Home இலக்கியம் கவிதைகள் மீண்டும் வேண்டும்… ‘சதி’

மீண்டும் வேண்டும்… ‘சதி’

மதி கொண்ட பெண்ணையும் சதி செய்து சாய்த்த சண்டாளர்களைச் சடுதியில் வீழ்த்திட சதி வேண்டும்…

sati practice

பெண்ணே! நீ
பெண் என்று தெரிந்த பின்னும்
கருவில் நிலைத்துக்
கல்லிப்பாலில் தப்பித்துப்
பொல்லாத
உற்றார் நட்பென்ற
உறவில் இருந்து தப்பித்துக்
காதல் வலை விரித்த
கயவர்களிடம் தப்பித்து
அழகிய முகத்தை அழிக்கும்
அமில வீச்சில் தப்பித்துத்
திருமண பந்தத்திற்குள் வரும்முன்
திக்கு முக்காடிப் போகிறாய்..

உள்ளது இனிமேல்தான்
உள்ளம் மகிழாதே
என எச்சரிக்கும்
ஊர் உலகம்.

கல்லானாலும் கணவன்
குடிகாரன் ஆனாலும் புருஷன்
என வாழ்ந்த போதும்
விழும் நூறு இடிகள்
வரும் நூறு அவச்சொற்கள்

பெண்ணோ! ஆணோ !
இருபாலருக்கும்
உணர்வுகள் ஒன்றுதான்
பாதிப்புகள் என்னவோ
பெண்ணுக்கு மட்டும்தான்.

விதவை வாழாவெட்டி என
வீழ்ந்த கோலம் பலப்பல
ஐம்பதிலும் ஆசை வரும்
என்று கவிதை பாடலாம்
பாரதியும் பெரியாரும்
முத்து லட்சுமியும்
மறுவிவாகம் பற்றிப்
போதித்துச் செல்லலாம் .

முப்பதிலேயே வாழ்க்கை
விதியால் முடிந்த போதும்
தப்பித் தவறியும் உன்னுள்
ஆசை விதைகளை
விதைத்து விடாதே
அதையும் காசாக்க
அலைகிறது ஒரு கூட்டம்

சதைகளைக் கூறு போட்டுப்
பிணம் தின்னும் கழுகாய்
நிழல் படம் எடுத்து மிரட்டிப்
பணம் பறிக்கும் ஒரு கூட்டம்

பச்சிளம் குழந்தையோ
பள்ளி செல்லும் சிறுமியோ
பருவப் பெண்ணோ
பாலியல் கொடுமைக்குப்
பேதமில்லை எங்கும்.

பெண் குழந்தையின்
தாய் என்றால் சில நேரம்
அக்குழந்தையும் தாரமாகும்
மறுத்தால் உயிர் போகும்
கெஞ்சியோ கதறியோ
காலில் விழுந்து கேட்டாலோ
பயன் ஏதும் உண்டோ?

ஆட்டின் கதறலைக் கேட்டால்
வேலைக்கு ஆகுமா?
என்று சிரிக்கும்
கசாப்புக் கடைக்காரனிடம்
மனசாட்சியையோ
மனிதாபிமானத்தையோ
எதிர்பார்க்கத்தான் முடியுமா?

மல்லாக்கப் படுத்து எச்சில்
துப்பினால் இழப்பு யாருக்கு?
பதவி அந்தஸ்து எனக்
காரணம் காட்டி ,
புலிவால் பிடித்தகதை இதுவென
புத்திமதி கூறிப்
பொறுத்திருக்கச் சொல்லும்.

தற்கொலையோ தலைகுனிவோ
தனியாளாய்த் தவித்தால் அது
தன்னோடு தான் போகும்.
தாயாகத் துன்புறுவோர்
தன் சந்ததியையும்
தலைப்புச் செய்தியாக்கத்
துணிவாரோ?

தன் மானத்தைக் கெடுத்தவனைத்
தன்மானம் விட்டுத்
தட்டிக் கேட்கவும்
தண்டனை தரவும் நினைத்துக்
காவல்நிலையம் சென்றாலோ
ஆயிரம் கேள்விகள் கேட்டு
வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சுவர்

உன் கதையைக் கேட்டு
நகைக்கும் ஆர்வம்
எய்தவனைத் தண்டிப்பதில்
எள்ளளவும் இருப்பதில்லை

ஒவ்வொரு நாளும்
நீ படும் வேதனை ஒரே
ஒருநாள் செய்தியாகும்
ஊருக்கு உன் கதையோ
வெறும் வாய்க்கு அவலாகும்.

பாரதியும் பெரியாரும்
மீண்டும் பிறக்க வேண்டும்
சட்டங்கள் மாறவேண்டும்
புதுவழி போதிக்க வேண்டும்.

இறந்த கணவரின் உடலுடன்
ஈவு இரக்கமின்றி உயிரோடு
அப்பாவி மனைவியை எரிக்கும்
அக்கால முறை சதி வேண்டும்

பெண்ணே உன்னைச்
சவமாக்க அல்ல
தூய உள்ளத்தில்
மாயஅன்பு காட்டியவனின்
தீய எண்ணங்களைத்
தீயிட்டு எரித்திட

புனிதமான சீதையைச் சோதித்த ,
பத்தினிப்பெண் பாஞ்சாலியைப்
படைத்த நெருப்பே!
எனக்குச் சிறிது
கடனாகத் தா!
போலி வார்த்தைகளால்
போதைகள் ஊட்டி
புதை குழியில் தள்ளும்
பொல்லாத பாவிகளை அழித்திட!

கண்ணகியால் மதுரையை எரித்த ,
காலமந்தோறும் பெண்களைக்
கொடியவர்களால் தீயிட்டுக்
கொளுத்திய நெருப்பே!
எனக்குச் சிறிது
கடனாகத் தா!
மதி கொண்ட பெண்ணையும்
சதி செய்து சாய்த்த
சண்டாளர்களைச்
சடுதியில் வீழ்த்திட
சதி வேண்டும்…
ஆம் !
சூது வஞ்சகம் உடைய
கயவர்களைத் தீயிட்டுப் பொசுக்கிட
மீண்டும் வேண்டும் சதி.
ஆம்!
உடன்கட்டை இல்லாச் சதி…

பெண்ணே ! மீண்டு வா !
சோர்ந்து விடாதே
துயரங்களே உனக்குப்
படிக்கட்டுகள்….
சிகரம் கூட உன்
கைத்தொடும் தூரம் தான்!
விழித்து வா!
விரைந்து வா!
சிகரமென்ன விண்ணையும்
தாண்டிச் செல்வோம் !

  • ஈரோடு முனைவர் அட்சயா