― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்அருளைப் பொழியும் அன்னை வரலக்ஷ்மி!

அருளைப் பொழியும் அன்னை வரலக்ஷ்மி!

- Advertisement -

வரலக்ஷ்மி விரதம்: அருளைப் பொழியும் வரலக்ஷ்மி! தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் : ராஜி ரகுநாதன்

உலகம் தோன்றக் காரணமான மகா சைதன்யம், தன் அளப்பரிய சக்திகளுடன் இப்பிரபஞ்சத்தை வழி நடத்துகிறது. அப்படிப்பட்ட ‘அனந்த சக்தி ஸ்வரூபிணியை’ மகாலட்சுமியாக ஆராதிக்கும் நம் பாரத கலாசாரத்தில் தேவியை ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு விதமாக   பூஜிப்பது  வழக்கம் .

‘ஆர்த்ராம் புஷ்கரிணீம்’ என்று ஸ்ரீசூக்தம் வர்ணிக்கிறாற் போல் கருணை பொழியும் ‘கருணா ரஸ ஸ்வரூபிணி‘  ஜகதாம்பாளை கெளரியாக, லக்ஷ்மியாக ஆராதிக்கும் மாதம் சிராவணம் (ஆவணி).

அம்பாள்  ‘ரஸ ஸ்வரூபிணி’.  அதனால்தான் ரசமயமாக உள்ள சந்திரனின் கலைகளை அனுசரித்து தேவியை வழிபடுகிறோம். ‘சந்த்ராம் சந்திர சகோதரீம்’ என்பது லக்ஷ்மியின் நாமம். சந்திரனின் உடன் பிறந்தவள்  என்பது புராணங்களின் கூற்று.  மகிழ்ச்சி, கருணை, பூரணத்துவம், ப்ரீத்தி போன்றவை அனைத்தும் சந்திரனின் குணங்கள்.  இக்குணங்களுக்கு  லக்ஷ்மியே தேவதை.

பிரபஞ்சத்தை காக்கும் தொழிலைச் செய்யும் விஷ்ணுவை விட்டு விலகாதவளாக (அனபாயனியாக)  விளக்குக்கு ஒளி போலவும், சந்திரனுக்கு தண்மை போலவும் உடன் விளங்கும் ஐஸ்வர்ய ஸ்வரூபிணி மகாலட்சுமி,

‘நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோஸ் ஸ்ரீர் அனபாயனீ’ என்று துதிக்கப்படுகிறாள். விஷ்ணுவிடம் ‘நித்ய’மாக இருக்கும் ஜகன்மாதாதான் சுவர்க்கத்தில் சுவர்க்க லக்ஷ்மியாகவும், பூமியில் பூலக்ஷ்மியாகவும், வீடுகளில் க்ருஹலக்ஷ்மியாகவும் விளங்குகிறாள்.  லக்ஷ்மி என்றால் ஒரு சாகார மூர்த்தி மட்டுமன்று. உத்தம திவ்ய குணங்களின் ஒருமித்த சக்தி.  அச்சக்தியின் வெளிப்படையான உருவமே லக்ஷ்மி தேவி.

மூவுலகங்களையும்  படைத்தபின் விஷ்ணு, அவற்றிற்கு அதிபதியாக இந்திரனை நியமித்து அதற்குத் தேவையான சக்தியை அவனுக்கு அனுக்ரஹித்தார். அவனுடைய அரசாட்சிக்குத் தகுந்த போகங்களை அமைத்துக் கொடுத்த ‘விஷ்ணுவின் கிருபா சக்தியே’ அவனிடம் லக்ஷ்மியாகச் சேர்ந்தது.  ஆனால் இந்திரன் அகங்காரத்தால் எல்லை மீறியதால் லக்ஷ்மி அவனை விட்டகன்றாள். இந்திரனின் அனைத்துச் செல்வங்களும் அழிந்தன.

இந்திரன் பச்சாதாபத்துடன் ஹரியைச் சரணடைந்தான். பாற்கடலைக்  கடைந்த போது அதிலிருந்து மீண்டும் லக்ஷ்மி தேவி தோன்றி ஸ்ரீமன் நாராயணனை அடைந்தாள்.

கடவுளருளால் செல்வத்தைப் பெற்றிருந்தாலும் கூட அகங்காரம் போன்ற துர்குணங்களால்  செல்வம் நம்மை விட்டகலும் என்பதை இதிலிருந்து அறியலாம்.  ஆனால் பச்சாதாபத்தோடு சரணடைந்தால் ஈஸ்வர அனுக்ரகத்தால் தேவியின் தயை கிடைத்தாலும் அவள் ஈஸ்வரனின் சக்தியே என்ற உண்மையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.  இதுவே லக்ஷ்மி, சர்வேஸ்வரரான ஹரியை மணந்ததன் உட்பொருள்.

லக்ஷ்மி தேவி எப்படிப்பட்ட வீடுகளில் ஸ்திரமாக இருப்பாள்? எவ்வெவ் வீடுகளை விட்டுச் சென்று விடுவாள்? என்பதை நம் புராணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. நல்ல பழக்க வழக்கங்கள், சத் குணங்கள், மங்களமான சூழ்நிலை, சுத்தம், சுகாதாரம் உடைய வீடுகளில் அம்பாள் எப்போதும் தங்குவாள்.  எந்த வீடுகளில் தேவ, பித்ரு காரியங்கள் தடையின்றி நடைபெறுமோ அவ்வீடுகளில் ஸ்ரீ தாண்டவமாடுவாள். சுத்தம், இந்திரிய நிக்ரகம், மனம், வாக்கு, காயத்தில் பவித்திரமாக விளங்குபவர்கள், அன்பு கொண்டவர்கள், நட்பு மிகுந்தவர்கள், தைரிய சாலிகள்… போன்ற  சத்துவ குணம் கொண்டவர்களை ஸ்ரீதேவி விட்டுப் பிரிய மாட்டாள்.

* தாய் தந்தையரை, குருவை அவமானிப்பவர் வீடுகளில் லக்ஷ்மி நிலைப்பதில்லை.
* எந்த வீடுகளில் அதிதிக்கு அன்னமளிப்பதில்லையோ அவர்கள் வீடுகளிலும் லக்ஷ்மி தங்குவதில்லை.
* பொய் பேசுபவர், தானம் கொடுக்க மறுத்து இல்லை என்பவர், நன்னடத்தை இல்லாதவர்,
* பிறர் பொருளை அடைய விரும்புபவர், பிறர் பொருளை அபகரிப்பவர்,
* பொய் சாக்ஷி சொல்பவர், நன்றி மறப்பவர், நன்றி இல்லாதவர், உற்சாகமின்றி இருப்பவர், பயம், திகில் கொண்டவர்,
* சந்தியா வேளையில் உறங்குபவர், பகலில் உறங்குபவர், தர்மம் செய்யாதவர்… போன்றவர்களை விட்டு விஷ்ணு பத்தினி லக்ஷ்மி விலகி விடுவாள்.


— மேற்சொன்னவற்றிற்கு ஆதாரம்: ஸ்ரீ மகாபாரதம், ஸ்ரீ விஷ்ணு புராணம்.

தனி மனிதனானாலும், சமுதாயமானாலும் சத்குணங்கள் மிக்கிருந்தால் மட்டுமே லக்ஷ்மி தேவியின் அனுக்ரகம் கிடைக்கிறது. மேம்பட்ட நற்குணங்கள், தேஜஸ், அழகு, செல்வம், உற்சாகம், ஆனந்தம், சாந்தம், சமாதானம், திருப்தி – இந்த சுப குணங்களின் ஒரு வடிவமே லக்ஷ்மி தேவி. இந்நல்ல குணங்களைத்தானே  அனைவரும் விரும்புகின்றனர்?  அதற்காகத்தான் மகாலக்ஷ்மி  வழிபாடு.

மழைக்கால பண்டிகைகளில் சிராவண பௌர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமையன்று வரலக்ஷ்மி விரதம் செய்வது என்பது நம் சனாதன சம்பிரதாயம்.

இவ்விரதத்தன்று வழக்கமாகப் படிக்கப்படும் கதை அழகான உபகதைகளோடும்  தர்ம சூசனைகளோடும் கூடியது.  இனிமை, பிரேமை, நேசம், அமைதி இவைகளைக்கொண்ட வாழ்க்கையை வாழ்ந்தபடி இல்லற தர்மத்தை நல்லவிதமாக கடைப்பிடித்து வந்த ‘சாருமதி’யை  லக்ஷ்மி தேவி எவ்வாறு அனுகரகித்தாள்  என்பதே அக்கதை. 

‘சாருமதி’ என்ற பெயரிலேயே பொருத்தமாக பொருள் அமைந்துள்ளது.  ‘அழகான அறிவே’ சாருமதி.  துராலோசனை, துஷ்ட சங்கல்பம், துர்குணங்கள் அற்ற நல்ல மனமே ‘சாருமதி’.  அப்படிப்பட்ட நல்ல மனம் கொண்டவர்களே லக்ஷ்மியின் அனுக்ரஹத்தைப் பெறுவர் என்பது இக்கதை கூறும் முதல் செய்தி.

சாருமதியின் கனவில் தேவி தோன்றி  விரதம் செய்யும்படி கட்டளையிடவே, விடியற் காலையிலேயே  துயில் லெழுந்து கணவனிடமும் மாமியார் மாமனாரிடமும்  விரதம் பற்றி தெரிவிக்கிறாள்.  மாமியார் மாமனார் ஆனந்தத்துடன் ஆசீர்வதிக்க, கணவன் சந்தோஷமாக அனுமதி அளிக்கிறான்.  வஞ்சனையறியாத அன்னியோன்னியமான  குடும்பம் அவர்களுடையது…. என்று இக்கதை தொடங்குகிறது.  அன்பை ஆதாரமாகக் கொண்ட திருப்தியான சூழ்நிலையே லக்ஷ்மியின் கிருபைக்கு ஏற்ற இடம்.

தன்னை ஒத்த மற்ற பெண்களுடன் சேர்ந்து இவ்விரதத்தைச் செய்கிறாள் சாருமதி.  சமுதாயத்தில் இருக்க வேண்டிய பரஸ்பர ஒற்றுமையை இச்செய்தி மூலம் வெளிப்படுத்துகிறது இக்கதை. 

எதிர்ப்படும் தடைகளை ஜெயிப்பதுதான் ‘ஜெய லக்ஷ்மி’.  செயல் செய்யத் தேவையான புத்தி கூர்மை, முடிவெடுக்கும் திறன், விஞான அறிவு போன்றவைகள் அனைத்தும் ‘வித்யா லக்ஷ்மி’. அதுவே ‘சரஸ்வதி’.  அதன் பலனாகப் பெறும் செல்வம், ஆனந்தம் இவை ‘ஸ்ரீலக்ஷ்மி’. இவற்றின் மூலம் கிடைக்கும் சிறப்பு  ‘வர லக்ஷ்மி’.  இறுதியாகப் பெற வேண்டிய  இலக்கு இதுதான்.

அதனால்தான் வரலக்ஷ்மி விரதம் என்பது  மற்ற ஐந்து லட்சுமிகளையும் சேர்த்து  ஆராதித்து அருள்  பெறும் பண்டிகை.

இப்பூஜையில் தேவியை ஆராதிக்கும் ஸ்வரூபம் ‘கலசம்’. கலசத்தில் அரிசியோ, ஜலமோ  நிரப்பி, பசுமையான மாவிலையை வைத்து அதன் மேல் தேங்காய் வைத்து ஆராதிப்பது மிகவும் விசேஷத்தோடு கூடியது. பிரம்மாண்டம் என்னும் கலசத்தில் செல்வம், மங்களத்தைக் குறிக்கும் பசுமை, பூரண பலனைக் குறிக்கும் தேங்காய் போன்றவை அமைந்து பூஜையைப்  பெறுகின்றன.

‘வரம்’ என்றால் ‘ஸ்ரேஷ்டம்’, சிறப்பு என்று பொருள்.  நாம் பெறும் ஒவ்வொன்றும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.  அவற்றை அளிக்கும் ஜகதாம்பாளே வரலக்ஷ்மி. சிறப்பு மிக்க உருவமே தேவியின் ஸ்வரூபம்.  அந்த தேவியின் மனம் குளிருவதை விட நமக்கு வேண்டியது வேறு என்ன இருக்க முடியும்? சுத்த ஸ்வரூபத்துடன் விளங்கும் ஜகத்ஜனனி ஸ்ரீலக்ஷ்மி தேவி.  சிலர் அஷ்ட லக்ஷ்மியாக, சிலர் சோடஷ  லக்ஷ்மியாக பூஜித்தாலும் அவள் என்றும் அனந்த லக்ஷ்மி.

சூரிய காந்தி, சந்திர காந்தி, அக்னியில் ஒளி, பூமியில் பளு, ஜலத்தில் குளுமை, க்ஷேத்திரங்களில் பசுமை, புஷ்பங்களில் சௌந்தர்யம், பழங்களில் பளபளப்பு, ஆரோக்கியம், உற்சாகம், ஆகாயத்தில் விசாலம், சமுத்திரங்களில் கம்பீரம், குரல்களில் மொழி, சரீரத்தில் சைதன்யம், வித்யைகளில்  விஞ்ஞானம்… இப்படிப்பட்ட எண்ணிலடங்காத விபூதிகள், ஐஸ்வர்யங்கள்… எத்தனை எத்தனையோ! பரமேஸ்வரரின் இந்த அனந்த சக்திகளே அனந்த லக்ஷ்மிகள்.  இத்தனை சக்திகளையும்  அள்ளித் தந்திடும் ரே திவ்ய சக்தி வர லக்ஷ்மி.

ஒரே சைதன்யத்தில் இருந்து அனைத்து குணங்களும் வெளிப்படுகிறாற்போல் ஒரே பரமாத்மா அனேக தேவதை உருவங்களாக வழிபடப்படுகிறார்.

பிரபஞ்சம் முழுவதும் விரிந்துள்ள தேஜஸ், அழகு, கருணை, செல்வம், ஒளி, இனிமை, வாத்சல்யம், ஆனந்தம் போன்ற திவ்ய குணங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் அந்த ஸ்வரூபமே லக்ஷ்மியின் ரூபம்.

varalakshmi vradham

ஜகத்தினைப் போஷிப்பது ஐஸ்வர்ய  சக்தி. அந்தந்த பொருட்களின் இயற்கை லட்சணமே அதன் ஐஸ்வர்யம். நாம் கண்களுக்கு அணியும் தங்கத்தாலான  மூக்கு கண்ணாடி லக்ஷ்மியின் ஸ்வரூபமல்ல. கண்களின் இயற்கையான பார்வை, அழகு இவையே லக்ஷ்மியின் ஸ்வரூபம்.  இதுபோல் இயற்கையில் ஒவ்வொரு பொருளுக்கும் இருக்க வேண்டிய முழுமையான லட்சணம், அழகு… இவையே லக்ஷ்மியின் வடிவம்.

லக்ஷ்மிதேவி என்ற உடன் வெறும் தன ரூபிணி, செல்வத்தை அளிப்பவள் என்று எண்ணி விட வேண்டாம்.  சுத்த சத்துவ ஸ்வரூபிணி, மங்களகரமான குணங்களுக்கு ஓர் உருவம் அவள்.  ஸௌம்யம், மங்களம், சாத்வீகம்…. போன்ற கல்யாண குணங்களின் ஒட்டு மொத்த உருவமே ஸ்ரீ லக்ஷ்மி.

இந்த தாய்க்கு ‘பத்மா’ என்று ஒரு பெயர் உண்டு.  மலரும்  லக்ஷணம் தாமரைக்கு உரியது.  பத்மம், மலரும் ஞானத்திற்கும், ஐஸ்வர்யத்திற்கும் சின்னம்.   மகாவிஷ்ணுவின் ஹ்ருதய கமலத்தில் லக்ஷ்மி தேவி வீற்றிருக்கிறாள் என்று நம் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. இதன் பொருள், ஸ்ரீமகாவிஷ்ணுவின் சங்கல்ப சக்தியே உலகில் ஐஸ்வர்யமாக வியாபித்துள்ளது என்பது.

பகவானின் மனோ சங்கல்பம், தயை ஐஸ்வர்ய தேவியாக அனுக்ரகிக்கிறது.  அதோடு கூட லக்ஷ்மி தேவி, பகவானின் ஹ்ருதயத்தில் மட்டுமின்றி சுவாமியின் பாதத்தருகிலும் அமர்ந்து அவருக்கு பாத சேவை செய்கிறாள். எத்தனை அருமையான பாவனை இது! ஹ்ருதயத்தில் ஆதி லக்ஷ்மி. பாதத்தருகில் சேவை! பகவான் ஸ்ரீஜனனிக்கு அளித்த இடம் ஹ்ருதயம்.  அது அவருடைய அனுக்ரகம். ஆனால லக்ஷ்மி தேவிக்குப் பிடித்த இடம் அவருடைய பாத கமலங்கள்.  இது தேவியின் அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மையைக் காட்டுகிறது. தாம்பத்ய தர்மத்திற்கு இதை விடச் சிறந்த உதாரணத்தை வேறெங்கும் காண இயலாது. 

பகவான், தன் ஹ்ருதயத்தில்  உள்ள கருணையை நமக்கு செல்வத்தின் உருவில் அருளுகையில், நாம் அதை இறைவனின் சரண கைங்கர்யமாக அர்ப்பணிக்க வேண்டும் என்ற பாவனையே இந்த ஸ்வரூபத்தின் மூலம் பெறப்படுகிறது. சுயநலமற்ற விதத்தில் ஸ்வதர்மத்தை பகவத் அர்ப்பணமாகச் செய்வதே கைங்கர்யம் எனப்படுகிறது.

source:- August, 2010, Rushipeetam-  Telugu monthly magazine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version