― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாவிஜயதசமி விழாவில் அப்படி என்னதான் பேசினார் ஆர்எஸ்எஸ்., தலைவர்?

விஜயதசமி விழாவில் அப்படி என்னதான் பேசினார் ஆர்எஸ்எஸ்., தலைவர்?

- Advertisement -

நாகபுரி விஜயதசமி விழா

ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசாலக் (அகில பாரதத் தலைவர்) டாக்டர் மோகன் பாகவத் 2019 அக்டோபர் 8 அன்று நாகபுரி விஜயதசமி விழாவில் நிகழ்த்திய கருத்துரையின் முழு வடிவம்:

மதிப்பிற்குரிய விழாத் தலைவர் அவர்களே, இந்நிகழ்ச்சியைக் காண அழைப்பை ஏற்று வருகை புரிந்துள்ள சிறப்பு விருந்தினர்களே, வணக்கத்திற்குரிய துறவிப் பெருந்தகையோரே, விழாவின் ஏற்பாட்டுக் குழுவினரே, மதிப்பிற்குரிய சங்கசாலகர்களே, சங்க அதிகாரிகளே, தாய்மார்களே, சகோதரிகளே, பெரியோர்களே, இனிய ஸ்வயம்சேவக சகோதரர்களே!

கடந்த ஆண்டு ஸ்ரீ குருநானக்கின் 550 ஆம் ஆண்டு அவதார உற்சவமும் மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாள் விழாவுமாக சிறப்பாக அமைந்தது. அது தொடர்பான நிகழ்ச்சிகள் மேலும் சில காலத்திற்கு நடைபெறும். இதற்கிடையில் நவம்பர் 10 ந்தேதி தேதி அமரர் தத்தோபந்த் டெங்கடி அவர்களின் நூற்றாண்டு விழா துவங்கவிருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் நினைவுகள் பசுமையாக இருக்கிறது.

மே மாதம் லோக் சபா தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. இத்தேர்தல் முழு உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. பாரதம் போன்ற வேற்றுமைகள் நிறைந்த தேசத்தில் இத்தேர்தல் ஏற்பாடு எப்படி காலந் தவறாமல், திட்டமிட்டபடி நடைபெறுகிறது என அறிந்து கொள்வதே உலகை ஈர்த்த முதல் விஷயம்.

அது போன்றே 2014ல் நிகழ்ந்த மாற்றம் 2014 க்கு முந்தைய அரசாங்கத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் தோன்றிய எதிர்மறை அரசியல் அலையினால் நிகழ்ந்த மாற்றம், அதாவது வேறு திசையில் செல்ல மக்கள் தங்கள் மனதை தயாராக்கியிருந்தனர். 2019 தேர்தலில் உலகம் அது குறித்தும் கவனம் செலுத்தியது. பாரத மக்கள் தங்கள் கருத்தை உறுதியாக வெளிப்படுத்தினர்.

பாரதத்தில் ஜனநாயகம், அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்த புரியாத விஷயமல்ல. மக்கள் மனதில் நூற்றாண்டுகளாக பதிந்த மரபு அது. சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் கிடைத்த அனுபவம், படிப்பினை இவைகளால் ஜனநாயகத்தை சார்ந்தே இருப்போம், ஜனநாயகம் வெற்றிகரமாக விளங்கச் செய்வோம் என சமுதாயம் உறுதி பூண்டுவிட்டது என்பது அனைவரின் கவனத்துக்கும் வந்துள்ளது.

சமுதாயம் அரசின் கடந்தகால செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு புதிய அரசை அதிக எண்ணிக்கையுடன் மீண்டும் தேர்ந்தெடுத்துடன் வருங்காலத்திற்கான மிகப்பல எதிர்பார்ப்புகளை முன்வைத்துள்ளது. .

அந்த எதிர்ப்பார்புகளை நிறைவேற்றி, மக்கள் உணர்வுகளை மதித்து, தேசத்தின் நலனுக்கு ஏற்ப செயல்படும் துணிச்சல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆட்சிக்கு உள்ளது என்பது, அரசியல் சாஸனப் பிரிவு 370 நீக்கப்பட்டதன் மூலம் மீண்டும் தெளிவாகியது. இது ஆளுங் கட்சியின் சித்தாந்தத்தில் தொடக்க காலத்திலிருந்தே இடம் பெற்றதுதான்.

ஆனால் இம்முறை மற்ற கட்சியினர் ஆதரவை பெற்று இரு அவைகளின் ஒப்புதலுடன், வெகுஜன மக்களின் உணர்வுகளுக்கு வடிவம் தந்து வலிமையான வாதங்களுடன் இது செயல்படுத்தபட்டுள்ளது. அதற்காக நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆளும்கட்சி, இந்த மக்களுணர்வை நாடாளுமன்றத்தில் ஆதரித்தமற்ற பிற கட்சிகள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். 370வது பிரிவு காரணமாக நிகழ்ந்த அநீதி களையப்பட்டு, 370 இருந்தபோது நடைபெறமுடியாமலிருந்த நியாயமான காரியங்கள் நிறைவேறினால்தான் இந்த முன்னெடுப்பு முழுமை அடையும். அப்போதுதான் அங்கிருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்ட நம் காஷ்மீரி பண்டிட் சோதர்ர்கள் மீண்டும் குடியமர்ந்து, அச்சமின்றி, தேசபக்தர்களாக ஹிந்துவாக வாழ்கிற நிலை வரும்.

காஷ்மீர் மக்களில் பலருக்கு இதுவரை மறுக்கப்பட்ட ஏராளமான உரிமைகள் கிடைக்கும்; பள்ளத்தாக்கிலுள்ள மக்கள் மனதில் 370 வது பிரிவு நீக்கப்பட்டதால், தங்கள் நிலம் பறிபோகும்,வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது போன்ற ஒரு தவறான அச்சம் உள்ளது. அதை நீக்கினால்தான் பாரதத்தின் பிற பகுதி மக்களுடன் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த மனதுடன் நாட்டின் வளர்ச்சியில் அவர்கள் பொறுப்புடன் பங்கேற்க வழி பிறக்கும்..

செப்டம்பர் மாதத்தில் தன் செயல் திறனால் ஒட்டுமொத்த உலக விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்து அவர்கள் பாராட்டு, வாழ்த்து பெற்று நம் விஞ்ஞானிகள் சந்திரனில் இதுவரை யாரும் தொடாத தென் துருவத்தை சந்திரனின் விக்ரமை செலுத்தினர் அம் முயற்சி முழுவெற்றி இல்லையென்றாலும் முதல் முயற்சியிலேயே இந்த அளவு சாதனை உலகம் இதுவரை சாதிக்க முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது.

நமது தேசத்தின் அறிவாற்றல், அறிவியல் ஏற்றம், எடுத்த பணியில் முனைப்புடன் செயல்படும் ஈடுபாடு இவற்றால் விளைந்த இந்த சாதனை உலகம் முழுவதும் நம் விஞ்ஞானிகளுக்கு மிகுந்த மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் மனப்பான்மையில் முதிர்ச்சி, தேசத்தில் எழுச்சி பெற்றுள்ள சுயமரியாதை, ஆட்சியாளர்களின் மனோதிடம், நமது விஞ்ஞான வல்லமை இவற்றால் கடந்த ஆண்டு நினைவு பசுமையாகவே இருக்கும்.

இந்த சாதகமான சூழலில் சோம்பி இருப்பது கூடாது; நமது விழிப்புணர்வை கைவிட்டு, எல்லாவற்றையும் அரசிடம் விட்டுவிட்டு சுயநலத்துடன் முடங்கும் நேரமல்ல இது. ’உன்னதங்களின் சிகரத்தில் பாரதம்’ என்னும் லட்சியத்தை அடையும் திசையில் அடியெடுத்து வைத்தவர்கள் நாம்.

லட்சியம் தொலைவில் இருக்கிறது. லட்சியப்பாதையில் முட்டுக்கட்டைகள், நம்மை முடக்கிப்போட விரும்பும் சக்திகளின் சதிகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. நம் முன் சில நெருக்கடிகள்; அவற்றிலிருந்து நாம் விடுபட்டாக வேண்டும். சில கேள்விகள்; அவற்றுக்கு நாம் விடைகண்டாக வேண்டும். சில பிரச்சினைகள்; அவற்றை நாம் தீர்த்தாக வேண்டும்.

நமது பாதுகாப்பு ஏர்பாடு திடமாக உள்ளது. நமது ராணுவம் தயார் நிலையில் உள்ளது. தேசத்தின் பாதுகாப்புக் கொள்கை வலுவாக உள்ளது. சர்வதேச அரசியலில் நமது திறமை காரணமாக நாம் இந்த அம்சத்தில் விழிப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறோம்.

நில எல்லை, கடல் எல்லை இவற்றில் முன்னைவிட பாதுகாப்பு விழிப்புணர்வு மேம்பட்டிருக்கிறது. நில எல்லை நெடுக காவல் நிலைகளும், காவல் வீரர்களும் அதிகரிக்கப்பட வேண்டும். கடல் எல்லை நெடுக, குறிப்பாக தீவுகளை ஒட்டி, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். நாட்டிற்குள்ளும் தீவிரவாத செயல்கள் குறைந்திருக்கின்றன. பயங்கரவாதிகள் சரணடைவதும் அதிகரித்திருக்கிறது

தனிநபர் வாழ்விலும் சரி உலகளவிலும் சரி நெருக்கடி என்பது சதா இருந்துகொண்டே இருக்கிறது. சில நெருக்கடிகள் நம் கண்முன் தென்படுகின்றன. சில நெருக்கடிகள் சிறிது காலத்திற்குப் பின் தலை தூக்கும். நமது உடல் ஆரோக்கியமாகவும் நமது மனம் விழிப்புடனும் அறிவு கூர்மையாகவும் இருந்து தாக்குதலை எதிர்கொள்ளும் சக்தியுடன் நாம் இருந்தால் நெருக்கடிகளில் இருந்து விடுபடுவது சுலபமாகும்.

ஆனால் உள்ளுக்குள்ளேயே நெருக்கடி ஏற்படும் என்ற பயம் மனிதனுக்கு உண்டு. நெருக்கடி ஏற்படுத்தும் பல விஷயங்கள் உடலின் உள்ளேயே உள்ளன. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய் தலை தூக்குகிறது, மற்றபடி அது தொல்லை கொடுப்பது இல்லை.

கடந்த சில ஆண்டுகளில் பாரதம் சிந்தனை செய்யும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை விரும்பாத சக்திகள் உலகிலும் உள்ளன, நாட்டிற்கு உள்ளேயும் உள்ளன. சிலருக்கு பாரதம் வளர்வது பிடிக்காது, காரணம், அது அவர்களின் சுய நலத்தை பாதிக்கும். அப்படிப்பட்ட சக்திகள் பாரதம் திடமாக, சக்திசாலியாக உருவாவதை விரும்புவதில்லை. சமுதாயத்தில் ஒருமைப்பாடு, ஒற்றுமை உணர்வு, சமரசம் இவையெல்லாம் போதிய அளவு இல்லை என்பது துரதிருஷ்டவசமான நிலைமை.

இதைப் பயன்படுத்தி அந்த சக்திகள் தொழில் நடத்துவதை நாம் பார்க்கிறோம். ஜாதி, மொழி, மாநிலம் என்று வேறுபாடுகளை வைத்து அவர்களை பிரித்து வித்தியாசங்களைப் பெரிதுபடுத்திக் பரஸ்பர விரோதத்தை வளர்த்து ஏற்படுகிற பிரிவினைகளுக்கு இட்டுக்கட்டிய செயற்கையான அடையாளம் கொடுத்து சமுதாய நீரோட்டத்தில் பகைமையான போக்குகள் உருவாக்கி விட வேண்டும் என்பதற்கு முயற்சி நடக்கிறது. விழிப்புடன் இருந்து இந்த சதிகளை கண்டறிந்து அறிவு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம்.

ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்கள் நல்லெண்ணத்துடன் விவரிக்கும் கொள்கைகளையும் அளிக்கும் அறிக்கைகளையும் தீர்மானங்களையும் புரட்டிப் போட்டு திரித்து பரப்பி தங்கள் தீய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இந்த சக்திகள் முனைந்து வருகின்றன. எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். தேசத்தின் சட்டத்தையும் சிவில் ஒழுங்கையும் பற்றி வெறுப்பு ஏற்படுத்த மறைமுகமாகவும் பகிரங்கமாகவும் இந்த சக்திகள் முயன்றுவருகின்றன. எல்லா மட்டங்களிலும் இதற்கு பதிலடி கொடுப்பது அவசியம்.

இன்று ஒரு சமூகத்தினர் இன்னொரு சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தி கூட்டு வன்முறைக்கு இலக்காக்கும் சம்பவங்கள் பற்றி செய்திகள் வெளியாகி வருகின்றன . இந்த சம்பவங்கள் ஒரு சாரார் மட்டும் செய்த செயல்கள் அல்ல. இரு தரப்பில் இருந்தும் இது போல சம்பவங்கள் நடந்திருக்கின்றன; குற்றச்சாட்டுகளும் எதிர் குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டுள்ளன.

சில சம்பவங்கள் வேண்டும் என்றே நடத்தப்பட்டுள்ளன என்பதும் சில சம்பவங்கள் அரைகுறையாக செய்தி ஆக்கப்பட்டன என்பதும் நமது கவனத்திற்கு வந்துள்ளது. பலசமயம் இந்த சம்பவங்களில் சட்டம்-ஒழுங்கு எல்லையை மீறி சமுதாயத்தில் பரஸ்பர நல்லுறவை நாசம் செய்து வன்முறை தனது சூரத்தனம் குறித்து மார்தட்டுவதை பார்க்கிறோம். இந்த மனப்பான்மை நமது மரபில் கிடையாது, அரசியல் சாசனத்திலும் இதற்கு இடமில்லை.

எவ்வளவுதான் கருத்து வேற்றுமை இருந்தாலும் என்னதான் ஆத்திரமூட்டப் பட்டாலும் சட்டத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் மதிப்பளித்து விவகாரத்தை காவல் துறையின் பொறுப்பில் விட்டு நீதி நியாயத்தில் நம்பிக்கை வைத்து வாழ்வது அவசியம். தேசத்தின் பிரஜைகளுக்கு இதுதான் கடமை. இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டவர்களை சங்கம் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. இப்படிப்பட்ட ஒவ்வொரு சம்பவத்திற்கும் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வதில் ஸ்வயம் சேவகர்கள் முனைந்திருக்கிறார்கள். நமது பாரம்பரியமல்லாத இந்த சம்பவங்களுக்கு “லிஞ்சிங்க்” என பெயரிட்டு பரப்பி தேசத்திற்கும் ஹிந்து சமுதாயத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார்கள்; இதை வைத்து சிறுபான்மையினர் எனப்படுவோர் மனதில் பயம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இதையெல்லம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆத்திரமூட்டும் பேச்சு, தூண்டிவிடும் செயல் இவற்றை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

குறிப்பிட்ட சமூகத்திற்குப் பரிந்து பேசும் சாக்கில் பரச்பரம் மோதவிட்டு தங்கள் சுயலாபத்தை நிறைவேற்றிக் கொள்ளும் ’தலைவர்’களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. இத்தகைய சம்பவங்களை ஒடுக்க போதிய சட்டங்கள் உள்ளன. அவற்றை நேர்மையுடன், கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்.

கருத்து வேற்றுமை இருந்தாலும் என்னதான் ஆத்திரமூட்டப்பட்டாலும் சட்டத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் மதிப்பளித்து விவகாரத்தை காவல் துறையின் பொறுப்பில் விட்டு நீதி நியாயத்தில் நம்பிக்கை வைத்து வாழ்வது அவசியம். தேசத்தின் பிரஜைகளுக்கு இதுதான் கடமை.

இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டவர்களை சங்கம் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. இப்படிப்பட்ட ஒவ்வொரு சம்பவத்திற்கும் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வதில் ஸ்வயம் சேவகர்கள் முனைந்திருக்கிறார்கள்.

நமது பாரம்பரியமல்லாத இந்த சம்பவங்களுக்கு “லிஞ்சிங்க்” என பெயரிட்டு பரப்பி தேசத்திற்கும் ஹிந்து சமுதாயத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுத்து கிறார்கள்; இதை வைத்து சிறுபான்மையினர் எனப்படுவோர் மனதில் பயம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இதையெல்லம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆத்திரமூட்டும் பேச்சு, தூண்டிவிடும் செயல் இவற்றை அனைவரும் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட சமூகத்திற்குப் பரிந்து பேசும் சாக்கில் பரச்பரம் மோதவிட்டு தங்கள் சுயலாபத்தை நிறைவேற்றிக் கொள்ளும் ’தலைவர்’களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. இத்தகைய சம்பவங்களை ஒடுக்க போதிய சட்டங்கள் உள்ளன. அவற்றை நேர்மையுடன், கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்.

ஊரில் பல்வேறு பிரிவினர்கள் இடையே நல்லெண்ணம், தகவல் பரிமாற்றம், ஒத்துழைப்பு இவற்றை வளர்த்தெடுக்க முயற்சி நடைபெற்று வர வேண்டும். இன்று சட்டத்திற்கு உட்பட்டு கருத்து வெளியிடுவதும் நலனைப் பாதுகாத்துக் கொள்வதும் முற்றிலும் அவசியம். ஸ்வயம்சேவகர்கள் தொடக்கம் முதலே இப்படிப்பட்ட கருத்து பரிமாற்றத்தை நடத்தி வருகிறார்கள்.

இருந்தும் சில விஷயங்களில் நீதிமன்ற தீர்ப்புக்கு தீர்ப்பை நாட வேண்டியிருக்கும் எப்படிப்பட்ட தீர்ப்பு ஆனாலும் ஊருக்குள் நல்லுறவும் நல்லிணக்கமும் பாதிக்கப்படக்கூடாது அக்கறையுடன் பேசுவதும் நடந்து கொள்வதும் அவசியம். இது பிரஜைகள் அனைவருக்கும் பொருந்தும். ஏதோ ஒரு சமூகத்தாருக்கு மட்டுமானது அல்ல. ஒவ்வொருவரும் தன்னிலிருந்து இதைத் தொடங்க வேண்டும்.

உலகு தழுவிய பொருளாதார சுழல் காரணமாக ஏற்பட்ட மந்த நிலையால் எல்லா நாடுகளும் ஏதாவது ஒரு விதத்தில்பாதிக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெறுகிற பொருளாதார போட்டி காரணமாக எல்லா தேசங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு கடந்த சில மாதங்களில் இதிலிருந்து நிவாரணம் அளிக்கும் விதத்தில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது; இதன் மூலம் மக்கள் மீது அரசு கொண்டுள்ள அக்கறை புலப்பட்டது. மந்த நிலை எனப்படுகிற சூழலிலிருந்து நாம் விடுபடுவது நிச்சயம். பாரதத்தில் உள்ள பொருளாதார சமூகத்தாரிடம் இதற்கான சக்தி உண்டு.

நமது பொருளாதாரத்தை வெளிப்படுத்துவதற்கு நேரடி அன்னிய முதலீடு வர அரசு அனுமதிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளது.தொழில் களை அரசுடைமை ஆக்கும் தேவையும் ஏற்பட்டுள்ளது. அடிமட்ட நிலை வரை நலதிட்டங்கள் எட்டும் படி விழிப்புணர்வு தேவை; அத்துடன் தேவையற்ற கண்டிப்பு காரணமாக நேர்மையான தொழில்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பல்வேறு விஷயங்கள் சீரடையும்.

நிர்ப்பந்தங்களை எதிர்கொள்வதற்கான மும்முரத்தில் சுதேசியின் அருமையை மறந்து விடக்கூடாது. அன்றாட வாழ்வில் வெளிப்படும் தேசபக்தி தான் சுதேசி என்று அமரர் தத்தோ பந்த் டெங்கடி சொல்வார். சுதேசியை சுயசார்பு + அகிம்சை என்பார் வினோபாஜி. எந்த கணக்கீட்டின் படி பார்த்தாலும் சுயசார்பும் தேசத்தில் அனைவருக்கும்வேலைவாய்ப்பும் கிடைக்கும் விதத்தில் சர்வதேச பொருளாதார உறவை நம்மால் அமைத்துக்கொள்ள முடியும்.

நம்மையும் பாதுகாத்துக் கொண்டு உலகத்திற்கும் ஆரோக்கியமான எதிர்காலம் அமைய நம்மால் உதவ முடியும். சூழ்நிலை காரணமாக சுற்றி வளைத்துக் கொண்டு செல்லும் பாதையில் நாம் பயணிக்க வேண்டி வந்தாலும் சுயசார்பு ஏற்படுத்திக்கொண்டு நிர்பந்தங்களில் இருந்து நிரந்தரமாக விடுபடுவது தான் லட்சியமாக இருக்க வேண்டும்.

உலகு தழுவிய பொருளாதார மந்த நிலையால் நாம் குறைந்தபட்சமாக பாதிக்கப்படுவதற்கு என்ன செய்யலாம் எனும்போது அடிப்படை விஷயங்களை ஆராய வேண்டும். நமது பார்வையில் நமது தேவைகளை கருத்தில் கொண்டு மக்களின் சூழ்நிலையை அனுசரித்து நமது வள வாய்ப்புகளையும் மக்கள் கருத்தையும் உணர்ந்து நமது தேவைகளை நிறைவேற்ற கூடிய விதத்தில் நமது அணுகுமுறையை ஏற்படுத்திக்கொண்டு கொள்கை வகுக்க வேண்டும்.

பல கேள்விகளுக்கு இன்றைய உலக பொருளாதார சூழல் விடை கண்டறிய முடிவதில்லை. அதன் கணக்கீடுகள் பல அம்சங்களில் அரைகுறை என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. இந்த நிலையில் குறைந்த எரிசக்தி பயன்படுத்தி அதிக வேலைவாய்ப்பு தரக்கூடியதும் சுற்றுச்சூழலை பாதிக்காத,சுயசார்பு ஏற்படுத்தக்கூடிய வல்லமை நமக்கு தரக்கூடியதுமான பொருளாதார கொள்கையை செயல்படுத்த முயற்சி செய்தேயாக வேண்டும்.

சுய தன்மை குறித்து சிந்திப்பதில் சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் குறைபாடு உள்ளது என்றால், காரணம், அந்நிய ஆட்சியின் போது திணிக்கப்பட்ட கல்வி முறைதான். நம்மை நிரந்தர அடிமைகள் ஆக்கும் திட்டம் அது. சுதந்திர பாரதத்திலும் அந்த கல்விமுறை நீடிக்கிறது. அதுதான் காரணம். நாம் நமது கல்வி முறையை பாரதிய தத்துவத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும். இன்று கல்வியில் சிறந்து விளங்கும் தேசங்கள் குறித்து ஆய்வு செய்தோ மானால் அவற்றில் எல்லாம் அந்தந்த தேசத்தின் சுய தன்மையின் அடிப்படையில் கல்வி அமைந்திருப்பதை நாம் காணலாம்.

எப்படிப்பட்ட கல்வி முறை நமக்கு வேண்டும்? சொந்த மொழி, சொந்த நடையுடை, சொந்த பண்பாடு இவற்றை நன்கு அறிமுகம் செய்து அவற்றில் பெருமிதம் ஏற்படுத்தும் கல்வி; காலத்துக்கு ஏற்றதாகவும் தர்க்கத்துக்கு பொருத்தமானதாகவும் சத்திய நாட்டம் ஏற்படுத்தும் கல்வி; உலகத்தாருடன் இனிய உறவு ஜீவராசிகளிடம் பரிவு ஏற்படுத்தும் கல்வி. பாடத் திட்டம் தொடங்கி ஆசிரியர் பயிற்சி வரை எல்லாவற்றிலும் முழுமையான மாற்றம் தேவைப்படுகிறது. அமைப்புகளை மாற்றுவதால் மட்டும் காரியம் கைகூடாது.

கல்வியில் இவ்வளவு குறைபாடு இருப்பதால் குடும்பங்களில் பண்பு பதிவுகள் அளிக்கும் பழக்கம் இல்லாமை, ஊரில் பண்பாடு அற்ற நடத்தை இவை இரண்டும் பிரச்சினைகளாக தலைதூக்கியுள்ளன. எந்த தேசத்தில் மற்ற பெண்களை தாயாக கருதும் (மாத்ருவத் பர தாரேஷு) பண்பாடு நிலவியதோ, பெண்ணின் பெருமையை காப்பதற்காக ராமாயணம் மகாபாரதம்போன்ற காவியங்களின் கருப்பொருளாக கொடிய போர்கள் நடந்தனவோ, கற்பைக் காத்துக்கொள்ள மாதர்கள் தீக்குளித்த சம்பவங்கள் நடந்தனவோ அந்த தேசத்தில் வீதியிலும் சரி வீட்டிலும் சரி பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்று சுட்டிக்காட்டும் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் நமக்கு தலைக்குனிவை ஏற்படுத்துகின்றன.

பெண்களை நாம் சுயசார்பு கொண்டவர்களாக தற்காத்துக் கொள்ளும் திறன் கொண்டவர்களாக அறிவாற்றல் உள்ளவர்களாக ஆக்கியே தீரவேண்டும். பெண் பற்றிய ஆண்களின் கண்ணோட்டத்தில்பண்பாட்டுக்கே உரிய புனிதமும் ஒழுக்கமும் இருக்க வேண்டும்.

வீட்டின் சூழ்நிலையில் பிள்ளைப் பிராயத்திலேயே இந்த பண்புகள் எல்லாம் அமையத் தொடங்கிவிடும் என்று நமக்கெல்லாம் தெரியும். இன்றைய தனிக்குடித்தனங்களில் இது அடியோடு காணாமல் போய்விட்டது. இதன் பயங்கர விளைவாக இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் பரவி வருகிறது. கலாச்சார சிறப்பு மிகுந்திருந்த சீனா போன்ற தேசங்களில் கூட ஒரு காலத்தில் இளைஞர்களை கெட்ட பழக்கங்களுக்கு அடிமை ஆக்கி வைத்திருந்தன அந்நிய சக்திகள்.

கெட்ட பழக்கங்களில் சிக்காமல் இருக்கவேண்டும் என்ற மனோதிடம் வீட்டில் உருவாக்கப்படாமல் இருந்தால் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது கடினம். இந்த விஷயத்தில் சங்க ஸ்வயம[சேவகர்கள் உள்பட எல்லா பெற்றோர்களும் விழிப்புடன் செயல் துடிப்புடன் இருப்பது அவசியம்.

பண்பு ஊட்டப் படாத காரணத்தால் தான் சமுதாயத்தில் நாலாபுறமும் பொருளாதார மோசடிகளும் ஒழுக்ககேடுகளும் தென்படுகின்றன. அவ்வப்போது சட்டமும் இதை கட்டுப்படுத்த களத்தில் இறங்குகிறது. கடும் தண்டனை கிடைக்கிறது. மேல் மட்டத்தில் இந்த நடவடிக்கைகள் எல்லாம் இருந்தாலும் கீழ்மட்டத்தில் ஊழல் தொடரவே செய்கிறது. நேர்மையாக நடப்பவர்கள் சட்டத்தின் கெடுபிடியால் அல்லல்பட நேர்கிறது.

சட்டமோ ஒழுக்கமோ எவருக்கு ஒரு பொருட்டில்லையோ, அவர்கள் சட்ட திட்டங்களை பற்றி கவலைப்படாமல் ஆணவத்துடன் நடமாடுகிறார்கள். இது அரசின் பொறுப்பு மட்டும் அல்ல. பாடுபடாமல் அல்லது குறைவாக உழைத்து உரிமை இல்லாதவற்றை அதிகமாக அடைந்துவிட வேண்டும் என்ற பேராசை தான் இந்த முறைகேடுகளுக்கெல்லாம் மூலகாரணம்.

ஊர் இப்படி இருப்பதால் வீட்டு அளவில் விஷயங்களை எடுத்துச் சொல்லி புரிய வைத்து நாமே முன்னுதாரணமாக நடந்து சூழ்நிலையை மாற்ற வேண்டியது நமது இன்றியமையாத கடமை. தேசம் ஆரோக்கியமாவும் சீரும் சிறப்பாகவும் விளங்க இது அவசியம்.

சமுதாயத்திற்கு விஷயத்தை எடுத்துச் சொல்வதற்கும் சமுதாயத்தில் சூழ்நிலை உருவாக்குவதற்கும் ஊடகங்கள் பெரும் பங்காற்ற முடியும். வணிக நோக்குடன் மசாலா விஷயங்களையும் பரபரப்பு செய்திகளையும் வெளியிடுவதை தவிர்த்து நல்ல சூழ்நிலையை உருவாக்குவதில் ஊடகங்கள் உறுதுணை புரியுமானால் பணி மேலும் வேகம் எடுக்கும்.

சமுதாயத்திற்கு உள்ளே நிலவும் சூழ்நிலை குறித்து நாம் அனைவரும் விழிப்படைந்து அந்த சூழ்நிலையை ஆரோக்கியமானதாக ஆக்குவது குறித்து வலியுறுத்துவது போல உலகின் வெளி சூழல் பிரச்சினை மனிதசமுதாயமே விரிவான வகையில் முன்னெடுப்பு செய்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. சுற்றுச்சூழலை தூய்மையாக வைப்பதற்கு கொள்கை ரீதியான உத்திகள் எல்லா தேசங்களின் சுற்றுச்சூழல் கொள்கையின் அம்சமாக விளங்குகின்றன. அது அரசு சார்ந்த பணி.

ஆனால் சாமானிய மக்களின் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கப்படும் சிறு சிறு விஷயங்கள் பெரிய மாற்றத்தை கொண்டு வரமுடியும். சங்க ஸ்வயம்சேவகர்கள் இந்தத் துறையில் பல்வேறு பணிகளை ஏற்று எடுத்து செய்து வருகிறார்கள். அவர்களின் இந்த எல்லா முயற்சிகளையும் ஒருங்கிணைத்து சமுதாயத்தின் சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிக்கே “சுற்றுச்சூழல் பணி” என்று பெயர் இடப்பட்டுள்ளது.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாயத்தில் ஒருமைப்பாடு நல்லிணக்கம் நன்னடத்தை இவற்றை வளர்த்தெடுத்து தேசம் குறித்து தெளிவான பார்வை அளித்து தேசபக்தி வளர்த்துவருகிறது. ஸ்வயம்சேவகர்களின் தொண்டு உணர்வு, சமர்ப்பணம் குறித்து தேசத்தில் நல்லெண்ணம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை சங்கத்திற்கு அறிமுகமாகாதவர்கள் மத்தியில் சங்கத்தின் மீது சந்தேகம், பயம் இவற்றை ஏற்படுத்த முயற்சி நடந்து வருகிறது. சங்கம் ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் பணி செய்வதால் தங்களை ஹிந்துக்கள் என்று அழைத்துக் கொள்ளாத, குறிப்பாக முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் மீது சங்கம் பகைமை கொண்டு உள்ளது என்று அப்பட்டமான பொய்யும் புரட்டும் பரப்பப்படுகிறது.

ஹிந்து சமுதாயம், ஹிந்துத்துவம் இவை பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவற்றுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த எல்லா தகிடுதத்தங்களின் பின்னே சமுதாயத்தில் எப்போதும் பிளவு ஏற்பட வேண்டும், அதன் மூலம் சுய லாபம் அடையவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. வேண்டுமென்றே கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பவர்கள் அல்லாமல் மற்ற அனைவருக்கும் இந்த விவரங்கள் தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது.

’பாரதம் ஹிந்துஸ்தானம்; இது ஹிந்து ராஷ்ட்ரம்’ என்பதை சங்கம் தனது மாறாத கொள்கையாகக் கொண்டு அதை பிரகடனம் செய்துள்ளது. தேசம் குறித்த சங்கத்தின் இந்தப் பார்வை தெளிவானது; அதுபோல நம் அனைவரது பொதுவான அடையாளம் குறித்தும் தேசத்தின் தன்மை குறித்தும் தெளிவான பார்வை கொண்டது சங்கம்.

சங்கத்தை பொறுத்தவரை ஹிந்து என்ற சொல் தங்களை ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்வோரை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. பாரதத்தை சேர்ந்தவர்கள், பாரத மூதாதையர் வழித் தோன்றல்கள், விதவிதமான வேற்றுமைகளை ஏற்றுக் கொள்பவர்கள், அவற்றை மதிப்போர், பரஸ்பரம் இசைந்து வாழ்வோர், தேசத்தை மகிமைப் படுத்துவோர், மனித குலத்தின் சமாதானத்திற்காக முனைவோர் — இந்த இந்தியர்கள் அனைவரும் ஹிந்துக்களே. இவர்களின் வழிபாடு, மொழி,உணவுமுறை, நடையுடை, வசிப்பிடம், இவை எப்படிப்பட்டவை ஆனாலும் வித்தியாசமில்லை.

ஆற்றல் மிக்க நபரும் சமுதாயமும் அச்சம் இல்லாமல் இருப்பார்கள். ஆற்றல் மிக்கவர்கள் பண்பட்டவர்களாக இருந்தால் மற்ற எவரையும் அச்சுறுத்தவும் மாட்டார்கள். பலவீனமானவர்கள் தான் தங்கள் பாதுகாப்பற்ற உணர்வால் மற்றவர்களை மிரட்டப் பார்ப்பார்கள்.

சங்கம் சமுதாயம் முழுவதையும் நல்லிணக்கம், நல்லொழுக்கம் கொண்டதாக்கி பலசாலி ஆக்கும். அத்தகைய சமுதாயம் யாருக்கும் அஞ்சாது, யாரையும் அச்சுறுத்தாது. ஆனால் பலவீனமானவர்களுக்கும் அச்சத்தின் பிடியில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும்.

’ஹிந்து’ என்ற சொல் பற்றி பலருக்கு குழப்பம். ஹிந்து என்பது ஒரு சமூகத்தார் என கட்டம் கட்டப் பார்க்கிறார்கள். இதெல்லாம் ஆங்கிலேயர் காலத்திலிருந்து அறிவை குழப்பி வருகிறது. ஹிந்து என்ற சொல்லை ஏற்றுக் கொள்ளாதவர்களும் சமுதாயத்தில் உண்டு. இந்திய அல்லது பாரதிய என்றால் அவர்களுக்கு பிடிக்கிறது. பாரதிய தன்மையுடன் கூடிய கலாச்சாரத்தின் அடிப்படையில் இயங்கும் நாகரீகங்களை ’இண்டிக்’ என்ற ஆங்கிலச் சொல்லால் சிலர் குறிப்பிடுகிறார்கள்.

ஹிந்து என்ற சொல்லை பயத்தாலும் குழப்பத்தாலும் ஏற்காமல் வேறு வேறு சொற்கள் கொண்டு குறித்தாலும் அது சங்கத்திற்கு ஏற்புடையதுதான். மொழி, மாநிலம், வழிபாடு, வசிப்பிடம் என்று எந்த வகையில் வேறுபட்டிருந்தாலும், எந்த,ஒரு சொல்லால் ஹிந்துவை குறிப்பிட்டாலும், சமுதாயத்தில்,அனைவரையும் ஒன்றாகவே கருதுகிறோம். இவர்கள் அனைவரையும் நம்மவர்கள் என்று கொண்டுதான் சங்கப்பணி நடைபெறுகிறது.

நம்மவர் என்ற நமது இந்த பழக்கம், இணைத்துப் பார்க்கும் மரபு தான் நமது தேசியத் தன்மை, அது தான் ஹிந்துத்துவம். தொன்மையான நமது தேசத்தை காலத்திற்கு இசைவான விதத்தில் உன்னதங்களை அடையச் செய்யும் புனித லட்சியம், தர்மத்தை உயிராகக் கொண்டது. சுய தன்மையையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து வளர்ப்பது தான் நம்மவர் என்ற இந்த உணர்வின் மையம்.

பாரதம் உலகிற்கு என்றென்றும் தேவைப்படுகிறது. பாரதம் தனது இயல்பையும் பண்பாட்டையும் வலுவான அடித்தளத்தின் மேல் கட்டமைத்தாக வேண்டும். எனவே தேசம் குறித்த இந்த தெளிவான பார்வையுடன் சமுதாயம் முழுவதிலும் நல்லிணக்கம், நன்னடத்தை, நல்லுறவு இவற்றை வலுப்படுத்துவது மிகவும் அவசியம்.

இந்த அரும்பணியில் சங்க ஸ்வயம்சேவகர்களின் மிக முக்கிய பங்களிப்பு என்றும் உண்டு. அது நீடிக்கும். இதில் துணைபுரியும் பல்வேறு திட்டங்களை வெற்றி பெறச் செய்வதில் ஸ்வயம்சேவகர்கள் முனைந்திருக்கிறார்கள். இந்த காலகட்டத்தின் சவால்களை ஏற்று ஒவ்வொருவரும் களப்பணி புரிய வேண்டும்.

காலத்தின் சவாலான இந்தப் பணி உரிய நேரத்தில் நிறைவேற வேண்டுமானால் பணியை ஒரு நபரிடமோ அமைப்பிடமோ விட்டுவிட்டு தொலைவாக நின்று வேடிக்கை பார்க்கும் மனப்பான்மையை நாம் கைவிட வேண்டும். தேசத்தை எழுச்சி பெறச் செய்தல், சமுதாய பிரச்சினைகளை தீர்த்தல், நெருக்கடிகளை விலக்குதல் இவையெல்லாம் குத்தகைக்கு விட்டு முடிக்கிற பணிகள் அல்ல.

தலைமை தாங்க அவ்வப்போது யாராவது வந்து பொறுப்பு ஏற்பார்கள். ஆனால் மக்கள் விழிப்படைந்து பார்வைத் தெளிவுடன் சுயநலமில்லாமல் நேர்மையாக கடும் உழைப்பு நல்கி நாட்டை பிளக்கப்பட முடியாத வஜ்ராயுத சக்தியாக உருவாக்கிட தங்களை தாங்களே பணியில் ஈடுபடுத்திக் கொள்ளாத வரை நிரந்தரமான, முழுமையான வெற்றி கிடைப்பது சாத்தியமில்லை.

இந்தப் பணி குறித்து சமுதாயத்தில் உரிய சூழ்நிலை உருவாக்க காரிய கர்த்தர்களை சங்கம் உருவாக்கி வருகிறது. அந்த ஊழியர்களின் மூலம் சமுதாயத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளில் இருந்து நமக்கு தெரிய வருவது இதுதான்: நாமும் நமது குடும்ப அமைப்பும் தான் இந்த தேசத்திற்கும் உலகத்திற்கும் நலம் தரும் ஒரே நல்வழி.

இன்றைய காலகட்டத்தின் தேவையை உணர்ந்து நாம் அனைவரும் இந்த புனிதப் பணியில் தோள் கொடுப்போம்.

புது யுகத்தை நிறுவ எங்கும் புத்துணர்வெழுப்புவோம்
கண் துஞ்சாக் காவலராய்க் காத்திடுவோம் நாட்டினை
பிளவு நஞ்சு பரவும் நாட்டில் ஒருமை அமுதம் பாய்ச்சுவோம்
நாட்டுக்காக வாழ வீழ தியாக உணர்வூட்டுவோம்!

பாரத் மாதாகீ ஜெய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version