Home இலக்கியம் கவிதைகள் பாரதியைப் பற்றிய பற்று!

பாரதியைப் பற்றிய பற்று!

barathiyar
barathiyar

“பாரதியைப் பற்றிய பற்று”
(மீ.விசுவநாதன்)

ஊருக்கு நல்லதே சொன்னான் – என்றும்
உள்ளது உள்ளபடி சொன்னான்
நேருக்கு நேரென நின்று – அந்த
தெய்வமே தானென்று கண்டான் !

காசிக்குப் போனவன் அங்கே – நன்கு
கற்றதை வந்திங்கு சொன்னான்
வாசிக்கப் பாட்டினைத் தந்தே – இந்த
வையகம் நன்மையுறச் செய்தான்!

அழுகையெனக் கொஞ்சமும் இல்லான் – எங்கும்
அழகெனும் அற்புதமே கண்டான்
தொழுகையென ஓரிறை கொண்டான் – அந்த
ஒன்றிலே ஒன்றியவன் ஆனான் !

சிவமயந்தான் யாவுமே என்று – எனது
சிந்தையை சாந்திபெறச் செய்தான்
அவன்கவிதை அன்பினைக் கூட்டும் – என்ற
அனுபவ ஞானத்தைத் தந்தான்

குயிலுக்கும் உள்ளதாம் காதல் – கவிதை
கொண்டதோர் உச்சமெனச் செய்தான்
பயில்வோர்கள் யாவரும் மெச்சும் – வியாச
பாரத பாஞ்சாலி ஆனான்

விநாயகரின் நான்மணி மாலை – எந்த
வேதனை வந்தாலும் ஓட்டும்
நிதானமாய் ஆழ்ந்துநாம் போனால் – கண்ணன்
நிச்சயம் விஸ்வரூபம் காட்டும்.

பாரதியைப் பற்றிய பற்றால் – இரவு
பகலெலாம் மெய்மறந்து போவேன்
நேரியதோர் வாழ்வினைக் கொள்ள – பக்தி
நெறியனை பின்பற்றி உய்வேன் !

(11.09.2020 மகாகவி பாரதியின் 99ஆவது நினைவு தினம்)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version