உலகமே உற்று நோக்குகின்ற அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா கொடூரங்களுக்கு இடையே, கடுமையான பிரசாரங்கள் மூலம் அமெரிக்காவை கலக்கி வந்த டிரம்ப்- ஜோ பிடன் இடையே கடும் போட்டி நிலவுவதால், அமெரிக்கர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்காவின் 46வது அதிபரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சியை சேர்ந்த அதிபர் ட்ரம்புக்கும், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடனுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்திய நேரப்படி, பிற்பகல் 3.30 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்குகிறது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவர், வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்பார். தேர்தல் தினம் இன்று தான் என்றாலும் பல மாகாணங்களில் ஏற்கெனவே, வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 9 கோடியே 50 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
முன்கூட்டியே வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் ஜோ பிடனை ஆதரிக்கும் ஜனநாயகக் கட்சியினர் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நேரடி வாக்குப் பதிவில் தற்போதைய அதிபர் ட்ரம்புக்கு அதிக ஆதரவு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
எனினும், கடைசி நிமிட வாக்காளர் கருத்துக் கணிப்புகள் 8 சதவீத வாக்குகளுடன் ஜோ பிடன் முன்னணியில் இருப்பதாக கூறுகின்றன. ஜனநாயக கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் தெரிந்தால் தேர்தலை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப் போவதாக வடக்கு கரோலினாவில் பிரச்சாரத்தின்போது டிரம்ப் அறிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் மறைமுக தேர்தல் முறையைச் சேர்ந்தது. மாநிலங்களில் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்வு குழுவினர் கட்சி அடிப்படையில் அளிக்கப்படும் பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் இரண்டு மாநிலங்கள் தவிர 48 மாநிலங்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் வகையில்தான் வாக்களிப்பது அமெரிக்க மரபாக இருந்து வந்துள்ளது. மொத்தம் 538 பேர் 50 மாநிலங்களில் இருந்து தேர்வு குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த 538 பேரில் எந்த கட்சி வேட்பாளருக்கு கூடுதல் ஆதரவு உள்ளதோ அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப் படுவார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் உடன் அமெரிக்க பிரதி நிதிகள் சபைக்கு 435 இடங்களுக்கு தேர்தல் நடக்கும். 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையில் 35 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும். 11 மாநில ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மற்றும் பல மாநில அரசு பிரதிநிதிகளும் இந்தத் தேர்தலுடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.