Home கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முகசர்மா!

தினசரி ஒரு வேத வாக்கியம்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முகசர்மா!

இன்று முதல் தினசரி நம் தமிழ் தினசரி தளத்தில்... ’தினசரி ஒரு வேத வாக்கியம்’ என்ற தொடர் வெளியாகிறது.

பிரம்மஸ்ரீ டாக்டர் சாமவேதம் சண்முக சர்மா

இன்று முதல் தினசரி நம் தமிழ் தினசரி தளத்தில்… ’தினசரி ஒரு வேத வாக்கியம்’ என்ற தொடர் வெளியாகிறது. வேதம் – உண்மைப் பொருளை உணரச் செய்து, நம் முன்னோர்களின் வாழ்க்கையினை நெறிப்படுத்திய வழிகாட்டி! அவற்றில் பொதிந்திருக்கும் கருத்துகளை நமக்கு தருகிறார் பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முகசர்மா. தெலுகு ஆன்மிக உலகில் பிரபலமானவராகவும் ஆன்மிக அன்பர்களால் போற்றி வணங்கத் தக்கவராகவும் திகழும் இவர், உபந்யாசங்கள், கட்டுரைகள், சிறப்பான யாக யக்ஞங்கள் பூஜைகள் மூலம் ஆன்மிக அன்பர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி வருகிறார். இன்றைய நாட்டு நடப்பு, அரசியல் சூழல்களுக்கு இடையில் நம் சனாதன தர்மத்தை சமரசம் இன்றி முன்னெடுத்து வைப்பவர். இவருடைய கட்டுரைகள் நம் தமிழ் தினசரி தளத்தில் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக தினசரி ஒரு வேத வாக்கியம் என்ற இந்தத் தொடரும் இடம் பெறுகிறது.


பிரம்மஸ்ரீ டாக்டர் சாமவேதம் சண்முக சர்மாவின் கட்டுரைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறார் ஹைதராபாத்தில் வசிக்கும் திருமதி ராஜி ரகுநாதன்


மனிதன் தன் அறிவுக்கு எட்டியவரை இறைவன் அருளிய சுதந்திரத்தையும் விவேகத்தையும் பயன்படுத்தி  ஞானம் பெற முடிந்தால் பிறவிப் பயனை அடைந்தவனாகிறான்.  அதற்குத் தகுந்த வழிகளை இறைவன் வேதத்தில் போதித்துள்ளான். அவற்றை மகரிஷிகள் ஸ்மிருதிகளில் விளக்கியுள்ளார்கள். அறிஞர்கள் ஸ்ருதி, ஸ்மிருதிகளின் சாரமாகத் தம் வாழ்க்கையை வழிநடத்திக் காட்டியுள்ளார்கள். அதேபோல்  தற்காலத்தில் சன்மார்கத்தில் வாழும் உறுதி கொண்டவர்களுள் பிரம்மஸ்ரீ சாமவேத சண்முக சர்மா அவர்களும் ஒருவர்.

இவர் அநேக வழிகளில் செய்துவரும் சனாதன தர்ம பிரச்சாரம் அசாதாரணமானது. ஆன்மீக உலகின் ஆதரவுக்குப் பாத்திரமானது. தர்மத்தோடு தொடர்புடைய பல விஷயங்களைப் பற்றி சொற்பொழிவு வழியாகவும், கவிதைகளைப் படைத்தும், ஆன்மீக நூல்களை எழுதி வெளியிட்டும், ருஷிபீடம் என்ற ஆன்மீக மாத இதழை நடத்தியும் செய்துவரும் தர்மப் பிரசாரத்தைப் பார்க்கையில் இவருக்கு குருவின் ஆசீர்வாதமும் அதன் மூலம் பகவானின் அருளும் பரிபூரணமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.

பல்வேறாக உள்ள மதப் பிரிவுகளையோ சம்பிரதாயங்களையோ பற்றிய நிந்தை துளியுமின்றி எடுத்துக் கொண்ட விஷயத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சிறந்த ஆதாரங்களோடு சொற்பொழிவு ஆற்றுவது சண்முக சர்மா அவர்களின் தனிச்சிறப்பு.

ஶ்ரீசாமவேதம் சண்முகம் சர்மா தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும், உலகின் பல நாடுகளிலும் சொற்பொழிவாற்றி வருகிறார். பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் போதித்து வருகிறார். இவர் சொற்பொழிவாற்றும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஸ்ருதி, ஸ்மிருதி, புராணங்கள், இதிகாசங்களின் ஆதாரங்களைக் காட்டி  அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியோடு தெளிவாக விளக்குவது வழக்கம்.

சனாதன தர்மத்தின் பல்வேறு சிறப்புகளை எளிதில் மக்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துக் கூறுவது இவருடைய தனிச்சிறப்பு. புராணங்களிலும் இதிகாசங்களிலும் சாஸ்திர நூல்களிலும் உள்ள மிக அபூர்வமான விஷயங்களை இவரது சொற்பொழிவில் இருந்து மக்கள் அறிகிறார்கள். சாமவேதம் சண்முக சர்மா அவர்களின் குரல்  தினந்தோறும் மக்களிடையே ஒலித்து மிகச் சிறப்பான அறிவைப் பரப்பி வருகிறது. ஆன்மிக சாதகர்கள் இவருக்கு நன்றி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

“வேதங்களில் தொடங்கி ஸ்மிருதிகள் புராணங்கள் மந்திர சாஸ்திரங்கள் ஸ்தோத்திரங்கள் முதலான இலக்கியங்கள் அனைத்தும் சேர்ந்து சனாதன தர்மத்தைத் தாங்கி நிற்கின்றன. இவற்றின் எக்காலத்துக்கும் ஏற்றதான சிறப்பை உணர்ந்து அவ்வப்போது மனனம் செய்து கொண்டு அந்தந்த தேச காலத்திற்கு ஏற்றவாறு வாழ்வோடு இணைத்து சமனப் படுத்திக் கொண்டு பயணித்தால்தான் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். முக்கியமாக இன்றைய இளைஞர்கள் இவற்றை அறிந்து நம் மரபுகளின் மதிப்பையும் முக்கியத்துவத்தை உணர்ந்து ஏற்றால் என் முயற்சி நிறைவேறியதாக மகிழ்வேன்” என்று குறிப்பிடுகிறார்.

ஶ்ரீசாமவேதம் சண்முக சர்மா தெலுங்கில் மிக பிரபலமாக விளங்கும் ஆன்மீகச் சொற்பொழிவாளர். ருஷிபீடம் எனும் ஆன்மீக, தேசிய மாத இதழை தெலுங்கில் வெளியிடுகிறார்.

சாம வேதம் என்பது இவருடைய சர்நேம். சாமவேதம் சண்முக சர்மா மே 16-ம் தேதி 1967இல் ஒரிசா ஆந்திரா எல்லையில் உள்ள அஸிகா என்ற கிராமத்தில் கல்வியில் உயர்ந்த அறிஞர் குடும்பத்தில் பிறந்தார்.  இவருடைய தந்தையார் சாமவேதம் ராமமூர்த்தி சர்மா. தாயார் ரமணம்மா. சண்முக சர்மா பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பிஏ பட்டம் பெற்றார். இவருடைய தந்தையாரே இவருக்கு முதல் குரு. அவரிடம் வேதக் கல்வி கற்று சமஸ்கிருதத்திலும் தெலுங்கு மொழியிலும் புலமை பெற்றார். 

samavedam shanmugasarma

சண்முகசர்மா இலக்கிய தாகத்தோடு வேலை தேடி விஜயவாடா வந்தார். 1988 ல் சுவாதி வார இதழில் உதவி ஆசிரியராக சேர்ந்து ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தார். ஒரு கவிஞராக இவருடைய மலர்ச்சி அங்கு தொடங்கியது. பத்திரிகையாளராக அங்கு பெற்ற அனுபவத்தால் ருஷிபீடம் என்னும் ஆன்மீக, தேசிய மாத இதழைத் தொடங்கி நடத்தி வருவதாக குறிப்பிடுகிறார்.

சண்முக சர்மா பக்தி கீதங்கள் பல இற்றியுள்ளார். முதலில் திரு. எஸ்பி பாலசுப்ரமணியனின் குரலில் ஒரு ஆடியோ ஆல்பம் வெளிவந்தது. அது மிகப்பெரும் வெற்றி பெற்றதால் சென்னையில் திரைப்பட பாடல் எழுத வாய்ப்புகள் வந்தன. சிறிது காலம் சிறந்த திரைப் பாடல்களை எழுதினார். அதன்பின் ஆன்மீக நூல்கள் எழுதுவதிலும் ஆன்மீக உபன்யாசங்கள் செய்வதிலும் மனதைத் திருப்பினார். அதில் இன்றுவரை தொடர்ந்து ஈடுபட்டு ஆன்மீக உலகின் சிகரங்களை எட்டி வருகிறார் என்றே கூறவேண்டும்.

வாக்தேவீ வரபுத்திரர், சமன்வய சரஸ்வதி, ஆர்ஷ தர்ம உபன்யாச கேசரி போன்ற பட்டங்களால் அறிஞர் பெருமக்கள் இவரை கௌரவித்துள்ளனர். எண்ணற்ற விருதுகள் இவரை வந்தடைந்து பெருமை பெற்றுள்ளன. இவர் சொற்பொழிவாற்றாத சமஸ்கிருத, தெலுங்கு இலக்கியமே இல்லை என்று சொல்லலாம். பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக தடம் மாறாமல் கடவுளின் தத்துவங்களை எளிமையாக எடுத்துரைப்பது இவரது தனிச்சிறப்பு.

ஏஷ தர்ம: சனாதன: என்ற இவருடைய தெலுங்கு நூல் இவருடைய பல சொற்பொழிவுகளையும் பல்வேறு பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளையும் தொகுத்து வெளியிட்ட நூல்.  தமிழில் ராஜி ரகுநாதன் மொழிபெயர்ப்பில் இந்நூல் ‘இது நம் சனாதன தர்மம்’ என்ற பெயரில் ருஷிபீடம் வெளியீடாக வந்துள்ளது.

ஶ்ரீசண்முக சர்மா :சிவபதம்’ என்ற பெயரில் 108 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இவர் சம்ஸ்கிருதத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளார். இன்று ஆன்மீக உலகில் எந்த ஒரு கருத்தையும் ஆதாரத்தோடு எடுத்துரைப்பவர்களில் இவர் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

“சமன்வயமே சனாதனம்! சமரசமே பாரதியம்” என்பது இவரது கருத்து. இவருடைய குருமார்களில் சத்குரு ஸ்ரீபினபாட்டி, ஸ்ரீவீரபத்திர மகாதேவ், ஸ்ரீகந்துகூரி சிவானந்த மூர்த்தி முக்கியமானவர்கள்.

ஶ்ரீசாம வேதம் ஷண்முக சர்மா உலகெங்கும் பல நாடுகளுக்குப் பயணித்து ஆன்மீக சொற்பொழிவுகள் மூலம்  சனாதன தராமத்தைப் பரப்பி  வருகிறார். வேதம், உபநிடதம், இதிகாசம், புராணம், பக்தர்களின் சரிதங்கள், வாகேயக்காரர்களின்  கீர்த்தனைகள் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் உயர்வை பறைசாற்றி வருகிறார்.

இவர் ராஜமுந்திரியில் ஸ்ரீவல்லப கணபதி கோவில்  நிறுவி சிறப்பாக சேவையாற்றி வருகிறார். ருஷிபீடம் சாரிடபுள் டிரஸ்ட் மூலம் பல சேவைகளை ஆற்றி வருகிறார். சிவஞானம், குருஞானம் என்ற அமைப்புகள் வெளிநாடுகளில் இவருடைய சொற்பொழிவுகளை இணையதளங்களின் மூலம் இளைய தலைமுறைக்கு கற்பித்து வருகின்றன.

திருமதி ராஜி ரகுநாதன்

கீழ்வேளூரில் பிறந்து சீர்காழியில் புகுந்து ஹைதராபாத்தில் வசிப்பவர் எழுத்தாளர் ராஜி ரகுநாதன். 1975ல் திருமணம் ஆனது முதல் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். தன் சொந்த முயற்சியால் தெலுங்கு மொழியை கசடறக் கற்றார். தமிழ், தெலுங்கு இரு மொழி இதழ்களிலும் எழுதி வருவதோடு இரு மொழிகளுக்கிடையே மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார்.
முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. மங்கையர் மலர் சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றுள்ளார்.

Ôஇது நம் சனாதன தர்மம்Õ என்ற நூலை இவருடைய தமிழ் மொழிபெயர்ப்பில் ருஷிபீடம் பதிப்பகம் 2016ல் வெளியிட்டுள்ளது. 673 பக்கங்கள் கொண்ட இந்நூல் தெலுங்கில் பிரம்மஸ்ரீ டாக்டர் சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் எழுதிய Ôஏஷ தர்ம: சனாதன:Õ என்ற தெலுங்கு நூலின் தமிழாக்கம்.
திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி விரிவுரை இவருடைய தெலுங்கு மொழிபெயர்ப்பில் 2013ல் வெளிவந்துள்ளது. இதுவும் ருஷிபீடம் வெளியீடு.

மேடம் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பு இவருடைய மொழிபெயர்ப்பில் 2018ல் குவிகம் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. மதுரமுரளி தெலுங்கு மாத இதழுக்காக கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஸ்ரீமுரளீதர சுவாமிகளின் தமிழ் உரைகளை தெலுங்கில் மொழிபெயர்த்து அளித்து வருகிறார்.

2018ல் மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது பெற்றுள்ளார். மேலும் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவரத் தயார் நிலையில் உள்ளன.

சமகால தெலுங்கு முன்னணி பெண் எழுத்தாளர்களின் 21 சிறுகதைகளை மொழிபெயர்த்து பால்டம்ளர் என்ற பெரில் சிறுகதைத் தொகுப்பாக 2020 செப்டம்பரில் வெளியிட்டுள்ளார்.

தினசரி டாட் காம் ( https://dhinasari.com )இணைய செய்தித் தளத்தில் அண்டை மாநிலச் செய்திகளை சுவையாக அளித்து வருவதோடு பல இலக்கிய கட்டுரைகளையும் எழுதி வருகிறார். இதே தளத்தில் ருஷிவாக்கியம் என்ற தலைப்பில் 108 நாட்கள் தொடர்ந்து பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் உபன்யாசங்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

மேலும் தினசரி ஒன்றாக 108 சுபாஷித விளக்கங்களை தினசரி டாட் காம் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். ஆல் இந்தியா ரேடியோ ஹைதராபாதில் பல தலைப்புகளில் தெலுங்கில் உரையாற்றி வருகிறார்…

திருமதி ராஜி ரகுநாதன் அவர்களின் மொழிபெயர்ப்பு & தமிழ்ச் சேவையைப் பாராட்டி, தமிழ் தினசரி தளம், ‘தெய்வத் தமிழர்’ விருது (2021ல்) வழங்கி கௌரவித்திருக்கிறது…


இனி… தினசரி ஒரு வேத வாக்கியம்…. முதல் பகுதியைப் படிக்க…

தினசரி ஒரு வேத வாக்கியம்: 1. நீண்ட ஆயுள்!


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 6 =

Translate »