
–மீ.விசுவநாதன்–
ஆனை முகனைக் கேட்டேன் -மன
ஆழம் காட்டு என்று !
தானை விட்டு வந்தால் – அது
தானே தெரியும் என்றான் ! (1)
நாளில் ஒன்று பேசும் – என்
நாவைக் கட்டு என்றேன் !
தாளின் பற்று வைத்தால் – அது
தனியே போகும் என்றான் ! (2)
உன்னை எனக்குக் காட்டு-என்
உயிரே நீதான் என்றேன் !
என்னை உலகாய்ப் பார்க்க -குரு
இருபைத் தேடு என்றான் ! (3)
நீயே குருதா னென்று – மனம்
நெகிழ்ந்து வீழ்ந்து கேட்டேன் !
வாயை மூடிக் கொண்டு – என்
வாக்கில் அமர்ந்து கொண்டான் ! (4)
அன்னை தந்தையைப் போற்றும் – பண்பை
ஆனை முகனே விதைத்தான்
இன்பம் அடைந்திட வேண்டி – உடன்
ஈயும் குணத்தை அளித்தான்
உன்னுள் உலகமே என்னும் – ஞான
ஊற்றை உணரச் செய்தான்
என்னுள் மாயையை நீக்கி – ஒளி
ஏற்றி மகிழ்வைத் தந்தான்
ஐந்து கரத்தவ னான – “டுண்டி”
ஐயன் கணேச வள்ளல்
ஐந்து புலனுளும் உள்ளான் – இதில்
ஐயம் எதுவும் வேண்டாம்.
ஒன்றே அவனென எண்ணி – மனம்
ஓம்ஓம் எனவே ஓத
ஒன்றி அவனென ஆவோம்- தமிழ்
ஔவை ஞானம் கொள்வோம்.