― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்நிகழ்ச்சிகள்தமிழ் தினசரி இணைய இதழின் பத்தாம் ஆண்டு விழாவில்... கவனம் ஈர்த்த விஷயங்கள்!

தமிழ் தினசரி இணைய இதழின் பத்தாம் ஆண்டு விழாவில்… கவனம் ஈர்த்த விஷயங்கள்!

- Advertisement -

மார்ச் 10 அன்று மாலை 5.30 மணிக்கு மயிலை கோகுலே சாஸ்திரி அரங்கில் செங்கோட்டை ஶ்ரீராமின் இறைவணக்கமுடன் தொடங்கியது தமிழ் தினசரி மின்பத்திரிக்கையின் 10 ஆவது ஆண்டு விழா, தெய்வத் தமிழர் விருது வழங்கும் விழா.

செங்கோட்டை ஶ்ரீராம் அவர்களின் ஐம்பதாவது (நட்சத்திரம்) பிறந்த நாளும் இன்று. அவருக்குப் பல்லாண்டு பல்லாண்டு நல்வாழ்த்துகள்.

தேசத் தொண்டு, தெய்வத் தொண்டாற்றிய ஐந்து சான்றோர்களுக்கு விழாவில் “தெய்வத் தமிழர்” விருது வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

விழாவில் உரையாற்றியவர்களின் உரையிலிருந்து சில வைரத்தெளிப்புகள்:

நிதானமாகவும், தெளிவாகவும் வரவேற்புரையும், இணைப்புரையும் வழங்கிய செங்கோட்டை ஶ்ரீராமின் உரையிலிருந்து:

: உடலும், உள்ளமும் சோர்ந்த போது என்னைத் தூக்கி நிறுத்தி, பழைய பலமான செங்கோட்டை ஶ்ரீராமாக மாற்றிய மகான் சுவாமி ஞானானந்தர்.

: பல பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவமும், நண்பர்கள் கொடுக்கும் ஊக்கமுமே எனது “தினசரி” மின்பத்திரிக்கையின் வளர்ச்சிக்குத் காரணம்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்:

: தினமணியின் முதல் ஆசிரியர் T.S.சொக்கலிங்கம். அவர் தினமணியில் இருந்து வெளி வந்து தொடங்கிய பத்திரிக்கையின் பெயர் “தினசரி”. செங்கோட்டை ஶ்ரீராமும் தினமணியில் இருந்து வெளி வந்து தொடங்கிய மின் பத்திரிக்கையின் பெயரும் “தினசரி”.

: ஶ்ரீ ஞானானந்ந சுவாமிகள் துறவைக் கூடத் துறந்த துறவி என்றார். காரணம் ஆதிசங்கரரின் நான்கு பீடங்களில் ஒன்றான புரிக்கு பீடாதிபதியாக இருந்தவர். அதைத் துறந்து தென்னாட்டில் தபோவனத்தில் இருந்தார். (சிறு திருத்தம்: பீடாதிபத்யத்தைத்தான் துறந்தாரே அன்றி துறை அல்ல.)

:கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. ஞானானந்த சுவாமிகளை நேரில் தரிசனம் செய்தவர்.

: விருது வழங்கும் நோக்கமே அதைப் பெற்றுக் கொள்பவருக்கு புதிய தெம்பும், ஊக்கமும் தரும் என்ற உன்னத எண்ணம்தான்.

தலைமையுரையாற்றிய கே. அமர்நாத் உரையிலிருந்து:

: ஞானானந்த சுவாமிகள் நூற்றியிருபது வயதிற்கும் மேல் வாழ்ந்த மகான். பக்தர் ஒருவர் அவரது உண்மையான வயதை அறிய முயன்ற போது சுவாமிகள்,”வயசு ஆராய்ச்சி எதுக்கு? மரத்தில் காய்த்த பழத்தின் ருசியை அனுபவிக்க வேண்டுமே தவிர, அந்த மரத்தின் வயதை ஆராய்ச்சி பண்ணி என்ன பயன்” என்றாராம்.

நிறைவாக இசையோடு உரை செய்த திருமதி சிந்துஜா:

: சுவாமி ஞானானந்தரின் வாக்கில் எப்போதும் வருவது,”மகிழ்வித்து மகிழ்” என்பதே.

: சுவாமிகள் எளிய மக்களின் வார்த்தைகளிலேயே பேசுவார்.

: மகாகவி பாரதியார் சுவாமி ஞானானந்தரை தரிசனம் செய்திருக்கிறார். அவரே குள்ளச்சாமி என்ற குருநாதர்.

: ஒருமுறை சுவாமிகள் சமாதி அடைந்தார் என அவரது தலையில் நூற்றி ஏழு தேங்காய்களை உடைத்தார்களாம். நூற்றி எட்டாவது தேங்காயை உடைக்கும் பொழுது, தன் தலையைத் தடவிக் கொண்டே ,”இன்னும் கொஞ்ச நாள் இந்த தேகம் இருக்கட்டுமே என்றபடி எழுந்து வந்தாராம்”.

: தனது கடைசி நாளில் அவர் குளிருக்காக அணிந்திருந்த சட்டையைக் கழட்டுங்களேன் என்று ஒரு பக்தர் கேட்க ,”இனிமே இந்தச் சட்டையைக் கழட்ட வேண்டியதுதான் என்றவர் மறுநாள் அதிகாலை நான்கு மணிக்குக் குளிக்கப் சென்ற இடத்திலேயே முக்தி அடைந்து விட்டார்.”

:குருநாதர், சுவாமி ஞானானந்தரை எண்ணிப் பாடிய பாடலால் உள்ளம் அந்தக் குள்ளச்சாமியின் நினைவால் நிறைந்தது.

அற்புதமான, ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான மற்றவரைப் போற்றும் நிகழ்ச்சி சுவையான லட்டு, போண்டா, காபி எனத் தொடங்கி
நாட்டுப் பண்ணுடன் நிறை வடைந்தது.

அன்பன்,
மீ.விசுவநாதன்
10.03.2024 11.59 pm


ஸ்ரீராமின் தினசரி இணையதளத்தின் பத்தாவது ஆண்டு விழா அதியற்புதமாக ஒரு ”குடும்ப” விழாவாக இன்று மாலை மயிலை கற்பகாம்பாள் நகர் கோகுலே ஹாலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தேசீயமும் தெய்வீகமும் தங்களது கொள்கைகளாகக் கொண்ட குடும்பத்தினரின் விழா இது. மதுரையிலிருந்து வழக்குரைஞர் பா.ஸ்ரீநிவாசனும், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்களும், பாண்டிச்சேரி ஹோட்டல் சற்குருவின் மானேஜிங் டைரக்டர் அமர்நாத் அவர்களும் தலைமையேற்று மேடையை அலங்கரித்தார்கள்.

எவன் அவன் என்று நம்மாழ்வார் பாசுரத்தை இறைவணக்கமாக்கி “எவனவன் நமக்கு எதிரா?” என்பது போல ஸ்ரீராம் துவக்கிவைத்தார். முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி மங்களரமாக விழாவை ஆரம்பித்தார்கள். கீழாம்பூரார் தினமணியின் பெருமைகளையும் அதில் பணியாற்றிய ஏஎன் சிவராமன் மற்றும் சொக்கலிங்கம் போன்ற ஆசிரியர்களைப் பற்றிப் பேசப் பேச “நம்ம பேப்பர்டா” என்ற பெருமிதம் என்னைத் தொற்றிக்கொண்டது.

தெய்வத் தமிழர் விருதுக்கு முன்னால் வாழ்த்துரை வழங்கச் சென்ற எங்களுக்கும் ஒரு பொன்னாடை அணிவித்து ராம்லல்லா கட்டவுட் படமொன்றையும் தவயோகி ஞானானந்தாவின் புத்தகம் ஒன்றையும் பரிசளித்தார். நான் கையில் ஏந்தியவுடன் ராம்லல்லா சிரித்தார்.

தெய்வத் தமிழர் விருது வாங்கியவர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள். கு.வை. பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களுக்கு அந்த புலிவால் மீசைக்கே பரிசு தரலாம். அவர் சிரிக்கும் போது மீசை பூவாய் மலர்கிறது. சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் பி. ஜகன்நாத் இடிமுழக்கம் போல சனாதன தர்மத்தைப் பற்றி பேசினார். பத்திரிகையாளர் டி.எஸ். வெங்கடேசன் தினமணியாளர். மீடியா எப்படி தரங்கெட்டுப் போய்விட்டது என்பதை அழகாகப் படம்பிடித்தார். விருதாளர் ஓவியர் ஜெ.பிரபாகர் தனது சமூகப் பணியில் குடிகார கிராமத்தை நலம்படச் செய்த சாதனையை ஒரே நாடு ஆசிரியர் நம்பி. நாராயணன் சொன்னபோது எனக்கு மெய் சிலிர்த்தது. “சனாதனப் புயல்” ஜெயந்தி ஐயங்கார் குழந்தை ஜெயந்தியாக இருந்த போதே தனது தந்தையார் சடகோபரின் வில்லிபாரதச் சொற்பொழிவின் இறுதியில் மைக்கைப் பிடிங்கிப் பேசியதைப் பகிர்ந்த போது அவரது இப்போதைய பேச்சின் அஸ்திவாரம் புரிந்தது.

வாழ்த்துரையாக நம்பி நாராயணன், நான், மற்றும் எழுத்தாளர் சிவன் ஆகியோர் பேசினோம். நம்பி நாராயணன் விருது பெற்ற ஒவ்வொருவரைப் பற்றியும் மிக அழகாகவும் ரத்தினச் சுருக்கமாகவும் அவர்களது முக்கியமான பங்களிப்பையும் பற்றிப் பேசினார். வாழ்த்துரைக்கான இலக்கண சுத்தமான பேச்சு அது. நான் வழக்கம் போல ஜல்லியடித்தேன். எனது பேச்சின் சாரத்தை இப்பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். படித்து மகிழவும். சிவன் சார் இரண்டே நிமிடத்தில் ஸ்ரீராமுக்கு கல்யாணம் நடக்காத குறையைப் பேசிவிட்டு முடித்துவிட்டார்.

இறுதியாக ஒரு சரவெடி. சிந்துஜாவின் ஞானானந்தா பற்றிய இசைச் சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சி நேரம் தப்பி நீளமாகச் சென்றுகொண்டிருந்த வேளையில் மைக்கைப் பிடித்த அம்மணி மிகவும் கேஷுவலாக “பதினஞ்சு நிமிஷத்துல முடிச்சுடுவேன்” என்று சொல்லி அபாரமாக சில ஞானானந்தா மகிமைகளையும் நடுநடுவே “விழி கிடைக்குமா அபயக் கரம் கிடைக்குமா?” மற்றும் சில பஜனைப் பாடல்களை பல பிருகாக்களோடு பாடி மொத்தக் கூட்டத்தையும் கட்டிப் போட்டார்.

விழாவிலிருந்து சில டிட்பிட்டுகள்:

  1. ஸ்ரீராம் என்னைப் போலவே தூய வெள்ளை & வெள்ளையில் மின்னினார். ஐம்பதாவது வயதில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு பலரிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்தது.
  2. மோடிஜியின் தமிழக வெர்ஷன் Sudarsan அவர்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர் மன்னார்குடி மாப்பிள்ளை என்று தெரிந்ததும் கூடுதல் சந்தோஷம்.
  3. “பாரேன்… ஆர்விஎஸ் பேசும்போது கரெக்டா வர்றார்..” என்று வல்லபா சொன்னபோது வீகேயெஸ் எண்ட்ரி கொடுத்தார். குடும்ப விழா அல்லவா!
  4. பெரியண்ணாவும் எங்கள் குருசியுமான ராஜகோபாலனும் எங்கள் பேட்டை ஸ்ரீதர் ஸ்வாமிநாத் அண்ணாவும் கலந்துகொண்டு, விழா முடிந்ததும் அரை மணி வெளியே நின்று பேசிக் கலைந்தது மனதுக்கு மதுரமான உரையாடல்.
  5. ”எங்க ஏரியாவுல நடக்குது.. நீங்கெல்லாம் வர்றீங்க.. நாங்க வராம இருப்போமா?” – என்று சங்கமேஸ்வரன் ராமன் ஜி என்னுடைய ஆச்சரியமானப் புருவத் தூக்கலுக்கு பதில் சொன்னார். ❤
  6. கீழாம்பூரார், ஜெயந்தி ஐயங்கார், ஸ்ரீராம் என்று எல்லோரும் தாமிரபரணி பற்றிப் பேசி புளகாங்கிதம் அடைந்த போது “நடத்தரோம்… நாமளும் காவிரிக்கரை ஆளுவளா சேர்ந்து இன்னொன்னு நடத்தரோம்..” என்று இந்த தேர்தலில் நிற்காக வேலு நாயக்கர் போல பேசிக்கொண்டோம்.
  7. ஹரிகதா சிந்துஜாவின் கணவர் மன்னார்குடி என்றதும் “இது மன்னார்குடி விழா” என்று அறிவித்துவிடலாமா என்று கூட தோன்றியது! ஏனென்றால் பச்சைப் புடவையில் மீனாக்ஷி அம்மன் போல வந்த இன்னொருவரும் “மன்னார்குடிக்காரால்லாம் வந்துட்டாளா’ன்னு கேட்டுட்டுதான் எங்க ஃபேமிலில ஃபக்ஷன்லாம் ஆரம்பிப்பா” என்று மன்னை ஜோதியில் கலந்துகொண்டார்.
  8. விழா ஆரம்பிக்கும் முன் விவேகானந்தா கேந்திராவின் விவி பாலாவிடம் Vvbala Bala சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். என்றும் இளமையாக இருப்பது எப்படி என்ற ரகசியத்தை அவரிடம் கேட்க மறந்துவிட்டேன்.
  9. ஸ்ரீடிவி ராஜேஷ் ராவ்வை அடையாளம் கண்டுகொண்டு கைக்கூப்பினேன். பின்னர் சரித்திர முக்கியத்துவத்திற்காக படமும் பிடித்துக்கொண்டேன்.
  10. மன்னைக்கு அருகிலுள்ள திருமக்கோட்டையை சொந்த ஊராகக் கொண்ட ஸ்ரீதரன் அவர்களுடன் பேசினேன். ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸில் பணிபுரிந்ததாகவும் வணிகம் பற்றி ஃப்ரீலேன்ஸ் செய்வதாகவும் கூறினார். இங்கேயும் மன்னார்குடி எட்டிப் பார்த்தது.
  11. விழா முழுவதும் அமைதியாக பல ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட கலைமகள் பதிப்பாளர் ThiruvenkataRajan P T அவர்களைக் குறிப்பிடாவிட்டால் இந்தப் பதிவு செல்லாது.
  12. தினமணியில் நண்பரான பத்திரிகையாளர் சரவண பாரதியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பாலாறு பதிப்பகம் என்று ஆரம்பித்து நூறு புத்தகங்கள் வெளியிட்டுவிட்டார். “எப்படிப் போகுது?” என்றேன். “சூதாட்டம் மாதிரி ஒரு புக்ஃபேர்ல சம்பாதிச்சா இன்னொரு புக்ஃபேர்ல புட்டுக்குது” என்றார்.
  13. விழா முடிந்தததும் விருதாளர் பாலசுப்ரமணியன் அவர்களின் சன் இன் லா வந்து கைக்குலுக்கினார். “நல்லா பேசுனீங்க” என்றார். “என்னய்யா.. காசு கொடுத்து ஆள் செட் பண்ணியிருக்கியா?” என்று அவர் காது படவே கேட்டு கலாய்த்தார் வீகேயெஸ். ரசனையான கிண்டல்! 🙂 வீடியோ வந்ததும் பகிர்கிறேன். நீங்களும் சொல்லலாம்! 🙂 இப்போதைக்கு நான் பேசியதின் சாரத்தைத் தருகிறேன். வீடியோவில் இதைவிட இருபது இருபத்தைந்து வார்த்தைகள் பேசியிருக்கிறேன். 🙂

எனது சிற்றுரை:
//////

தெய்வத் தமிழர் விருதுகள் விழாவிற்கு வருகை புரிந்திருக்கும் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். தெய்வத் தமிழர் விருது பெற்றவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் வந்தனங்களும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் நாளும் நாளும் நாம் நினைந்து போற்றும் தெய்வத் தமிழர்கள். இறைத் தமிழ் இந்நாட்டிற்கு அளித்த கொடைகள் ஏராளம். கடவுளை நினை என்று சொல்லும் அனைவரும் நமக்குத் தெய்வத் தமிழர்தாம்.

விருது பெற்றவர்களில் ஸ்ரீமதி ஜெயந்தி ஐயங்கார் அவர்களை ஃபேஸ்புக்கில் பின் தொடர்வதால் அவரது செயல்பாடுகளை அறிவேன். தீவிர தேசிய சிந்தனை கொண்டவர். பேச்சு மட்டுமல்லாமல் கோலத்தில் கூட பாரதத்தின் பெருமைகளை அலங்காரம் செய்கிறார். கு.வை. பாலசுப்பிரமணியன் ஐயாவை எங்கள் கிழக்கு நியூஸிலிருந்து வானிலை அறிக்கை ஒன்றிற்காக தொடர்பு கொண்டிருந்தார்கள். அதில் அவரது நிபுணத்துவம் நிறைய பேர் அறிந்ததுதான்.

செங்கோட்டை ஸ்ரீராம் ஒரு பழுத்த ஊடகவியலாளர். மூத்த பத்திரிகையாளர் என்ற சொல்லாடலை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறேன். பல பத்திரிகைகளில் பல பொறுப்புகளில் திறம்பட செயலாற்றியவர். தினமணி இணையதளத்தை ஸ்ரீராம் நிர்வகித்த போது பழக்கமானார். இரவும் பகலும் ஸ்ரீராம் கண்படாமல் கைபடாமல் எந்த செய்தியும் வெளிவந்தவில்லை.

பல சமயங்களில் பல சப்ஜெக்ட்டுகளை நானும் ஸ்ரீராமும் பேசிக்கொண்டிருப்போம். அப்போது அவர் ஸ்ரீபெரும்புதூர் ஜீயரைக் காணச் சென்றபோது ஆண்டாளின் பக்தி இலக்கியத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது வரத யதிராஜ ஜீயர் ஸ்வாமிகள் சொன்னதாக..

ஒரு நாள் மடத்து வாசலில் பசங்கள் விளையாடிக்கொண்டிருந்தார்களாம். என்னடா சத்தம்? என்று கேட்டதற்கு நாங்கள் ஒன் ஃபோர் த்ரீ விளையாடறோம் தாத்தா என்றார்களாம். என்னடா ஒன் ஃபோர் த்ரீ என்றால் ஐ லவ் யூ என்ற விளக்கத்தைக் கொடுத்தவுடன் ஜீயர் சினிமா பார்த்துக் கெட்டுப்போகிறார்களே என்று வருந்தி.. ஆண்டாளின் கதையைச் சொல்லி… முடிவில் ஆண்டாளின் வாழி திருநாமத்தைச் சொல்லி..

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே…
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே…
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே…
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே…

என்று சொல்லி.. நாச்சியார் திருமொழியாக நூற்று நாற்பத்து மூன்று… ஒன் ஃபோர் த்ரீ உரைத்தவள் ஆண்டாள் என்றாராம்.

சிலிர்ப்பான சிந்திக்க வைக்கும் செய்தி…

செய்தியாளர்கள் பலர் டெக்னாலஜியோடு கலப்பில்லாமல் தனியாக இருப்பார்கள். அந்த யூரெல்லை டெலீட் பண்ணனும்.. தப்பா இருக்கு என்றால் என்னது உரலை டெலீட் பண்ணுவீங்களா? என்று அப்பாவியாய்க் கேட்பாளர்கள். ஸ்ரீராமுக்கு டெக்னாலஜியும் தெரியும் என்பது கூடுதல் விசேஷம். தனியொருவனாக மீடியா வெப்சைட் ஆரம்பித்து அதில் நிலைத்து நிற்பது என்பது வானத்தை வில்லாய் வளைப்பதற்கு சமானம். ஸ்ரீராம் வளைத்தது மட்டுமில்லாமல் ஒரு இலக்கை நோக்கி அம்பெய்தி முன்னேறியிருக்கிறார். ஐம்பதில் நுழையும் ஸ்ரீராமுக்கு அன்பு நண்பனாக வாழ்த்துகள்.

இவ்விழாவிற்கு வந்து சிறப்பிக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அறிஞர்கள் அவையில் பேச வாய்ப்பளித்ததற்கும் நன்றிகள் பல.
//////

  • ஆர்வீயெஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version