― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்நான்கு மாநில வெற்றி! நாமும் சாதித்துக் காட்டுவோம்! : அண்ணாமலை!

நான்கு மாநில வெற்றி! நாமும் சாதித்துக் காட்டுவோம்! : அண்ணாமலை!

- Advertisement -

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே….. அனைவருக்கும் வணக்கம்.

4 மாநில வெற்றிக்குப் பிறகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், தேசிய தலைமை அலுவலகத்தில் பஜக தொண்டர்கள் மத்தியில் நேற்று மகிழ்ச்சி உரை ஆற்றினார்.

‘இன்று உற்சாகமான நாள். இந்த நாள் நம்முடைய நாள். இந்திய அரசியலில் மிக முக்கியமான நாள். இந்தத் தேர்தலில் பங்கு பெற்ற வேட்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் வாக்களித்த பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தத் தேர்தலில் நாம் பெற்றிருக்கும் புதிய வரலாறு படைக்கும் வெற்றி பெண்களால் சாத்தியமானது. நம் குடும்பத்தில் இருக்கும் அன்னையர்களும், சகோதரிகளும், இளைஞர்களும் இளைஞிகளும் பெரும் திரளாக வாக்களித்து நமக்கு இந்த சாதனை வெற்றியைச் சாத்தியமாக்கி இருக்கிறார்கள். ஃபர்ஸ்ட் டைம் ஓட்டர்ஸ்… எனப்படும் முதல் முறை வாக்களிப்பவர்கள் உற்சாகமாக இந்தத் தேர்தலில் வாக்களித்து நம்பிக்கையை உறுதி செய்திருக்கிறார்கள். நம்மை நம்பிக்கைக்குரியவர்களாக நடவு செய்திருக்கிறார்கள்.

தேர்தல் சமயத்தில் ஹோலிப் பண்டிகை தொடங்கும் காலம் என்று ஒரு சிலர் என்னிடம் தெரிவித்து இருந்தார்கள். நமக்கெல்லாம் ஹோலிப் பண்டிகை மார்ச் 10ஆம் தேதியாகிய இன்றே தொடங்கிவிட்டது. மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் உற்சாகமாகக் கொண்டாடுங்கள். நம் தொண்டர்கள் ஆகிய நீங்கள் மிகச் சிறப்பாக இந்த சாதனையை செய்து காட்டி இருக்கிறீர்கள். இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து மக்கள் உங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கிறீர்கள். இந்த வெற்றியை நம் கட்சியின் அடிப்படை தொண்டர்கள், காரிய கர்த்தாக்கள் சாத்தியமாக்கி இருக்கிறீர்கள்.

உத்திரப்பிரதேசம் நம் தேசத்திற்கு ஒரு புதிய உதாரணத்தை கொடுத்துள்ளது. இதுவரை 5 ஆண்டுகள் முழுமையாக உத்திரப்பிரதேசத்தில் ஆட்சி செய்த எந்த முதல்வரும் மீண்டும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. 37 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஒரு சரித்திர நிகழ்வு இப்போது கிடைத்திருக்கும் வெற்றி.

உத்திராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள், நமது வெற்றியை சந்தேகத்திற்கிடமாகச் சித்தரித்தன. மதில் மேல் பூனை என்று எச்சரித்தன. ஆனால் மக்கள் அந்தக் கருத்துக் கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கி, நம்மை மீண்டும் ஆட்சியாளர்களாக அங்கீகரித்துள்ளனர். இம்மூன்று மாநிலங்களிலும் நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். அதிலும் கோவாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கிறோம். மேற்கில் அரபிக் கடலைச் சார்ந்த பிரதேசம். கிழக்கில் மணிப்பூர், வடக்கிலே மலைகளின் அடியில் உத்தராகண்ட், கங்கை நதி பாயும் உத்திரப்பிரதேசம் என்று பரந்த இந்தியாவின் அனைத்து திசைகளிலிருந்தும் வெற்றிச் செய்திகள் வந்துள்ளன.

இந்தத் தேர்தலின் வெற்றி என்பது, மக்கள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கான வெற்றி. பிஜேபியின் கொள்கை, கோட்பாடு, மற்றும் சித்தாந்தங்களை நாங்கள் ஏற்கிறோம் என்று மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம் இந்த வெற்றி. பாஜக அரசு வழங்கிய proper governance என்னும் தரமான நல்லாட்சி என்ற தத்துவத்தின்மீது கொண்டுள்ள நம்பிக்கையை, இந்த வெற்றிச் செய்தி மூலம் மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இதற்கு முந்தைய ஆட்சியில், அரசு அலுவலகங்களில், மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைக்காக, காத்துக் கிடந்தார்கள். தனது உணவுக்கும் உரிமைக்கும் அவர்கள் லஞ்சம் தர வேண்டியிருந்தது. தேசத்தில் ஏழைகளுக்காகப் பல திட்டங்கள், பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டன. ஆனால் அது ஏழைகளுக்குக் கிடைக்கவில்லை; அல்லது முழுமையாக கிடைக்கவில்லை. மக்களுக்கு முன்னர் கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே! இதை உணர்ந்த பாஜக அரசு நல்லாட்சியின் மூலம், நல்லாட்சியை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டுசேர்க்கும் கடமையை ஆற்றுவதன் மூலம், நம்முடைய ஆட்சியில் அனைத்து திட்டங்களும் மக்களின் கைகளுக்குக் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டோம்.

ஏழைகளுக்கான ஆட்சியை உருவாக்கினோம். அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தோம். மக்களுக்கான திட்டங்களின் நன்மை பெறுவது அவர்களின் உரிமை என்று அவர்களுக்கு உணர்த்தினோம். திட்டங்களை மக்களின் வீட்டு வாசலுக்குக் கொண்டு சேர்த்தோம். ஆட்சியாளர்களைத் தேடி ஓடவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை என்பதை மக்களுக்குப் புரிய வைத்தோம்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொண்டு செய்யும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. மக்களின் இன்னல்களைப் புரிந்துகொள்ளும் இடத்திலே நான் இருக்கிறேன். அதனால் நான் ஒரு கடுமையான முடிவு எடுத்தேன். அதை என்னுடைய முதல் செங்கோட்டை உரையிலேயே பதிவு செய்தேன். இந்த முடிவை எடுக்கும்போது நான் யாரிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு முடிவை இதற்கு முன்னர் எந்த அரசியல் தலைவரும் எடுத்திருக்கவும் முடியாது. அப்படியொரு கடுமையான முடிவு… அது என்னவென்றால் எந்தத் திட்டமும் முழுமையாக, நூறு சதவீதம் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதே. 100% என்பது மிகச் சிக்கலான சபதம். ஆனால் இந்த சபதத்தை நான் ஏற்றேன். அதற்கு ஏழை மக்கள்மீது கொண்டிருந்த பரிவு மட்டும் காரணம் அல்ல. எனக்கு சத்தியத்தின்மீது இருந்த நம்பிக்கை. எனக்குத் துணையாக இருக்கும் நம் கட்சித் தொண்டர்கள்மீது கொண்டிருந்த நம்பிக்கை. இப்படி நூறு சதவீத வெற்றி சாத்தியம் என்பதை இந்தியா உலகிற்கு உணர்த்தி உள்ளது. நம் நீதி என்பது இந்த மண்ணோடு கலந்த மகத்துவமானது….அதில் வெற்றி பெற்று இருக்கிறது.

இது யுத்த நேரம். உலகம் முழுவதும் அதன் தாக்கம் வெளிப்பட்டிருக்கிறது. பாரதம் அமைதியான பூமியாக இருந்தாலும் யுத்தத்தின் தாக்கம் இங்கும் அதிகமாக உள்ளது. கச்சா எண்ணெய், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், நிலக்கரி, எரிவாயு என எல்லாப் பொருட்களின் விலையும் கட்டுக்கடங்காமல் ஏறுமுகத்தில் இருக்கிறது. இந்த விலைவாசி உயர்வைச் சமாளிப்பது மிகக் கடினமானது. இந்த நிலையில் நாம் வெளியிட்ட ஆத்ம நிர்பர் பட்ஜெட், எல்லாச் சுமைகளையும் மக்கள் மீது திணிக்காமல், மாறாக பல நன்மைகளை வழங்கும் திட்டமிட்ட பட்ஜெட் ஆகா அமைந்துள்ளது. திட்டமிட்ட இந்த பட்ஜெட்டை மக்கள் வரவேற்றிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம்தான் உத்திரப்பிரதேசத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் இந்தத் தொடர் வெற்றி.

தேசத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் நாம் தொடர்ந்து சிந்தித்து நல்ல திட்டங்களைக் கொடுத்து மக்கள் அதை ஏற்று வெற்றியைக் கொடுத்தது எல்லாம் மகிழ்ச்சிதான் ஆனாலும் எனக்கு ஒரு சில கவலைகள் உண்டு.

Covid-19 நோய்த்தொற்று கடுமையாக பாதித்த சூழலில் நாம் எடுத்த தொடர்ச்சியான முடிவுகள், சில கடுமையான முடிவுகள், நம் தேசத்தைப் பாதுகாத்தன. சரியான நேரத்தில் நம் நாட்டிற்குத் தேவையான தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவெடுத்தது போன்ற முடிவுகளையும் ஒருசில எதிர்க்கட்சிகள் மக்கள் நலத்தைப் புறக்கணித்து விமர்சனம் செய்தனர். ஏன் operation ganga திட்டத்தைக்கூட அவர்கள் மனிதாபிமானமற்று விமர்சித்தனர். பாரதத்தில் நடைபெற்றுவந்த குடும்ப ஆட்சி இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மக்கள் நல்லதை நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.

அதிலும் ஆண்களை விட பெண்கள் திரளாக வந்து ஒவ்வொரு தாயும், சகோதரியும் பாஜகவிற்கு இந்த பம்பர் வெற்றியை பரிசாகத் தந்து இருக்கிறார்கள். குஜராத்தில் நான் முதல்வராக இருந்த காலம் முதல் எனக்கு நம்பிக்கை தருவது நம் தேசத்தின் கோடானகோடி அன்னையர்கள்தான். அவர்கள் தந்த நம்பிக்கையால்தான் கடுமையான உடை போடும் நேர்மையான சிந்தனையோடும் பெரிய வரலாறுகளைப் புரட்டிப் போட முடிந்தது.

உத்திரப்பிரதேச மாநிலம் பற்றி ஒருசில கட்சிகள், அது சாதிய எண்ணம் கொண்டது, பிற்போக்கான சிந்தனை உடையது, சாதி ரீதியாகத்தான் வாக்களிப்பார்கள் என்றெல்லாம் பேசியிருந்தார்கள். ஆனால் இப்போது உத்திரப்பிரதேச மக்கள் சாதியைப் புறம் தள்ளி நீதியை நிலை நாட்டி இருக்கிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் மக்கள் சாதியை பின்னுக்குத்தள்ளி தேசத்தை முன்னிறுத்தி இருக்கிறார்கள்.

2017ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச வெற்றி கிடைத்தவுடன், அகிலப் புகழ் மிக்க அரசியல் விமர்சகர்கள், 2019க்கான பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் முன்னரே வெளியாகிவிட்டன என்று உறுதியாகச் சொன்னார்கள்… அதன்படியே, 2019 தேர்தல் முடிவுகளும் அமைந்தன. அந்தக் கூற்றுப்படி பார்த்தால் இப்போது நான் சொல்கிறேன் 2022ம் ஆண்டுக்கான உத்திரப்பிரதேசத்தின் தேர்தல் முடிவுகளால் 2024ஆம் ஆண்டுக்கான தேர்தல் முடிவுகளும் வெற்றி என்று உறுதி செய்யப்பட்டு விட்டது.

உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் ஊழலை ஒழிக்க வேண்டுமா வேண்டாமா… (வேண்டுமென மக்கள் கோஷம்) ஊழல்வாதிகளை வெளியேற்ற வேண்டுமா வேண்டாமா… (வேண்டுமென மக்கள் கோஷம்) தேசத்தின் கஜானாவில் இருக்கும் பணத்தையெல்லாம் பெட்டிகளில் நிரப்பிக்கொள்ள நினைப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதை உணர்ந்துதான் ஊழலற்ற நல்லாட்சியை 2014ஆம் ஆண்டில் தேர்தலில் முன்வைத்து அதைச் செய்தும் காட்டினோம். அதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டும் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஊழலற்ற, நேர்மையான நல்லாட்சியின் தத்துவத்தை மக்கள் உணர்ந்து கொண்டார்கள். எந்த நிலையிலும் நாம் ஊழலை அனுமதிக்க மாட்டோம் என்பதைப் புரிந்து கொண்டார்கள். மக்கள் நம்மீது கொண்டிருக்கும் மதிப்பையும் நம்பிக்கையையும் நாம் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறோம். அதை மதித்து மக்கள் நமக்குத் தொடர் வெற்றியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒரு சில எதிர்க்கட்சிகள் பொய்யையும் புரட்டையும் சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். ஆயிரக்கணக்கான கோடிகள் சுருட்டிய ஊழல்வாதிகள், மாநிலம், மொழி, இனம், ஜாதி, மதம் என்று அபாயகரமான பிரிவினைவாதம் பேசித் தப்பிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் ஊழலை அனுமதிக்க மாட்டோம்.

ஊழல்வாதிகளையும் அனுமதிக்க மாட்டோம் என்று உத்திரப்பிரதேச மக்கள் தீர்ப்பு கூறியிருக்கிறார்கள். உத்திரப்பிரதேசத்துக்குச் சென்றிருந்த போது அந்த மக்கள் காட்டிய அன்பு என்னை உத்திரப்பிரதேசக்காரனாகவே நினைக்க வைத்துவிட்டார்கள். ஜாதிய வாதங்களை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு தேசத்தை முன்னிறுத்தி இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது, மக்கள் மதித்து அங்கீகாரம் தந்திருக்கும் நம் ஆட்சியை இன்னும் அதிக மாட்சி உடையதாக மாற்றுவதே!! நாம் எல்லோரும் ஒற்றுமையாக கைகோர்த்து, வெற்றியைக் கொண்டாடும் இந்த வேளையில், ஒரு உறுதி எடுப்போம். என் தேசம், என் மக்கள் இவர்களின் முன்னேற்றமே, வெற்றியே நமது குறிக்கோள் என்று கொள்ளுவோம்… அதை நோக்கியே பாதை வகுத்துச் செல்வோம். ஏனெனில் இந்த வெற்றியை இந்த தேசத்திற்கான வெற்றியாக…இந்த மக்களின் வெற்றியாக நான் பார்க்கிறேன்.

இந்தத் தேர்தலில் வெற்றிக்காக வாக்களித்த பெருமக்களுக்கும், போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும், கடுமையாக உழைத்து வெற்றி முரசு கொட்டிய காரியகர்த்தாக்களுக்கும் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரத அன்னையின் புகழ் ஓங்குக!

இந்தத் தெளிவான சிந்தனை, தீர்க்கமான உரை, நமக்கு மிகப் பெரிய விழிப்புணர்வை ஊட்டுகிறது. இதுபோன்ற வெற்றியை நாமும் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற தன்னம்பிக்கையை விதைக்கிறது.

  • கே.அண்ணாமலை, (மாநிலத் தலைவர், தமிழக பாஜக.,)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version