Home சினிமா சினி நியூஸ் சுசி கணேசன்… காருக்குள் வைத்து… என்னிடம்… ‘கத்தி’ தப்பிக்க வைத்தது! லீனா மணிமேகலையின் #MeToo

சுசி கணேசன்… காருக்குள் வைத்து… என்னிடம்… ‘கத்தி’ தப்பிக்க வைத்தது! லீனா மணிமேகலையின் #MeToo

சென்னை: இயக்குனர் சுசி கணேசன் குறித்து ஊடகவியலாளரும், திரைத்துறை இயக்குனராகவும் உள்ள லீனா மணிமேகலை கூறியுள்ள பகீர் குற்றச்சாட்டு #MeToo வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை பாவனா, காருக்குள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் கடந்த இரு இரு வருடங்களுக்கு முன் பேசப்பட்ட போது, தனது அனுபவமாக லீனா மணிமேகலை இதனைத் தன் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். ஆனால் பெயர் எதையும் குறிப்பிடாமல், ஓர் இளம் இயக்குனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

”இன்று நடிகர் பாவனாவுக்கு நிகழ்ந்த அநியாயத்திற்காக திரைத்துறை ஹீரோக்களும் இயக்குநர்களும்” “குரல்” கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நல்லது. அப்படியே தங்களையும் தங்கள் படைப்புகளில் இருக்கும் பெண் வெறுப்பையும் பரிசீலனை செய்ய வேண்டும். சுட்டு விரலை உள்பக்கமாக இவர்கள் திருப்ப வேண்டும். “ஆண்மை” தானே இந்த ஊரில் “ஹீரோயிஸம்”?

தன் மேல் விழ நேரிடும் நூறாயிரம் கேள்விகளுக்கும், பார்வைகளுக்கும் அஞ்சாமல், நடந்ததை வெளியில் சொல்லி சட்டத்தை நாடியிருக்கும் பாவனாவின் தோளோடு தோள் நிற்கிறேன்.” – என்று குறிப்பிட்ட லீனா மணிமேகலை தனக்கு அவ்விதம் மிரட்டல் விட்ட இளம் இயக்குனர் குறித்த அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.

ஆனால், தற்போது #மீடூ மூலம் வைரமுத்துவே சிக்கும் போது, சுசிகணேசன் என்ற பெயருக்கு அப்படி ஒன்றும் வலு இல்லைதான்! அதை யோசித்ததாலோ என்னவோ, லீனா மணிமேகலை தாமதமாக இன்று அந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, அந்த இளம் இயக்குனர் சுசி கணேசன் என்று கூறியுள்ளார்.

விரும்புகிறேன், 5ஸ்டார், திருட்டுப் பயலே, கந்தசாமி என சில படங்களை இயக்கிய சுசிகணேசன், இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.

லீனா மணிமேகலை 2000த்தின் துவக்கத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பிரபலம் அடைந்தவர். பின்னாளில் அதில் இருந்து வெளியேறி, ஊடக உலகில் தனித்துவமாக இயங்கத் தொடங்கினார். அவரது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட அந்த ‘பகீர்’ தகவல் இதுதான்…

2005 இருக்கும். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் வேலை செய்து கொண்டிருந்தேன். அன்று ஒரு பிரபல இளம் இயக்குநரை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நேர்காணல் செய்தேன்.

ஷூட்டிங் முடிந்தபோது இரவு ஒன்பதரை மணி. வழக்கமாக நான் ஆட்டோ எடுத்து தான் வீடு திரும்புவது வழக்கம். ஸ்டூடியோவில் இருந்து தெருமுனை வரை நடந்து சென்று கொண்டிருந்த போது, நான் நேர்காணல் செய்த இயக்குநரின் கார் என்னருகில் வந்து நின்றது.

“வடபழனி தானே வீடு, நான் வேணும்னா ட்ராப் பண்ணிடறேன்” என்று சொன்ன “இயக்குநரை” நம்பி காரில் ஏறினேன். ஏறிய சில நிமிடங்கள் உரையாடல் நன்றாகத்தான் போனது.

திடீரென அவர் குரலின் டோன் மாறியது. விலை உயர்ந்த அந்தக் காரின் சென்டரல் லாக் சத்தமாக ஒரு முறை சீறி அடங்கியது. என் மடியில் இருந்த மொபைலைக் கைப்பற்றி அதை ஆஃப் செய்து காருக்குள் எங்கோ எறிந்தார்.

தன் அபார்ட்மெண்டுக்கு நான் வரவேண்டும் என்று மிரட்டினார். அதிர்ச்சியில் வெலவெலத்துப் போன எனக்கு கொஞ்சநேரம் எதுவும் புரியாமல் செயலிழந்து போனேன்.

சுதாரித்து முதலில் தன்மையான குரலில் என்னை உடனே இறக்கிவிடுமாறு கேட்டேன். பின் கெஞ்சிக் கேட்டேன். கார் கதவை உடைத்து விடுவேன் என மிரட்டினேன். அலறினேன். இருபது நிமிடத்தில் விட வேண்டிய இடத்திற்கு 45 நிமிடங்களாக கார் சென்னை தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தது.

என் பையில் ஒரு குறுங்கத்தி வைத்திருப்பேன். பொறியியல் கல்லூரி காலத்தில் இருந்து எனக்கு அது வழக்கம். அன்று அதற்கு வேலை வந்தது. ஒரு குறுங்கத்தி அந்த இயக்குநர் பொறுக்கியை என்னை என் வீட்டின் அருகில் இறக்கிவிட வைத்தது. என் மொபைலை திருப்பித் தர வைத்தது.

இன்று இவ்வளவு ரைட்ஸ் பேசும் எனக்கு அன்று நடந்ததை நெருக்கமானவர்களிடம் சொல்வதற்கு கூட தைரியமில்லை. ஊடக வேலை வேண்டாம் என்று கண்டித்துக் கொண்டிருந்த குடும்பம் இந்த நிகழ்வைக் காரணம் காட்டி வேலையில் இருந்து நின்றுவிட சொல்வார்கள் என்று அச்சம்.

“நோ” சொல்லிவிட்டதால் திரைத்துறை வட்டாரத்தில் செல்வாக்குள்ள அந்த “இயக்குநர்” என் பெயரைக் களங்கப் படுத்துவான் என்ற சிறுபிள்ளைத்தனமான பதட்டம் வேறு.

எனக்குள்ளே புதைத்த பல கசப்புகளில் இந்நிகழ்வும் ஒன்று. பல வருடங்கள் கடந்துவிட்டன. நினைத்துப் பார்த்தால் இன்னும் நடுக்கமாகத் தான் இருக்கிறது.

#லீனாமணிமேகலை #மீடூ #MeToo

1 COMMENT

  1. என்ன ஒரு அநியாயம் ? பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகளை வெளியில் கொண்டு வரும் தினசரி இதழுக்கு வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version