Home இந்தியா மனைவி ஒரு பொருள் அல்ல.. வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்கக் கூடாது: கோர்ட் அதிரடி!

மனைவி ஒரு பொருள் அல்ல.. வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்கக் கூடாது: கோர்ட் அதிரடி!

திருமண உறவில் மனைவி மட்டுமே அன்றாட வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கணவான்மார்கள் எதிர்பார்க்கக் கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து கூறியிருக்கிறது.

டீ போட்டுக் கொடுக்காததால் கணவன் மனைவியைச் சுத்தியால் அடித்துக்கொலை செய்த வழக்கில் இக்கருத்தை நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கு நீதிபதிகள் மொஹைத், தேரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “மனைவி என்பவள் ஒரு பொருளோ அல்லது உங்களின் தனிப்பட்ட உடமையோ கிடையாது. அவளும் உங்களைப் போல ஒரு உயிர் தான். சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே ஒரு ஆணும் பெண்ணும் திருமண உறவுக்குள் நுழைகின்றனர்.

ஆனால் நிஜத்தில் சமத்துவம் என்பது பல எல்லைக்கு அப்பாற்பட்டு நிற்கிறது. இதுபோன்ற வழக்குகள் சாதாரணமானவை அல்ல. இம்மாதிரியான கொலைச் சம்பவங்களால் சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வு கட்டமைக்கப்படுகிறது. ஆணாதிக்க வெறியும் ஒருவர் வளர்ந்த சமூக-கலாச்சார பின்னணியும் திருமண உறவுக்குள் நுழையும்போது தான் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

ஆண், பெண் பணிகளில் பாலின ஏற்றத்தாழ்வு அதிகரித்திருக்கிறது. மனைவி என்பதாலேயே அவர் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்க்கிறார். அப்படியான எண்ணம் மிகவும் தவறானது. அவ்வாறு மனைவியிடம் எதிர்பார்க்கக் கூடாது. பாலின ஏற்றத்தாழ்வுகளுடன் அடிபணிய வேண்டும் என்ற நோக்கமும் எதிர்பார்ப்பும் இணையும்போது கொலைகளும் துன்புறுத்தல்களும் அரங்கேறுகின்றன. இங்கு நிலவும் சமூகக் கட்டமைப்புகள் ஒரு பெண் தன்னை முழுவதுமாக கணவனிடம் ஒப்படைக்க வைக்கின்றன.

court 1

இதன் காரணமாகவே திருமண உறவில் கணவர்கள் தாங்கள் தான் முதன்மையானவர்கள் என்று கருதுகின்றனர். இதனால் மனைவிமார்களைத் தங்களின் உடமைகளாகக் கருதி தங்களின் விருப்பப்படி ஆட்டுவிக்கின்றனர். இதற்கு முழுமுதற் காரணம் ஆணாதிக்கமே தவிர வேறு அல்ல. இந்த அடக்குமுறைகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று கூறினார்.

இதையடுத்து கொலை செய்த நபரின் ஜாமின் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். அந்த நபர் மனைவியைச் சுத்தியால் அடித்துக்கொலை செய்திருக்கிறார். பின் தடயங்களை அழிக்க கொட்டிக்கிடந்த ரத்தங்களைச் சுத்தம் செய்து, மனைவியை குளிப்பாட்டி நாடகமாடியிருக்கிறார்.

இதை அனைத்தையும் நேரில் பார்த்த சாட்சியாக அவரின் 6 வயது மகள் சாட்சி சொல்லியிருக்கிறாள். இதனால் அவர் கொலையாளி என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version