Home இலக்கியம் உங்களோடு ஒரு வார்த்தை ‘வேதநெறி’ தழைக்க உழைத்த உத்தமர்… பூஜ்யஸ்ரீ ஓம்காராநந்த சுவாமி!

‘வேதநெறி’ தழைக்க உழைத்த உத்தமர்… பூஜ்யஸ்ரீ ஓம்காராநந்த சுவாமி!

pujyasri omkarananda
pujyasri omkarananda

என் வாழ்நாளில் இதுவரை இப்படி ஒரு மகாமேதையைப் பார்த்ததில்லை… மகா ஞானி. ஆழ்ந்த கல்வி ஞானம். சம்பிரதாயங்களுக்கு இடையேயான வேறுபாடுகளைத் துல்லியமாக எடுத்து வைப்பார்…. தர்மத்தைக் காக்கும் பணியில் தம்மைத் தாமாகவே ஈடுபடுத்திக் கொண்டு அனைவருக்கும் உற்சாகம் அளிப்பார். இன்று சத்கதியடைந்து சாதாரணர்களான நம்மைக் கண்ணீர்க்கடலில் தள்ளியிருக்கிறார்… அவரது வழிகாட்டல்களை இன்னும் நாம் பெற்றிருக்க வேண்டும். இறைவன் சித்தம் நம்மை அரைகுறைகளாக வைத்திருக்க வேண்டும் என்பதுவோ என்னவோ?!

2004ல் ஒரு நாள்… அப்போது மஞ்சரி இதழாசிரியர் பொறுப்பில் இருந்தேன். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் ஒரு அபார்ட்மெண்டில் சுவாமிஜி தங்கியிருந்தார். நண்பர் வேதா டி.ஸ்ரீதரன் உள்ளிட்ட நண்பர்கள் சூழ்ந்திருக்க… சுவாமிஜியுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தேன். நேரம் ஆக ஆக.. மற்றவர்கள் சென்றுவிட… சுவாமிஜியும் நானும் மட்டுமே இருக்க…

பேச்சு இப்போது சம்பிரதாய கருத்துகளில் சென்றது. 30ஐக் கடக்காத இளைஞன், ஏதோ சிறுவயதில் பெரியோர்களிடம் இருந்து பெற்ற விஷயங்கள்… அப்படியே அத்வைதம், விசிஷ்ட அத்வைதம் என கருத்துகளின் அடிப்படையை எனக்குச் சொன்னார். ஏதோ ஒரு வேத வாக்கியத்துக்கு நான் எங்கோ படித்த ஒரு பொருளைக் கூற… நீங்க சொல்றபடி பார்த்தா… அது விசிஷ்ட த்வைதம் ஆயிரும். வைஷ்ணவ பெரியவா அப்படி சொல்லியிருக்க மாட்டா… என்று கூறி, அதன் பொருளை விளக்கினார்…!

அன்றிலிருந்து ஸ்வாமிஜியின் பால் மனம் ஈர்ப்புடன் ஒன்றியிருந்தது. அடிக்கடி பேசிக் கொள்வோம். பின்னாளில் தேனி வேதபுரீ ஆச்ரமத்தின் பொறுப்புக்கு சுவாமிஜி வந்தார். ஆச்ரமத்துக்கு வருமாறு அழைத்தார். நண்பர் கவிஞர் நந்தலாலா, சுவாமிஜியின் அத்யந்த சீடர். எங்க ஊருக்கு வாங்கண்ணே, சுவாமிஜி விசாரித்தார்… என்பார் பலநேரங்களில்!

சக்தி விகடன் பொறுப்பில் இருந்த போது… கீதை பற்றி அவர் எழுதியவை… அது தொடர்பாகவும் பேச வேண்டியிருந்தது. அந்நாட்களில் சென்னையில் நாரதகான சபாவில் அவருடைய சொற்பொழிவுகள் இருக்கும். மாலை நேரம் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரும் நானுமாய் சென்று அமர்வோம். கணீரென்ற குரல். பேசிக் கொண்டிருப்பார். ஏதோ காரணத்தால் அங்கிருந்து நாங்கள் வெளியே வர வேண்டியிருக்கும். அப்போது அவர் சொற்பொழிவை நிறுத்தி விடுவார். யாராவது எழுந்து சென்றால் போதும்… சற்று நேரம் அமைதியே நிலவும்…

சுவாமிஜி கலாசார செழுமை கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். வேத நெறியே வாழ்க்கை எனக் கொண்டார். திருச்சி திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் சுவாமி சித்பவானந்தரிடம் சன்யாச தீட்சை பெற்றார். பின்னாளில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் சீடர் பரமார்த்தானந்தரிடம் வேதாந்தங்களைக் கற்றார். பகவத் கீதை, உபநிஷதங்கள் எல்லாம் அத்துபடி. சம்ஸ்க்ருத ஞானம் இயல்பாய்க் கைவந்தது. தேவார திருவாசக திருமந்திர பாடல்களாகட்டும், தாயுமானவர் பாடல்கள், பாரதியாரின் பாடல்கள், திருக்குறள் என சகலமும் அவருக்குள் !

பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் பல ரெஃபரன்ஸ்கள்… சரேலென வரும். தர்ம சாஸ்திரத்தின் நுணுக்கங்களைச் சொல்வார். நாடு இருக்கும் நிலை குறித்து கவலைப் படுவார். குறிப்பாக ஊடக விவாதங்கள், விவகாரங்களைச் சொல்லி… நாம நல்ல முறையில நல்ல தர்ம நெறியுடன் கூடிய ஊடகவியலாளர்களை ட்ரெய்ன் பண்ண முடியாதா? அப்படி நபர்கள் உங்க தொடர்பில் இருந்தா ஒண்ணு சேருங்கோளேன்… என்பார்!

நான் தினமணி பணியில் இருந்த காலத்தில் அவருடனான நெருக்கம் சற்று குறைந்து போனது. என் வேலை வேறு திசையில் சென்றதால். பின்னாளில் கல்கியின் தீபம் இதழுக்கு பொறுப்பில் வந்தபோது… மீண்டும் அவர் தொடர்பு. தீபத்திலும் ஒரு தொடர். குறளும் கீதையும்.. என!

தேனிக்கு வாயேன் என்ற அவர் அழைப்புக்கு ஏற்ப… அதற்கான ஒரு நாள் வந்தது. 2019இல் ஏபிவிபி., ஷிபிர் தேனி ஆச்ரமத்தில் நடைபெற்ற போது… ‘அண்ணா ஒரு நாள் ஊடக விவகாரங்கள், சமூக ஊடகங்கள் குறித்து நம் மாணவர்களுடன் கலந்துரையாடலுக்கு வாங்க’ என்று அழைத்தனர். அதை சாக்கிட்டு சென்றேன்…

அப்போதுதான் முல்லையாற்றின் கரை, சலசலத்து ஓடும் ஆற்று நீரின் இசை… ஆலமரத்தின் அமைதியான பிரமாண்டம், தங்குவதற்கு கட்டப்பட்ட அருமையான அறைகளுடன் கூடிய கட்டடம், இயற்கையின் சாந்நித்யம் இனிதே திகழும் தட்சிணாமூர்த்தி ஆலயம், வித்யார்த்திகள் சுமார் 30 பேருக்கு மேல் இருக்கும்… பாடசாலை, அவர்கள் விளையாட மைதானம், வாலிபால் விளையாட கம்பங்கள், உணவு உண்ண என்று பிரமாண்ட அரங்கம்… சுவாமிஜி தங்கியிருக்கும் அந்த அழகிய கட்டடம்… எல்லாவற்றையும் அணு அணுவாக ரசித்தேன்..

அவரது அறைக்கு வெளியே… புத்தகங்கள் வரிசையாக அடுக்கப் பட்டு… நூலகம் போல் சிறப்பாகத் திகழ்ந்தது. வழக்கமான நம் ஆர்வத்தில் புத்தகங்களை ஒவ்வொன்றாய் எடுத்துப் புரட்டி…மேய்ந்து கொண்டிருந்தேன்…

என்ன செங்கோட்டையார்… இங்கும் வந்து அதே பணி தானா?! என்ற குரல் கேட்டுத் திரும்பினால்… சுவாமிஜி சிரித்தபடி நின்று கொண்டிருந்தார். வாரும் என அழைத்துச் சென்றார். அவருக்கான வீடியோக்கள் பதிவு செய்யும் அறைக்கும், சொற்பொழிவு நிகழ்த்தும் சிறிய அரங்கத்துக்கும் அழைத்துச் சென்று அவற்றை எல்லாம் காட்டினார். தினசரி எப்படி போகிறது… வியூவர்ஸ் எப்படி? லாபகரமா இருக்கா? என்றெல்லாம் கேட்டவர், நம் ‘வேதநெறி’க்கு ஊர்ல இருந்துண்டே ஏதாவது பண்ணக்கூடாதோ?! என்றார்.

நிச்சயமா சுவாமிஜி… அடியேன் மீண்டும் இங்க வரேன். வேதநெறி பற்றி பேசுவோம்… என்றேன். ஆச்ரமத்தை சுற்றிப் பார்த்தீரா என்று கேட்டார். உதவியாளர் ஒருவரை அழைத்து, கோயிலுக்கு அழைத்துப் போகச் சொன்னார். இல்லை..சுவாமிஜி.. அடியேன் நேற்று மாலையே அனைத்தும் பார்த்துவிட்டு பிரமித்தேன்… என்றேன்.

இன்று அவர் விசாரித்த அதே இணையத்தில் அவரது சத்கதி செய்தியைப் போடும் துர்பாக்கிய நிலைக்கு இறைவன் ஆளாக்கி விட்டான்.

  • செங்கோட்டை ஸ்ரீராம் (நிறுவுன ஆசிரியர், தினசரி.காம்)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version