Home அடடே... அப்படியா? பேட்டி என்ற பெயரில் பெண்களிடம் ஆபாச கேள்விகள்! யூடூயூப் சேனல் நடத்திய மூவர் கைது!

பேட்டி என்ற பெயரில் பெண்களிடம் ஆபாச கேள்விகள்! யூடூயூப் சேனல் நடத்திய மூவர் கைது!

05 May27 youtube e1539757713461

யூடியூப் சேனலை நடத்துபவர்கள், வருமானத்திற்காக ஆபாசமாகக் காட்சிகளை எடுத்த புகாரின் பேரில் சென்னை டாக் என்கிற யூடியூப் சேனலைச் சேர்ந்த மூவர் சைபர் கிரைமால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யூடியூப் சேனல்கள் தொடங்க கணினியும், இணையதள இணைப்பும் போதும் என்கிற நிலையில், யூடியூப் சேனல்கள் பெருகின. இதனால் பணம் பார்க்கும் எண்ணத்தில் எதை போடுவது என்ற வரைமுறையின்றி எடுக்கப்பட்டு, ஆபாசமான காட்சிகளைப் பதிவிடுவது அதிகரித்து வருகிறது.

Chennai talk1 1

ஆபாசமாகப் பேசி எடுப்பது, முன்கூட்டியே பேசித் திட்டமிட்டுப் பெண்களை அழைத்து வந்து அவர்களைத் தவறாகச் சித்தரித்து, ஆபாசமாகக் கேள்வி கேட்டுப் பதிவிடுவது ஆகியவை சில யூடியூப் சேனல்களின் வாடிக்கையாக இருப்பதாக போலீஸுக்குப் புகார்கள் வந்தன.

இந்நிலையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்களிடம் பேட்டி என்கிற பெயரில் ஆபாசமாகக் கேள்வி எழுப்பி பேட்டி எடுத்த தொகுப்பாளர் மற்றும் கேமராமேனை அங்கிருந்த பெண்கள் கண்டித்துள்ளனர். அப்போது அவர்கள் அந்தப் பெண்களை ஆபாசமாகப் பேசி மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்துக்குப் புகார் சென்றது. சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எலியட்ஸ் பீச் கடற்கரைப் பகுதியில் விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் பொழுதுபோக்கிற்காகவும், உடற்பயிற்சிக்காகவும் வரும் ஆண்கள் மற்றும் பெண்களிடம் பிராங்க் என்ற பெயரில் ஆபாசமாகப் பெண்களை நேர்காணல் செய்வது, மலினமான நகைச்சுவையைத் தூண்டிவிட்டு அவர்களை ஆபாசமாகப் பேச வைத்து அதை வீடியோவாகப் பதிவு செய்வது, அதை யூடியூப் சேனலில் போடுவது ஆகியவை தொடர்கதையாகி வருவதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

Chennai taks 1

அப்போது அங்கு இரு இளைஞர்கள் கேமராவை எடுத்துக்கொண்டு பெண்கள் இருக்கும் இடத்துக்குச் சென்று அவர்களை நேர்காணல் எடுப்பது மற்றும் பொதுமக்களை ஆண்கள் பெண்கள் என்று கூட பாராமல் ஆபாச வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை போலீஸார் பார்த்தனர். அந்த இளைஞர்கள் ஆசன் பாத்ஷா, அஜய் பாபு என்கிற இருவரையும் கைது செய்த போலீஸார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நல்லூர் பஜனை கோயில் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (34) என்கிற நபர் ‘சென்னை டாக்’ என்ற யூடியூப் சேனலை 2019-ம் ஆண்டிலிருந்து நடத்தி வருவதாகவும், அதில் நீலாங்கரை செங்கேனி அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த ஆசன் பாத்ஷா (23) என்கிற நபர் தொகுப்பாளராகவும், பெருங்குடி, சீவரம் பகுதியைச் சேர்ந்த அஜய் பாபு (24) என்பவர் கேமராமேனாகப் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பீச் போன்ற பகுதிகளுக்குச் சென்று அங்கு வரும் காதலர்கள் மற்றும் இளம் பெண்களைக் குறிவைத்து கேளிக்கையாகப் பேசி, வீடியோ பதிவு செய்வதோடு, பெண்களை ஆபாசமாகக் காட்டும் வகையிலும் பதிவு செய்து பின்னர் அதில் ஆபாசமாக மற்றும் அநாகரிகமாகப் பேசும் வார்த்தைகளை மட்டும் எடிட் செய்து சென்னை டாக் யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்துள்ளனர்.

இந்த வகையில் சம்பந்தப்பட்ட யூடியூப் பக்கத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவு செய்துள்ளதும், அதை ஏழு கோடி பேர் இதுவரை பார்த்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து உரிமையாளர் உள்பட 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் மீது பெண் வன்கொடுமைச் சட்டம் 4(H), ஐபிசி 354 (b) – பெண்களைத் தாக்கி மிரட்டுதல், 509- பெண்களை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுதல், 506 (2)- கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

குறிப்பிட்ட யூடியூப் தளத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரும் வேளையில், அநாகரிகமான செயலில் ஈடுபடுவது குறித்து தகவல் தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version