Home கட்டுரைகள் பாரதி-100: கண்ணன் பாட்டு (1)

பாரதி-100: கண்ணன் பாட்டு (1)

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பகுதி – 1 – அறிமுகம்

     ‘முப்பெரும் பாடல்கள்’ எனப் போற்றப்பெறும் மகாகவி பாரதியாரின் பாடல்களில் கண்ணன் பாட்டும் ஒன்று. மற்ற இரண்டும் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவையாகும். கண்ணன் பாட்டின் சிறப்பு என்ன தெரியுமா? பண்டைய நாட்களில் மாணிக்கவாசகர், ஆண்டாள் நாச்சியார் முதலானோர் தங்கள் பாடல்களில் இறைவனைத் தலைவனாகவும் மற்ற உயிர்கள் அனைத்தும் தலைவியாகவும் பாவித்துப் பாடல்களை இயற்றினர். இறைவன் ஒருவன். உயிர்கள் பல. அந்த ஒருவனான இறைவனை அடைய உயிர்களெல்லாம் நாயக நாயகி பாவங்களைக் கொண்டு பாடல்கள் வெளிவந்தன. ஆனால் மகாகவி பாரதி அந்தப் பழைமையை தவிர்த்துவிட்டு புதிய பாதை வகுத்தான்.

     இங்கு பாரதி தன்னைத் தலைவனாகவும், இறைவனைத் தன் காதலியாக, காதலனாக, சேவகனாக, அரசனாக, அமைச்சனாக, தோழனாக இப்படிப் பற்பல முறையில் பாவித்துப் பாடியிருக்கிறான். இதுதான் அவனைப் புரட்சிக்கவியாகப் பார்க்க உதவுகிறது. இந்தப் புரட்சி உள்ளத்தைப் போற்றும் விதத்தில்தான் “கண்ணன் பாட்டை” நாம் பார்க்க வேண்டும்; படிக்கவேண்டும். கண்ணன் பாட்டு என்ற தலைப்பில் பாரதியார் 23 பாடல்களைப் பாடியிருக்கிறார். இவை முறையே, கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காந்தனாக, காதலியாக, ஆண்டானாக, குலதெய்வமாக என்று வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறார்.

     மற்ற தலைப்புகளில் எல்லாம் ஒவ்வொரு பாட்டு வீதம் எழுதிய பாரதியார் காதலன் எனும் தலைப்பில் 5 பாடல்களையும், காதலி எனும் தலைப்பில் 6 பாடல்களையும் எழுதியிருக்கிறார். “கண்ணம்மா என் காதலி” என்ற பாடல்களில் பண்டைய தமிழிலக்கிய அகத்துறை மரபு சார்ந்ததாக, காட்சி வியப்பு, பின்னே வந்து கண் மறைத்தல், முகத்திரை களைதல், நாணிக்கண் புதைத்தல், குறிப்பிடம் தவறியது, யோகம் எனும் தலைப்புகளில் பாடல்களை அமைத்திருக்கிறார்.

subramanya bharathi

     கண்ணன் பாட்டை முதன் முதலில் பாரதியாரின் சீடர் பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் 1917இல் பதிப்பித்தார்கள். அவருடைய பதிப்பின் முன்னுரையில் அவர் பாரதி பற்றி கூறும் கருத்து மனதில் நிறுத்திச் சிந்திக்கத்தக்கது. அந்த பகுதி இதோ:-

“பாரதியார் பாடல்களின் பெருமையைப் பற்றி யான் விரித்துக் கூறுவதென்றால், இந்த முகவுரை அளவு கடந்து பெரிதாய் விடும். ஒரு வார்த்தை மட்டும் கூறுகிறேன். இந்த ஆசிரியர் காலத்திற்குப் பின் எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின், இவர் பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான் இப்பொழுதே காண்கிறேன்”

  பரலி சு.நெல்லையப்பர் அவர்களின் கூற்று எவ்வளவு தீர்க்கதரிசனமானது. இன்று பாரதியாரின் பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்படாத மேடைகளே இல்லை. பாரதியாரைக் குறிப்பிடாத பேச்சாளர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

     பரலி சு.நெல்லையப்பர் வெளியிட்ட முதல் பதிப்பிற்குப் பின் அதன் இரண்டாவது பதிப்பு 1919இல் வெளியானது. இந்த இரண்டாம் பதிப்பிற்கு வீர விளக்கு வ.வெ.சு.ஐயர் அவர்கள் முன்னுரை எழுதியிருக்கிறார்கள். அந்த முன்னுரையில் ஐயர் அவர்கள் குறிப்பிடுவதாவது:-

“கவிதை அழகை மாத்திரம் அனுபவித்துவிட்டு, இந்நூலின் பண்ணழகை மறந்து விடக்கூடாது. இதிலுள்ள பாட்டுகளிற் பெரும்பாலானவை தாளத்தோடு பாடுவதற்காகவே எழுதப்பட்டவையாக இருக்கின்றன. கடற்கரையில் சாந்திமயமான சாயங்கால வேளையில், உலகனைத்தையும், மோக வயப்படுத்தி நீலக்கடலையும், பாற்கடலாக்கும் நிலவொளியில், புதிதாகப் புனைந்த கீர்த்தனங்களைக் கற்பனா கர்வத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான குரலில் பாடினதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்நூலில் உள்ள பாட்டுக்களை மாணிக்கங்களாக மதிப்பர்”  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version