எடியூரப்பாவுக்கு 15 நாள் அவகாசம் கொடுத்த ஆளுநர் செயல் கேலிக்கூத்து: ரஜினி காந்த்

rajini speech

நடிகர் ரஜினி காந்த் தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், இளைஞர்களுடன் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்நிலையில் இன்று, ரஜினி மக்கள் மன்ற மகளிர் பிரிவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் மகிழ்ச்சியுடன் தகவல் பகிர்ந்த ரஜினிகாந்த், உணர்வுப்பூர்வமான சந்திப்பு, மிகவும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைக் கூட்டமாக இருந்தது என்று பதிவிட்டிருந்தார்.


கடந்த டிசம்பரில்  அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த ரஜினிகாந்த், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்தார். இன்று, தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது செய்தியாளர்கள் கர்நாடகா விவகாரம், காவிரி நீர்ப்பிரச்னை, கமல் அனைத்துக் கட்சிக் கூட்டம் என சில கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு பதிலளித்தார் ரஜினிகாந்த்.

அப்போது அவர்,  காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும், அணைகளின் கட்டுப்பாடு காவிரி மேலாண்மை ஆணையத்திடமே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும்,  பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் வளர்ச்சி கண்டிருக்கின்றன. எங்கள் கட்சியிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து, ஒரு நாளிதழில்,  ரஜினிகாந்தின் கட்சி 150 தொகுதிகளை ஆக்கிரமிக்கும் என்று வெளியான செய்தி குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர்,  அவ்வாறு நடந்தால் மகிழ்ச்சி என்றார்.

கர்நாடக அரசியல் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த்,  அங்கே ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்றார்.  எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து என்றும் குறிப்பிட்டார். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவாக எல்லாம் குறிப்பிட்டுள்ளது என்றும், மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அணைகள் திறப்பு உள்ளிட்டவை இருக்க வேண்டும்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை புதிதாக பொறுப்பேற்கும் கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

மெரினா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு போலீஸார் தடை விதித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், காரணமில்லாமல் போலீசார் தடை விதிக்க மாட்டார்கள் என்றார்.

நடிகர் கமலஹாசன் காவிரிக்காகக் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து கமல்ஹாசனே கருத்து தெரிவித்திருப்பது குறித்து கேட்டபோது, இன்னும் நான் கட்சியே தொடங்கவில்லையே, அதற்குள் எப்படி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்று கேட்டார்.

மேலும், நிச்சயமாக தாம் முன்னறே கூறியபடி, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி தொடங்கப்படும் என்றும், அதற்காக எப்போதும் தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.