― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryசினிமா, அரசியல் என நீண்ட கரங்கள்! போதைக் கடத்தல் ஜாபர் சாதிக்..! தள்ளாடுகிறதா தமிழகம்?

சினிமா, அரசியல் என நீண்ட கரங்கள்! போதைக் கடத்தல் ஜாபர் சாதிக்..! தள்ளாடுகிறதா தமிழகம்?

- Advertisement -

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்கின் 8 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஜாபர் சாதிக்கின் வீட்டு பூட்டை உடைத்து அங்கிருந்த ஆவணங்களைப் பறிமுதல் செய்த போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வீட்டுக்கு சீல் வைத்த நிலையில் தற்போது வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர்.

சிக்கிய அண்மைய போதைக் கடத்தல்கள்!

2021 செப்.15: – குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் ஈரானில் இருந்து வந்த இரண்டு சரக்கு கன்டெய்னர்களில், 3,000 கிலோ, ‘ஹெராயின்’ போதைப்பொருளை கைப்பற்றினர். அதன் மதிப்பு, 21,000 கோடி ரூபாய். இந்த வழக்கில், சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த சுதாகர் மற்றும் அவரது மனைவி துர்கா வைசாலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்l

2021 மார்ச் 18:- லட்சத்தீவு அருகே ஒரு படகில் இருந்து, 300 கிலோ ஹெராயின், பாகிஸ்தான் குறியீடு உள்ள ஐந்து ஏ.கே., 57 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயிரம் 9 எம்.எம். தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இலங்கையை சேர்ந்த ஐந்து பேர் படகில் இருந்து கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தமிழகத்தில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ளவர்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. முகாமில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

2022 நவ.29: -ராமநாதபுரம் ஆளும் கட்சி பிரமுகர்களிடம் இருந்து, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘கோகைன்’ என்ற போதைப்பொருளைக் கைப்பற்றினர்l

2024 ஜன.22: – சென்னை அமைந்தகரை அருகே, நைஜீரியா நாட்டினரிடம் இருந்து ஒரு கிலோ கோகைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. ஆனால், சில முக்கியஸ்தர்களின் தலையீட்டால், அவர்களை முறையாக விசாரணை செய்யாமல் விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது

2024 பிப்.27: – குஜராத் கடல் பகுதியில், 3,300 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த சரக்கு தமிழக படகில் ஏற்றப்பட இருந்தது தெரிய வந்துள்ளது.

2024 பிப்.29 – சென்னையைச் சேர்ந்த பிளமன் பிரகாஷ் என்பவர், மதுரை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம், 30 கிலோ மெத்தாம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டது. அவருடைய வீட்டில் மேலும் ஆறு கிலோ கிடைத்தது. இவற்றின் மதிப்பு 200 கோடி ரூபாய் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவை எல்லாம் அண்மைய போதைக் கடத்தல்களில், மாட்டிய சம்பவங்கள். நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் எத்தனை விழிப்பாக இருந்தாலும், கிடைக்கும் சந்து பொந்துகளில் புகுந்து, பிடிபடாமல் தப்பித்து வரும் கலையில் கில்லாடியாக இருப்பதால் தான் போதை நடமாட்டம் வெகுவாக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அண்மையில் தமிழகத்தையே உலுக்கிப் போட்ட ஒரு செய்தி, சர்வதேச போதைக் கடத்தல்களில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த திமுக., நிர்வாகி ஜாஃபர் சாதிக், போலீஸாரால் தேடப்பட்டு வருகிறார் என்பது! செய்தி வெளியானதும், சம்பந்தப்பட்ட நபரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டது திமுக., தலைமை.

ஆனாலும், கட்சியின் நிதித் தேவைகளைப் பெருமளவில் பூர்த்தி செய்து வந்தவர் என்று அடையாளம் காட்டப்படுவதால், திமுக.,வினர் சற்றே கலங்கிப் போயுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் நபருக்கு திமுக.,வின் முதல் குடும்பத்தின் தொடர்பு நீண்டிருப்பதாகக் கூறப்படுவது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த போதைக் கடத்தல் கும்பல் எப்படி நம் பாதுகாப்பு அமைப்புகளால் ஸ்கெட்ச் போடப்பட்டு, வசமாக வலையில் சிக்கியது என்ற தகவல்கள் ஊடகங்களில் பரவலாக வெளி வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின. இது குறித்து சமூகத் தளங்களிலும் பல்வேறு தகவல்கள் உலா வந்தன. அவற்றின் தொகுப்புக் கட்டுரையே இது.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) மற்றும் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில் மிகப்பெரிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. திமுக.,வின் சென்னை மேற்கு மாவட்ட என்ஆர்ஐ பிரிவின் துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கும்பலின் மூளையாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இது திமுகவை கலவரத்தில் தள்ளியுள்ளது.

பிப்ரவரி 15 அன்று, என்சிபி மற்றும் தில்லி போலீஸ் சிறப்புப் பிரிவின் கூட்டுக் குழு, நான்கு மாத கண்காணிப்புக்குப் பிறகு, மூன்று நபர்களைக் கைது செய்தது. மேற்கு தில்லியில் உள்ள பாசாய் தாராபூரில் உள்ள ஒரு குடோனில், ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக, மல்டிகிரைன் உணவுக் கலவையின் கவரில் சூடோபீட்ரைன் போதைப் பொருள் மூலப் பொருளை பேக்கிங் செய்து கொண்டிருந்தபோது, ஜாஃபரின் குழுவைச் சேர்ந்த முகேஷ் (34), முஜிபுர் ரஹ்மான் (26), அசோக் குமார் (33) ஆகிய மூவர் பிடிபட்டனர். 

அந்த குடோனில் இருந்து சுமார் 50 கிலோ சூடோபெட்ரின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் ஒரு கிலோ சுமார் ₹1.5 கோடிக்கு விற்கப்படும் மெத்தாம்பெட்டமைன் என்ற செயற்கை மருந்தை தயாரிக்க சூடோபெட்ரைன் பயன்படுத்தப்படுகிறது .

பிடிபட்ட மூவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின் போது, உதயநிதி ஸ்டாலினுக்கும், மாநிலங்களவை எம்.பி., எம்.எம்.அப்துல்லாவுக்கும், திமுக.,வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலர் என்.சிற்றரசுவுக்கும் நெருக்கமான, திமுக., பிரமுகர் ஒருவரால், இது நடத்தப்  பட்டு வருவதாக, மூவரும் தெரிவித்துள்ளனர்.  இது குறித்த செய்திகள் உடனே பரபரப்பாக வெளியாயின. இது குறித்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, யார் அந்த  திமுக., பிரமுகர் என்று சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப் பட்ட நிலையில், இறப்பு வீட்டுக்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருப்பதாக அண்டை அயலாரிடம் கூறிவிட்டு, ஜாஃபர் சாதிக் குடும்பத்துடன் இரவோடு இரவாக தலைமறைவானார். 

ஜாஃபர் கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 45 சரக்குகளை அனுப்பியுள்ளார்  என்றும், அதில் சுமார் 3,500 கிலோ சூடோபெட்ரைன் இருந்தது, அதன் மதிப்பு ரூ.2,000 கோடிக்கு மேல் என்றும் பிடிபட்டவர்களிடம் இருந்து தகவல் பெறப்பட்டது. 

இதை  அடுத்து, மத்திய உள்துறை செயலாளருக்கு தகவல் அனுப்பப்பட்டதாகவும், NCB, NIA, ED மற்றும் IB உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இந்த போதைப்பொருள் வளையத்தின் அடியாழம் வரை செல்லுமாறு  அறிவுறுத்தப்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.  

ஜாஃபர் தலைமறைவாகிவிட்டதால், சென்னையில் உள்ள என்சிபி அதிகாரிகள் சென்னை  மயிலாப்பூர், சாந்தோம் ஹைரோட்டில் அருணாச்சலம் தெருவில் உள்ள ஜாஃபரின் வீட்டில் சம்மன் ஒட்டியுள்ளனர்.  பின், NCB அதிகாரிகள் குழு, புதன்கிழமை ஜாஃபரின் வீட்டில் சோதனை நடத்தியது. அப்போது  போதைப்பொருள் வளையத்தில் விரிந்திருக்கும் நிதி வலையை வெளிப்படுத்தும் ஆவணங்களைக் கைப்பற்றியது.

“சாதிக்கின் வீட்டில் எந்த போதை மருந்தையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், போதைப்பொருள் பணத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய நிதி வலையை சுட்டிக்காட்டும் ஆவணங்கள் பலவற்றைக் கைப்பற்றினோம் என்றனர் என்சிபி அதிகாரிகள்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியை சொந்த ஊராகக் கொண்டார் ஜாபர் சாதிக் என்று தெரிந்தது. அப்துல் ரஹ்மான் மற்றும் ஷம்சத் பேகம் ஆகியோருக்கு பிறந்த ஜாபர் சாதிக், பெரம்பூரில் வசித்து வந்தாராம். அவர் தந்தை பர்மா பஜாரில் கடை  வைத்து சிடிக்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்று வந்தார் என்றும், படிப்பில் ஆர்வம் காட்டாத ஜாபர், ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டு, புரோக்கராக செயல்பட்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது.  

ஜாஃபர் தொடக்க கட்டங்களில், அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்றதற்காக சிக்கலில் சிக்கினார். அவர் செய்த ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் சிக்கலில் மாட்டியதால், ஜாஃபர் தொழில்களை மாற்றினார்.  பின்னாளில் அவர் ஒரு “குருவி”யாகவும் செயல்பட்டுள்ளார்.  அதன்மூலம், வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை கடத்தி  வரும் தொழிலில் ஈடுபட்டபோதுதான், போதைப்பொருள் வியாபாரிகள் பலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில், சரத்குமார் திரைப்படமான ‘ஜக்குபாய்’ திரைப்படத்தின் திருட்டு டிவிடி.,க்களை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே கள்ளச்சந்தையில் விற்றதற்காக ஜாஃபர் தமிழ்நாடு காவல்துறையின் குற்றத் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும்  சில மாதங்கள் சிறையில் இருந்த ஜாஃபர் வெளியே வந்து மீண்டும் ‘குருவி’யாக தனது ‘கூரியர்’ சேவையைத் திறம்படத் தொடர்ந்தார். 

திரையுலகின் மீது ஆர்வம் கொண்டிருந்த ஜாஃபர், இயக்குனர் அமீருடன் நெருக்கமாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஆதம் பாவாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாவா, மின்சார வாரியமான TANGEDCO விற்கு நிலக்கரியை இறக்குமதி செய்தார். அவர், இயக்குனர் அமீரிடம் ஜாபர் சாதிக்கை அறிமுகப்படுத்தினார். பின்னர் இந்த நட்பு திமுக.,விலும் தமிழ்த் திரையுலகிலும் ஜாஃபருக்கு கதவுகளைத் திறந்தது.

திரையுலகில் ஆழமான வேரூன்றிய திமுக.,வுக்கு நெருக்கமான பலருடன் ஜாஃபர் விரைவில் நட்பு கொண்டார். கட்சிக்காரர்கள் மற்றும் திரைப்படத் தொழில்கள் ஜாஃபர் சாதிக்கை மிகவும் கவர்ச்சிகரமானவராகக் கண்டது, ஏனெனில் அசாத்தியமான பணப் புழக்கம். இந்நிலையில், 2019ல், ஜாஃபர் சிறிய அளவிலான மருந்து வியாபாரத்தில் இறங்கினார்.

உளவுத்துறை வட்டாரங்களின் தகவல்படி, பிரபலங்களுக்கு எந்த வகையான பார்ட்டி போதைப்பொருட்களையும் சப்ளை செய்யும் முக்கிய நபராக ஜாஃபர் மாறினார். மெதுவாக, அவரது பிரபல தொடர்புகள், போதைப்பொருள் விநியோகத்திற்காக அவரைச் சார்ந்து இருந்து வளர்ந்தது. இதன் மூலம் அவர் திமுக.,வின் மறைந்த ஜெ.அன்பழகனுடனும் (அமீர் இயக்கிய ஆதிபகவன் படத்தின் தயாரிப்பாளர்) பின்னர் உதயநிதி ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக ஆன சிற்றரசுவுடனும் தொடர்பு கொள்ள வழிவகுத்தது.

சிற்றரசு மூலம், ஜாஃபர் உதயநிதியின் முகாமுக்குள் ஊடுருவி, அப்போது நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவரின் கவனத்தைப் பெற்றார்.  .

உதயநிதி ஸ்டாலினிடம் கட்சிப் பதவியைப் பெற்ற சிற்றரசு, அவரைக் கவர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். உதயநிதி இல்லாமல் அவரால் பெரிய அரசியல் கனவுகளைக் காண முடியாது என்ற நிலையில் இருந்ததால், எல்லாம் சுமுகமாக நடைபெற்றுள்ளது.   

2021 வாக்கில், ஜாஃபர் சாதிக் தனது அரசியல் தொடர்புகளின் காரணமாக போதைப்பொருள் விற்பனையாளர்களிடையே பிரபலமானார். நல்ல வேளையாக அவருக்கு தமிழகத்தில் அவருடைய தொடர்பிலான  திமுக.,வே ஆட்சிக்கும் வந்தது. அதன்பின் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மத்தியில் ஜாஃபர் சாதிக்கின் அந்தஸ்து சர்வதேச அளவில் உயர்ந்தது. ஜாஃபர் தன்னை விளம்பரப்படுத்துவதற்கான நேரம் இது என்று முடிவு செய்தார்.  அவரே மருந்து விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளர் ஆனார். 

5 ஜூலை 2021 அன்று, அவர் “J Square Pharma Private Limited” என்ற பெயரில் ஒரு மருந்து நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பதிவு செய்யப்பட்ட முகவரி கேஏஜே பிளாசா, 838, அண்ணாசாலை, சென்னை என்று இருந்தது.  ஆனால் இந்த மருந்து நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு 955/1, உன்ட்வா, ராஜ்பூர்-உன்ட்வா சாலை, காடி, மெஹ்சானா, குஜராத் என்று இருந்துள்ளது. கதீப் அப்துல் ஜலீல் மற்றும் ஷாஹுல் ஹமீது ரஜப் பாத்திமா ஆகியோர் இந்த JSquare Pharma வின் இயக்குனர்களாக உள்ளனர். ஆனால் இந்த நிறுவனம் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமானது என்று தெரியவந்தது. 

இது தவிர, ஜாஃபர் வேறு சில மருந்து நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.  இவை ஜாஃபர் சாதிக்கிற்கு சூடோபெட்ரைனை வழங்கும். அதன்மூலம், ஜாஃபர் சாதிக் தனது நிறுவனம் மற்றும் அவரது பிற தொடர்புகளுடன், பல தானிய தூள் மற்றும் உலர் தேங்காய் ஏற்றுமதி என்ற போர்வையில் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சூடோபீட்ரைனை ஏற்றுமதி செய்ய முடிந்தது. தில்லியைச் சேர்ந்த மெக்சிகன் மருந்தாளுனர்களைப் பயன்படுத்தி, ஜாஃபர் பெரிய அளவில் மெத்தாம்பேட்டமைனைத் தயாரித்து சந்தைப்படுத்தியிருக்கலாம் என்று NCB நம்புகிறது. 

ஜனவரி 17 அன்று, ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், NCB தில்லி பிரிவு சுமார் 2.95 கிலோ மெத்தாம்பேட்டமைனைக் கைப்பற்றியது. அப்போது, மெக்சிகோ மற்றும் இங்கிலாந்தில் இருந்து செயல்பட்டவர்களின் தொடர்பில், நவம்பர் 2023 இல்  இந்தியாவிற்கு வந்து தங்கியிருந்த மூன்று மெக்சிகன் வேதியியலாளர்களை கைது செய்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜனவரி 29 அன்று லூதியானா, மொஹாலி மற்றும் ஜலந்தர் ஆகிய இடங்களில் என்சிபி அமைப்பு சோதனை நடத்தியது. அப்போது 4 கிலோ சூடோபெட்ரின் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த போதைப்பொருள் கடத்தலில் ஜாஃபர் சாதிக்கிற்கும் பங்கு இருப்பதாக என்சிபி இப்போது நம்புகிறது.  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், அமெரிக்க DEA (மருந்து அமலாக்க நிர்வாகம்) இண்டெல் மூலம் கொடுத்த எச்சரிக்கைக்குப் பிறகு, ஜாஃபரின் வலையை என்சிபி முழுக் கண்காணிப்பில் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர், இந்த விவகாரத்தில் என்.ஐ.ஏ., – தேசியப் பாதுகாப்பு முகமையும் இணைக்கப்பட, அனைத்து ஏஜென்சிகளும் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்டது!

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணிசமான பணம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பல்வேறு ஜமாத்கள், அரபிக் கல்லூரிகளில் பயங்கரவாதிகளுக்கு நிதியளிக்கப்பட்டதை என்ஐஏ கண்டறிந்தது. மேலும் ஜாஃபரின் இணைப்பு மகாராஷ்டிராவில் உள்ள நாசிக், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, ராமநாதபுரம் வரை நீண்டதும் தெரியவந்தது. துபாய், மலேசியா, இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு அவரது சட்டவிரோத வர்த்தக தொடர்புகள் விரிவடைந்திருந்ததையும் கண்டறிந்தார்கள். 

தமிழ்த் திரையுலகில் ஜாஃபர் செய்த முதலீடுகள், மற்றும் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கவிருப்பதாகக் கூறப்படும் படத்தைத் தயாரிப்பதற்கான முயற்சிகளை NIA மற்றும் ED ஆகியவை உன்னிப்பாகக் கவனித்தன. இயக்குனர் அமீர், ஜாஃபர் சாதிக்குடன் நெருக்கமாக இருப்பதும் ஏஜென்சிகளின் முழு கவனத்தின் கீழ் வந்தது.

முன்னதாக, ஜனவரி 2020 இல், ராமநாதபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு காவல்துறை ரூ.1 கோடி மதிப்புள்ள ஆம்பெடமைன், மெத்தாம்பேட்டமைன், ஹெராயின் போன்றவற்றைக் கைப்பற்றி 9 பேரைக் கைது செய்தது. இந்த போதைப் பொருட்கள் மீன்பிடி படகுகளில் கடத்தி வரப்பட்டன.

செப்டம்பர் 2021 இல், கடற்படை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் என்று கூறப்படும் ₹21,000 கோடி மதிப்புள்ள ஹெராயினைக் கைப்பற்றியது. ஆந்திரா மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, ஒரு ஷெல் கம்பெனியாக பதிவு செய்து, டால்கம் பவுடரில் தில்லிக்கு ஹெராயின் கொண்டு சென்றதில் உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டு, குஜராத் கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த வாரம் பிப்ரவரி 27 ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலில் 3300 கிலோ போதைப்பொருளை என்சிபி, இந்திய கடற்படை மற்றும் குஜராத் ஏடிஎஸ் ஆகியவை கைப்பற்றின.

“என்சிபி துணை இயக்குநர் ஜெனரல் ஞானேஷ்வர் சிங்குக்கு முதலில் ஒரு வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல் 3,000 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் என்று ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தக் கப்பலில் இருந்தவர்கள், தமிழகத்தில் இருந்து வரும் ஒரு மீன்பிடி படகுக்காக, செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் 7 மணி வரை, ஒரு குறிப்பிட்ட இடத்தில் கடத்தல் பொருட்களை வழங்குவதற்காக காத்திருந்தனர்.  இந்த ரகசியத் தகவலின் அடிப்படையில், என்சிபி செயல்பாட்டுக் கிளை, கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகியவற்றின் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.

கடற்படை அதன்நீண்ட தூர கடல் ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பலைத் தயாராக்கி, செவ்வாய்க்கிழமை அதிகாலை படகை இடைமறித்தது. விவரங்களைக் கேட்டறிந்து, நடவடிக்கைக்காக போர்க்கப்பல் மூலம் இந்தக் கப்பல் குஜராத்தின் போர்பந்தருக்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் இருந்த “அடையாள ஆவணங்கள் ஏதும் இல்லாத ஐந்து வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.  போதைப்பொருள் கடத்திய படகுடன் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி  மற்றும் நான்கு ஸ்மார்ட்போன்கள் கைப்பற்றப்பட்டன.  

இதில் கைப்பற்றப்பட்ட பேக்கேஜில், மருந்து பேக்கேஜிங் மெட்டீரியல் ‘ராஸ் அவத் ஃபுட்ஸ் கோ, பாகிஸ்தானின் தயாரிப்பு’ என்று அச்சிடப்பட்டுள்ளது,” என்று ஞானேஸ்வர் சிங் தெரிவித்தார்.  NCB மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தபோது,  “கடந்த இரண்டு ஆண்டுகளாக, பெரும்பாலான பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளனர். 2021 இல் முந்த்ரா துறைமுகத்தில் கைப்பற்றப்பட விவகாரத்தில் ஆய்ந்ததில், அதன் கரங்களுடன் சென்னை இணைப்பு உள்ளது தெரியவந்தது.  எங்களின் மிகப்பெரிய ஹெராயின் போதைப்பொருள் எங்களை சென்னை தம்பதியிடம் அழைத்துச் சென்றது. இப்போது இந்த. சென்னையின் கோணத்தைப் பற்றி நாங்கள் குழப்பமடைந்தோம், ஜாஃபரின் மோசடியைக் கண்டுபிடித்த பிறகு, எங்களுக்கு இப்போது அதற்கான தொடர்பு புரிகிறது” என்று கூறினர். 

இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், சென்னையிலும் இந்த  விநியோகத்தை ஜாபர் சாதிக் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான். “சலீம் பாய் பிரியாணி” என்ற பெயரில் பிரியாணி விற்பனை நிலையங்களை நடத்தி வந்தார். இந்தச் சங்கிலி வளசரவாக்கம், மூலக்கடை மற்றும் நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டிருந்தது. இந்தக் கிளைகள் அனைத்தும் (காரணங்கள் தெளிவாகத் தெரியாத நிலையில்) இரண்டு மாதங்களுக்கு முன்பே மூடப்பட்டன.

நுங்கம்பாக்கத்தில் உள்ள சலீம் பாய் பிரியாணி விற்பனை நிலையம், லயோலா கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து வந்ததாகத் தெரிய வந்தது. இது தவிர, சென்னையில் நடைபெறும் அனைத்து பார்ட்டிகளுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்பவர் ஜாபர் சாதிக் என்றும், அந்த விநியோகத்தில் அவருக்கு ஏகபோக உரிமை இருந்ததையும் கண்டறிந்தார்கள்.

ஜாஃபரின் ஆளும் கட்சி தொடர்புகள் மூலம், இந்த விநியோகத்தில் இருந்த  போட்டி நசுக்கப்பட்டது. அவர் சுதந்திரமாக இயங்கினார் என்று ஜாஃபருக்கு நெருக்கமான ஒருவர் இதுகுறித்துக் கூறியிருக்கிறார். 

இது போன்ற பார்ட்டிகளுக்கு வழக்கமானச் செல்பவர் கூறிய தகவல், “போதைக்கு அடிமையான பெண்கள் போதைப்பொருளைப் பெறுவதற்கு எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். ஜாஃபர் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டார்” என்றுள்ளார்.

திமுகவில் உள்ள அனைவரும் ஜாஃபரிடம் இருந்து நிதியைப் பெற்றுள்ளனர். அவர் மிகவும் தாராளமாக இருந்துள்ளார். திமுக.,வினருக்கு வரம்பு இல்லாத ஏடிஎம் கார்டு போல் ஆனார். சுவாரஸ்யமாக, ஜாஃபர் தனது நிதியுதவியை கடன் என்று சொல்லி வழங்க மாட்டார். இதனால் திமுக.,வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகம் பெரும் தொகையை ஈட்டியபோது, ஜாஃபர் அவற்றை முதலீடு செய்து தனது ’தங்கச் சுரங்கத்தை’ சட்டப்பூர்வமாக மாற்ற முடிவு செய்தார். இதனால் அவர் திரையுலகில் தயாரிப்பாளராக நுழைந்தார் ( வழி – அமீர் சுல்தான்) . நான்கு திரைப்படங்களைத் தயாரித்தார். மாயவலை, இறைவன் மிக பெரியவன், இந்திரா மற்றும் மங்கை.  அவற்றில் இரண்டு ரிலீசுக்கு தயாராக உள்ளன.

கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து இசையமைக்கும் படத்துக்கு நிதியளிக்க இருந்தார்.  இது தவிர இயக்குனர் அமீரின் வாழ்வாதாரத்திற்காக 2007 முதல் நிதியுதவி செய்து வந்தார். 

இதுகுறித்து திரையுலகைச் சேர்ந்த ஒருவர் தகவல் தெரிவித்தபோது, “அமீர் தனது சாலிகிராமம் அலுவலகத்தை 2008ஆம் ஆண்டு தி.நகர் ராஜன் தெருவுக்கு மாற்றினார். அன்றிலிருந்து, வாடகை உட்பட முழு அலுவலகத்தின் செலவுகளையும் ஜாஃபர் ஏற்றுக்கொண்டார். அமீருக்கு செலவுக்காக மாதம் ₹10 லட்சம் கொடுக்கிறார். ஜாஃபர் பின்னால் இருப்பதால், அமீர் பல திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.  பணத்துக்காக நான் சிரமப்பட்டபோது, அமீர் எனக்கும் உதvவ முன்வந்தார். நான் நன்றி,  வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். சுமார் 8 மாதங்களுக்கு முன்பு, துபாயிலிருந்து ஒரு நண்பர் சாதிக்கைப் பற்றி எச்சரித்தார். அன்றிலிருந்து நான் அமீரிடமிருந்தும் கூட விலகி இருந்தேன்.ஜாஃபர் சாதிக்கின் வியாபாரத்தைப் பற்றி அமீருக்கு எந்தக் கவலையும் இல்லை. என்றாலும், ஜாஃபர் சாதிக்கின் செயல்பாடுகளைப் பற்றி அமீர் நன்கு அறிந்தவர் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆனால், இயக்குநர் அமீரோ தனக்கும் ஜாபர் சாதிக்குக்கும் இடையிலான உறவு என்பது திரைத்துரை தொடர்பானது மட்டுமே என்றும், ஒரு படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் தொடர்பு உண்டு என்றும், அந்தப் படத்தில் இருந்து தான் விலகிக் கொள்வதாகவும் கூறினார். ஊடகங்களில் வரும் தகவல்கள் தன்னையும் தன் குடும்பத்தாரையும் மன உளைச்சலுக்கு உட்படுத்துமே தவிர வேறு இதனால் ஒன்றும் விளையாது என்று கூறி, போதைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைத்தால் செல்லத் தயார் என்றும் கூறினார்.

ஆனால், சமூக ஊடகங்களில், இயக்குநர் அமீருக்கும் ஜாபர் சாதிக்குக்கும் இடையிலான நட்புறவு குறித்து பல்வேறு வீடியோக்கள் வைரலாக வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில், அமீரே முன் வந்து, சாதிக்குக்கும் தனக்கும் வர்த்தகத் தொடர்புகள் பல இருப்பதைத் தெரிவிக்கிறார். எனவே அமீர் மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு, தான் ஓர் அப்பாவி என தோற்றம் வரும் படி நடிக்கிறார் என்றும் சமூகத் தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.

இதனிடையே, ஜாபர் சாதிக்கின் செயல்பாடுகளை ஓரிரு ஆண்டுகளாகக் கண்காணித்து வந்த நுண்ணறிவுப் பிரிவு (ஐபி)  மூத்த அதிகாரி ஒருவர், “திரைப்படத் துறை மட்டுமல்ல,  ஜாஃபர் சாதிக்கிற்கு அமீர் சமூகத்தின் ஆதரவைக் கொண்டு வந்தார். அவர் ஜாஃபர் சாதிக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பி.ஜெய்னுலாபிதீனுக்கு அறிமுகப்படுத்தினார். ஜாஃபர் சாதிக் அனைத்து முஸ்லீம் அமைப்புகளுக்கும் தனது நன்கொடைகளில் தாராளமாக இருந்தார். 

ஏற்கனவே LYCA வழக்கில் ED விசாரணைக்கு உட்பட்ட உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கும் அவர் நிதி அளித்துள்ளார். ஜாஃபர் வழங்கிய நிதியை முதல்வரின் குடும்பத்தினர் பல முதலீடுகளுக்கு பயன்படுத்தியுள்ளனர்.

சிறிது காலத்தில், பணம் நிறம் மாறும். இது திரைப்படத் தொழில், ரியல் எஸ்டேட், ஆயுதக் கடத்தல், மனித கடத்தல் மற்றும் நிச்சயமாக ‘பயங்கரவாதம்’ ஆகியவற்றில் கலக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். பிரதமரும் உள்துறை அமைச்சரும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை எவ்வளவு தீவிரமாக பார்க்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றார் அந்த ஐபி அதிகாரி.  வரும் நாட்களில் திமுக மிகப் பெரிய சிக்கலை நோக்கிச் செல்லும் என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஏஜென்சிகள் ஜாபர் சாதிக் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் அனைத்து ரெகார்ட்களையும் சேகரித்துள்ளனர்.  இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. நாங்கள் தூங்கவே இல்லை. பயங்கரவாதிகளைக் கண்டுபிடிப்பதுதான் எங்களின் (தில்லி காவல்துறையின்) வேலை என்றாலும், நாங்கள் பல போதைப்பொருள் கடத்தல்களை முறியடிக்கிறோம். இந்தக் குற்றங்கள் நாடுகடந்தவை, சர்வதேச அளவிலானவை என்பதால், அண்மைய தில்லி போதைப்பொருள் கடத்தலைப் போலவே சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் உள்ளீடுகளைப் பெறுகிறோம். இந்தியா, இன்று உலக சமூகத்தால் மிகப்பெரிய மனித வள திறன் கொண்ட நாடாக பார்க்கப்படுகிறது. நமது மனித ஆற்றலை சீர்செய்ய முடியாத வகையில் சேதப்படுத்தும் நமது எதிரிகளின் புதிய ஆயுதம் போதைப்பொருள். நமது இளைய தலைமுறை போதைப்பொருளுக்கு அடிமையாகி விட்டால், இந்தியா ஏழை நாடாக மாறும். நமது பொருளாதாரம் வீழ்ச்சியடையும். சமூகம் சிதைந்து விடும். இதை எப்படி நாம் அனுமதிக்க முடியும்? ஜாஃபர் சாதிக்கின் வழக்கின் அடி ஆழத்துக்கு வருவோம், என்ன ஆனாலும் சரி” என்று அந்த ஐபி அதிகாரி மிகுந்த வேதனையுடன்  இது குறித்துக் கூறியுள்ளார். 

உண்மையில், தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் நாட்டின் நலம் விரும்பிகளுக்கு பெரும் அதிர்ச்சியையே கொடுத்திருக்கின்றன. எத்தகைய வலைப்பின்னல் இதுபோன்ற போதைக் கடத்தல் ஆசாமிகளுக்கு இருக்கிறது என்பதைச் சொல்லி எச்சரிக்கையும் செய்கிறார்கள்.

  • போதை மருந்தை தயார் செய்ய ஃபார்மா மருந்துக் கம்பெனி.
  • ஏற்றுமதி செய்ய எக்ஸ்போர்ட் நிறுவனம்..
  • பொருளை வெளியிடங்களுக்கு அனுப்ப கூரியர் கம்பெனி…
  • உள்ளூர் கடைநிலை மக்களின் விநியோகத்துக்காக பிரியாணி கடை…
  • கல்லூரி மாணவர்களுக்கு கபே…
  • உயர் மட்ட மக்களுக்கு ECRகளில் பப்ஸ் மற்றும் கிளப்புகள்…
  • கருப்புப் பணத்தை வெள்ளையாக்க சினிமா தயாரிப்பு…
  • இதில் தம்மைத் தாமே பிரபலப்படுத்தி நிறுத்திக் கொள்ள நடிப்பது,, சக நபர்களை இணைத்துக் கொள்வது
  • பாதுகாப்புக்கு ஆளும் கட்சி, அரசியல்…
  • ஹவாலா டிரான்ஸாக்‌ஷனுக்கு நெருங்கிய நெட்வொர்க்

உண்மையில், நாட்டின் மீது அக்கறையும் நாட்டின் இளைஞர்கள் மீது நம்பிக்கையும் அன்பும் கொண்ட எவராலும், இளைய சமூகம் போதைக்கு அடிமையாகி வீழ்வதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. இது இளைஞர்களின் எதிகாலம் மட்டுமல்ல,  நாட்டின்  எதிர்காலம் சம்பந்தப்பட்டதும் கூட!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version