― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகல்விதெரிந்து கொள்வோம்: பி.எம். ஸ்ரீ பள்ளிகள்!

தெரிந்து கொள்வோம்: பி.எம். ஸ்ரீ பள்ளிகள்!

- Advertisement -
pm shri schools

கட்டுரை: கமலா முரளி

உறுதியான வலுவான பாரதத்தை உருவாக்க, தொலைநோக்குப் பார்வையுடன் தகுந்த அடித்தளத்தை அமைக்க வேண்டும். நம் நாட்டின் எதிர்காலம் என்பது தற்போதைய இளைய தலைமுறையின் கையில் அல்லவா உள்ளது ! அவர்களுடைய கல்வி மற்றும் திறனை வளர்த்தால் தான் அவர்களை உலகளாவிய வாய்ப்புகளையும் சவால்களையும் எதிர் கொள்ள வைக்க முடியும். “பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்” திட்டம் இந்திய அளவில் பள்ளிகளின் தரம் உயர்த்தலுக்கான ஒரு முன்னோடித் திட்டம் ஆகும்.

பி.எம். ஸ்ரீ பள்ளிகள் பற்றி அறிந்து கொள்ள… இந்தக் காணொளியைப் பார்க்கவும்…

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்பது என்ன ?

”பிரதம மந்திரியின் வளரும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டம்” அதாவது  PM SHRI Scheme ,  அதாவது Pradhan Mantri Schools for Rising India  என்பது மத்திய அரசின் நிதி ஆதார ஆதரவுடன், நாட்டின் அனைத்து பகுதிகளிலும், மத்திய, மாநில , நகராட்சி அல்லது ஊராட்சி பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் பள்ளிகளின் திறன் மற்றும் தரம் மேம்படுத்தும் திட்டமாகும்.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு குஜராத்தில் நடைபெற்று, நாடு தழுவிய முன்னோடிப் பள்ளிகள் குறித்து கருத்துரையாடல் நடைபெற்றது. மத்திய அமைச்சர், தர்மேந்திர பிரதான், இந்த முன்னோடிப் பள்ளிகள் 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் ஆய்வகங்களாகவும், மாணவர்களை எதிர்கால மாற்றங்களுக்குத் தயார் செய்யும் களங்களாகவும் தரம் உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.

அதே ஆண்டு, செப்டம்பர் 5, ஆசிரியர் தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், “பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் “ திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

வளரும் இந்தியாவுக்கான பிரதம மந்திரியின் பள்ளிகள் திட்டம் ( PM SHRI Schools ) மத்திய அரசின் நிதி ஆதார உதவியுடன், செயல் திட்ட வழிகாட்டுதல்களுடன் 2022-23 கல்வியாண்டு முதல் 2026-27 வரை ஐந்தாண்டுகளில், படிப்படியாக, இந்தியா முழுவதிலும் சுமார் 14,500 பள்ளிகளில்  , சுமார் 27000 கோடி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

நோக்கமும் முக்ய அம்சங்களும்

மகிழ்வான கற்றல் சூழலில் தரமான, மேம்படுத்தப்பட்ட, சமச்சீரான , மாணாக்கர்களை அடுத்த நூற்றாண்டுக்குத் தயார்படுத்தும் கல்வி வழங்குதல் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

மாணாக்கர்களின் மதி நுட்பத்தை வளர்த்தல், கலை மற்றும் தொழில் திறனை வளர்த்தல், மொழித்திறன், சமூக உளவியல் கூறுகளின் மலர்ச்சி, வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஏற்ற மேம்படுத்தப்பட்ட கல்வி வாய்ப்புகள், உள்ளூர் கலைஞர்கள் துணையுடன் கலை, கைத்தொழில் திறன் பெறுதல் என பல்வேறு முன்னெடுப்பகளைக் கொண்டது இத்திட்டம்.

புதிய தேசியக் கல்வித் திட்டம் 2020 இப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும். இளம் பிராயத்தினருக்கான அடித்தரக் கல்வி, பாதுகாப்பான , சுமையில்லா விளையாட்டு / செயல் முறை கற்றல் முறையில் தரப்படும். ஆயத்த நிலை அதாவது மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வியில் சில வகுப்பறைப் பாடங்களும், ஒளிப்படபாடங்களும் ( வீடியோ, திரை) இருக்கும். நடுத்தர ( 6 முதல் 8 ம் வகுப்பு ) நேரடி ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பில் கலை மற்றும் அறிவியல் எனக் கடினமான பாடுபாடு இல்லாமல், பலதரப்பட்ட இயற்கையுடன் இயைந்த பாடங்களும் இருக்கும்.

பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டம் அமலாக்கப்படும் பள்ளிகள் இத்தகைய முன்மாதிரியான கல்வித் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று, மற்ற பள்ளிகளுக்கு வழிகாட்டியாகச் செயல்படும்.

பி.எம். ஸ்ரீ பள்ளிகளின் தர மேம்பாடு :

  • கற்றல் முறையில் தரம், புத்தாக்க முறைகள் ( முழுமையான சமச்சீரான அணுகுமுறை, புதிய கற்றல் முறைகள், புத்தகப்பையிலா நாட்கள், உள்ளூர் கலைஞர்களின் பங்களிப்பு, திறன் தேர்ச்சி – கற்றல் முறை நம்பகத்தன்மை / வெற்றியை சோதித்தல் , முறைப்படுத்தப்பட்ட ஆவணங்கள்)
  • மாணாக்கர்களின் ஆரோக்கிய குறியீடுகள் / முறைப்படுத்தப்பட்ட ஆவணங்கள்
  • கல்வி உரிமை சட்டப்படியான சலுகைகள் (ஆர்.டி.ஈ)
  • அறிவியல், கணித பாடங்களுக்கான கருவிகள்
  • அடித்தரக் கல்வி (இளஞ்சிறார் ) பாதுகாப்பான கல்விச்சூழல், அடிப்படை எண்ணும் எழுத்தும்
  • மாணவர்கள் விருப்பம் போல பாடங்களைத் தேர்வு செய்து படித்துக் கொள்ளும் வசதி
  • உள்ளூர் மொழியில் கல்வி, மொழி இடையூறு தவிர்க்க தொழில் நுட்பக்கருவிகள் தயார் நிலையில் இருத்தல்
  • கணினி வழிக் கல்வி, ஸ்மார்ட் போர்ட், டிஜிட்டல் நூலகம், மேம்படுத்தப்பட்ட அறிவியல் / கணித/ மொழி/ கணினி ஆய்வகங்கள்
  • விளையாட்டுக் கருவிகள்/ விளையாட்டுத் தளங்கள் அமைத்தல்
  • கலை/ உள்ளூர் சிறு தொழில் கற்க வசதியான கூடங்கள் / தேவையான கருவிகள்
  • பள்ளியை பசுமை வளாகமாக மேம்படுத்துதல் : சூரிய சக்தி உற்பத்தி, நெகிழி இல்லா வளாகம் ( பிளாஸ்டிக் தவிர்த்தல் ), கழிவுகள் மறுசுழற்சி, பசுமைத் தோட்டப் பராமரிப்பு, நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு.
  • பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆங்காங்கு செயல்படும் மாநில,  நகராட்சி, ஊராட்சி அமைப்புகள் மற்ரும் தன்னார்வல அமைப்புகள் உதவியுடன் மேம்படுத்துதல் .

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் தேர்வு

நாட்டின் அனைத்து மாநில/ யூனியன் பிரதேசங்களிலும் உள்ள பள்ளிகள் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒரு வட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு பள்ளிகள் முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முன்னோடி ஆய்வகப் பள்ளிகளாக பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் உருவாகும். அவை மற்ற பள்ளிகளுக்கு வழிகாட்டிகளாக அமையும்.

பள்ளிகள் தற்போது எந்த அமைப்பில் இருந்தாலும் ( நவோதயா, கேந்திரிய வித்யாலயா, மாநில அரசு, மாநகராட்சி, ஊராட்சி என எதுவாகிலும் ) பி.எம்.ஸ்ரீ பள்ளி இணைய தளத்தில் இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம். தற்போதுள்ள வசதிகளுடன், பள்ளிகள் அங்கிகரிக்கப்பட்டு, தர மேம்பாட்டுக்கான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள், நிதி உதவி போன்றவை பகிரப்படும். மாநில அரசுகள் மற்றும் தன்னார்வல அமைப்புகளின் பங்கெடுப்பும் வரவேற்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் திட்டப்பயன்கள் :

  • புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துதல்
  • மாணவர்கள் வருகை மற்றும் கல்வி /திறன் மேம்பாட்டைக் கண்கணிக்கும் தொடர்ச்சியான ஆவணங்கள்
  • ஒவ்வொரு மாணாக்கரின் கல்வி /திறன் தேர்ச்சியானது மாநில அல்லது தேசிய சராசரி திறன் தேர்ச்சி விகிதத்தை விட அதிகமாக இருக்க முயற்சித்தல்.
  • அடிப்படைக்கல்வி தவிர ஏதேனும் ஒரு திறன்கல்வியில் தேர்ச்சியுறுதல்
  • கலை/ விளையாட்டு / ஐ.சி.டி வசதி ஒவ்வொரு மாணாக்கருக்கும்  சென்றடைவதை உறுதி செய்தல்
  • பள்ளி ஒரு பசுமை வளாகமாக மாறுதல்
  • ஒவ்வொரு மாணாக்கருக்கும் உளவியல் மற்றும் வேலை வாய்ப்பு ஆலோசனைகள் / வாய்ப்புகள்
  • நமது நாட்டின் பாரம்பரியம், உன்னதக் கலைகள், வரலாறு பற்றிய கல்வி, நாட்டுப்பற்று கொண்ட குடிமக்களை உருவாக்குதல்
  • நற்பண்புகளை ஊக்குவிக்கும், நற்குடிமக்களை உருவாக்கும் ஆக்கபூர்வ கல்வி.

புத்துணர்வூட்டும் புதிய முயற்சி

பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்ட வரைவு, செயல்படுத்தும் முறைகள், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள், திட்ட முன்னெடுப்பைக் கடுமையாக சோதித்தல்  என மிகச் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் சுமார் பதினெட்டு லட்சம் மாணாக்கர்களுக்கு பயனளிக்கும். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இத்திட்டம் சிறப்பாக செயல்படத் துவங்கியுள்ளது.  பீகார், டெல்லி, கேரளா, ஒரிசா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் இத்திட்ட செயல்பாட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை என கடந்த டிசம்பர் மாதம் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சுமார் இருபத்தைந்து பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

”ஸ்ரீ” என்ற சொல் செல்வத்தைக் குறிக்கும். பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டம் நம் பிள்ளைகளின் கல்விச் செல்வத்தை உறுதி செய்யும் !

கட்டுரையாளர்: கல்வியாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version