― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைவிவசாயிகளின் நண்பன் மோடி! எப்படி? எதனால்?!

விவசாயிகளின் நண்பன் மோடி! எப்படி? எதனால்?!

modi-farmer

1950ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 விழுக்காடு விவசாயத்துறையை சார்ந்திருந்த நிலையில், தற்போது 16 விழுக்காடாக சுருங்கியுள்ளது. பொருளாதார தாராளமயமாக்கல் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு துறைகள் வளர்ச்சியடைந்த நிலையில், விவசாயத்துறை மட்டும் வீழ்ச்சி அடைந்தது.

அதிக பரப்பளவு, மக்கள் தொகை, இயற்கை வளங்கள் கொண்ட நம் நாட்டில் தொழில் துறை மற்றும் சேவை துறையின் வளர்ச்சி, விவசாய துறையை பின்தள்ளி முன்னுக்கு வந்தது. இதற்கு முழு காரணம் அந்த இரு துறைகளின் மீது மத்திய மாநில அரசுகள் செலுத்திய அக்கறையும், விவசாயத்துறையின் மீதான அலட்சியமுமே. தொழில்நுட்ப வளர்ச்சி, தனியார் பங்களிப்பு, கட்டமைப்பு பணிகள் என்பதோடு பொருளாதார தாராள மயமாக்கலினால் வர்த்தக ரீதியாக இந்த துறைகள் வளர்ச்சியடைந்தது.

ஆனால் இவையெல்லாவற்றையும் புறக்கணித்ததால், தற்போது 16 விழுக்காடு மட்டுமே விவசாய பங்களிப்பு இருந்தாலும், மொத்த மக்கள் தொகையில் 52 விழுக்காடுக்கும் அதிகமானோர் விவசாய துறையில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 15, 2003 ம் ஆண்டு பாஜக ஆட்சியில், அன்றைய பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்கள், விவசாய துறையில் புதிய பல சோதனைகளை மேற்கொள்வதோடு, விவசாயத்துறையில் முதலீடுகளை அதிகரித்து அந்த துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆனால், ஆட்சி தொடராத நிலையில், அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சி நவம்பர் 18, 2004 ல் எம் எஸ் சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் குழுவை அமைத்தது. 2006ல் அந்த குழுவின் அறிக்கை வந்த போதும் 2014 வரை அந்த குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை அன்றைய காங்கிரஸ் அரசு. ஆனால் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக ஆட்சி வந்தவுடனேயே அந்த அறிக்கையின் பல பரிந்துரைகளை நிறைவேற்ற தொடங்கியது.

விவசாய கடன் அட்டை, மண்வள அட்டை, பயிர் காப்பீடு, பயிர் கடன், ஊரக வளர்ச்சி, சொட்டு நீர் பாசன திட்டம் , விவசாய தொழிலாளிகளுக்கான ஓய்வூதியம் ஆகிய திட்டங்களை முழு வேகத்தோடு செயல்படுத்தியது. விவசாயிகளுக்கான கௌரவ நிதியாக 9 கோடி விவசாய குடும்பங்களுக்கு வருடம் ரூபாய் ஆறாயிரம் வழங்கியது.

modi-farmers

விவசாயிகளின் லாபத்தை இரட்டிப்பாக்க எம் எஸ் சுவாமிநாதன் அவர்களின் பரிந்துரைகளை அமல்படுத்த வேளாண் சீர்திருத்தங்களுக்கான புதிய சட்டங்களை இயற்றியது பாஜக அரசு. அதனடிப்படையில், விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்று மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் படி, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க இது வரை இருந்த கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்பட்டு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் இடை தரகர்களின் ஆதிக்கம் முற்றிலுமாக அகற்றப்படும். விளைபொருட்களுக்கு அதிகமான லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். பரவலான வியாபாரம் அதிகரிக்கும் நிலையில் முதலீடுகள் அதிகரிப்பதால், குளிர்பதன கிடங்குகள், சேமிப்பு கிடங்குகள், நவீன தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்ட விவசாய கட்டமைப்புகள் பெருகும்.

விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டத்தைப் பொருத்தவரை விளைபொருட்களை எந்த மாநிலத்திற்கும் எடுத்து சென்று வர்த்தகம் செய்யமுடிவதோடு, எந்த மாநிலமும் இனி விவசாய பொருட்களுக்கு வரியோ அல்லது கட்டணமோ வசூலிக்க முடியாது.

பஞ்சாப் போன்ற பல மாநிலங்களில் நுழைவு வரி உட்பட பல்வேறு வரிகள் விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டிருந்தது இனி முற்றிலுமாக அகற்றப்பட்டு, சந்தையை விரிவடைய செய்யும். குறிப்பாக தமிழக விவசாயிகளின் விளைபொருட்கள் இது வரை பலமாநிலங்களில் விற்க வேண்டியிருந்தால், அதிக வரி செலுத்தி வந்ததால் அதிக விலை அதிகமானதால் காரணமாக விற்பனை குறைவாக இருந்தது. இனி அந்த நிலை அகற்றப்படும். தமிழக விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும்.

விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 சட்டத்தின் படி, விவசாயிகள் மற்றும் பொருட்களை வாங்குபவர்களிடையே ஒப்பந்த அடிப்படையில் வர்த்தகம் நிகழும்போது, விவசாயிகளுக்கு உரிய விலை உறுதி செய்யப்படும். விவசாயிகளின் நலன் கருதி மட்டுமே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இந்த சட்டத்தின் கீழ் விவசாய நிலங்கள் குறித்து எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்ச ஆதார விலை புதிய சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்றும், இனி நீடிக்காது என்றும் எதிர்க்கட்சிகள் சொல்வது உண்மையா?

modi-farmerss

தவறான குற்றச்சாட்டு. இதுநாள் வரையிலான தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் குறைந்த பட்ச ஆதார விலைக்கு எந்த சட்டமும் இருந்ததில்லை. அது அரசின் கொள்கை மற்றும் உத்தரவாதமே. 2009-14 வரை குறைந்த பட்ச ஆதார விலையின் அடிப்படையில் அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்த மொத்த மதிப்பு ரூபாய் 2 லட்சம் கோடி; 2014-19 வரை பாஜக அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்த மதிப்பு 7.06 லட்சம் கோடி. மேலும், கடந்த ஆட்சியில் 6 பொருட்கள் மட்டுமே குறைந்த பட்ச ஆதார விலையில் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய மத்திய பாஜக அரசு 17 பொருட்களை கொள்முதல் செய்கிறது. அதே போல், கடந்த காலங்களில் நாட்டின் வேளாண் பொருட்களின் மொத்த உற்பத்தியில் 6 -8 விழுக்காடு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டன. தற்போதைய பாஜக அரசில் 30 விழுக்காடு உற்பத்தி கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது விவசாயிகள் விளை பொருளை விற்பது எப்படி?

குறைந்த பட்ச ஆதார விலை இல்லாத பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளை பொருட்களை ஏல முறையில் இடைத்தரகர்களின் துணையோடு, மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள் விவசாயிகள். இந்த முறையில் இடைத்தரகர்களும், மொத்த வியாபாரிகளுக்கும் தான் லாபம் அதிகம் என்பதோடு மாநில அரசுகளுக்கு வரி செலுத்தி விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகின்றனர் என்பது கண்கூடு. புதிய சட்டங்கள் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை வெளிப்படையான ஏலத்தில் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பதன் மூலம் லாபத்தை சேமிக்க முடியும்.

விவசாயிகள் – வியாபாரிகள் ஒப்பந்தம் மோசடிக்கு வழிவகுக்கும் என எதிர்க்கட்சிகள் சொல்வது ?

முற்றிலும் தவறானது. சிறு விவசாயிகள் ஒன்றாக இணைந்து சங்கங்களின் மூலம் விளை பொருட்களை விற்பார்கள். ஒப்பந்தங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மாநில மொழிகளில் மட்டுமே இருக்கும். பயிரிடுவதற்கு முன்னரே ‘உத்தரவாத’ விலையை குறிப்பிட வேண்டும். இந்த ஒப்பந்தம் விற்பனை விளை பொருட்களுக்கு மட்டுமே. விவசாய நிலம், விவசாயிகளின் வீடு ஆகியவை மாற்றப்படவோ, அடமானம் வைக்கவோ, விற்கவோ முடியாது. ஒப்பந்தம் குறித்து சிக்கல்கள் இருந்தால், மூன்றடுக்கு தீர்வு மையங்கள் விவசாயிகளின் சொந்த மாவட்டங்களிலேயே தீர்த்து வைக்கப்படும்.

ஒப்பந்த காலத்தில் தற்காலிகமாக ஏதேனும் தொழில்நுட்ப கருவிகளோ அல்லது ஒப்புக்கொண்ட படி நிறுவனம் சார்ந்த பொருட்கள் இருந்தாலும், ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னர் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இல்லையேல் அவை விவசாயிகளுக்கே சொந்தமாகி விடும். ஒப்பந்தத்தை மீறி நிறுவனங்கள் நடந்து கொண்டால் ஒன்றரை மடங்கு அபராதம் விதிக்கப்படும்.

ஆகவே, எந்த ஒரு நிலையிலும் விவசாயிகளுக்கு எதிராக இந்த புதிய வேளாண் சட்டங்கள் செயல்படாத போது, இடைத்தரகர்களின், அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விவசாயிகள் விடுபடக்கூடாது என்பதால் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.

தனியார் நிறுவனங்கள் முதலீடுகளை செய்து நவீன கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விளைச்சல் அதிகரிக்கும்.தேசிய வேளாண் மின்னணு சந்தை மற்றும் ஒப்பந்த சட்டங்களின் மூலம் விவசாயிகளின் உழைப்புக்கேற்ற வருமான பெருகும்.

தேவை அதிகரிக்கும் போது, விலை அதிகரிக்கும் என்பது பொதுவான பொருளாதார விதி. ஆனால் உற்பத்தி அதிகாமாக இருந்தாலும், தேவையை பூர்த்தி செய்யமுடியாத நிலையை இதுநாள் வரை வேளாண் துறை சந்தித்து கொண்டிருந்த நிலையில் தற்போதைய சட்டங்கள் சந்தையை விரிவாக்கி தேவையை விரிவாக்கி வருமானத்தையும் விரிவாக்கும் வாய்ப்பை விவசாயிகளுக்கு உருவாக்கியிருக்கிறது.

மேலும், உலகம் முழுதும் கொரோனா தொற்றினால் பல துறைகள் முடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் வேளாண் உற்பத்தியும், ஏற்றுமதியும் 18- 26 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளின் உழைப்பை சுரண்டிக்கொண்டிருந்த காலம் மறைந்து உழைப்புக்கேற்ற வருமான அவர்களை தேடி செல்லும் வந்து விட்டது விவசாயிகளின் நண்பன் நரேந்திர மோடியால்.

  • நாராயணன் திருப்பதி
    (செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version