Home அடடே... அப்படியா? கோலாகல கொடை விழா!

கோலாகல கொடை விழா!

புகைப்படம் உதவி திருநெல்வேலிக்காரன் கீழாம்பூர் ராஜமாதங்கி என்கிற வடக்கு வாசல் செல்லி

கட்டுரை: கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன்.
ஆசிரியர், கலைமகள் / மஞ்சரி

தமிழகத்திலுள்ள எல்லா கிராமங்களிலும் சிறுதெய்வ வழிபாடு ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது. குறிப்பாக அம்மன் வழிபாடு, சாஸ்தா வழிபாடு இரண்டும் பிரபலமானது.

என்னுடைய கிராமத்தில் சித்திரை அல்லது வைகாசி மாதத்தில் முத்தாரம்மன் கொடை விழா நடத்தப்படுவது உண்டு. அதேபோன்று தை மாதம் வடக்குவாசல் செல்லிக்கு கொடை விழா நடைபெறும்.

செவ்வாய்க்கிழமை அன்று கொடை விழாவானது தொடங்கி(ஒரு வாரம்) அதே மாதத்தில் அடுத்த செவ்வாய்க்கிழமை அன்று நிறைவுபெறும்..

செவ்வாய்க்கிழமை அன்று முளை தெளித்தல் என்கிற வைபவம் ஆனது கோவிலில் நடத்தப்படும்.அதாவது காப்புக் கட்டுவது!

கோவிலில் முளைத் தெளித்த பிறகு கொடை முடியும் வரை ஊரை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது என்பது அக்கால சம்பிரதாயம்.

கொடை விழா நாட்களில் தினசரி கோவிலில் வழிபாடு மிகச் சிறப்பாக காலையிலும், மாலையிலும் நடைபெறும்.

விரதம் இருந்து தங்களுடைய பக்தியை வெளிப்படுத்தும் வண்ணம் சில சாமி கொண்டாடிகள் கோவிலிலே தங்குவதும் உண்டு. இந்த சாமி கொண்டாடிகள் தினசரி மஞ்சள் நீரில் குளிப்பது வாடிக்கையாகும்.

ஏழாம் நாள் அம்மன் சப்பரத்தில் அழகாக ஜோடிக்கப்பட்டு திருவீதி உலா வருவார். அப்பொழுது நையாண்டி மேளம் மிகச் சிறப்பாக ஊர்காரர்களால் ஏற்பாடு செய்யப்படும். அம்மன் ஊர்வலம் வருகிற பாதை முழுக்க மேளத்தை அடித்துக் கொண்டு வருவார்கள்.

சாமி கொண்டாடிகள் ஒரு கையில் குச்சியையும்,இன்னொரு கையில் ஒரு கப்பரையில் (பித்தளை யால் ஆன பாத்திரம்) விபூதியையும் நிரப்பி ஏந்தியபடி நடந்து வருவார்கள்.

ஊர் மக்கள் தங்கள் வீட்டு முன்பாக பசுஞ்சாணத்தால் மொழிகி கோலமிட்டு, கோலத்தின் மீது மரப்பலகையை பாங்குடனே அமைத்திருப்பார்கள். அந்த மரப் பலகையின் மேல் சாமி கொண்டாடிகள் அமர்ந்து கொள்வார்கள். அவர்களுடைய தலைவழியாக மஞ்சள் நீரை ஊற்றுவார்கள்.பல வீடுகளில் இந்த நீராட்டு வைபவம் நடைபெறும்.

இந்த சாமி கொண்டாடி களின் தலைவராகப் இருப்பவர் தலையில் சிவப்பு நிற குல்லாவுடன் கூடிய தலைப்பாகையை அழகாக அணிந்துகொண்டு, இரண்டு கைகளிலும் வளையல்களை அணிந்து கொண்டு, காலில் தண்டை, கொலுசு அணிந்துகொண்டு சூலாயுதத்தை ஏந்தியபடி ஜல்..ஜல்… என்று நடந்து வருவார். இவர் பின் தான் மற்ற சாமி கொண்டாடிகள் வருவார்கள். இதற்குப்பின் ஜோடிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் ஊர்வலமாக வருவார்!

சப்பரத்தில் உள்ள அம்மன் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று செல்லும்.சப்பரத்தில் உள்ள அம்மனுக்கு பின்பக்கமாக கரகாட்டக்காரர்கள் கரகத்தை சுமந்தபடி (ஆண்-பெண் இருபாலரும்) வருவார்கள். சில குறிப்பிட்ட இடங்களில் கரகம் ஆடுவார்கள். ஊர் மக்கள் வேடிக்கை பார்த்து மகிழ்வார்கள்.வான வேடிக்கைகளும் இரவு நேரத்தில் நடைபெறுவது உண்டு.

கிராமங்களில் குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இந்தக் கொடை விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

கொடை விழாவின் போது ஒவ்வொரு வீட்டுக்கும் வரி விதிப்பார்கள். அதாவது கொடைவிழா செலவிற்காக பணம் வசூலிப்பார்கள். கல்யாணம் ஆனவர்களுக்கு முழு வரி என்றும் கல்யாணம் ஆகாதவர்களுக்கு(சம்பாத்தியம் உள்ளவர்களுக்கு) பாதி வரி என்றும் விதித்து வசூல் செய்வார்கள். வரி விகித வேறுபாடு கிராம மக்களிடையே அந்தக் காலத்திலேயே இருந்தது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

எங்கள் கீழாம்பூர் கிராமத்தில் 600 வருடங்களாக கொடை விழா நடைபெற்று வருவதாக நெல்லை தியாகி ஸ்ரீமான் ஹரிஹர சுப்பிரமணியம் அவர்கள் என்னிடம் ஒருமுறை தெரிவித்துள்ளார்.

ஊரின் வடக்குப் புறத்தில் இருப்பவளை வடக்கு வாசல் செல்வி என்று அழைப்பார்கள். முத்தான அழகோடு முத்துக்களைப் பெற்ற அம்மனை முத்தாரம்மன் என்று வழங்குவார்கள். இதேபோன்று இசக்கி அம்மனுக்கும், மந்திரமூர்த்திக்கும், சுடலைமாடனுக்கும், பச்சாத்தி அம்மனுக்கும், சங்கிலி தேவருக்கும் கொடை விழாக்கள் கிராமங்களில் நடைபெறுவது உண்டு……….

கோடையில் நடந்த விழாவாக இது இருந்திருக்க வேண்டும்.பின்னர் இது மருவி கொடை விழாவாகி இருக்க வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version