Home அடடே... அப்படியா? திராவிட வரலாற்றுப் புரட்டர்களால் மறக்கடிக்கப்பட்ட ‘நீலகண்ட பிரமசாரி’ பிறந்த தினம் இன்று..!

திராவிட வரலாற்றுப் புரட்டர்களால் மறக்கடிக்கப்பட்ட ‘நீலகண்ட பிரமசாரி’ பிறந்த தினம் இன்று..!

neelakandabrahmachary
neelakandabrahmachary

நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த தினம் இன்று.. நீலகண்ட பிரம்மச்சாரி – பிராமணர் என்ற ஒற்றை காரணத்திறக்காக மறக்கடிக்கப்பட்ட தமிழகத்தின் தவபுதல்வன்.

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ‘புரட்சி இயக்க’ நாயகனாகத் திகழ்ந்த ஒரு தியாக புருஷன்.

தனது இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக புரட்சி இயக்கத்தைத் தோற்றுவித்து அதில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை ஒருங்கிணைத்துப் போராடத் தயாரானவர் நீலகண்டன்.

இவரது வாழ்க்கையின் பெரும்பகுதி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த சிறைகளில் கழித்தவர்.

இவர் ஒருவருக்காக இருபதுக்கும் மேற்பட்ட சிறை அறைகள் கொண்ட பகுதியில் நடுவில் ஒரு அறையத் தேர்ந்தெடுத்து அதில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டவர்.

இப்போதைய பாகிஸ்தானிலுள்ள முல்டான் சிறையிலும், பர்மாவில் ரங்கூன் சிறையிலும் அடைபட்டுக் கிடந்தவர்.

1889ம் வருஷம் டிசம்பர் மாதம் 4ம் தேதி சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் சுப்புத்தாயி தம்பதியினரின் மூத்த மகவாகப் பிறந்தார். இவருக்கு 2 தம்பிகள் 5 தங்கைகள். இப்படிப்பட்ட பெரிய குடும்பத்தில் பிறந்த இவருக்குக் கிடைத்த செல்வம் வறுமைதான்.

1905ல் லார்டு கர்சான் வங்காளத்தை மதரீதியாக இரண்டாகப் பிரித்தார். நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. விபின் சந்திர பால் எனும் புரட்சிகர தேசபக்தர் சென்னை கடற்கரையில் பல கூட்டங்களில் பேசினார். அவற்றைக் கேட்ட பல இளைஞர்கள் புரட்சி வீரர்களாக மாறினர். அவர்களில் நமது நீலகண்டனும் ஒருவர்.

1907ல் இவருக்கு மகாகவி பாரதியாரின் தொடர்பு ஏற்பட்டது. அப்போது சென்னை வந்திருந்த தூத்துக்குடி தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளையை நீலகண்டனுக்கு பாரதியார் அறிமுகம் செய்து வைத்தார்.

தஞ்சை மாவட்ட ஒரு ஆசாரமான பிராமண குடும்பத்துச் சின்னங்களோடு விளங்கிய நீலகண்டன், தனது புரட்சி எண்ணங்களுக்கேற்ப தனது குடுமியை எடுத்து கிராப்பு வைத்துக் கொண்டார். தமிழகத்தின் முதன்முதல் குடுமியை எடுத்த இந்து இவராகத்தான் இருப்பார்.

1908ல் இவர் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்குச் சென்று சந்திரகாந்த் சக்கரபர்த்தியின் தொடர்பால் இங்கும் தொடங்கப்பட்ட இரகசிய இயக்கமான ‘அபினவ பாரத இயக்கத்தைத்’ தொடங்கி வைத்தார். அதற்காக இவர் திருநெல்வேலியைச் சுற்றி பல ஊர்களுக்கும் சென்று ரகசியக் கூட்டங்களை நடத்தினார். இதில் பல இளைஞர்கள் சேர்ந்தனர்.

போலீசாரின் கண்களில் படாமல் தங்களது புரட்சி இயக்க வேலைகளில் ஈடுபட இந்த “அபினவ பாரதம்” எனும் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பல துன்பங்களை ஏற்க வேண்டியிருந்தது. சில நாட்கள் உண்ண உணவின்றி, இரவில் ராப்பிச்சைக்காரர்கள் போல பிச்சை எடுத்து சாப்பிட்ட அனுபவமும் இவர்களுக்கு உண்டு.

இச்சங்கத்தின் உறுப்பினர்கள் ‘காளி’ தெய்வத்தின் படத்தின் முன் அமர்ந்து பூஜை செய்து, பின் குங்குமத்தை தண்ணீரில் கலந்து வைத்து, அதை பிரிட்டிசாரின் ரத்தமாக கருதி ஒரு துளி வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின் ஒரு காகிதத்தில் தங்கள் ரத்தத்தால் கட்டை விரல் ரேகையை பதிக்க வேண்டும். இப்படி கட்டை விரல் ரேகையை பதித்து பிரிட்டிசுக்கு எதிராக கிளம்பியவர் தான் வாஞ்சிநாதன்.

ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 14 பேரில் இவரும் ஒருவர் . இவர்கள் அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். அப்போது நீலகண்ட பிரம்மச்சாரியின் வயது 21.

1912 பிப்ரவரி 12ல் வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டது. நீலகண்டருக்கு ஏழாண்டுகள் சிறை. விசாரணையின்போது சென்னையிலும் தண்டனை காலத்தைக் கோவை சிறையிலும் கழித்தார்.

தனது வாழ்வின் பிற்பகுதியில் வாழ்க்கையில் விரக்தியுற்று, சந்நியாசம் பெற்று மைசூர் மாநிலத்தில் நந்தி மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமிகளாக வாழ்ந்து தனது 88 -வது வயதில் காலமானவர்.

நீலகண்ட பிரம்மச்சாரி போல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த நாட்டுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வரலாறு இளைய தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது.

தனது எண்பத்தி எட்டு ஆண்டு வாழ்க்கையில் நாற்பத்தி நான்கு வயது வரை இந்திய சுதந்திரத்துக்காக பலம் பொருந்திய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கெதிராகத் தன்னையே சுதந்திர வேள்வியில் ஆஹூதியாக அர்ப்பணித்துக் கொண்ட இந்த மாபெரும் புரட்சிக்காரருக்கு எங்காவது ஒரு இடத்திற்குப் பெயரிடப்பட்டிருக்கிறதா? எங்காவது ஒரு சிலை உண்டா? இவரது புரட்சி வாழ்க்கை எந்த பாட நூலிலாவது இடம் பெற்றிருக்கிறதா?

நாட்டில் எங்கு திரும்பினாலும் ஒரே சிலைகள் மயமாகக் காட்சி அளிப்பதும், பள்ளிப்பாடப் புத்தகங்களில் ஏதேதோ எழுதப்பட்டிருப்பதும் கண்டு இந்த சுதந்திர வீரனுக்கு எதுவுமே இல்லையா? இப்படிப்பட்டவர்கள் வரலாற்று ஏடுகளிலிருந்து மறைக்கப்பட்டால், புதிதாகத் தியாகிகள் உருவாக முடியுமா? தன்னலமற்ற நாட்டுச்சேவை இனி கிடைக்குமா என்று நல்ல உள்ளங்கள் வருந்தத்தான் செய்யும்.

என்ன செய்வது? இதுபோன்ற தியாகிகளை வணங்கினால்தான் இந்த நாட்டில் தேசபக்தி வளரும், புதிய தியாகப் பரம்பரை தோன்றும். வாழ்க நீலகண்ட பிரம்மச்சாரி (சுவாமி ஓம்காரானந்தா) புகழ்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version