Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்: 14. மரம் வெட்டினால் தண்டனை!

தினசரி ஒரு வேத வாக்கியம்: 14. மரம் வெட்டினால் தண்டனை!

vedavaakyam

14. மரம் வெட்டினால் தண்டனை

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி  ரகுநாதன் 

“யஸ்யாம் வ்ருக்ஷா: வானஸ்பத்யா: த்ருவம் திஷ்டந்தி”   
-அதர்வணவேதம் 

“வ்ருக்ஷங்களும் வனச் செல்வங்களும் ஸ்திரமாக உள்ளன”. 

ப்ருத்வீ சூக்த‘ த்திலுள்ள மந்திரம் இது. பூமியின் சிறப்பை அறிவதும் அதனை பாதுகாப்பதும் இந்த சூக்தம் மூலம் உணர வேண்டிய உயர்ந்த செய்தி.

பூமித் தாய்க்கு நம் ருஷிகள் வைத்துள்ள பெயர்களை ஆராய்ந்தாலே எத்தனை விதங்களில் பூமியின் வைபவங்களை தரிசிக்க வேண்டும் என்பது புரியும்.

ப்ருதிவி, விசுவம்பரா,  வசுதா, வசுதாரிணி, ப்ரதிஷ்டா, தரணி, தாருணி, வசுந்தரா இவ்வாறு பல பெயர்கள் உள்ளன.

“மாதா பூமி: புத்ரோஹம் ப்ருதிவ்யா” என்று இந்த சூக்தத்திலேயே “பூமி தாய்.  நான் அந்த தாயின் புதல்வன்” என்ற அற்புதமான உறவு கூறப்படுகிறது.

பல உயிர்களுக்கும் விருட்சங்களுக்கு வனச் செல்வங்களுக்கும் பூமியே ஆதாரம். நம்மைப் போலவே அவற்றுக்கும் உயிர்வாழும் உரிமை உண்டு. நூறாண்டு  வாழ நினைக்கும் நாம் அவற்றையும் வாழ வைத்தபடி வாழ வேண்டும். உண்மையில் நம் வாழ்க்கையே அவற்றின் மீதுதான் ஆதாரப்பட்டுள்ளது. 

பல யுகங்களுக்கு முன்பே இந்த உயர்ந்த உண்மையை எடுத்துரைத்த பண்டைய ருஷிகள் சுற்றுச்சூழலை எவ்விதம் பாதுகாக்க வேண்டும் என்பதை போதித்துள்ளார்கள்.

மரங்களை தேவதைகளாக வழிபடுவதும் மரக்கிளைகளை கூட வெட்டக் கூடாது என்ற கருத்தும் பாரதிய சிந்தனையில் உள்ளது.

அதர்வண வேதம் முதலான வேத சாஸ்திரங்களில் எந்த வ்ருக்ஷத்தில் எந்த சக்தி உள்ளது என்பது தெளிவாக உரைக்கப்பட்டுள்ளது. சில செடிகளின் இலைகளுக்கும் மலர்களுக்கும் வேர்களுக்கும்  அருகில் கொண்டு வந்தாலே நோய்களைத் தீர்க்கும் சக்தி உள்ளது என்று சாஸ்திரம் கூறுவது உண்மையே என்று நிரூபித்து வருகிறார்கள் இன்றைய ஆராய்ச்சியாளர்கள்.

மரங்களை பாதிக்காமலேயே பூ, பழம், இலைகளை மருந்துகளாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை புராணங்கள் விரிவாகக் கூறியுள்ளன.

சில செடிகள், மரங்கள், கொடிகள் வீட்டுச் சூழலில் இருக்க வேண்டும் என்று மகாபாரதம் போன்ற நூல்கள் வர்ணிக்கின்றன. எந்த நோய் ஏற்பட்டால் எந்த இலையை, எந்த மலரை, எந்த வேரைப்  பயன்படுத்தி குணம் பெறலாம் என்று கூறி கிரமமாக இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. 

ஆனால் இன்று செயற்கைமுறை வாழ்க்கைக்கு பழகிப்போன நாம் ஆரோக்கியமான வாழ்க்கையிலிருந்து விலகி வருகிறோம்.

விருக்ஷங்கள், வனஸ்பதிகள், மூலிகைகள் ஸ்திரமாக, ஆபத்தின்றி இந்த பூமியில் இருக்க வேண்டும் என்ற வேதத்தின் விருப்பம் உலக மக்கள் அனைவரின் விருப்பமாக ஆகவேண்டும்.

வேதத்தின் பல இடங்களில் ‘மரங்களை வெட்டுபவனை கடுமையாக தண்டிக்க வேண்டும்’ என்ற கூற்று காணப்படுகிறது. இந்த நியமங்கள் இன்று வெளிநாடுகளில் கடைபிடிக்கப்பட்டு மரங்கள்  பாதுகாக்கப்படுகின்றன. 

நம் நூல்களை நாம் மறந்துவிட்டு இயற்கையை அழித்து வருகிறோம். இனியாவது மரங்களையும் பசுமையையும் பாதுகாத்து நிலைநிறுத்தும் திசையில் நாம் முன்னேறுவதற்கு ருஷிகளின் இந்த வாக்கு உத்வேகம் அளிக்கட்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version