― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக - பாஜக அணிக்கு வாக்களிப்பீர்!

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்!

- Advertisement -

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

இந்தியாவை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப் போகிறவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதற்கான 18&ஆம் மக்களவைத் தேர்தல்களின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு & புதுவையில் நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், யாருக்கு வாக்களிப்பது என்பதை நீங்கள் சிந்தித்து செயல்படுத்துவதற்கான 48 மணி நேர கெடு இன்று மாலை 6.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தக் காலத்தில் நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

2024&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி எதிர்கொள்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அவர்களை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும் என்று இக்கட்சிகள் உறுதி பூண்டுள்ளன.

வழக்கமாக மக்களவைத் தேர்தல்கள் மத்திய ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்தல் தான் என்றாலும் கூட, தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நடப்பு மக்களவைத் தேர்தல் சற்றே வேறுபட்டது. மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள்? என்பதை தீர்மானிப்பதைக் கடந்து, தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள்விரோத ஆட்சிக்கு கடிவாளம் போடுவதற்கும் இந்தத் தேர்தல் உதவும் என்பது தான் நடப்பு மக்களவைத் தேர்தலின் சிறப்பு என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் மத்தியில் மீண்டும் அமைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் ஆகும். இந்தியா முழுவதும் வீசும் அதே மோடி ஆதரவு அலை தான் தமிழ்நாட்டிலும் வீசுகிறது. தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு பரப்புரை சென்று வந்ததன் மூலம் மோடி ஆதரவு அலையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் 90 விழுக்காடு தமிழ்நாட்டு மக்கள் தங்களின் வாக்கு யாருக்கு? என்பதை முடிவு செய்து விட்டார்கள். இதுவரை முடிவெடுக்காத வாக்காளர்கள் எதற்காக பாட்டாளி மக்கள் கட்சியை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சில கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை சமூகநீதியை வளர்த்தெடுப்பதையும், தமிழக உரிமைகளை வென்றெடுப்பதையும் மிக முக்கியமானதாக கருதுகிறது. சமூகநீதியை வளர்த்தெடுப்பதற்கு அடிப்படை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது 70 ஆண்டு கனவு என்றாலும் கூட, தொடுவானத்தைப் போல நமது கைகளில் இருந்து நழுவிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சி எப்போதெல்லாம் அதிக பிரதிநிதித்துவம் பெறுகிறதோ, அப்போதெல்லாம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை கிட்டத்தட்ட சாத்தியமாக்க முடிந்திருக்கிறது. ஆனாலும், பா.ம.க. இல்லாத சூழல்கள் அதை சீரழித்திருக்கின்றன. இந்த முறை பா.ம.க. அதிக பிரதிநிதித்துவம் பெற்றால் சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக சாத்தியமாகும். அதைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற பெருங்கனவும் நனவு ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை கட்டமைக்கப்பட்டதில் தமிழகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதனால், அதற்கேற்ற அளவில் அவற்றில் மாநில ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித் திட்டங்கள், கட்டமைப்பு வசதிகள், வேளாண் கட்டமைப்புகள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசிடமிருந்து தான் நாம் பெற்றாக வேண்டியுள்ளது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் 2014&ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த 37 உறுப்பினர்களும், 2019&ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அணியைச் சேர்ந்த 38 உறுப்பினர்களும் சமூகநீதிக்காகவோ, தமிழக நலன்களுக்காகவோ குரல் கொடுக்கவில்லை.

சமூகநீதிக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் குரல் கொடுப்பதையே முதல் கடமையாகக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, அதிகபட்சமாக அது போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற்றால் தான் தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் வலிமையாக ஒலிக்கும்; உரிமைகள் கிடைக்கும்.

மற்றொருபுறம் ஆபத்தான திசையிலும், அழிவுப் பாதையிலும் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசை கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. திமுக கூட்டணியை வீழ்த்துவதன் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகும். மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை. மாறாக, மின்கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மோட்டார் வாகன வரி உயர்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, 10 முறை பால் விலை உயர்வு ஆகியவை தான் வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு அளித்த பரிசு ஆகும். திமுக அரசின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்று கூட இல்லை.

2021 தேர்தலில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக செய்து முடிப்போம் என்று 510 வாக்குறுதிகளை திமுக அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகியும் 50 வாக்குறுதிகள் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இளைஞர்கள், மகளிர், அரசு ஊழியர்கள் ஆகியோரின் நலன் சார்ந்தும், கல்வி, சுகாதாரம், வேளாண்மை, வேலைவாய்ப்பு ஆகியவை சார்ந்தும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்த பல்வேறு தரப்பினருக்கும் ஏமாற்றம் மட்டுமே பரிசாகக் கிடைத்தது.

  1. ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
  2. தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75% தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
  3. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  4. தற்காலிகப் பணியாளர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்கப்படும்.
  5. மின்பயன்பாட்டு கணக்கீடு மாதம் ஒரு முறை நடத்தப்பட்டு, கட்டணம் குறைக்கப்படும்.
  6. பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும்.
  7. நெல் குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்பு டன்னுக்கு ரூ.4000 கொள்முதல் விலையாக வழங்கப்படும்.
  8. அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்.
  9. சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்.
  10. மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
  11. ரூ.2000 கோடியில் 200 தடுப்பணைகள் கட்டப்படும். ரூ.3000 கோடியில் கொள்ளிடத்தின் குறுக்கே 5 தடுப்பணைகள் கட்டப்படும்.
  12. பல்வேறு சமூகங்களின் உள் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மீனவர்களை பழங்குடியினராக அறிவிக்க சட்டம் இயற்றப்படும்.
  13. 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்கள் வேலைத் திட்டமாக மாற்றியமைக்கப்படும்.
  14. மத்திய அரசு பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை தமிழ்க் கட்டாயப் பாடமாக்கப்படும்.
  15. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேம்படுத்தப்படும்.

திமுகவால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் மேற்கண்டவை மிகவும் முக்கியமான வாக்குறுதிகளாகும். ஆனால், இந்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதிலிருந்தே மக்களை திமுக அரசு மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. மக்களை மதிக்காத திமுகவுக்கு மக்கள் அளிக்க வேண்டிய சரியான தண்டனை தோல்வி தான். அதை திமுகவுக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.

தமிழக வாக்காளர்களுக்கு ஒரே தேர்தலில் இரு இலக்குகளை சாதிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்துவது, தமிழ்நாட்டில் மக்களை வாட்டும் திமுக அரசை தண்டிப்பது ஆகியவை தான் அந்த இரு இலக்குகள். இந்த இலக்குகளை சாதிக்க நாளை மறுநாள் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பா.ம.க., பாஜக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு மாம்பழம், தாமரை, சைக்கிள், குக்கர், பலாப்பழம் ஆகிய சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்; அதன்மூலம் தமிழ்நாட்டை தீமைகளில் இருந்து மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுக்கவும் வகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version