― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தமிழக வெற்றி கழகம்; அரசியலில் குதித்த நடிகர் விஜய்; கட்சிப் பெயர் அறிவிப்பு!

தமிழக வெற்றி கழகம்; அரசியலில் குதித்த நடிகர் விஜய்; கட்சிப் பெயர் அறிவிப்பு!

- Advertisement -
actor vijay

தமிழ் நடிகர் விஜய் இன்று தனது புதிய அறிவிப்பாக, அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து, கட்சிப் பெயரையும் வெளியிட்டார்.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளைப் போன்று, பல்வேறு பணிகளைச் செய்து வந்தார். இந்நிலையில் அதிகாரபூர்வமாக, ‘தமிழக வெற்றி கழகம்’ என்று, தனது கட்சியின் பெயரை வெளிட்டார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு பொதுநலப் பணிகள் செய்யப்பட்டது. அண்மையில் கூட, புயல் மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில், விஜய் நேரில் சென்று பொதுமக்களுக்கு உதவித்தொகை, நிவாரணப் பொருட்களை வழங்கினார். அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர், விஜய் படத்தை வைத்துக் கொண்டு மக்களுக்கு உணவிடும் படங்கள் சமூகத் தளங்களில் வைரலானது.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்து அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதவாது:

தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். “எண்ணித் துணிக கருமம்” என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, “தமிழக வெற்றி கழகம்” என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.

இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்கப் பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப் பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்”

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளார். இதுவரை நடிகராக இருந்த விஜய் இதன் மூலம் முழுநேர அரசியல்வாதியாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது கைவசம் இருக்கும் ஒரு படத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபடப் போவதாகக் கூறியுள்ளார்.

நடிகர் விஜய்யின் அரசியல் ஆசை என்பது கடந்த 2009ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது எனலாம். அன்னா ஹஸாரே உண்னாவிரதப் பந்தலில் எட்டிப் பார்த்து, அரவிந்த் கேஜ்ரிவால் அரசியல் ஈடுபாட்டைக் காட்டிய அதே நேரத்தில் விஜய்யும் காட்டினார். ஆனால் அப்போது அவர் கோடிக் கணக்கில் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த பரபரப்பான நடிகராக இருந்தார். பின்னாளில் காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் மேடையில் தோன்றியது, கடந்த தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் ஓட்டுப் போட வந்தது, தனது படங்களில் அரசியல் வசனங்களை பேசுவது, மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக விமர்சனம் செய்து கேலியான கருத்துகளைப் பேசுவது என அரசியல் ஆசை வெளிப்பாடுகளைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கட்சி தொடங்கப் போவதாக அண்மைக் காலமாக கூறிவந்த நிலையில், அவருக்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்று அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version