― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomePandemic in பரமபதம் ( Paramapadam) | Sri #APNSwami #Writes #Trending

Pandemic in பரமபதம் ( Paramapadam) | Sri #APNSwami #Writes #Trending

- Advertisement -

Pandemic in பரமபதம் 

Picture by Sri Keshav

              பரமபதம் அல்லோகல்லோகபட்டுக் கொண்டிருந்தது. நித்யர்கள், முக்தர்கள் என அனைவரும் கூடிக்கூடி பேசிக்கொண்டிருந்தனர். எல்லோரும் முகபாவனையும் மிகவும் சீரியஸாக இருந்தது. அத்திரளின் நடுவில் நடுநாயகமாக கஜாநநன் என்பவர் தென்பட்டார். அவர்தான் ஏதோ செய்தியினைச் சொல்லியுள்ளார் போலும். அதனால் அனைவரும் அவரைச்சுத்தியே இருந்தனர்.

மெதுவாக விஷயம் புரியவாரம்பித்தது. விஷ்வக்ஸேநர் பரமபதத்திற்கு ஒரு சுற்றரிக்கை அனுப்பியுள்ளார். கஜாநநர் அதுகுறித்து விளக்குவதற்காகத்தான் இங்கு அனைவரும் கூடியுள்ளனர். அதாவது பூலோகத்தில் ஒரு கொடிய வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.  அது விரைவாக பரவுகிறது. Pandemic – அதிவிரைவாக தொற்றிக்கொள்ளும் தீவிரத்தன்மையுள்ளது. அதனால் வைகுண்டத்திற்கு அதிவிரைவில் அது பரவலாம் என்பதால் நித்தியர்கள் பூலோகத்தில் அவதரிக்க பதினைந்து நாட்கள் தடையுத்தரவு. அதைத்தவிர “அர்சிராதி மார்கம் அனைத்தும் பதினைந்து நாட்கள் மூடப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் “நித்யர்கள், முக்தர்கள் கைங்கரியத்திற்காக புதிய தேகங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது”. தற்போது அர்சிராதி மார்கத்தின் வழியாக வந்தவர்களை விரஜைநதி கரையிலேயே தங்கவைத்து,  தனிமைப்படுத்தி, பதினைந்து நாட்கள் தீவிர கண்காணிப்பின் பின்னரே பரமபதத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

மேலும் அர்ச்சிராதி மார்க்கத்தில் இருந்த ஆதிவாஹிக கணங்கள் இவர்களை கைபிடித்தும், சந்தன மாலைகள் பூசியும், சாற்றியும் அழைத்து வந்ததால் ஆதிவாஹிகர்களும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். மருத்துவக்குழு டீம் தந்வந்த்ரி தலைமையில் விரைவான நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அர்சிராதி மார்க்கத்தை மூடுவதா? இது ஸாத்யமா? இதென்ன விசித்ரமான சுற்றரிக்கை” என்று தான் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர்.

அதே சமயம் ஆதிசேஷனும், வைநதேயனும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் அங்குவந்தனர். ஒரு நித்யசூரி அவர்களை அணுகி,  “அரவரசனும், பறவையரசனும் ஏனிப்படி வருத்தத்துடன் உள்ளீர்கள்? என்றார்.

ஆதிசேஷன் –  “ஐயா! பாம்புகளால் தான் இந்நோய் பரவியதாம்.  அதனால் உடனடியாக வைகுண்டத்தை விட்டு நான் வெளியேற வேண்டுமாம். இல்லையெனில் முகக்கவசம் அணிய வேண்டுமாம் ஆயிரம் முகக்கவசம் எப்படி அணிவது? ஒன்றும் புரியவில்லை.

வைநதேயன்– பறவை காய்ச்சல் பீதியும் அதிகமாகிக் கொண்டிருக்கிறதாம். அதனால் நானும் வெளியேற வேண்டுமென விஷ்வக்ஸேநர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ன செய்வது?

[ஒரு கனத்த மௌனம் நிலவியது. சேனைத்தலைவரான விஷ்வக்ஸேநரிடம்  எடுத்துச் சொல்ல எவருக்கும் துணிவில்லை என்ன செய்வது என யோசித்தவர்கள் எம்பெருமானையே சரணடைவது என தீர்மானித்தனர்.]

[அனைவரும் வந்த காரணத்தை அறிந்த பெருமாள் விஷ்வக்ஸேநரை அழைத்தார் ]

பெருமாள்–  சேனை முதலியாரரே! எதற்கிந்த அவசரச்சட்டம்?

விஷ்வக்ஸேநர் – அடியேன்! பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொண்டு இவ்வறிவிப்பை வெளியிட்டேன்.

பெருமாள் –  வைகுண்டத்திற்கு எந்த ஆபத்தும் வராது ஓய்! சரி, சரி நாங்கள் சொன்னால் நீர் ஏற்கமாட்டீர்! ஓய் வேங்கடநாதா! [என தேசிகனை அழைத்து கண்ணாலேயே விஷ்வக்ஸேநருக்கு  விளக்கும்படி சொல்கிறார்.]

தேசிகன் – ஸ்வாமி, தங்களுக்கு எம்பெருமான்பால் உள்ள பரிவு புலனாகிறது. நித்ய, முக்தர்களிடம் தங்களுக்குள்ள கௌரவமும் தெரியும் இரு..ந்…..தாலும் [என இழுக்கிறார்]

விஷ்வக்ஸேநர் – தேசிகரே! தங்களின் கருத்து என்ன? தயங்காமல் கூறும்.

தேசிகன் – எதனால் இந்த தடை?

விஷ்வக்ஸேநர் – அனைத்துலகங்களும் அபாயமான வைரஸால் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் தான்.

தேசிகன் – ஸ்வாமி பாரதத்திலிருந்து அமெரிக்கா! இத்தாலி சென்று வருவது போன்று பத்த ஜீவர்கள் சுவர்கம், நரகம், ப்ரம்மலோகம் போய்வருகின்றனர். உண்மைதானே!

விஷ்வக்ஸேநர்  : ஆம்

தேசிகன் :  அதே போன்று இங்கு அர்சிராதி மார்க்கத்தால்  வைகுந்தம்  வருபவர்க்கு புநராவத்தி ( அதாவது மீண்டும் பிறப்பிற்கு திரும்புதல் ) உண்டா!

விஷ்வக்ஸேநர்  : அதில்லை. ஆனால் தேகத்தின் வழியாகத்தானே கொரோனோ பரவுகிறது.  ப்ரபன்னன் அர்சிராதி மார்கத்தில் பயணிப்பது சூட்சம  தேகத்துடன் தானே! அப்படியாகில் அதற்கு நோய் தொற்று உண்டல்லவா! (இங்குள்ள சாஸ்த்ரார்த்தத்தை பெரியோர்களிடம் கேட்டுத் தெளிக.)

தேசிகன் :  (சிரித்து) அடியேன் கர்மாவினால் உண்டான தேகம் வேறு. அர்சிராதி  வழியில் உபசாரங்களைப் பெறுகைக்கு ப்ரபத்தி மகிமையால் பெறும் சூட்சம தேகம் வேறு. அது அர்சிராதி  அனுபவத்திற்காக மட்டுமே. வேறு ப்ராரப்தம் (பலனளிக்கும் கர்மா ) ஏதுமில்லை.

விஷ்வக்ஸேநர்  : அது வ…ந்…து …

தேசிகன் :  அடியேன் சுவாமி. மற்றோன்றும் கூறுகிறேன். ஸகல கர்ம ( கிருமி) நாசினியான விரஜையில் ஸ்நாநம் செய்து ஜீவன் பரமபதம் வருகிறான் அன்றோ!  இங்கு அவனின் தர்மபூதஜ்ஞானம்  Pandemic (எங்கும் பரவுகிறது). ஆனால் சுத்த ஸத்வமான (ரஜஸ், தமஸ் இல்லாததான) பரமபதத்தில் கர்மாவே இல்லாத போது கொரோனா எப்படி வரும்? ( நித்ய, முக்தர்கள் தேசிகனின் வாதம் கேட்டு கை தட்டி மகிழ்கின்றனர்)

(விஷ்வக்ஸேநர்  தேசிகனை கட்டித் தழுவி)

வேங்கடநாதனே அழகிய உமது வாதத்திறமைகளையும், ஸித்தாந்த தெளிவுகளையும் உலகறியச் செய்ய பெருமாளின் ஸங்கல்பமிது. அனந்தனும், கருடனும் உற்சாகமாகப் பங்கு கொண்டனர். கர்மபூமியான பாரதத்தில், கர்மாக்கள் அழிந்திட ஆசார்ய சம்பந்தம் எனும் கவசம் பூண்டவனுக்கு கர்மாவினாலும் பயமில்லை, க்ருமிகளாலும் பயமில்லை. ஆனால் ஸ்வர்க நரகம் செல்பவனுக்கு கர்ம வினைபயமுண்டு.

(எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம்)

– ஸ்ரீஏபிஎன் சுவாமி

17/03/2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version