- முனைவர் கு.வை.பாலசுப்பிரமணிமன்
51ம் நாள்: ஐபிஎல் 2024 – 10.05.2024
குஜராத் டைடன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
இன்று அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது.
குஜராத் அணி (231/3 ஷுப்மன் கில் 104, சாய் சுதர்ஷன் 103, துஷார் தேஷ்பாண்டே 2/33) சென்னை அணியை (196/8, டேரில் மிட்சல் 61, மொயீன் அலி 48, தோனி 26*, ஷிவம் துபே 21, ரவீந்தர ஜதேஜா 18, மோஹித் ஷர்மா 3/31, ரஷீத் கான் 2/38) 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் குஜராத் அணி முதலில் மட்டையாட வந்தது. இந்த அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (51 பந்துகளீல் 103 ரன், 5 ஃபோர் 7 சிக்சர்) மற்றிம் ஷுப்மன் கில் (55 பந்துகளில் 104 ரன், 9 ஃபோர், 6 சிக்சர்) இந்த ஜோடி முதல் விக்கட்டுக்கு 210 ரன் சேர்த்தது. இன்று பல சாதனைகளைப் படைத்தனர் அல்லது உடைத்தனர்.
ஐ.பி.எல்-இன் 100ஆவது சதம் இன்று கில் மூலம் அடிக்கப்பட்டது. கில் இன்று ஐ.பி.எல்-இல் தனது 1000ஆவது ரன்னை அடித்தார். அதனை 25 இன்னிங்க்ஸில் அவர் அடித்துள்ளார். இது ஒரு சாதனையாகும்.
எந்த ஒரு விக்கட்டிற்கும் ஒரு ஜோடி அடித்த அதிக பட்ச ரன் 229 ஆகும். இது ஏ.பி. டி வில்லியர்சும் கோலியும் 2016இல் இரண்டாவது விக்கட்டிற்காக அடித்தனர். அடுத்த அதிக பட்ச ரன் 215 ஆகும். இது ஏ.பி. டி வில்லியர்சும் கோலியும் 2015இல் இரண்டாவது விக்கட்டிற்காக ஆட்டமிழக்காமல் அடித்தனர்.
மூன்றாவது அதிக பட்ச ரன் 210 ஆகும். இது க்விண்டன் டி காக்கும் கே.எல். ராகுலும் 2022இல் முதல் விக்கட்டிற்காக அடித்தனர். இன்று இதனை கில்லும் சாய்சுதர்ஷனும் சமன் செய்தனர். சாய் சுதர்ஷன் 17.2ஆவது ஓவரிலும் கில் அதே ஓவரின் கடைசிப் பந்திலும் ஆட்டமிழந்தனர்.
19ஆவது மற்றும் 20ஆவது ஓவரில் ஷர்துல் தாகூர், சிம்ரஜீத் சிங் இருவரும் சிறப்பாக பந்துவீசி தலா 6 மற்றும் 12 ரன்னும் கொடுத்தனர். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 231 ரன் எடுத்தது.
232 ரன் என்ற கடின இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அஜிங்க்யா ரஹானே (5 பந்துகளில் 1 ரன்) மற்றும் ரச்சின் ரவீந்த்ரா (2 பந்துகளில் 1 ரன்) இருவரும் மோசமான தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் (பூஜ்யம் ரன்) மேலும் ஒரு அதிர்ச்சியைத் தந்தார்.
இதனால் சென்னை அணி மூன்று ஓவர் முடிவதற்குள் 10 ரன்னுக்கு மூன்று விக்கட்டுகள் இழந்து ஒரு மோசமான நிலையை அடைந்தது. அதன் பின்னர் டேரியல் மிட்சல் (34 பந்துகளில் 63 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்), மற்றும் மொயீன் அலி (36 பந்துகளில் 56 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) நன்றாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதன் பின்னர் ஷிவம் துபே (13 பந்துகளில் 21 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), ரவீந்தர ஜதேஜா (10 பந்துகளில் 18 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), எம்.எஸ். தோனி (ஆட்டமிழக்காமல் 26* ரன்) மற்றும் சாண்ட்னர் (பூஜ்யம் ரன்), ஷர்துல் தாகூர் (ஆட்டமிழக்காமல் 3 ரன்)
இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டு இழப்பிற்கு 196 ரன்எடுத்து 35 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
குஜராத் அணியின் அணித்தலைவர் ஷுப்மன் கில் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருதுபெற்றார்.
நாளை கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
10.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
கொல்கொத்தா | 11 | 8 | 3 | 16 | 1.453 |
ராஜஸ்தான் | 11 | 8 | 3 | 16 | 0.476 |
ஹைதராபாத் | 12 | 7 | 5 | 14 | 0.406 |
சென்னை | 12 | 6 | 6 | 12 | 0.491 |
டெல்லி | 12 | 6 | 6 | 12 | -0.316 |
லக்னோ | 12 | 6 | 6 | 12 | -0.769 |
பெங்களூரு | 12 | 5 | 7 | 10 | 0.217 |
குஜராத் | 12 | 5 | 7 | 10 | -1.063 |
மும்பை | 12 | 4 | 8 | 8 | -0.212 |
பஞ்சாப் | 12 | 4 | 8 | 8 | -0.423 |