Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் பீஷ்ம ஏகாதசி! இன்றைய சிறப்பு என்ன தெரியுமா?!

பீஷ்ம ஏகாதசி! இன்றைய சிறப்பு என்ன தெரியுமா?!


bheeshmashtami-1
bheeshmashtami 1

பிப்ரவரி 23. இன்று பீஷ்ம ஏகாதசி!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முகசர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

இன்று பரம பாவனமான ஏகாதசி மகாபர்வதினம். இதற்கு பீஷ்ம ஏகாதசி என்ற பெயர் உள்ளது. ஓராண்டில் ஒவ்வொரு மாதமும் வரும் இரண்டு ஏகாதசிகளுக்கும் சிறப்பான பலன்கள் உண்டு. அதிலும் கார்த்திகை, மாகம், ஆஷாடம் மாதங்களில் வரும் ஏகாதசிகள் மிகச் சிறப்பானவை.

இது மாக மாதத்தில் வரும் சுக்ல பட்ச ஏகாதசி விரதமாதலால் இதற்கு ஒரு பிரத்தியேக சிறப்பு உள்ளது. இந்த ஏகாதசி பீஷ்ம ஏகாதசி என்றும் சில புராணங்களில் பீமா ஏகாதசி என்றும் குறிப்பிடப்படுகிறது. பீமா என்றாலும் பீஷ்மா என்றாலும் கூட ஸ்ரேஷ்டமான, உறுதியான ஏகாதசி என்று கூறுவதே இதன் உத்தேசம்.

அது மட்டுமல்ல, சில புராணங்களில் சமத்காரமாக என்ன கூறுவார்கள் என்றால்… பீமன் கூட உபவாசம் இருக்கும் நாள் இது. அதனால் பீமா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது என்பர்.

ஆனால் இதன் முக்கிய விசேஷம் என்னவென்றால் பிரயத்தனபூர்வமாக முயற்சித்து ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே. உபவாசம் இருக்க இயலாதவர்கள் ஏதோ ஒரு ஆகார நியமத்தோடாவது இன்று நாராயணனை வழிபடவேண்டும். மிகவும் புனிதமான இந்த ஏகாதசியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதிலும் மாதங்களில் மாக மாதத்திற்கு பல சிறப்புகள் உள்ளன. ஒரு நாளைக்கு ப்ராத:காலம் எப்படிப்பட்டதோ, ஒரு வருடத்திற்கு மாக மாதம் அப்படிப்பட்டது. ப்ராத:காலத்தில் ஒவ்வொருவரும் பகவானை வழிபாடு செய்து அன்றைய தினம் முழுவதும் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள். அதன் பலனாக அந்த நாள் முழுவதும் நன்றாக விளங்கும் கூட. விடியற்காலை செய்யும் பிரார்த்தனையால் அன்று முழுவதும் எவ்வாறு நன்றாக விளங்குமோ, அதேபோல் மாக மாதத்தில் செய்யும் இறைவழிபாட்டால் அந்த வருடம் முழுவதும் நன்றாக விளங்கும். அதனால் மாக மாதத்தில் ஒவ்வொரு தேவதைக்கும் அதற்கான திதிகளில் வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் ஏகாதசி விரதம் விஷ்ணுவுக்குப் ப்ரீதியாதலால் அதிலும் மாக மாதத்தில் செய்யும்போது மேலும் நற்பலன்களை சிறப்பாக அளிக்கிறது.

bhishma krishna

இதற்கும் பீஷ்மருக்கும் என்ன தொடர்பு? மாக மாதம் உத்தராயண புண்ணிய காலத்தில் வருகிறது. இந்த மாதத்தில் விடியற்காலையில் செய்யும் ஒவ்வொரு கிரியையும் விசேஷமானது. சௌரமானத்தின்படி மாக மாதம் மகர மாசம் என்று அழைக்கப்படுகிறது. சூரியன் மகர ராசியில் இருக்கும்போது வரும் ஏகாதசி இது. மகர மாதத்தில் செய்யும் ஒவ்வொரு செயலும் சிறக்கிறது. இந்த மாதத்தில் செய்யும் உபாசனைகள் மேலும் விசேஷ பலன்களை அளிக்கிறது.

மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால்… உத்தராயண புண்ணிய காலத்தில் உயிரைத் துறப்பதற்கு தீர்மானித்த பீஷ்ம பிதாமகர் அதுவரை அம்புப் படுக்கையில் கிடந்தார். “அர்ஜுனன் அம்பு விட்டான். அதில் அவர் படுத்துக் கொண்டார்” என்று சிலர் கதை சொல்வார்கள். அது அப்படி அல்ல. போரில் தாக்கப்பட்ட அம்புகளால் ரதத்திலிருந்து அவர் நிலத்தில் சாய்ந்துவிட்டார். அப்போது அம்புகளோடு விழுந்ததால் பாணங்களின் மீது அவர் உடல் கிடந்தது.

அப்போது சிரம் சாயாமல் இருப்பதற்காக அம்புகளின் மெத்தென்று பகுதி மேலே இருக்கும்படியாக சில அம்புகளை நிலத்தில் விடுத்து தலைப் பகுதிக்கு அரவணைப்பு அளித்தான் அர்ஜுனன். யோக சக்தியால் பீஷ்மர் அவ்விதம் இருக்க முடிந்தது. பீஷ்மர் சாமானியமானவரல்ல. மகாயோகி. அவர் நமக்கு ப்ராதஸ்மரணீயர். அவர் சரித்திரம் நம்மை புனிதமாக்கும். நாம் பீஷ்மரை நினைத்தால் ஸ்ரீகிருஷ்ணன் மகிழ்வான். முதலில் பாகவத பூஜை.. பின்னரே பகவானின் பூஜை என்று ஒரு கூற்று உண்டு. பாகவதோத்தமரான பீஷ்ம பிதாமகரின் நினைவு நம்மை பவித்திரமாக்கக் கூடியது.

பீஷ்மர் அஷ்ட வசுக்களில் ஒருவர். மீதி ஏழு வசுக்களின் அம்சங்களும் ஒன்று சேர்ந்தவர் இவர். இவருடைய உண்மையான பெயர் தேவவிரதன். இவர் செய்த பிரதிக்ஞையால் பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார். பீஷ்ம ப்ரதிக்ஞை என்றால் திடமான உறுதிமொழி என்று பொருள். அவருடைய உறுதியின் அடையாளமாக பீஷ்மர் என்ற பெயர் ஏற்பட்டது. அதனால் விடாமுயற்சியோடு செய்ய வேண்டிய ஏகாதசி என்பதால் பீஷ்ம ஏகாதசி என்று பெயர் வந்ததாக பொருள் கொள்வது கூட சரியாகவே இருக்கும். உறுதிக்கும் தீக்ஷைக்கும் மறுபெயர் பீஷ்மர்.

kaisika ekadasi

பீஷ்மர் நமக்கு ஆதர்சமாக வேண்டும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதி லாகட்டும், வீரம், பிரதாபம், தர்மநிஷ்டையிலாகட்டும் அவருக்கு இணை இல்லை. கௌரவ அரசர்களில் யாருக்கும் இல்லாத விருது இவருக்கு உண்டு. ஆச்சாரியார் என்ற விருது. பீஷ்மாச்சாரியார் என்கிறோம். எதனால்? தான் கடைப்பிடித்து பிறரையும் கடைபிடிக்க வைப்பவரே ஆச்சாரியார். ஆதர்சமான வாழ்க்கை நடத்தியவர் பீஷ்மர்.

சில தர்ம விஷயங்களில்… குறிப்பாக திரௌபதிக்கு அவமதிப்பு நேர்ந்தபோது மௌனம் வகித்தது போன்ற சம்பவங்களைக் குறிப்பிட்டு சிலர் பீஷ்மரை குற்றம் சாட்டுவதுண்டு. ஆனால் அதன் ரகசியம் தெரிய வேண்டுமென்றால் மகாபாரதம் அரண்ய பர்வத்தை படிக்க வேண்டும். சில அசுர சக்திகள் அவர் மீது தாக்கம் ஏற்படுத்தின. திவ்ய சொரூபம் கொண்டவர்கள் மீது மேகம்போல் கவிந்தன. துஷ்ட சுபாவம் உள்ளவர்களின் இதயத்தில் புகுகின்றன அசுர சக்திகள். அங்கு பிதாமகரை மேகம் போல் மறைத்தன அசுர சக்திகள். அவரிடம் எந்த தீய குணமும் இல்லை. அவரை சந்தேகிக்கக் கூடாது. சரி…

குரு வம்சத்தை நிலைநிறுத்துவதற்காக பீஷ்மர் ‘அஸ்கலித’ பிரம்மச்சாரியாக வாழ்ந்தார். இது சாமானிய விஷயமல்ல. பிரம்மச்சாரியாக இருப்பதோ, அதிலும் அஸ்கலித பிரம்மசாரியாக இருப்பதோ சாதாரண விஷயம் அல்ல. மகா யோகியால் மட்டுமே முடியக் கூடியது. மகாயோகி அவர். இதனை நினைவில் நிறுத்த வேண்டும்.

அவர் தீர்மானித்துக் கொண்டார் உத்தராயண புண்ணிய காலத்தில் ஊர்த்துவ கதிக்குச் செல்லும் வாய்ப்பு இருக்கும் என்பதால் அந்த நேரத்தில் நான் மரணிப்பேன் என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டார். ஏனென்றால் தந்தை அளித்த வரத்தால் இச்சா மரணம் பெற்றவர். எப்போது வேண்டுமானாலும் உயிரைத் தியாகம் செய்ய அவரால் இயலும்.

இப்போது கூட அவர் நினைத்திருந்தால் அவரால் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவர் பூரணமான விரக்தியோடு, அவர் நினைத்த பிரயோஜனம் நிறைவேறிவிட்டதால் பரந்தாமத்திற்கு செல்ல நிச்சயித்து விட்டதால் இந்த முகூர்த்தத்தை வைத்துக் கொண்டார். ஆனால் ஏகாதசியன்று அவர் பரமபதிக்கவில்லை. இதை அறியவேண்டும். மாக மாதம் சுக்ல அஷ்டமி அன்று அவர் மரணமடைந்தார்.

அதுகூட எத்தகைய சூழலில்…? அந்த சமயத்தில் அவர் நாராயண ஸ்மரணை செய்து கொண்டிருந்தார். ஏனென்றால் மரணிக்கும் முகூர்த்தத்தை அவரே தீர்மானித்திருந்தார். இதுபோல் யாருக்குக் கிடைக்கும்? நாராயணனின் பரம பக்தர் பீஷ்மர். ஞானம் பெற்ற பக்தர். பல சந்தர்ப்பங்களில் இதற்கு சான்று உள்ளன.

srirangam vaikunta ekadasi utsav3

மேலும், “கோதர்ம: சர்வதர்மாணாம் பவத: பரமோ மத: !
கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்மசம்சார பத்தனாத் !”
என்ற யுதிஷ்டிரன் வினவியபோது, “அனைத்து தர்மங்களிலும் சிறந்த தர்மம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “நாராயண நாம ஸ்மரணையே சிறந்த தர்மம்” என்று பதிலளித்த உயர்ந்த மகாத்மா அவர்.

அம்புப் படுக்கையில் இறுதிநேரத்தில் நாராயணனை இதயத்தில் நிறுத்தி தியானத்தில் இருந்தார். எப்படிப்பட்ட சுவாமியை? கிருஷ்ண பரமாத்மாவாக வந்த நாராயணனின் அத்தனை மூர்த்திகளையும் தியானிக்கிறார். அர்ஜுனனின் ரத சாரதியாக குதிரைகளை வழி நடத்தும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என் இதயத்தில் எப்போதும் நிலைக்கட்டும் என்று தியானம் செய்கிறார்.

த்ரிஜகன்மோகன நீலகாந்தி வடிவத்தை தியானம் செய்கிறார். இறுதியில் தான் விடுக்கும் அம்புகளைக் கண்டு பொறுக்காமல் பூமியில் குதித்திறங்கி அங்கு கிடந்த ஒரு ரத சக்கரத்தை கையில் எடுத்து அதில் தன் சுதர்சன சக்கரத்தை ஆவாகனம் செய்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தன்னை நோக்கி வந்த போது, இதுவே மிகச் சிறந்த தருணம் பரமாத்மாவின் கையால் மரணம் அடையலாம் என்று கீழிறங்கிய பீஷ்மர் பகவானை வணங்கி வதைக்கப்படத் தயாராக இருந்தார்.

ஆனால் அர்ஜுனனின் வேண்டுகோளை ஏற்று கிருஷ்ண பரமாத்மா கையில் இருந்த ரதச் சக்கரத்தை எறிந்து விட்டு மீண்டும் சாரதியாக ரதத்தை நடத்தினான். அம்புப் படுக்கையிலிருந்த பீஷ்மருக்கு அந்த கிருஷ்ணமூர்த்தி வடிவம் இதயத்தில் காட்சியளித்தது.

அதனால்தான் விஷ்ணு சஹஸ்ரநாமம் பூராவும் சொல்லி முடித்தபின், “ரதாங்கபாணி ரக்ஷோப்ய: சர்வப்ரஹரணாயுத:” என்ற நாமத்தோடு முடிக்கிறார். அதற்கு முன்பே ‘சக்ரீ’ என்கிறார்… ‘சக்ரபாணி’ என்று.

பீஷ்மருக்கு ரதச் சக்கரத்தைக் கையில் பிடித்த கிருஷ்ணன் சுதர்சனம் பிடித்த மகாவிஷ்ணுவாகவே தெரிந்தார். மீதி உள்ளவர்களுக்கு ரதச் சக்கிரம் பிடித்த கிருஷ்ணன் மட்டுமே தெரிந்தான்.

அதுமட்டுமல்ல… பீஷ்மர் அஷ்டமியன்று கிருஷ்ணரோடு ஐக்கியம் அடைந்தார். “கிருஷ்ணய நமஹ!” என்பது அவர் கடைசியில் ஜெபம் செய்த மந்திரம்.

srirangam vaikunta ekadasi utsav12

பீஷ்மர் தானறிந்த தர்மங்களின்படி வாழ்ந்தார். தர்ம ரகசியங்கள் அனைத்தையும் கிருஷ்ணரின் வேண்டுகோளின்படி தர்மபுத்திரருக்கு உபதேசித்தார். அவையே மகாபாரதத்தில் சாந்தி, அனுசாசனிக பர்வங்களாக விளங்குகின்றன.

இவற்றை கவனமாகப் படிக்க முடிந்தால் நம் வாழ்வு உயர்வடையும். அதனால்தான் பீஷ்மாச்சாரியார் என்கிறோம். நம் அனைவருக்கும் அவர் குரு. அதனால் பாரத தேசத்தவர் அனைவரும் பீஷ்மரையும் வணங்க வேண்டும். இல்லாவிடில் நன்றி மறந்தவர்களாவோம்.

பீஷ்மாஷ்டமி அன்று பீஷ்மருக்கு தர்ப்பணம் அளிக்கப்படுகிறது. பகவானுக்கு பீஷ்மர் மீது எத்தனை ப்ரீதி என்றால் தன்னை வழிபட வேண்டிய ஏகாதசிக்கு பீஷ்மர் பெயரை இணைத்து அழைக்கும்படி செய்துள்ளான். ஏகாதசியன்று உபவாசம் இருந்து துவாதசி அன்று விஷ்ணுவை பூஜிக்கவேண்டும். ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, மாக பூர்ணிமா இந்த ஐந்தும் மகா பர்வங்கள். மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு உகந்த நாட்கள்.

சன்னியாசி, யோகி, போரில் வீரமரணம் அடைந்தவர்… போன்றோர் எந்த சத்கதியை அடைவார்களோ மாக மாதம் ஏகாதசி விரதம் கடைபிடித்தவர்களும் அதே சத்கதியை அடைவர். மோக்ஷத்தைப் பெறுவர் என்று சாஸ்திரம் தெரிவிக்கிறது. சர்வம் வாசுதேவார்ப்பணமஸ்து! ஸ்வஸ்தி!!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version