tirunelveli nellaiappar therottam

நெல்லையப்பர் கோவில் தேர் நான்கு வடங்களும் அறுந்து போன சம்பவம்; இந்து முன்னணி கண்டனம்!

tirunelveli nellaiappar therottam

நெல்லையப்பர் திருக்கோவில் தேரோட்டம் நான்கு வடங்களும் அறுந்து போன சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்து முன்னணி, இதற்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அலட்சியமே காரணம் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்துமுன்னணி அமைப்பின்ன்மாநில தலைவர் காடேஸ்வரா. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆசியாவில் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாக கருதப்படும் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி தேரோட்டம் இன்று காலை துவங்கியது. கலெக்டர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தேர் வடத்தை தூக்கி இழுக்க துவங்கிய அடுத்த நொடியே மூன்று தேர் வடங்களும் அறுந்து போய் உள்ளது. அடுத்த சில நிமிடங்களில் பெண்கள் இழுத்து வந்த நான்காவது வடமும் அறுந்து போயுள்ளது.

தேர் இருப்பிடத்தை விட்டு ஒரு அடி கூட நகரும் முன்பே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நெல்லையப்பர் கோவில் தேர் வடம் 20 வருடங்கள் பழமையானதாகும். இதனை மாற்ற சொல்லி பக்தர்களும் சிவனடியார்களும் இந்துமுன்னணியும் பல வருடங்களாக நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் திருக்கோவில் நிர்வாகம் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டுள்ளதே இந்த சம்பவத்திற்கு காரணம்.

தேர் வடம் அறுந்து விழுந்து பலர் சிறுசிறு காயங்களுடன் வீட்டுக்கு சென்றுள்ளனர். இறைவன் திருவருளால் தேர் நகரும் முன்பே வடம் அறுந்துள்ளது. தேர் ஓடிக்கொண்டிருக்கும் போது வடம் அறுந்து இருந்தால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பல திருக்கோவில் தேரோட்டங்களில் பல்வேறு விபத்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதன் பின்பு தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் நெல்லையப்பர் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர்களின் ஆய்வு நடைபெற்றதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. நடந்த சம்பவத்தை பார்க்கும்போது மாவட்ட நிர்வாகம் இதில் மிகப்பெரிய கவனக்குறைவோடு செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது.

தேர் செல்லும் நான்கு ரத வீதிகளும் பூமிக்கு அடியில் மின் இணைப்பு பணிகளுக்காக தோண்டப்பட்டு ஒரு வாரத்திற்கு முன்பு தான் அந்த குழிகள் மூடப்பட்டு சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சிமெண்ட் தளங்கள் உறுதியானதாக முறையானதாக அமைக்கப்படாததால் பல இடங்களில் தேர்ச்சக்கரம் பதிந்து நெல்லையப்பர் தேரோட்டம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் தேரோட்டத்தின் போது கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுகூட்டம் என நடத்தி கூடி பேசி தேரோட்ட ஆலோசனை செய்ததாக கணக்கு காட்டி டீ சம்சாவோடு முடித்துக் கொள்கின்றனரா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொதுமக்களிடமோ, பக்தர்களிடமோ, இந்து அமைப்புகளிடமோ எந்த கருத்துக்களையும் கேட்பதில்லை. அதன் விளைவே நெல்லையப்பர் தேரோட்டத்தில் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது.

கோயில் உண்டியல், வாடகை, குத்தகை, கட்டண தரிசன கட்டணம் என கோவிலிலிருந்து வருமானத்தை, பணத்தை கொண்டு செல்வதில் தான் தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் முனைப்பாக உள்ளதே தவிர, கோவிலுக்குரிய எந்த வசதிகளும் பராமரிப்பு பணிகளும் செய்யாமல் அலட்சியப்படுத்தி உள்ளதே, இந்த சம்பவத்திற்கு காரணம்.

நெல்லையப்பர் திருத்தேர் வடம் அறுந்து பக்தர்கள் காயமான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராஜினாமா செய்வதே மாண்புடையதாக இருக்கும்.

நெல்லையப்பர் தேர் திருவிழா ஏற்பாட்டில் அலட்சியமாக செயல்பட்ட நெல்லை மாவட்ட ஆட்சியர் உட்பட அத்தனை அதிகாரிகள் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து, இனி இதுபோல் சம்பவங்கள் நிகழாமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.