892641

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் 106 வயது முதியவர் இன்று மரணம்..

892641

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான இமாசல பிரதேசத்தில் வசிக்கும் 106 வயது முதியவர் உடல்நல குறைவால் இன்று காலமானார்.

சிம்லா, இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இமாசல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ந்தேதி நடைபெறும். இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட 1.22 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்கை செலுத்துகின்றனர்.

100 வயது கடந்த 1,190 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான கின்னார் மாவட்டத்தில் வசிக்கும் 106 வயதுடைய ஷியாம் சரண் நேகி என்ற முதியவர் கடந்த 2-ந்தேதி தனது தபால் வாக்கை செலுத்தினார். அவருக்கு தேர்தல் ஆணைய குழுவினர் சிவப்பு கம்பளம் கொண்டு வந்து முழு மரியாதை செலுத்தி வாக்கு பதிவு நடந்தது.

அவர் முதலில், வாக்கு மையத்திற்கு சென்று வாக்கு செலுத்துவது என்பதிலேயே ஆர்வமுடன் இருந்துள்ளார். எனினும், திடீரென உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில், அவரது வீட்டில் வைத்து வாக்கு செலுத்தி உள்ளார். ஷியாம் சரண் நேகியின் உடல்நலம் தொடர்ந்து மோசமடைந்தது.

இந்த நிலையில், அவர் தனது சொந்த ஊரில் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான கின்னார் பகுதியை சேர்ந்தவரான ஷியாம் சரண் நேகிஜியின் மறைவு பற்றிய செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவருக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்து உள்ளார். அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என கின்னார் நகர துணை ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.