இந்தியாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு மேலும் 7 நாட்கள் போலீஸ் காவல்

 
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் 11 பேருக்கு மேலும் 7 நாட்கள் தேசிய புலனாய்வு பிரிவு காவலில் வைத்து விசாரிக்கநீதிமன்றம் அனுமதி அளித்தள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக சிலர் செயல்படுவதாக புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி இந்தியா முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை தேசிய புலனாய்வு பிரிவினர் காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த முகமது அப்துல் அஹத் (வயது 46), கோவை உக்கடத்தை சேர்ந்த ஆசிப் அலி (21) ஆகியோர் கடந்த 23–ந்தேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.
இந்த 15 பேரில் 11 பேரின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் டெல்லி மாவட்ட நீதிபதி அமர்நாத் முன்பு தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவர்கள் 11 பேரையும் மேலும் 10 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்கள் தங்கள் மனுவில், விசாரணையின்போது குற்றவாளிகள் சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர விரும்புபவர்களுக்கு நிதி உதவிகள் வழங்கியதாகவும், ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆட்களை சேர்த்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் ஐ.எஸ். இயக்கத்தின் தீவிரமான உறுப்பினர்களுடன் ‘ஸ்கைப்’, ‘சிக்னல்’, ‘டிரில்லியன்’ போன்ற பல்வேறு கைப்பேசி அப்ளிகேஷன்கள், இணையதளங்கள் வழியாக தொடர்பு கொண்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.
அவர்களின் அடையாளங்கள், ஐ.எஸ். இயக்கத்துக்கு அவர்கள் ஆற்றிய பங்கு போன்றவை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
அவர்களில் 9 பேர் சார்பாக ஆஜரானவழக்கறிஞர் எம்.எஸ்.கான் தேசிய புலனாய்வு பிரிவின் கோரிக்கையை எதிர்த்தார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிரியாவில் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என அவர்கள் மனுவில் குறிப்பிடவில்லை. கடந்த 10 நாட்களாக அவர்கள் காவலில் வைத்து இந்த வழக்கு தொடர்பாக விசாரித்துள்ளனர். எனவே மேலும் காவலை நீட்டிக்க தேவையில்லை என்றார்.
மாவட்ட நீதிபதி அமர்நாத் 11 பேருக்கும் மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவுக்கு அனுமதி அளித்தார். அதனைத் தொடர்ந்து முகமது அலீம், முகமது உபைதுல்லா கான், நபீஸ்கான், முகமது ஷெரீப் மொய்னுதீன்கான், ஆசிப் அலி, நஜ்முல் ஹூடா, முடாபிர் முஷ்டாக் சேக், முகமது அப்துல் அஹாத், சுஹைல் அகமது, சையன் முஜாஹித், மொகமது ஹுசைன்கான் ஆகிய 11 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த 11 பேர் தவிர முகமது அப்சல், இம்ரான், அபு அனாஸ், நசீர் பக்கீர் ஆகிய மேலும் 4 பேரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். மொத்தம் 15 பேரில் நசீர் தவிர மற்ற 14 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.