― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைதேவை பொது சிவில் சட்டம் மட்டுமல்ல; சம மத உரிமைச் சட்டமும்தான்!

தேவை பொது சிவில் சட்டம் மட்டுமல்ல; சம மத உரிமைச் சட்டமும்தான்!

- Advertisement -
uniform civil code

–B.R. மகாதேவன்

அரசின் சலுகைகள், சிறப்பு நலத்திட்டங்கள், உதவிகள் எல்லாம் ஜாதியின் பெயரில் அமையலாம் (இடப் பங்கீடு, நலத்திட்டங்கள்);

வர்க்கத்தின் பெயரில் (வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு சலுகைகள், நலத்திட்ட உதவிகள்) அமையலாம்;

இட அமைப்பின் அடிப்படையில் அமையலாம்; கிராமப்புறத்தினருக்கு சலுகைகள், நலத்திட்ட்டஙள் உருவாக்கப்படலாம்;

பாலின அடிப்படையிலும் அமையலாம்.

ஆனால், மதத்தின் பெயரில் அதிலும் சிறுபான்மை என்ற சலுகை மிக மிகத் தவறு.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் மன்னர் பரம்பரைகள். இந்து மன்னர்களிடமிருந்து ஆட்சி உரிமை, சொத்துகள் எல்லாம் பறிக்கப்பட்டன. இந்து கோவில்களின் சுதந்தரம் பறிக்கப்பட்டது.

ஆனால், கிறிஸ்தவ மன்னர்களான பிரிட்டிஷார் நாட்டைத் தமது பிரதிநிதிகள் வசம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். எனவே, அவர்கள் இல்லையே தவிர அவர்களுடைய காலனிய ஆட்சியும் நிர்வாக அமைப்பும்தான் தொடர்கிறது.

இஸ்லாமிய மன்னர்கள் பிரிட்டிஷாரால் ஒடுக்கப்பட்டுவிட்டதால் இந்திய சுதந்தரத்தின்போது இஸ்லாமிய மன்னர்கள் சொற்பம் தான் இருந்தனர். ஆனால் இஸ்லாமியர்களின் நிரந்தர ஒரே மன்னரான அல்லா-நபியின் அதிகாரம் குறையவில்லை. மசூதிகள் தனி அரசாக, தனி சொத்துரிமையுடன் நீடிக்கவே செய்கின்றன.

பிரிட்டிஷார்களின் காலத்தில் சர்சுகளிடம் கொடுக்கப்பட்ட சொத்து, உணர்ச்சிவசப்பட்டுச் சொல்வதானால், இந்திய அரசிடம் இருக்கும் சொத்தைவிட மிக அதிகம்.

எனவே, சுதந்தரம் என்ற பெயரில் நடந்த ஆட்சி/அதிகார மாற்றத்தில் இந்து மன்னர்களும் இந்து வழிபாட்டு மையங்களும் தான் செல்வாக்கு/சுதந்தரம் இழந்தன. ஒழிக்கப்பட்டுவருகின்றன.

பொது மத உரிமைச் சட்டம் இதை மாற்றி அமைக்கவேண்டும்.

அனைத்து மத அமைப்புகளும் ஒரேவிதமாக நடத்தப்படவேண்டும். கோவில்களைப் போல் மசூதியும் சர்ச்சும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்லவேண்டும். அல்லது மசூதி, சர்ச் போல் இந்து கோவில்களுக்கு சுதந்தரம் தரப்படவேண்டும்.

சிறுபான்மை நிறுவனங்களுக்கு அவர்களுடைய கலாசாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள பெரும்பான்மை சமூகம் உதவவேண்டும் என்பது நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படவேண்டிய செயல். சிறுபான்மை அமைப்புகள் அதற்கு நன்றியுடன் நடந்துகொள்ளவேண்டும். பெரும்பான்மையின் கலாசாரம், மதம், மதிப்பீடுகள் இவற்றை அழிக்க முற்படக்கூடாது.

பசியாக இருப்பவருக்கு உணவு கொடுப்பது அன்பினால் தான்.. ஆனால், உண்ட வீட்டில் ரெண்டகம் செய்யக்கூடாது.

பாபர் அல்ல; ராமரே என் மரியாதைக்குரியவர் என்று சொல்லவேண்டும். ஒளரங்க ஜீபும் திப்புவும் அல்ல; சத்ரபதி சிவாஜியும் ராஜராஜசோழனே எம் மன்னர் என்று சொல்லவேண்டும்.

மத நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்று சொல்லி, மதத்தின் பெயரில் சலுகை தருவது மிக மிகத் தவறு. நீச்சல் குளம் இருக்கும் வீடுகள் கூட குறைவுதான். அவர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு நாங்கள் சிறுபான்மையினர். எங்களுக்கு சலுகை கொடுங்கள், தனி சட்டம் கொடுங்கள் என்று கேட்டால் எவ்வளவு அபத்தமாக அராஜகமாக இருக்கும். கிறிஸ்தவ இஸ்லாமிய நிறுவனங்கள் எல்லாம் சிறுபான்மை என்று சொல்லி சலுகை கேட்பது அப்படியான அராஜகம் தான்.

வேலூர் கிறிஸ்தவ கல்லூரியில் இந்து பட்டியல் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு தரமாட்டேன். மதம் மாறினால்தான் தருவேன்; அதுவும் உயர் ஜாதி கிறிஸ்தவருக்கு மட்டுமே தருவேன் என்பது சமூக நீதிக்கு எதிரான அராஜகம்.

கிறிஸ்தவ நிறுவனங்கள் சலுகை கேட்பதுகூட பெரிய விஷயம் இல்லை. அவர்கள் விஷயத்தில் அவர்கள் தந்திரமாக இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். அதை பெரும்பான்மை சமூகம் எதனால் கொடுக்கிறது என்பதுதான் புரியவில்லை. அதிலும் தமது சகோதரர்களுக்கு இல்லாத உரிமைகளை அள்ளிக் கொடுப்பதென்பது அசட்டுத்தனம். நல்லவராக இருக்கலாம். ரொம்ப நல்லவராக இருக்கக்கூடாது.

தமிழில் திருவள்ளுவர் மட்டுமல்ல; பாத்திரமறிந்து பிச்சையிடு என்று சொன்னவளும் இருக்கிறாள்.

அடுத்ததாக, மதத்தின் பெயரில் சலுகை தரப்படுவது குடிமகன்களுடைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே சிறுபான்மைகள். உலக அளவில் அவர்களே வல்லாதிக்க சக்திகள்.

அதோடு, இந்தியாவிலும் அரசியல், கல்விப்புல, சமூக, ஊடக அதிகாரங்களில் உச்சத்தில் இருக்கின்றன.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் விற்பதும் ஒருவகை போதைப் பொருள்தான். தன்னைத் தவிர பிறரை அழிக்க நினைக்கும் ஒரு மதம் நல்வழிப்படுத்தும் அமுதம் அல்ல. ஏற்றி சம நிலை பிறழச் செய்யும் அபின் தான்.

அவர்களுக்குத் தரப்படும் சலுகை என்பது சாராய வியாபாரி மல்லையாவுக்குத் தரப்படும் ஊக்கத் தொகைகளைப் போன்றது.

இந்துக்களை மதம் மாற்றுவதையே முழு நேரத்தொழிலாகக் கொண்டிருக்கும் அமைப்புகள் அவை. அப்படியான கிறிஸ்தவ இஸ்லாமிய மத நிறுவனங்களுக்குச் சலுகை என்பது திருடர்களுக்கு தங்கப் பதக்கங்கள் தருவதைப் போன்றது.

நாம் என்னதான் உண்மைகளைச் சொன்னாலும் ஜாதிக் கொடுமையினால்தான் மதம் மாறினார்கள் என்று புதிய ஏற்பாட்டு வசனங்களைத்தான் சொல்வார்கள்.

மனு ஸ்மிருதிதான் இந்த தேசத்தை ஆண்டது என்றே பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்…

அது மட்டுமே உலகில் பிறப்பின் அடிப்படையில் சமூகத்தைப் பிரித்தது என்றே வைத்துக்கொள்வோம்.

ஆனால், இன்றைக்கு நம் தேசம் அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் ஆளப்படுகிறது. அதை எழுதிய 80% பிராமண உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் தலைவராக பாபா சாஹேப் இருந்திருக்கிறார். அனைவரையும் சமமாக மதிக்கும் ஸ்மிருதி விதிமுறைகளைத்தான் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி வகுத்திருக்கிறார்கள்.

அதில் ஜாதிக்கொடுமைக்கு இடம் இல்லை.

திருமா போன்ற சர்ச் பெல் பாய்ஸ் இன்றும் சனாதன ஆட்சிதான் நடக்கிறது என்று சொல்வதன் முக்கிய காரணம் அப்போதுதான் மத மாற்ற வேலைகளைத் தொடர, தார்மிக நியாயம் கிடைக்கும். அரசியல் சாசனம் எழுதி அண்ணல் அம்பேத்கர் வாழ்க… சமத்துவம் மலரச் செய்த ஈ.வெ.ரா வாழ்க என்று முழங்கியபடியே சனாதன ஆட்சிதான் நடப்பதாகவும் புலம்புவது அதனால்தான்.

இப்போது சனாதன ஆட்சிதான் நடக்கிறதென்றால் அம்பேத்கரும் ஈ.வெ.ராவும்தான் சனாதனவாதிகள் (கடவுளே என்னைக் காப்பாற்று)

அம்பேத்கர், ஈ.வெ.ராவின் வழிகாட்டுதலின்படித்தான் ஆட்சி நடக்கிறதென்றால் சனாதன ஆட்சி இல்லை.

இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும்.

தேச அளவில் காங்கிரஸும் மாநில அளவில் திராவிட இயக்கமும் தான் இத்தனை காலம் ஆட்சிசெய்துள்ளன. அவர்கள் காலத்தில் நியமிக்கப்பட்ட அதிகார வர்க்கம்தான் இப்போதும் அதிகாரத்தில் இருக்கின்றன.

அப்படியென்றால் ஜாதிக் கொடுமையைக் காரணம் காட்டி இன்றும் ஏன் மத மாற்றம் நடக்கிறது?

சுமார், 100 ஆண்டுகாலம் செல்வாக்குடனும் 70 ஆண்டுகாலம் அரசியல் செல்வாக்குடனும் இருந்த பின்னரும் ஜாதிக் கொடுமையை நீக்க முடியவில்லையென்றால் காங்கிரஸும் திராவிட இயக்கமும் இத்தனை ஆண்டுகளில் என்னதான் செய்திருக்கிறார்கள்?

சுமார் ஐம்பது ஆண்டுகளாக இந்துக்களின் அரசியல் பேரியக்கமான பாஜக சமூக, பொருளாதார, அரசியல் செல்வக்குடன் முன்னிலைக்கு வந்துவிட்டிருக்கிறது.

அவர்களும் அரசியல் சாசனத்தின் படிதான் ஆட்சி செய்கிறார்கள். பகவத் கீதையைவிட அரசியல் சாசனமே உயர்ந்தது என்று சொல்லும் அளவுக்கு அதை மதிக்கிறார்கள்.

அப்படியென்றால் இன்னும் ஏன் மத மாற்றம் நடக்கிறது?

இதைவிட இவர்களிடம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி: இப்போதுதான் ஜாதிக் கொடுமைகளில்லையே. தாய் மதத்துக்குத் திரும்பி வாருங்கள் என்று ஏன் பேச ஆரம்பிக்கவில்லை?

பெரு வெள்ளக்காலத்தில் நிவாரண முகாம்களுக்குச் சென்று தங்கிக் கொள்ளலாம். மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்ததும் சொந்த வீடுகளுக்குத் திரும்பத்தானே வேண்டும் (புரிவதற்காகச் சொல்லப்படும் உவமை மட்டுமே).

அப்படி அவர்களைத் திரும்பச் செய்ய என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?

சிறுபான்மைகளுக்கு சலுகை என்பது பெரும்பான்மைகளை சிறுபான்மை பக்கம் நகரத்தானே வைக்கும்.

அப்படியே சிறுபான்மைச் சலுகை தரவேண்டுமென்றால் பெரும்பான்மையாக ஆகும் முயற்சிகளை நிறுத்தவேண்டும். சிறுபான்மைச் சலுகை வேண்டுமென்றால் மத மாற்றப் பணிகளை நிறுத்தவேண்டும். பாகிஸ்தானின் படையில் வேலை செய்வேன். இந்திய அரசு சம்பளம் தரவேண்டும் என்று சொல்வதைப் போன்ற அராஜகம் இது.

ஏழைகளுக்கு சலுகை என்பதற்காக ஒருவர் தன்னை ஏழை என்று சொல்லிக் கொள்வதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஜாதிச் சலுகை கிடைக்க பொய்யாக சான்றிதழில் இந்துவாகக் காட்டிக் கொள்ளும் க்ரிப்டோ நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன?

இன்றும் ஒருவர் மதம் மாறுகிறார் என்றால் ஜாதிக் கொடுமையினால்தான் மாறுகிறேன் என்று கலெக்டரிடம் அல்லது திமுக அறிவாலயத்தில் அல்லது கமலலயத்தில் சாட்சியம் கொடுக்கவேண்டும்.

சொல்ல விரும்புவது மிகவும் எளியது: மதம் சார்ந்து மக்கள் அனைவரையும் சமமாக நடத்தவேண்டும். மதம் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே மாதிரியாக நடத்தவேண்டும்.

பொது சிவில் சட்டமானது திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை, தத்தெடுத்தல் போன்ற தனிநபர்/குடும்ப விஷயங்களில் மட்டுமே சமத்துவத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறது.

உண்மையில் சமத்துவ மறுப்பு என்பது வேறு இடத்தில் வெகு வேகமாக வெகு வெளிப்படையாக நடந்து வருகிறது. சிறுபான்மை மத உரிமை என்ற பெயரில் அது சட்டபூர்வ அங்கீகாரத்துடன் மூர்க்கத்தனமாக நடந்துவருகிறது.

முதலில் தடுக்கப்படவேண்டியது அதுதான்.

முழு சமத்துவம் கொண்டுவரப்படவேண்டிய இடமும் அதுதான்.

வர்க்கம், ஜாதி, இடம், ஒரு எல்லை வரை பாலினம் இவற்றின் அடிப்படையில் மட்டுமே பாகுபடு அதுவும் நலத்திட்ட நோக்கில் பார்க்கப்படலாம்.

மதம் சார்ந்து சிறுபான்மைகளுக்குத் தரப்படும் சலுகைகள், நலத்திட்டங்கள், அதீத உரிமைகள் எல்லாம் உடனே தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

வல்லாதிக்க மதங்களுக்குத் தரப்படும் சலுகை என்பது சமத்துவ மறுப்பு; சமத்துவ மீறல்; சமத்துவ ஒழிப்பு.

உண்மையான சமத்துவத்தை மலரச் செய்யும் சட்டத்தையும் இயற்றுங்கள் ஏகாத்ம மானவவாதிகளே

பொது சிவில் சட்டம் என்பது அந்த திசையை நோக்கிய முதல் காலடியாக இருக்கட்டும். ஒன் ஸ்டெப் அட் அ டைம் என்பது சரிதான். ஆனால், அடுத்த காலடி உடனே எடுத்து வைக்கப்படவும் வேண்டும். இல்லையென்றால் நொண்டியடிப்பதுபோல் ஆகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version