்!

சாந்தா என்னும் ஆலவிருட்சம்!

dr-jb-and-dr-shantha
dr jb and dr shantha

இன்று டாக்டர் சாந்தா மறைந்தார். காலை கேன்சர் இன்ஸ்டிட்யூட் சென்றபோது அமைதியாக ஓ.பி. இயங்கிக்கொண்டிருந்தது. நோயாளிகள் அமர்ந்து கொண்டிருந்தார்கள் – தான் மறைந்தாலும், நோயாளிகள் கவனிக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருப்பாரோ? நாற்பது வருடங்களுக்கு முன், மேடம் அவர்களுடன், நடந்து சென்ற அந்தக் காரிடோர், இன்று கூட்டமாய் இருந்தாலும், வெறுமையாய்த் தோன்றியது.

1981 -1983 – கேன்சர் இன்ஸ்டிடியூட் என்னும் ஆலமரத்தின் நிழலில் உதவி மருத்துவனாக, ‘மெடிகல் ஆங்காலஜி’ பிரிவில் (புற்று நோய்க்கு மருந்துகளால் சிகிச்சை – இரத்தப் புற்று நோய், லிம்ஃபோமா, மற்றைய கேன்சர்களின் கீமோதெரபி செய்யும் சிறப்புப் பிரிவு) சேர்ந்தேன்.

சேர்த்துக்கொண்டவர் டாக்டர் சாந்தா அவர்கள். புற்றுநோய் சிகிச்சைகளிலேயே கடினமானதும், அதிக அனுபவமும் வேண்டிய இந்தப் பிரிவில் என்னைச் சேர்த்துக்கொண்டதும் அல்லாமல், சிகிச்சையில் அன்றைய நாளில் வழக்கத்தில் இருந்த அத்தனை நுணுக்கங்களையும் மிக நேர்த்தியாகவும், அழகாகவும் எனக்குக் கற்றுக்கொடுத்த அன்பான குரு அவர்கள்!

’பளிச்’ சென்று கோட், நேர்த்தியான வெளிர் நிறத்தில்காட்டன் சாரி, கையில் கைக்குட்டையுடன் ஒரு பேனா – முகத்தில் புன்னகை – காலையில் மாடிப்படிகளில் இறங்கி வரும் அதே வேகம், அன்றைய நாளின் அலுவல்கள் முடிந்து இரவு மீண்டும் படிகளில் திரும்பி ஏறிச் செல்லும் போதும், கொஞ்சமும் குறையாமல் இருக்கும்! முகத்தில் ஒரு திருப்தியும், மகிழ்வும் தெரியும், கூடவே, மறுநாள் காத்திருக்கும் அலுவல் குறித்த சிந்தனையும் எட்டிப் பார்க்கும்.

பிளட் கேன்சர் (LEUKEMIAS AND LYMPHOMAS) குழந்தைகளுக்கென தனியான வார்ட் ஒன்று உண்டு. முழுமையாக குணமடைந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல்வாழும் குழந்தைகளுக்கென்று வருடத்தில் ஒரு நாள் – எல்லா பெற்றோர்களுடனும் ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு நடைபெறும்- டாக்டர் சாந்தா அவர்களின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சியை வேறெந்த நாளும் பார்க்கமுடியாது.
போன் மேரோ ட்ரான்ஸ்பிளாண்ட், அதி நவீன ரேடியோதெரபி, ரேடியம் இம்ப்ளாண்டேஷன், புதிய அறுவை சிகிச்சைமுறைகள் என இன்ஸ்டிடியூட் வளர, தன் வாழ்க்கையையேஒரு வேள்வியாக மாற்றிக்கொண்டவர் சாந்தா அவர்கள்.

doctor shantha

தனிப்பட்ட முறையில் என் மீது அன்பும், கரிசனமும் கொண்டவர் – ஒருமுறை கூட அவர் என்னைக் கடிந்து ஒரு வார்த்தை சொல்லியதில்லை! புதன் கிழமைகளில் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்களுடனும் காலை 7 மணிக்கெல்லாம் ‘Grand rounds’ – ஒவ்வொரு நோயாளியின் பெயர், நோய், ‘என்ன சிகிச்சை முறை’ என்பதைத் தன் நினைவில் வைத்து அவர் கொடுக்கும் வழிமுறைகளும், வழிகாட்டுதலும் வியப்பூட்டுபவை. இளம் மருத்துவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பல மருத்துவ, மனிதநேய, வாழ்க்கைப் பாடங்கள் – எனக்குக் கிடைத்தது என் பெரும் பேறென்றே நினைக்கிறேன்!

வருடத்தில் எடுத்துக்கொள்ளும் விடுமுறைக்கு – இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம் – முன்னதாகவே அனுமதி வாங்கியிருந்தேன். மாலை வேலை முடிந்து, அவரை அவர் அலுவலகத்தில் சந்தித்த போது, முகத்தில் அவ்வளவு மலர்ச்சி, மகிழ்ச்சி. எதிரே இருந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி – அட்வைசரிடம் “Bhaskar is taking leave – he is going for his ‘தலை தீவாளி’ to Madurai” – என்றாரே பார்க்கலாம் – எனக்கு வியப்புத் தாங்கவில்லை. அவரது நினைவாற்றல் என்னை வீழ்த்தியது. தன்னிடம் வேலை செய்யும் எல்லோரிடமும் இந்த தனிப்பட்ட அன்பும், அக்கறையும் காட்டுவதுதான் அவரது சிறப்பு.

தந்தை மூப்பின் காரணமாக நினைவின்றி அட்மிட் ஆகியிருந்தார். இரண்டு மூன்று நாட்களாக அலுவல்களுக்கிடையே அவரையும் பார்த்துக்கொண்டிருந்தார் டாக்டர் சாந்தா. சரியான தூக்கம் இல்லை. நான்காம் நாள் இரவு நான் டியூட்டியில் இருந்தேன். என்னைக் கவனிக்காத மேடம், ‘இன்று இரவு யார் டியூட்டி?’ என்று நர்சிடம் கேட்க, “டாக்டர் பாஸ்கர்” என்கிறார். “அப்போ சரி, இன்னைக்குக் கொஞ்சம் தூங்கலாம்” என்றார். நான் வெளியே வந்து, “நான் பார்த்துக்கொள்கிறேன், மேடம்” என்ற போதும் அதே புன்னகை – கொஞ்சம் சோகம் கலந்த புன்னகை.

சிறுநீரகக் கோளாறுகளுக்கு, டயாலிசிஸ் பயிற்சிக்கு அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு என்னை அனுப்பி வைத்தார்கள் – அப்போது அத்துறையின் தலைவர், டாக்டர் முத்துசேதுபதி, எனக்குப் பயிற்சி அளித்தார்கள்! எதற்காகவும், கேன்சர் நோயாளிகள் அங்கும் இங்கும் அலையக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இதனை ஏற்பாடு செய்தார்கள் டாக்டர் சாந்தா.
32 மாதங்கள் இடைவிடாத வேலை – கற்றுக்கொண்டதும் ஏராளம்.

ஆனாலும், சொந்த காரணங்களுக்காக நான் வேலையிலிருந்து விலக முடிவு செய்து (சரியான முடிவுதானா? என்பதில் எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது) ஒரு மாத நோட்டீஸ் கொடுத்த போது, என்னை விலகுவதற்கு அனுமதிக்கவில்லை. எனக்கு கேன்சர் சிகிச்சையில் நல்லதொரு எதிர்காலம் இருப்பதாயும், பாபா அடாமிக் ரிஸர்ச் செண்டரில் மேற்படிப்புக்கு அனுப்புவதாயும் கூறினார்கள். என்னால் முடியவில்லை.

ஒரு மாதம் முடியும் நாள் – மாலை 4.30 வரை என் ரிலீவிங் ஆர்டரில் கையொப்பம் இடவில்லை. பின்னர் பல சமயங்களில் நான் அவரைச் சந்தித்திருக்கிறேன் – அதே அன்பு, அதே புன்னகை – ஒரு முறை கூட இதைப் பற்றிப் பேசியதே இல்லை.
என் மீது டாக்டர் சாந்தா அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும், அன்பும் இறைவன் கொடுத்த வரம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

என் பெரிய பெண்ணின் திருமணத்திற்கு அழைத்திருந்தேன். அதே நாளில் டாக்டர் சாகரின் (இப்போதைய டைரக்டர்) பெண்ணுக்கும் திருமணம். மேலும் முப்பது கி.மீ. தள்ளி இருந்தது என் வீட்டுத் திருமண மண்டபம். காலை எட்டு மணிக்கு சாந்தா மேடம் வந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பதினைந்து நிமிடங்கள் இருந்து, மணமக்களை வாழ்த்திய பின், ’சாகர் வீட்டுத் திருமணத்திற்குப் போக வேண்டும்’ என்று விடை பெற்றார்கள்!

dr shantha adyar institute 2

திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு மதியம் ஒரு போன் வந்தது. அந்தப் பக்கத்தில் ,”பாஸ்கர், சாந்தா பேசறேன். உன் மகள் சாரி கட்டுவாளா, சூடிதார் போடுவாளா? நான் ‘இண்டியா சில்க்ஸ்’ லேர்ந்து பேசறேன்” என்றார்கள். நான், ”மேடம், அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், நீங்க வந்து, ஆசீர்வாதம் செய்தாலே போதும்” என்றேன். “சரி, சரி… அவளுக்கு என்ன கலர் பிடிக்கும்? லைட் கலரா, டார்க் கலரா?”. என் கண்ணில் கசியும் நீர் என்னைப் பேச விடவில்லை. “சரி, நான் பார்த்துக்கறேன்” என்று போனைக் கட் செய்தார். நினைத்தால், இப்போதும் மனது மரியாதையிலும் அன்பிலும் கசிந்து வழிகிறது.

வாணி மஹாலில் ‘தலைவலி’ புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்து, சிறப்புரையாற்றி என்னைக் கவுரவித்ததை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்கமுடியாது.

உறவினரோ, தெரிந்தவர்களோ நான் அனுப்பும் நோயாளிகளைப் பார்த்து, அன்று மாலையே ஒரு போன் செய்துவிடுவார். அவருக்குப் போன் செய்தால், எந்த நிலையிலும், தானே லைனில் வந்து பேசுவார்.

‘டாக்டர்ஸ் டே’ விழாவிற்கு அவரை அழைத்திருந்தேன். அப்போதுதான் ஒரு சிறிய சுகவீனத்திலிருந்து தேறியிருந்தார். இருந்தாலும் ஒத்துக்கொண்டார். விழாவிற்கு வந்த பிறகுதான் எனக்கு உறைத்தது – இரண்டாவது மாடியில் விழா – லிஃப்ட் கிடையாது. வருந்தினேன். அதே புன்னகை, என் கை பிடித்து, ஒவ்வொரு படியாக ஏறி வந்தார். இரண்டு மணி நேரம் இருந்து சிறப்பானதொரு உரையாற்றினார். “ தேவை இல்லாத பரிசோதனைகளை தவிர்க்கவேண்டும். இயந்திரம் இருப்பதற்காக டெஸ்ட்டுகள் எடுக்கக்கூடாது. டாக்டர் – நோயாளி தொடர்பு, நோய் குறித்த தெளிவை நோயாளிக்கு ஏற்படுத்த வேண்டும்.டெஸ்ட்டுகளை விட நோயாளியுடன் சிறிது கூடுதல் நேரம் பேசுவதும், விரிவான கிளினிகல் பரிசோதனையும் நோயையும், நோயாளியையும் அறிய மிகவும் உதவும்” – அனைத்து மருத்துவர்களும் கடை பிடிக்க வேண்டிய அறிவுரை!
இரண்டரை வருடங்களில் இரண்டு ஜென்மத்திற்கான நல்லவைகளைக் கற்றுக் கொண்டேன்.

“உடல் நலிந்து, உள்ளம் சோர்ந்து, அச்ச உணர்வுடன் நோயாளி ஒருவர் இந்த மருத்துவ மனையின் வாயிலை அடையும்போது, அவர்களின் ஒரு பாகமாக நாம் ஆகிவிடுவதுதான் அவர்களுக்கு நாம் காட்டக்கூடிய சரியான ஆதரவாக அமையும்”. – டாக்டர் சாந்தா.

“மேடம், என் வாழ்க்கைப் பயணத்தில் சிறிது தூரம் உங்கள் கைபிடித்து நடந்து வந்தேன், சரியான பாதையில் நடக்கக் கற்றுக்கொண்டேன் என்பது எனது வரம்.

மனது வெறுமையாயிருக்கிறது – மிக அதிகமாக உழைத்து விட்டீர்கள். மானுடம் உள்ள வரை உங்கள் சேவை நினைவு கூரப்படும். போய் வாருங்கள் மேடம், பிரியா விடை தருகிறோம்.”

  • டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version