Home கட்டுரைகள் தேர்தல்… தேமுதிக…. ஜூனியர் விஜயகாந்த் தயாராகிவிட்டார்…!

தேர்தல்… தேமுதிக…. ஜூனியர் விஜயகாந்த் தயாராகிவிட்டார்…!

தேமுதிக தலைவரும், தலைமையும் முடிவெடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார். அண்மைக் காலமாக உடல் நலம் குன்றி சிகிச்சையில் உள்ள தேமுதிக., தலைவர் விஜயகாந்த் துடிப்பான அரசியலில் ஈடுபடவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வைகோ.,வின் மக்கள் நலக் கூட்டணி முயற்சியால் இருப்பதையும் இழந்து, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து, விஜயகாந்த்தினால் தனது கட்சியின் ஓர் உறுப்பினரைக் கூட வெற்றி பெற வைக்க இயலாமல் போய்விட்டது.

தேமுதிக., கட்சியின் நிர்வாகத்தை விஜயகாந்த்தின் மனைவியும் மைத்துனரும் கவனித்துக் கொண்டிருக்க, இப்போது புதிய வரவாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கட்சிக்குள் தலை காட்டி வருகிறார். ஆனால் அவரது வரவை அவரது மாமா சுதீஷ் விரும்பவில்லை என்றும், கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில், தனது வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் தனது மாமா சுதீஷே இருந்துள்ளார் என்றும், பள்ளிக்கூடத்துக்கு தூக்கிச் சென்றதில் இருந்து அனைத்து வளர்ச்சியிலும் அவரே இருந்துள்ளார் என்றும், தேவையற்ற வதந்திகள் ஊடகங்களில் பரப்பப் படுவதாகவும் கூறியுள்ளார் விஜய பிரபாகரன்.

சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் புனித நற்செய்தி அருளப்பர் தேவாலயத்தில், தேமுதிக சார்பில் கிருஸ்துமஸ் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கருணாலயா இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பலகாரம் மற்றும் உணவுகள் பரிமாறப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “கட்சி தலைவர் விஜயகாந்த் தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். தேமுதிகவை பொறுத்தவரை கட்சியில் எந்தக் குளறுபடியும் இல்லை. நான் அரசியலுக்கு வருவதில் எந்தக் கட்டுபாடும் இல்லை. தேமுதிக தலைவரும், தலைமையும் முடிவெடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை அறிவிக்கும்” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version