Home உரத்த சிந்தனை பூஜ்யஸ்ரீ ஸ்வாமி ஓம்காரானந்த.. நினைவலைகள்!

பூஜ்யஸ்ரீ ஸ்வாமி ஓம்காரானந்த.. நினைவலைகள்!

pujyasri omkarananda
pujyasri omkarananda

மனோஹரன் கோஷ்டேஸ்வர ஷர்மா எனும் பூர்வாஸ்ரம பெயர் கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகள் திங்கள் கிழமை (2021, மே.10) இறையடி சேர்ந்தார். இளம் வயதிலேயே இறை நியதிப்படி தன்னை ஆன்மிக நீரோட்டத்தில் இணைத்துக்கொண்டு பல நல்ல பணிகளைச் செய்தவர். ஸ்வாமிகளைப் போன்ற மஹா ஆன்மாக்கள் இனி பிறப்பது அரிது.


பூஜ்ய ஸ்ரீ ஓம்காரானந்தா ஸ்வாமிகள் மஹா சமாதி!

சாதாரண மனிதனுக்கும் ஆன்மீகத்தைக் கொண்டுச் சேர்க்க அரும்பணியாற்றிய பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமி ஓம்காரானந்தா அவர்கள் பரிபூரணம் அடைந்தார்.

தமிழ்,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ந்த புலமையும் சைவ சித்தாந்தம், வேதம், வேதாந்தம் என்று ஆன்மீக விஷயங்களில் தெளிந்த ஞானமும், கடினமான விஷயங்களை எளிதாக புரிய வைக்கும் திறமையும், ஹிந்து சமுதாயத்திற்கும் நம் தேசத்திற்கும் எதிரான செயல்களைத் தட்டிக்கேட்கும் துணிவும் கொண்ட ஸ்வாமி ஜியின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

திருக்குறளையும், பாரதியின் சிந்தனையையும் ஸ்வாமி ஜியைப் போல் அறிந்திருந்தவர்கள் இல்லை என்றே சொல்லலாம். பகவத்கீதையை குறளுடன் ஒப்பிட்டு எளிமையாக புரிய வைத்த பெருமை ஸ்வாமி ஜியைச் சாரும். ஹிந்து சமயத்தை நிந்திக்கும் ஈனர்களுக்கு கண்ணியத்துடன் கண்டிப்பான எதிர்வினையாற்றி ஹிந்து சமுதாயத்தின் பாதுகாவலராக இருந்தவர் ஸ்வாமி ஜி. ஸ்வாமி ஜியின் மறைவு ஆன்மீகத்திற்கும், பண்பாட்டிற்கும், ஹிந்து சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

மகான்கள் மறைவதில்லை. தர்மம் காக்கும், தேசம் காக்கும் நற்பணிகள் வெற்றி பெற ஸ்வாமி ஜி ஆசி வழங்கி வழி நடத்த ஸ்ரீடிவி பிரார்த்திக்கிறது. ஓம் ஷாந்தி!

-பால.கௌதமன், (நிறுவுனர், ஸ்ரீ டிவி – Shree TV)


தவத்திரு சுவாமி ஓங்காரானந்தர் தாள்களுக்கு..
என்னை ஒரு நண்பராக நடத்தியவர். நாங்கள் மேடையைப் பகிர்ந்து கொண்டதுண்டு. வடமொழி அறிந்தவர்களில் பெரும்பாலோர் நன்றாகத் தமிழ் பேசுவதில்லை. நல்ல தமிழறிஞர்களில் பலர், வடமொழியின் பக்கமே செல்வதில்லை. சுவாமிஜி, இரண்டிலும் வல்லவராக விளங்கினார். அவர் ஒரு ஸ்லோகத்தை வடமொழியில் சொல்லி, அதைத் தமிழில் விளக்கும்போது நமக்கு மூலமே புரிந்துவிடும். அத்தனை தெளிவு. அத்தனை செறிவு. இனிமேல் அப்படியொரு கலவையைக் காண்பதரிது.

எங்கள் “பாரதி யார்?” நாடகத்தைத் தனது தேனி ஆசிரமத்தில் நடத்த எண்ணங்கொண்டார். நிறைவேறவில்லை.. எங்கோ விமான நிலையத்தில் நடந்து கொண்டிருந்த என்னை, “ரமணன்!” என்ற குரல் அழைத்தது. திரும்பிப் பார்த்தால் சுவாமிஜி! எத்தனை அன்புடன் என்னை விசாரித்தார்! அந்த இனியமுகம் இதயத்தில் எப்போதும் நிறைந்திருக்கும். இனி நான் விமான நிலையத்திற்குச் செல்லும்போது நான் எத்தனை பதறினாலும் அந்த இனிய முகம் காணக் கிடைக்குமா?

செப்டம்பர் 23, 2019, சென்னையில் அவரிடம், நண்பர் சேவாலயா முரளி அழைத்துச் சென்றார். அன்று, சுவாமிகளுக்கு நான் சமர்ப்பித்த கவிதையை பகிர்ந்து கொள்கிறேன்…

தம்மோ டிருக்கத் தெரியாமல்
தாளைப் பணிதலும் அறியாத
எம்மோ டிருக்க உளங்கொண்டாய்!
ஏனோ இறங்கி வந்தாய்நீ
சும்மா இருக்க வகையின்றி
சுமையே சுவையாய் உழல்கின்றோம்
உண்மை நிதமும் ஊட்டிவரும்
ஓங்காராஉன் தாள் பணிந்தோம்!

செந்நாப் புலவர் தெளிவொருகண்
வேதத் திருக்கும் செறிவொருகண்
அந்நாள் மாண்புகள் அழியாமல்
அலுப்பே இன்றி உழைக்கின்றாய்
இந்நாள் நாட்டை அந்நாளில்
இணைக்க எத்தனை முயல்கின்றாய்!
ஒன்றே பலவிலும் உணர்த்துகின்ற
ஓங்காராஉன் தாள் பணிந்தோம்!

தெய்வத் தமிழின் திறமுடையாய்
தேவர் மொழியின் வளமுடையாய்
உய்கை உயிரின் கடமையெனும்
உண்மை முரசம் ஒலிக்கின்றாய்
செய்கையில் பற்றே இல்லாமல்
செயல்படும் வித்தை தெளிவித்தாய்
உய்வோம் என்றே ஒருமனதாய்
ஓங்காராஉன் தாள் பணிந்தோம்!

பாரதம் கெட்டால் பார்கெடுமே
பாதைகள் எல்லாம் அழிந்திடுமே!
நீரதை இழந்தால் நதியேது?
நெஞ்ச மழிந்தால் கதியேது?
வேரத னில்மனம் வைத்தபடி
வீதியை நித்தம் எழுப்புகிறாய்
ஓராள் படையாய்ப் போர்செய்யும்
ஓங்காராஉன் தாள் பணிந்தோம்!

கண்ணுள் கண்ட கனவெல்லாம்
கண்முன் பலிக்கும் நாள்வருக!
மண்ணுள் விண்ணை மடிகறக்கும்
மாயம் வாழ்வில் பலித்திடுக!
நண்ணி அருள்செயும் நல்லோய்நீ
நலமுடன் ஆயிரம் பிறைகாண்க!
உண்மையும் அன்பும் ஒன்றான
ஓங்காராஉன் தாள் பணிந்தோம்!

  • இசைக்கவி ரமணன்

தேனி ஓங்காரானந்த ஸ்வாமிஜி ஸித்தி ஆகி விட்டார்.
கணீரென்ற குரல்… கடல் போல் ஞானம்… திருக்குறள், கீதை என்று எந்த ஒரு சப்ஜெக்ட் என்றாலும், மடை திறந்த வெள்ளம் போல் பிரவாகமாகப் பேசுவார்.

‘சக்தி விகடன்’ இதழில் அடியேன் இருந்தபோது இவரை ஒரு தொடர் எழுதச் சொன்னேன். இது குறித்துப் பேசுவதற்காக தேனிக்கு வரச் சொன்னார் சுவாமிஜி. தேனி ஆஸ்ரமம் போயிருந்தேன். அருமையான இயற்கைச் சூழல்.

தொடரையும் தாண்டி பல விஷயங்கள் உற்சாகமாகப் பேசினார்.
ஒரு போட்டோ ஷ¨ட்டுக்கு ஏற்பாடு செய்தோம். தொடருக்கு சுவாமிஜியை வைத்து ஏராளமான புகைப்படங்கள் எடுத்தோம்.
ஆசிரமத்துள், ஆசிரமத்தின் பின்னால் ஓடும் நதிக்கரையில், நதியின் நடுவே அமைந்திருக்கிற ஒரு பிரமாண்ட பாறையில்… என்று என்னுடன் வந்த புகைப்படக்காரர் ‘க்ளிக்’கித் தள்ளி விட்டார்.

இரண்டு நாட்கள் அங்கே தங்கி இருந்தேன் என்று நினைவு. தனது அன்றாடப் பணிகளையும் பார்த்துக் கொண்டு எங்களுக்கு அபரிமிதமான ஒத்துழைப்பு தந்தார். அந்த நாட்களை மறக்கவே முடியவில்லை.

எனது மகள் பிரியமதுராவின் நடன அரங்கேற்றம் சென்னை வாணி மஹாலில் நடந்தது. அப்போது ஓங்காரானந்தா ஸ்வாமிஜிக்கு பத்திரிகை கொடுத்து அழைத்தேன். என் மகளும் வந்திருந்தாள். அங்கேயே என் மகளை ஆசிர்வதித்தார்.
சனாதன தர்மம், தன் காவலன் ஒருவரை இழந்து விட்டது.
ஓம் ஸாந்தி…

– பி. சுவாமிநாதன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version