Home அடடே... அப்படியா? பிஸ்என்எல் இணைப்பு சேதம்! வாடிக்கையாளரை அதிகமாக்க தனியார் செல்போன் இன்ஜினியர் இழிச்செயல்!

பிஸ்என்எல் இணைப்பு சேதம்! வாடிக்கையாளரை அதிகமாக்க தனியார் செல்போன் இன்ஜினியர் இழிச்செயல்!

BSNL OFF

சென்னை கொரட்டூரில் வாடிக்கையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி தங்கள் வசம் கவரும் நோக்கில் பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டியை சேதப்படுத்திய தனியார் செல்போன் நிறுவன இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.

உடந்தையாக செயல்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகளை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அண்மைக்காலமாக பிஎஸ்என்எல் தொலைபேசி சேவைகள் மற்றும் இணையதள சேவைகள் சரிவர வேலை செய்யாமல் இருந்து வந்தது.

இது குறித்து வாடிக்கையாளர்கள் கொரட்டூர் வீட்டு வசதி வாரியத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அடிக்கடி புகார் செய்துள்ளனர்.

அப்போது, அதிகாரிகள் வாடிக்கையாளர்களின் புகார்களை வாங்கி, விரைவில் சரியாகும் என்று கூறி சமரசம் செய்து அனுப்பி வைத்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில், கொரட்டூர் சென்ட்ரல் அவென்யூ, தனியார் கல்லூரி அருகே உள்ள பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டியை நேற்று காலை மர்மநபர் திறந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கொரட்டூர் பிஎஸ்என்எல் டெக்னீஷியன் அப்பன்ராஜ், அந்த நபரிடம் சென்று, ”நீங்கள் யார், இங்கு என்ன செய்கிறீர்கள்,” என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசி உள்ளார். இதையடுத்து, இணைப்பு பெட்டி அருகில் சென்று பார்த்தபோது, அந்த நபர் இணைப்பு பெட்டிலிருந்த வயர்களை சேதப்படுத்திக் கொண்டிருந்ததை அப்பன்ராஜ் பார்த்துவிட்டார்.

அவரை பிடித்து வைத்து, பிஎஸ்என்எல் அதிகாரிகளுக்கு சம்பம் பற்றி தகவல் கொடுத்தார். அதன்பேரில், பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர், அனைவரும் சேர்ந்து மர்ம நபரை கொரட்டூர் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். கொரட்டூர் பகுதி பிஎஸ்என்எல் உதவி பொறியாளர் நானி போலீசில் அவர் மீது புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையிலான போலீசார் பிடிப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தினார்.

அந்த நபர் அயனாவரம் பாரத மாதா தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ் (40) என்பதும், தனியார் செல்போன் நிறுவன இன்ஜினியர் என்பதும் தெரியவந்தது. விசாரணையில் அவர், பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டியில் இருந்து வயர்களை துண்டித்து வாடிக்கையாளர்களின் தொலைபேசி, இணையதள சேவையை தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்.

எதற்காக அப்படி செய்தார் என விசாரித்த போது, பிஎஸ்என்எல் சேவையை மோசமானதாக மாற்றினால், தங்களது செல்போன் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களை கவர முடியும் என்பதால், அப்படி செய்தேன், என்று கூறியுள்ளார்.

இவர்தான், கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடிக்கடி பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டியை அடிக்கடி சேதப்படுத்தியவர் என்பது விசாரணையில் உறுதியானது.

இந்த சம்பவத்தில் ஜெயபிரகாஷ்க்கு தனியார் செல்போன் நிறுவன அதிகாரிகளும், ஊழியர்களும் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபிரகாஷை கைது செய்தனர்.

அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தனியார் செல்போன் நிறுவன அதிகாரிகளையும், ஊழியர்களையும் தேடி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version