― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தி... முத்துஸ்வாமி!

மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தி… முத்துஸ்வாமி!

- Advertisement -

பங்குனி மாதம் கிருத்திகை நட்சத்திரம்… சங்கீத மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியாய் இருக்கும் முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஜன்ம நட்சத்திரம்!

ராமஸ்வாமி தீக்ஷிதர் – அவரும் பெரிய பண்டிதர். ஸங்கீதத்தில் நிரம்பத் தெரிந்தவர். ஸாஹித்யங்கள் பண்ணியிருப்பவர். பெரிய ஸ்ரீவித்யா உபாஸகருங்கூட. அவருக்கு நாற்பது வயசு வரை புத்ர பாக்யமில்லை. பத்னியோடுகூட வைத்தீச்வரன் கோவிலுக்குப் போய் முத்துக்குமாரஸ்வாமி ஸந்நிதியில் ஒரு மண்டலம் விரதம் இருந்தார். அந்த அம்மாளுக்குத் தன் மடியிலே தேங்காய், பழம் முதலான மங்கள வஸ்துக்களை யாரோ கட்டுவதாக ஸ்வப்னம் ஏற்பட்டது. அடுத்தாற் போலவே கர்ப்பமும் உண்டாயிற்று. முத்துக்குமாரஸ்வாமி புத்ரவரம் தந்ததற்கே அப்படி ஸ்வப்னத்தில் ஸமிக்ஞையாயிருக்கிறதென்று புரிந்து கொண்டார்கள். அதற்கேற்றாற் போல் பிள்ளையும் ஒரு க்ருத்திகா நக்ஷத்திரத்திலேயே – அது பங்குனி மாஸ க்ருத்திகை – பிறந்தது. அப்படிப் பிறந்தவர்தான் முத்துஸ்வாமி தீக்ஷிதர்.

அப்புறம் அவர் வளர்ந்து ஸங்கீத அப்யாஸம், ஸ்ரீவித்யா அப்யாஸம், காசியில் ஸந்நியாஸ குருவுடன் வாஸம் எல்லாம் பண்ணினார். காசியிலேயே குரு ஸித்தியானார். ஸித்தியாகிற ஸமயத்தில் அவர் தீக்ஷிதரிடம் ‘தக்ஷிணத்துக்குத் திரும்பிப் போய்விடு. அங்கே முதலில் திருத்தணிக்குப் போ. நீ எதற்காக ஜன்மா எடுத்திருக்கிறாயோ அது பலிதமடையும், ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி அநுக்ரஹம் பண்ணுவார்” என்று ஆசீர்வாதித்தார்.

அப்படியே தீக்ஷிதர் திருத்தணிக்குப் போனார். அடிவாரத்தில் திருக்குளத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு அவர் மலை ஏறிப் போய்க் கொண்டிருக்கும்போது முன்பின் தெரியாத ஒரு கிழ ப்ராஹ்மணர் அவரை, “முத்துஸ்வாமி!” என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டு, “வாயைத் திற” என்றார். அவரும் வாயை திறக்கவே வாயிலே ஒரு கல்கண்டைப் போட்டுவிட்டு போன இடம் தெரியாமல் போய்விட்டார். வந்தது யாரென்று தீக்ஷிதருக்குப் புரிந்து விட்டது. இவர் வந்த கார்யமும் அந்தத்க்ஷணமே ஆரம்பமாகியது – ஸாஹித்ய வ்யுத்புத்தி ஏற்பட்டுவிட்டது! தகப்பனாரான பரமேச்வரனுக்கும் குருவாக இருந்த குஹன் மீது அப்போதே எட்டு வேற்றுமைகளில் ஒவ்வொன்றிலும் ஒரு க்ருதியாக எட்டு க்ருதிகளைப் பாடிவிட்டார்.

தீக்ஷிதர் க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகப் போய் அங்கேயுள்ள மூர்த்தியை – அது என்ன மூர்த்தியானாலும் அதை – வித்யாஸம் இல்லாமல் பாடினார். அந்தந்த க்ருதியிலேயே அது எந்த க்ஷேத்ரத்தைப் பற்றியது என்பதற்கு அகச் சான்று என்கிறார்களே, அப்படிப்பட்ட internal evidence இருக்கும். குறிப்பிட்ட க்ஷேத்ரத்தில் அந்த ஸ்வாமிக்கு உள்ள பெயர், அதற்கான மந்த்ர ரஹஸ்யம், அந்த ஸ்தல புராணக் குறிப்பு என்று ஏதாவது இருக்கும்.

இசையால் வசமாக இதயம் எது அந்த இறைவனே இசையாய் வரும் போது என்று சொல்வதுண்டு அதே மாதிரி இசையால், தனது சாகித்யத்தினாலேயே தீராத வியாதிகள், வலிகள், நோய்கள், மன அழுத்தம் காரணமாக தேவையில்லாத கவலைகள் போன்ற எல்லாவற்றையும் இசையின் மூலம் தீர்வு காண முடியும் என்று அதை நமக்கு நடத்தியும் காட்டியிருக்கிறார் அந்த மும்மூர்த்திகளில் முதன்மையான முத்துசுவாமி தீக்ஷிதர்.

அதற்கு ஒரு எடுத்துகாட்டு – ஒருமுறை தீக்ஷிதரின் சீடர் தம்பியப்பனுக்கு தாளமுடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. பல வைத்தியங்களை மேற்கொண்டும் நிவாரணமில்லை. தம்பியப்பன் உடனடியாக ஒரு புரோஹிதரை அணுகி தமக்கு பரிஹாரம் செய்து வைக்குமாறு வேண்டினார். ஆனால் புரோஹிதரோ நீ சாதியில் கடைநிலையில் இருப்பதால் உனக்கு பரிஹாரம் பலனளிக்காது என மறுத்து விட்டார். தம்பியப்பன் உடனே தீக்ஷிதரிடம் தம் குறையை சொல்லி கண்ணீர் விட்டதும், தீக்ஷிதரின் மனம் நெகிழ்ந்து விட்டது. உடனே தமது சீடரிடம், தம்பியப்பா வேதரூபினி உன்னை கைவிட்டாலும் நான் வழிபடும் நாதரூபினி உன்னை கைவிடமாட்டாள் என்று கூறினார்.

தம் சீடரின் துன்பத்தை தாளாத தீக்ஷிதர் உடனே சனீஸ்வர மூர்த்தியின் மேல் யதுகுலகாம்போஜி ராகத்தில் ‘திவாகர தனுஜம்’ என்ற அதியற்புதமான கீர்த்தனையை இயற்றினார். என்ன விந்தை தம்பியப்பனின் வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் மாயமானது. பின்பு சிஷ்யரின் வேண்டுகோளுக்கு இணங்கி இதர க்ரஹங்களின் மீதும் கிருதிகளை இயற்றினார்.

மும்மூர்த்திகளில் ஒவ்வொருவரும் அவரவர் உபாசனா தெய்வங்களின் மீது அத்யந்த பக்தியின் பிரவாகமாக கீர்த்தனைகளை புனைந்து இருக்கிறார்கள் – தியாகப்ரும்மம் கீர்த்தனைகளில் முத்திரையாக அவருடைய பெயரோடு ராம நாமமும் சேர்ந்த மாதிரி வரும், – ச்யாமா சாஸ்திரிகளின் உபாசனா தெய்வம் பங்காரு காமாட்சி அம்மன், அவருடைய கிருதிகளில் ச்யாமா கிருஷ்ண சோதரி என்ற முத்திரை வைத்து பாடியிருப்பார், அந்த காமாட்சியை சகோதரியாக பாவித்து எழுதியிருப்பதை அநேக கிருதிகளில் காணலாம். தீக்ஷிதர் க்ருதிகளில் தாபங்களை பார்க்கவே முடியாது. அனைத்தும் உபாசனா மார்க்கம்தான். வர்ணணைகளும், வார்த்தை ஜாலங்களும் அப்பப்பா ஸமஸ்க்ருத மொழியின் அழகு கொஞ்சும்.

க்ருதிகளில் தம் முத்ரையாக அவர் ‘குருகுஹ’ என்ற ஸுப்ரஹ்மண்ய நாமாவையே வைத்திருப்பதையும் குறிப்பாகக் கவனிக்க வேண்டும். குகையில் இருப்பவன் குஹன். ஹ்ருதய அந்தரங்கம் என்ற குகையில் ஆத்ம ஸ்வரூபமாக உள்ள குருதான் குருகுஹன்.

முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு ஸுப்ரஹ்மண்ய ஸம்பந்தம் ஜாஸ்தி. அவர் ஸகல க்ஷேத்ரங்களுக்கும் போய் ஸகல தெய்வங்களையும் பாடி வைத்தவர். ஆசார்யாள் மாதிரி. ஆனாலும் உபாஸனையில் அவரை அம்பாள் பக்தராகவே விசேஷமாகத் தெரிந்து கொண்டிருக்கிறேன். அவருடைய தேவி நவாவரண கீர்த்தனைகளே பிரமாணம்.

த்யாகப்ரும்மமும், ஸ்யாமா ஸாஸ்திரிகளும் தங்கள் க்ருதிகளில் முக்தியை வேண்டி தாபத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் தீக்ஷிதர் வேண்டாமலே அம்பாள் அவருக்கு மோக்ஷ சாம்ராஜ்யத்தை அளித்தாள்.

தீக்ஷிதர் சரீர யாத்திரையை முடித்தது ஒரு தீபாவளி நன்னாளில். அதற்கு அடுத்த ஆறாம் நாள்தான் மஹா ஸ்கந்த ஷஷ்டி வருவதும். ஷஷ்டியன்று பூர்த்தியாகிற விதத்தில் ஆறு நாள் வ்ரத உபவாஸங்களிருப்பது வழக்கம். அதாவது தீக்ஷிதர்வாளின் பிறப்பு மட்டுமில்லாமல் முக்தியடைந்ததிலும் ஒரு ஸுப்ரஹ்மண்ய ஸம்பந்தம் தெரிகிறது….

தியாகப்ரும்மம் அவர்களின் பஞ்சரத்ன கீர்த்தனம் போல தீக்ஷிதரின் பஞ்சலிங்க ஷேத்ர கிருதிகள் பிரசித்தமான ஒன்று. 1. காஞ்சிபுரம் (ப்ருத்வி தலம் – பைரவி ராகம்), 2. திருவானைக்கா (நீர்த்தலம் யமுனா ராகம்), 3. திருவண்ணாமலை (அக்னித்தலம் – சாரங்கா ராகம்), 4. காளஹஸ்தி (வாயுத்தலம் – உசேனி ராகம்), 5. சிதம்பரம் (ஆகாயத்தலம் – கேதார ராகம்). ஒரு தரம் டாக்டர் விஜய் சிவா அவர்கள் ஒரு இசைப்பட்டறையில் (workshop on music) உரை நிகழ்த்தினார் அருமையாக இருந்தது கேட்கும் பாக்கியம் கிட்டியது.

மும்மூர்த்திகளில் தீக்ஷிதர் கீர்த்தனங்களில் ஒரு தனிப்பட்ட பக்தியும் பரிவும் இருக்கும். அவர் இசையோடு வேதங்களையும், சாஸ்திரங்களையும், ஜோதிடத்தையும் கற்றுணர்ந்தவர். தீக்ஷிதர் சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டு விளங்கியது அவருடைய சீடர்களை உற்று நோக்கினாலே விளங்கும்.

தஞ்சை நால்வர்களான வடிவேலு, சிவானந்தம், பொன்னைய்யா, சின்னைய்யா மற்றும் தம்பியப்பன், இசை வேளாளர் பிரிவைச் சேர்ந்த தாசி கமலம் அம்மையார். இவர்கள் அனைவருமே தீக்ஷிதரின் ஞானத்தை அப்படியே கிரஹித்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். ஏகசந்தகிரஹி அதாவது எந்த விஷயத்தையும் இவர்களுக்கு மறுமுறை சொல்ல வேண்டியதில்லை. இதில் பொன்னைய்யா பிள்ளை அவர்கள் அம்பா நீலாம்பரி (நீலாம்பரி), அம்பா சௌரம்பா (ஆரபி) போன்ற சாகாவரம் பெற்ற சாகித்யங்களை இயற்றியுள்ளார்.

தீபாவளி புண்ய தினத்தில், நரக சதுர்த்தசியன்று தம் சீடர்களுடன் தாம் இறுதியாக பூர்விகல்யாணி ராகத்தில் படைத்த ‘மீனாக்ஷி மேமுதம்’ என்ற கீர்த்தனையை பாடிக் கொண்டிருக்கும் பொழுது அன்னை மீனாக்ஷி இரு கரங்களையும் நீட்டி தம் குழந்தையை தன்னுடன் சேர்த்துக் கொண்டாள்.

உத்தராயணத்தில் பங்குனி கார்த்திகையில் தோன்றிய தீக்ஷிதர், தக்ஷிணாயண புண்ய காலத்தில் நரக சதுர்த்தசியில் தீக்ஷிதர் அம்பாளுடன் ஐக்கியமானார்.

1975ம் வருடம் உறவினரின் பெண் கல்யாணம் எட்டயபுரத்தில் வைத்து நடந்தது அதில் கலந்து கொள்ள சென்ற சமயத்தில் பாரதியார் வாழ்ந்த வீடும், மணி மண்டபமும் பார்த்து விட்டு வரும் போது ஒரு திருப்பத்தில் ஒரு குட்டையும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் ஒரு மரத்தின் பக்கம் ஒரு சமாதி இருந்தது, என் கூட வந்த உறவினர் மூலம் தெரிய வந்தது முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவர்களின் சமாதி கவனிப்பாரற்று இருந்ததைப் பார்த்த போது மனதுக்கு சங்கடமாக இருந்தது. பாஞ்சாலங்குறிச்சியில் அப்போதைய அரசு கட்டபொம்மனுக்கு கோட்டையை செப்பனிட்டு எழுப்பிய சமயத்தில் இதையும் கவனத்தில் கொண்டு இருக்கலாம். ஆனால் கொஞ்சம் வருடங்கள் கழித்து கர்நாடக இசைக்கலைஞர் தாஸேட்டன் (பத்மஸ்ரீ யேசுதாஸ்) அவர்களின் முயற்சியால் புதுப்பொலிவுடன் திகழ்கிறது-

  • கே.ஜி.ராமலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version